எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 16 | ஆர்.சுமதி

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 16 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 16

தூக்கிவாரிப்போட அதிர்ந்தாள் அம்சவேணி;.

‘லதா அவளுடைய ஃபோட்டோவைப் பார்த்து அவள் யார் என்றே தெரியவில்லை என்று சொன்னவனா இவ்வளவு எளிதாக அவளுடைய பெயரை உச்சரிக்கிறான். என்னைப் பார்க்க அவள் வருகிறாள் என்றால் அவளை இவன் பார்த்திருக்கிறானா? பேசியிருக்கிறானா? அவளைப் பார்த்திருந்தால்…பேசியிருந்தால் இவனுக்கு மூளை குழம்பியல்லவா போயிருக்கவேண்டும்? பைத்தியம் பிடித்தல்லவா போயிருக்கவேண்டும்? இவ்வளவு தைரியமாக பேசுகிறான். எந்தக்காதலியால் மனநோய்க்கு ஆளானானோ அதே காதலியை ஃபிரண்ட் என சொல்லும் அளவிற்கு மனவலிமை இவனுக்கு எங்கிருந்து வந்தது?’

ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அவனைப் பார்த்தாள். அம்மாவைப் பார்த்து சிரித்தான் குமணன். அந்த சிரிப்பில் தெளிவு இருந்தது.

“என்னம்மா அப்படிப் பார்க்குறே? அன்னைக்கு ஒரு நாள் லதா வோட ஃபோட்டோவைப் பார்த்துக் கூட யார்ன்னு ஞாபகம் வராத மகன் இன்னைக்கு இவ்வளவு தெளிவா லதாவைப் பத்தி பேசறானேன்னு பார்க்கறியா?

லதாவைப் பத்தின ஞாபகங்கள் வந்தா நான் மறுபடியும் மன நலம் பாதிக்கப்பட்டுடுவேன்னு நீ பயந்துக்கிட்டிருக்க இவ்வளவு தெளிவா எப்படி பேசறானேன்னு ஆச்சரியமாயிருக்கா? நான் இவ்வளவு தெளிவாவும் தைரியமாவும் இருக்க கோதைதான் காரணம். மனைவி ஒரு மந்திரின்னு சொல்லுவாங்க. என்னைப்பொறுத்தவரை மனைவி ஒரு மருத்துவர். கணவனோட உடல் நலத்துக்கு ஏத்தமாதிரி சமைச்சு போடறது மட்டும் இல்லை கணவனோட மனநலத்துக்கும் ஏத்தமாதிரி அவனோட வாழ்க்கையை வடிவமைக்கிற மனைவி மருத்துவர்தானே? என்னோட மனநலத்தை அவ வடிவமைச்சா. எப்படின்னு கேட்கறியா? கோதை நீயே சொல்லேன்.”

அம்சவேணியின் விழிகள் அதே அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே கோதையின் பக்கம் திரும்பின. கோதை ஒரு மெல்லிய புன்னகையுடன் அம்சவேணியின் அருகில் அமர்ந்தாள்.

“அத்தை கல்யாணத்தன்னைக்கு ராத்திரி இவர் தான் யாரையும் காதலிக்கலை. ஆனா யாரையோ ஆழமா காதலிச்சமாதிரி ஒரு உணர்வை அடிக்கடி ஃபீல் பண்றதாகவும், அதுமட்டும் இல்லை காதல்ல தோல்வியடைஞ்சமாதிரி சில சமயம் வேதனைப் படறதாகவும் சொன்னார். அப்ப நான் அதை பெரிசா எடுத்துக்கலை. காதல் கதையை படிக்கும்போது அந்த காதலர்களா நாமே மாறிடமாதிரி, காதல் தோல்வி கதைகளைப் படிக்கிறபோது நாமே தோல்வியடைஞ்ச மாதிரி அழறதெல்லாம் இயற்கைத்தானே. அப்படித்தான் எடுத்துக்கிட்டேன். ஆனா…கோவாவில் அவர் திடீர்னு பயங்கரமா குடிச்சது, திரும்பி வரும்போது கார்ல காதல் தோல்வி பாட்டைக்கேட்டு உடைஞ்சு போய் அழுதது இதெல்லாம் அவருக்குள்ள என்னமோ நடந்திருக்குன்னு என்னை யோசிக்க வச்சது. நீங்க சொன்ன காதல் கதை டாக்டர் கொடுத்த ட்ரீட்மென்டால தற்காலிகமா அவர் எல்லாத்தையும் மறந்திருக்கறதையும் கேட்டபின்னே அவர் மேல எனக்கு அன்பும் அக்கறையும் கூடிடுச்சு. அமுக்கப்பட்ட அந்த நினைவுகள் சுத்தமா அழிஞ்சு அவர் மனசு பூரா நான் மட்டுமே நிறைஞ்சிருக்கனும்னு ஆசைப்பட்டேன். ஆடிமாசம் அம்மா வீட்டுக்குப் போனப்ப என் நண்பனை சந்திச்சேன்” சொல்லிவிட்டு தன்னை லேசாக ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.

