சூப்பர்ஸ்டார் கொண்டாடிய ஜெயிலர் சக்சஸ் பார்ட்டி…
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் வெளியாகும் முன்னரே இமயமலை சென்றுவிட்ட ரஜினி, இருதினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். அதேவேகத்தில் ஜெயிலர் படக்குழுவினருடன் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய ரஜினியின் போட்டோஸ் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே சரியான ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வந்தார். பேட்ட, தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களுமே ரஜினியின் மார்க்கெட்டையே காலி செய்தது. முதல் நாள் ஓபனிங் தவிர பாக்ஸ் ஆபிஸில் கூட மரண அடி வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதேபோல், விமர்சன ரீதியாகவும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.
இதனால், ரஜினியின் ஜெயிலர் படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. முதன்முறையாக இயக்குநர் நெல்சனுடன் கை கோர்த்தார் ரஜினி. முன்னதாக பீஸ்ட் தோல்வியடைந்ததால் ரஜினியின் தலைவர் 169ல் இருந்து நெல்சன் நீக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால், இறுதியாக அவரையே ஓக்கே செய்த ரஜினி, அதற்கான காரணத்தையும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசினார். இந்நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. ஆகஸ்ட் 10 முதல் 15ம் தேதி வரையிலான தொடர் விடுமுறை காரணமாக, ஜெயிலர் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் பரபரப்பாக நடந்தது. இதனால் ஜெயிலர் படத்தின் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபமாக அமைந்துள்ளது. நல்ல ஓபனிங் இருந்தாலும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அதேபோல் இரண்டாவது வாரத்தில் இருந்து வசூல் மிக மோசம் என சொல்லப்படுகிறது. முதல் வாரம் 375 கோடி ரூபாய் வசூலித்த ஜெயிலர், இரண்டாவது வாரம் 175 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் ஒட்டுமொத்தமாக இதுவரை 550 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது ஜெயிலர் திரைப்படம். இந்தப் படம் வெளியாகும் முன்னரே இமயமலைக்கு பறந்துவிட்டார் சூப்பர் ஸ்டார். அதன்பின்னர் உபி சென்று அம்மாநில முதலமைச்சர் யோகியின் கால்களிலும் விழந்து, அதுகுறித்து விளக்கம் கொடுத்திருந்தார். இந்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில், சென்னை திரும்பிவிட்ட ரஜினி ஜெயிலர் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடியுள்ளார். கடந்த வாரம் இயக்குநர் நெல்சன் தலைமையில் ஜெயிலர் சக்சஸ் மீட் நடைபெற்றது. ஆனால், இந்த முறை ரொம்பவே சைலண்டாக சக்சஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளது படக்குழு. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் உட்பட அவரது உதவி இயக்குநர்களும் கலந்துகொண்டனர். அப்போது ரஜினியுடன் படக்குழுவினர் எடுத்துகொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.