பத்மினி- திரைவிமர்சனம்
கத்தி வீச்சருவா, சைக்கோ கொலைகாரன், பாலியல் வன்கொடுமை, அறைகுறை ஆடை காட்சிகள், சாதீ, அடக்குமுறை , ஒடுக்குமுறை, வன்மம், தீவிரவாதம் , புரட்சி என ஏதும் இல்லாமல் சாதாரணமாக கொஞ்சம் காமெடி கலந்து ஒரு குடும்ப படத்தை பார்க்கணுமா? அப்ப நீங்க தாராளமாக “ பத்மினி “ படத்தை பார்க்கலாம்.
இந்த திரைப்படத்தை சென்னா ஹெட்ஜ் என்பவர் இயக்கியுள்ளார். இதில் குஞ்சாகோபோபன், மடோனா செபாஸ்டியன், அபர்ணா பாலமுரளி , வின்ஸி அலோசியஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எளிய கதைக்கருவினை கொண்டு அதனை ரசிக்கும் விதமாக படம் எடுப்பதில் வல்லவர்கள் மலையாள இயக்குனர்கள்.
பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் திருமணம் குறித்த ப்ரச்சனைகள் உண்டு என்கிற சமூக உளவியல்களை கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதனை சிரிக்க சிரிக்க திரை மொழியில் சொல்லி ரசிக்க வந்திருக்கும் நகைச்சுவை படமே “பத்மினி” . மலையாள மொழியில் வந்திருக்கும் இத்திரைப்படத்தை தற்போது நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் கண்டு களிக்கலாம்.
ஆண்களின் திருமணம் குறித்த பார்வைகள், அவர்களின் கண்ணோட்டங்கள், அவர்களுக்கும் திருமணம் குறித்தான பிரச்சனைகள் என்பதை கதைக்களமாக எடுத்ததற்காகவே இயக்குனரை பெரிதும் பாராட்டலாம்.
குஞ்சாக்கோபோபனுக்கு திருமணமாகி முதல் ராத்திரியன்று அவரது மனைவி வின்சி அலோஷியஸ் ஓடிப் போவதிலிருந்து கதை துவங்குகிறது.அதன் பிறகு அவருக்கு ஏற்படும் சின்ன சின்ன பாதிப்புகள், அடுத்த திருமணத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் என கதையை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
“ பத்மினி “ என்கிற பெயரை வைத்து குஞ்சாக்கோ போபனை அவரது ஊர் ஆட்கள் கேலி செய்ய, அந்த பெயரின் மீது வெறுப்புடன் அலைகிறார் குஞ்சாக்கோ போபன்.
ஆனால் எதிர்பாராத விதமாக “பத்மினி “ என்ற அதே பெயருடன் அவர் வாழ்வில் காதலுடன் நுழைகிறார் மடோனா செமாஸ்டியன்.
மடோனா வீட்டில் பழைய மனைவியை டைவர்ஸ் செய்தால் தான் திருமணம் என கண்டிஷன் போட ஓடிப்போன மனைவி வின்ஸியை தேடிப்போகிறார் குஞ்சாக்கோ போபன்.
மடோனாவின் தோழி அபர்ணா வக்கீலாக குஞ்சாகோபோபனுக்கு டைவர்ஸூக்காக உதவுகிறார். அபர்ணாவும் , குஞ்சாக்கோ போபனும் திருமணத்திற்கு பெண் பார்க்க போன இடத்தில் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான்.
அபர்ணாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் “ராரீரம் பெட் கம்பெனி ஓனர் “ ப்ரேமில் வரும் போதெல்லாம் நமக்கு பெரும் சிரிப்பை வரவழைக்கிறார்.
கடைசி காட்சிகளில் குஞ்சாக்கோ போபனின் மனைவி வின்ஸி, மடோனா, அபர்ணா வரும் காட்சிகள் சுவராஸ்யமான நகைச்சுவை.
குஞ்சாக்கோ போபனுக்கு டைவர்ஸ் கிடைத்ததா? அபர்ணாவுக்கும் ராரீரம் கம்பெனி ஓனருக்கும் திருமணம் நடந்ததா?
குச்சாக்கோ போபன் மடோனாவை திருமணம் செய்தாரா? என்பதை நகைச்சுவை காட்சிகளுடன் சுவையாக முடித்திருக்கிறார்கள்.
அபர்ணா பாலமுரளி தோற்றத்தில் கவனம் செலுத்தலாம் . இல்லையெனில் இனி அம்மா , அண்ணி வேடங்களுக்கே கூப்பிடுவார்கள்.
மொத்தத்தில் முழு நீள குடும்ப காமெடி திரைப்படம் . “பத்மினி” நகைச்சுவை கலாட்டா.