அவள் நண்பன் என்றதும் சங்கீதா காட்டிய ஃபோட்டோவில் இருந்தவன் சரக்கென மனக்கண்ணில் வந்துபோனான்.

அவன் பெயர் ஆதி. என் கூடப் படிச்சவன். எங்க வீட்லயும் அவன் ஒருத்தன் மாதிரிதான். நல்லது கெட்டது எல்லாத்திலேயும் முன்னாடி வந்து நிப்பான்.நான் அவனைப்பத்தி ஒரு முறை உங்கக்கிட்டக் கூட சொல்லியிருக்கேன். வளையல் விக்க என் கூட வந்தான்னு சொன்னேனே அவன்தான். எல்லாரும் நான் அவனைத்தான் கட்டிக்கப்போறதா கூட பேசிக்கிட்டாங்க. ஆனா..நானும் அவனும் நல்ல நண்பர்கள். நீங்க பணக்கார இடம்னு பயந்து நான் வேண்டான்னு மறுத்தப்ப அவன்தான் என்னை கன்வின்ஸ் செய்தான். அவன்கிட்ட என் பிரச்சனையை சொன்னேன். அவன் ஒரு பெரிய சைக்காட்ரிஸ்ட்க்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனான்.அவர்கிட்ட இவரைப் பத்தி சொன்னேன். அமுக்கி வைக்கப்பட்ட நினைவுகள் கண்டிப்பா ஒருநாள் வெடிக்கும். மனசு பக்குவப்படலைன்னா அதன் விளைவுகள் பயங்கரமா இருக்கும். காலப் போக்குல தானாகவே இது சரியாகும். ஆனா….அதுக்கு மனசு பக்குவப்படனும். அன்னைய கண்டிஷன்ல அவருக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் சரிதான். ஆனா…காலம் முழுசும் அதே நிலையில அவர் இருக்கறது ஆபத்துன்னு சொன்னார். பலவருடங்கள் கடந்து போயிருக்கறதால அந்த நினைவுகளோட வீரியமும் குறைஞ்சிருக்கும். அது சுத்தமா குறையனும்ன்னா…அந்த நினைவுகளை மேலக் கொண்டுவந்து அதோட சக்தியைக் குறைக்கனும்னு சொன்னார். இப்படி திடீர்னு பயங்கரமா குடிக்கறதைக் குறைக்கனும்னா முதல்ல அவர் சீரா குடிக்க ஆரம்பிக்கனும். தினமும் ஒரு குறைந்த அளவுல குடிக்கும்போது அவருக்குள்ள கன்ட்ரோல் பவர் தானா வந்திடும். குடிக்கவே கூடாதுன்னு நினைச்சாக் கூட அதை அவரால செயல் படுத்த முடியும்னு சொன்னார். அதை செயல்படுத்தத்தான் நானே தினமும் அவருக்கு மருந்து மாதிரி குடிக்கக் கொடுத்தேன். டாக்டர் சொன்னது பலிச்சது. பல பார்ட்டிகளுக்குப் போனாலும் அவர் குடிக்காம வீட்டுக்கு வந்தார். ஆரம்பகாலத்துல எப்படி குடிப்பழக்கம் இல்லாதவராயிருந்தாரோ அதே மாதிரி இப்ப இருக்கார். குடிக்கனும்கற எண்ணமே அவருக்குள்ள வர்றதில்லை. “

அம்சவேணி மகனை பெருமையாகப் பார்த்தாள். அன்போடு அவன் கையை எடுத்து தன்மடியில் வைத்துக்கொண்டு ஆர்வமாக மருமகளைப் பார்த்தாள்.

