சலார் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட்..! | நா.சதீஸ்குமார்
சலார் படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.
யஷ் நடிப்பில் கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். கேஜிஎஃப்பின் முதல் பாகம் மாஸ் காட்ட இரண்டாம் பாகம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வசூலில் 1000 கோடி ரூபாயை தொட்டது. இதன் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியிருக்கும் பிரசாந்த் நீல்தான் இப்போதைக்கு கமர்ஷியல் படங்களை பக்கா வெயிட்டேஜோடு கொடுப்பவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.
இதனையடுத்து அவரது இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் ஹீரோக்கள் துடியாய் துடித்துக்கொண்டிருக்கும் நிலையில் பிரபாஸை வைத்து இயக்க கமிட்டானார் பிரசாந்த். அதன்படி படத்துக்கு சலார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கின்றனர்.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபாஸ் பிரபலமடைந்திருந்தாலும் அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ஒரு ஹிட் படம்கூட அமையவில்லை. கடைசியாக அவர் நடித்த ஆதிபுருஷ் படமும் படுதோல்வியை சந்தித்தது. தோல்வியை மட்டுமின்றி பிரபாஸ் கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பாகுபலியில் கிடைத்த வரவேற்பை பிரபாஸ் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார் என்றே கருதுகின்றனர்.
நிலைமை இப்படி இருக்க நிச்சயம் ஒரு ஹிட் படம் கொடுத்துவிட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறார் பிரபாஸ். எனவே யஷ்ஷுக்கு எப்படி கேஜிஎஃப் படம் அடையாளமாக மாறியதோ அதேபோல் சலார் படத்தின் மூலம் தனக்கு மேலும் ஒரு அடையாளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பிரபாஸ். எனவே இந்தப் படம் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.