ஒரே நாளில் 1,000 கன அடி உயர்ந்த மேட்டூர் அணை நீர்வரத்து..! | நா.சதீஸ்குமார்
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதில் கர்நாடகா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. ஏதோ காவிரியில் தங்களுக்கு மட்டுமே முழு உரிமை உள்ளது போல கர்நாடகா நடந்துகொள்வதால், தமிழகம் கடுமையான பாதிப்பினை சந்தித்து வருகிறது. காவிரி பிரச்னையை தீர்த்துவைக்க காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், இன்னும் பிரச்னை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என விடாப்பிடியாக மறுத்து வருகிறது கர்நாடகா. மழைப் பொழிவு குறைந்துவிட்டதாகவும், குடிநீருக்கே பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவிக்கிறது. அப்படியென்றால் காவிரியையே நம்பியுள்ள தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களின் நிலை என்னவாக இருக்கும் என அது உணரவில்லை. கர்நாடகம் சரிவர தண்ணீர் திறக்காததால், மேட்டூர் அணைக்கான நீர் வரத்து குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்த நிலையிலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல சரிந்து 30 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை சந்தித்தது. இதனால் அக்டோபர் 10 முதல் மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. குறுவை சாகுபடியும் பொய்த்த நிலையில், கருகிய நெற்பயிர்களுக்கு ஹெக்டெர் ஒன்றுக்கு 13,000 இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்திற்கு நவம்பர் 1 முதல் 23ஆம் தேதி வரை வினாடிக்கு 2600 கன அடி தண்ணீரை திறக்க வேண்டுமென கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு போட்டது. என்றாலும் வெறும் உபரி நீரை மட்டும் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கர்நாடகா திறந்துவிட்டது. ஆனாலும் தமிழக எல்லையோர காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மேட்டூர் அணையை கைவிடவில்லை. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவில் இருந்து உயர்வைக் கண்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.83 அடியிலிருந்து 62.24 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு என்பது 26.38 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணைக்கான நீர் வரத்து
வினாடிக்கு 3,193 கன அடியிலிருந்து 4,015 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காவிரி டெல்டாவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பயிர்களே மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் இன்னும் சில வாரங்களுக்கு நெற்பயிர்களுக்கு தண்ணீர் தேவை இருக்காது என்ற சூழலே நிலவுகிறது. ஆகவே, மேட்டூர் அணையில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சில வாரங்கள் தேக்கி வைத்தால் அணையின் நீர்மட்டம் பல அடி உயரும். ஆகவே, சில வாரங்களுக்கு பின்னர் தண்ணீர் திறந்துவிட்டால் அது உதவும் வகையில் இருக்கும் என்பதுதான் விவசாயிகளின் எண்ணமாக உள்ளது.