“அதே மெத்தேடைத்தான் இவரோட காதல் விஷயத்திலேயும் அப்ளை பண்ணினேன்.  இவரோட காதல் நினைவுகளை தூண்டி நினைவலைகளின் மேல் மட்டத்திற்கு கொண்டு வர முயற்சி செய்தேன். எடுத்ததுமே

லதாவைப் பத்தின நினைவுகளை கிளறாம பொதுவா காதல் பத்தின

விஷ யங்களை பேசத் தொடங்கினேன். காதல்ல தோல்வியடைஞ்ச பெரிய பெரிய மனிதர்கள் அந்த ஏமாற்றத்தையும் வலியையும் எப்படி வெற்றியா மாத்திக்கிட்டாங்கன்னு அவருக்கு உணர்த்தினேன். டி.ராஜேந்தரோட காதல் தோல்வி பாட்டைக் கேட்டுத்தான் கோவாவிலிருந்து திரும்பி வரும்வழியில அவர் உடைஞ்சு அழுதார். அவரையே உதாரணம் காட்டினேன். தன்னோட காதல் தோல்வியை அவர் எப்படி இலக்கியமா கலையா மாத்தி இமயம் தொட்டார்ங்கறதை ஞாபகப்படுத்தினேன். அந்த தோல்வியிலேயே அவர் கரைஞ்சு போயிருந்தா சினிமாத் துறைக்கு ஒரு சிறந்த டைரக்டர் கிடைச்சிருக்க மாட்டார்ன்னு சொன்னேன். ரேடியத்தைக் கண்டுபிடிச்ச மேடம் க்யூரி காதல்ல தோற்றுப்போனவங்கதான். அந்தக் காதல் தோல்விக்காகவே அவங்க வேதனையில கிடந்திருந்தா பியரிக்யூரிங்கற அற்புதமான கணவர் அவருக்கு கிடைச்சிருக்கமாட்டார். ரேடியம்ங்கற உயிர்காக்கும் மருந்தும் இந்த உலகத்துக்கு கிடைச்சிருக்காது. இப்படி அவருக்கு நம்ம எதிரே வாழற எத்தனையோ பேரேட வலிகளையும் வேதனைகளையும் அதையெல்லாம் அவங்க எப்படி கடந்து வந்து சாதிச்சுக்கிட்டிருக்காங்கன்னு  எடுத்து சொன்னேன். அடுத்தக் கட்டமா லதாவைப் பத்தின நினைவுகளை மெல்ல மெல்ல ஞாபகப்படுத்த நினைச்சிருந்தபோதுதான் ஒரு நாள் மதியம் அவர் ஆஃபிஸலேர்ந்து தலைவலின்னு வீட்டுக்கு வந்தார். என்னன்னு கேட்டப்ப யாரோ ஒரு பெண் போன் பண்ணினதாகவும், லதான்னு பேர் சொன்னதாகவும் அவர் கிட்ட பேச விரும்பறதாகவும் சொன்னார். ஆனா…அப்படி யாரையும் தனக்கு தெரியாததால ராங் நம்பர்ன்னு சொல்லி போனை வச்சுட்டதா சொன்னார். ஆனா…அந்தக் குரலைக் கேட்டதிலிருந்து மனசை என்னவோ பண்றமாதிரி இருக்குன்னு, அந்தக் குரலை இதுக்கு முன்னாடி எங்ககேயோ கேட்டமாதிரி இருக்குன்னு,; அந்தக் குரலைக் கேட்டதிலிருந்து தலைவலி வந்துட்டதாகவும் சொன்னார். எனக்கு அந்தப் பெண் இவரோட முன்னாள் காதலியா இருக்குமோன்னு தோணுச்சு. அவரோட காதல் கதையை நீங்க சொன்னீங்களே தவிர அவளோட பெயரையோ ஃபோட்டோவையோ என்கிட்ட  காட்டலை. உங்கக்கிட்ட கேட்கலாம்னு நினைச்சேன். ஏற்கனவே அந்த பொண்ணுமேல பொல்லாத கோபத்துல இருந்த உங்கக்கிட்ட சொல்ல வேண்டாம்னு முடிவுப் பண்ணிட்டு அந்த பொண்ணு போன் பண்ணின நம்பர்லயே திரும்ப அவளுக்குப் போன் பண்ணி என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். அவளை கண்ணகி சிலைக்கிட்ட காத்திருக்க சொன்னேன். அவளை சந்திச்சேன். நான் குமணனோட மனைவின்னு தெரிஞ்சதும் என் கையைப்பிடிச்சுக்கிட்டு கதறியழுதா. தான் குமணனை உயிருக்குயிரா காதலிச்சதாகவும் சந்தர்ப்ப சூழ்நிலையால அவருக்கு துரோகம் பண்ண நேர்ந்ததாகவும் சொல்லி அழுதா. அவளோட அக்கா ரெட்டைக் குழந்தைகளை பெத்துப்போட்டுட்டு செத்துட்டாளாம். அந்தக் குழந்தைகளை இவங்க வீட்லதான் வளர்த்துக்கிட்டிருந்திருக்காங்க. ஒரு வருஷ ம் ஆனதும் அவளோட அக்கா புருன் வேற கல்யாணம் பண்ணிக்கப்போறதா சொல்லி குழந்தையை கேட்டிருக்கார். வேற ஒருத்திக்கிட்ட குழந்தை வளர்றதை விரும்பாத இவளோட அம்மா அப்பா இவளையே அவருக்கு கட்டி வைக்க முடிவு பண்ணியிருக்காங்க. இவள் தன்னோட காதலை எடுத்து சொல்லியும் அவங்க யாரும் கேட்கலை. வற்புறத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்கன்னு சொன்னா. விதி அவ வாழ்க்கையில இன்னும் விளையாடியிருக்கு. இவளுக்கும் ரெட்டைக் குழந்தை பிறந்திருக்கு. நாலு குழந்தைகளோட அவ இன்னும்

கஷ் டப்படனும்னு விதி போல. அவளோட புருஷனுக்கு ஆக்ஸிடன்ட் ஆகி ரெண்டு கையும் போயிடுச்சு. ஒரு வேலையும் செய்ய முடியாம வீட்ல உட்கார்ந்துட்டாராம். இவ தான் குடும்பத்தைக் காப்பாத்த வேண்டிய பொறுப்புல இருக்கறதாகவும் ஹைதராபாத்ல இருக்கப்பிடிக்காம உறவுக்காரர் ஒருத்தரோட உதவியோட சென்னை வந்து வேலை தேடறதாகவும் நல்ல சம்பளத்துல வேலை எதுவும் கிடைக்காம கஷ்டப்படறதாகவும் சொல்லி வேதனைப்பட்டா. குமணன் கிட்ட மன்னிப்புக் கேட்கவும், குமணனோட கம்பெனியில ஏதாவது வேலைக்கேட்கலாம்னுதான் போன் பண்ணினேன்னு சொன்னா. ஆனா குமணன் அவ மேல இருக்கற வெறுப்புல உன்னை யார்ன்னே தெரியாதுன்னு சொல்லிட்டதாகவும் சொன்னா.”

கேட்க கேட்க அம்சவேணிக்கு லதாவின் மீது இனம் புரியாத இரக்கம் உண்டானது. ‘பாவம் அந்த பெண். காதலும் நிறைவேறாமல் புருஷனுக்கும் கை இல்லாமல் நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டு எவ்வளவு

கஷ்டப்படுகிறாள்’

“காதல் தோல்வியில இவருக்கு ஏற்பட்ட பாதிப்பு எடுத்துக்கொண்ட ட்ரீட்மென்ட் எதுவும் அவளுக்குத் தெரியாது பாவம். நான்

எல்லாவிஷயத்தையும் சொன்னேன். அதைக் கேட்டு அவ இன்னும் வேதனைப் பட்டா. தன்னால எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்காருன்னு நினைச்சு அழுதா. அவக்கிட்ட எக்காரணத்தை முன்னிட்டும் நான் சொல்றவரை குமணனை நீ சந்திக்கக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டேன். வீட்டுக்கு வந்தேன். லதாக்கிட்டேயிருந்து நான் வாங்கிட்டு வந்த ஃபோட்டோவை குமணன்கிட்ட காட்டி யார்னு கண்டுபிடிக்க சொன்னேன். அவருக்கு ஞாபகம் வரலை. நல்லா யோசிச்சு ஞாபகப்படுத்திப் பார்க்க சொன்னேன். அந்த சமயத்துலதான் நீங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனீங்க. ஒரு பக்கம் உங்களைக் கவனிச்சுக்கிட்டேன். இன்னொரு பக்கம் இவருக்கு லதாவிற்கும் இவருக்கும் இருந்த காதலை பக்குவமா நினைவுப் படுத்தினேன். லதாவோட உதவியோட ரெண்டு பேரும் சந்தித்த இடங்கள், நிகழ்ச்சிகள், பேசிய பேச்சுக்கள் எல்லாத்தையும் நினைவுப் படுத்தினேன். தாயோட மார்புல சாய்ஞ்சுக்கிட்டு பயங்கரமான கதையைக் கேட்கற குழந்தை எப்படி பயப்படாம அந்த கதையைக் கேட்குமோ, எப்படி அதனால பாதிக்கப்படாம இருக்குமோ அப்படித்தான் என்னோட நெஞ்சில சாய்ஞ்சுக்கிட்டு தன்னோட காதல் கதையை கேட்டாரு இவர். என்னோட அன்பு அரவணைப்பு தந்த தைரியம் நம்பிக்கை அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை மறுபடி நினைவுபடுத்தும்போது அதனால எந்த பாதிப்பும் ஏற்படாம பாதுகாத்தது. தன் தோல்வியை, தன் ஏமாற்றத்ததை அவர் சாதாரணமா எதிர்கொள்ள என்னோட காதல் பக்கபலமாயிருந்தது. என் காதல் அவரை வேலியா நின்னு காத்தது. அவர் லதாவை மீட் பண்ணவும் ஒரு தோழியா எதிர்கொள்ளவும் தயாரானார். ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சேன். லதாவிற்கு அவரோட கம்பெனியிலயே அவரோட பர்சனல் செகரட்டரியா வேலை கொடுக்க சொன்னேன். பிரச்சனையைப் பார்த்து பயந்து பயந்து ஓடுறதைவிட அதை எதிர்கொள்ளும் போது அந்த பிரச்சனை எதுவும் இல்லாமப் போய்டும்.

லதாவை சந்திச்சா அவர் பழையபடி மனநலம் பாதிக்கப் படுவார்ன்னு நாம எவ்வளவு காலத்துக்கு பயந்துக்கிட்டேயிருக்க முடியும்? அதான் நான் இப்படி செயல்பட்டேன். இப்ப நாள் முழுதும் அவ பர்சனல் செகரட்டரியா இவர் பக்கத்திலேயே இருக்கா. ஆனா…இவர் ரொம்ப இயல்பா எந்த பாதிப்பும் இல்லாமயிருக்கார்.”

அவள் சொல்லி முடிக்கவும் அம்சவேணி ஆடிப்போய் உட்கார்ந்திருந்தாள். இவளையா…இவளையா..நான் சந்தேகப்பட்டேன். துப்பறியும் வேலையில் ஈடுபட்டேன். ச்சீ ….என தன்மேலேயே கோபம் வந்தது. கணவனின் உயிரை எமனிடமிருந்து மீட்ட சாவித்திரிக்கும் இவளுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. அவளுக்கு மருமகளிடம் மன்னிப்புக் கேட்பதா இல்லை நன்றி கூறுவதா என்றுத் தெரியாமல் கண்ணீர் வழிய கைகூப்பினாள்.

அந்தக் கண்ணீர் மன்னிப்பாகவும், கைகூப்பல் நன்றியாகவும் இருந்தது.

அதே நேரம் வாசலி;ல் ஆட்டோ சத்தம் கேட்டது. லதா இறங்கி வந்துக்கொண்டிருந்தாள்.

உள்ளே வந்த லதாவைப் பார்த்ததும் எழுந்து மெல்ல அமர்ந்தாள் அம்சவேணி.

“வாம்மா…” லதா அம்சவேணியின் அருகே வந்து பக்கத்தில் அமர்ந்து அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“அம்மா…எப்படியிருக்கீங்க?”

“நல்லாயிருக்கேம்மா…”

“என்னை மன்னிப்பீங்களாம்மா?” கைக்கூப்பிக் கெஞ்சினாள் லதா அவளுடைய கண்கள் கலங்கின.

“நீ என்னம்மா தப்பு பண்ணினே?”

“உங்கப்புள்ளை என்னாலதானே மனநோயாளியானார். அவரை…அந்த நிலைக்கு ஆளாக்கினேனே”

உன்னோட சந்தர்ப்ப சூழ்நிலை அப்படியாயிட்டு என்ன பண்றது? என் புள்ளைப் பட்ட கஷ்டத்தைவிட நீ பட்டகஷ்டம்தான் பெரிசாயிருக்கு. உன் கதையைக் கேட்டப் பிறகு நான் ரொம்ப மனவேதனைப்பட்டேன். விருப்பம் இல்லாத கல்யணாம். கையை இழந்த கணவன் நாலு குழந்தைங்க. எல்லாபொறுப்பும் உன் தலையில…ப்ச்…”

“அத்தனை வேதனைக்கும் தீர்வா நின்னது உங்க மருமகள் கோதை தானே? அவங்க மட்டும் இல்லைன்னா என் குடும்பம் பசியாற முடியாது. குமணனுக்கு துரோகம் செய்துட்டோம்னு நான் ஒவ்வொரு நிமிஷ மும் துடிச்சுக்கிட்டிருந்தேன். குமணனை சந்திச்சு மன்னிப்புக் கேட்கனும்னு துடிச்சேன். என்னை கோதை வந்து சந்திப்பாங்கன்னு நினைக்கவே இல்லை. குமணனோட மனசை தைரியப்படுத்தி அவரை சாதாரண நிலைக்கு கொண்டு வந்து என்னை சந்திக்க வச்சதில்லாம என் வாழ்க்கையிலும் விளக்கேத்தி வச்சுட்டாங்க. குமணனோட கம்பெனியில அவருக்கு பர்சனல் செகரட்டரியா வேலை கொடுக்க வச்சு என் குடும்பத்தைக் காப்பத்திட்டாங்க. இப்படி ஒரு மருமகள் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கனும். கணவனோட முன்னாள் காதலியை யாருமே இவ்வளவு நல்ல உள்ளத்தோட அணுகமாட்டாங்க. எப்பவும் குமணன் பக்கத்திலேயே என்னை செகரட்டரியா வச்சிருக்காங்கன்னா அவங்க மனசு எவ்வளவு சுத்தமானதாயிருக்கும்?”

 லதாவின் வார்த்தைகள் மறுபடியும் அம்சவேணியின் உள்ளத்தில் கோதையை சிம்மாசனம் போட்டு அமரவைத்தது.

“உண்மைதான். கோதை மாதிரி ஒரு பொண்ணு எனக்கு மருமகளா கிடைச்சது என்னோட பாக்கியம்தான். மருமக மட்டும் இல்லை. எனக்கு இப்ப ஒரு நல்ல மகளும் கிடைச்சிருக்கா. ஆமா…உன்னை என் பொண்ணு மாதிரிதான் நினைக்கிறேன். நீ அவனுக்கு செகரட்டரிமட்டும் இல்லை. எனக்கு பொண்ணும்தான். இனிமே நீ இந்த வீட்டுக்கு எப்பவேணா வரலாம். உன்னோட குழந்தைகளையும், கணவரையும் கூட்டிக்கிட்டு வரணும். இந்த வீடு பூரா உன் குழந்தைங்க ஓடியாடி விளையாடனும். உன் குழந்தைகளோட படிப்பு செலவு எல்லாத்தையும் நான்தான் செய்வேன். இனி உன் முகத்துல சிரிப்பை மட்டும்தான் நான் பார்க்கனும்”

அம்சவேணி சொல்ல லதா உணர்ச்சி வசப்பட்டு “அம்மா” என அவளுடைய மார்பில் சாய்ந்து விம்மி விம்மி அழுதாள்.

அவளருகே வந்த கோதை “இப்பத்தானே அத்தை சொன்னாங்க இனி உன் முகத்துல சிரிப்பை மட்டும்தான் பார்க்கனும்னு. இப்படி அழுதா எப்படி? சிரிக்க மாட்டியா?” என்று சொல்ல லதாசிரித்தாள். கண்களைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள்.

எங்கோ…யார்வீட்டிலோ ஒலித்த பாட்டு காற்றில் தவழ்ந்துவந்து அங்கே கேட்டது.

எனக்கொரு காதலி இருக்கின்றாள்

அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்’

குமணன்  கண்ணீர் மல்க அந்த சிரிப்பை ரசித்தான். அந்த சிரிப்பை அவள் முகத்தில் தந்த தன் கோதையை காதலும் நன்றியும் கலந்து பார்த்தான்.

(முற்றும்)

முந்தையபகுதி – 15

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...