வருகிறது உலக கோப்பை… அட்டவணை ரெடி!

 வருகிறது உலக கோப்பை… அட்டவணை ரெடி!

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திவருவது 50 ஓவர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளாகும். மொத்தம் 48 போட்டிகள் கொண்ட இந்தக் உலகக் கோப்பை தொடர் 45 நாட்கள் நடைபெற உள்ளது. தற்போது ஒன்பது லீக் போட்டிகளை மாற்றியமைத்து புதிய அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது ஐசிசி.

இந்தியாவின் 10 பெரிய நகரங்களில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளுக்கான அட்டவணை கடந்த ஜூன் மாதம் ஐசிசி நிர்வாகி மற்றும் இந்திய  கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைச் செயலாளர் ஜெய்ஷா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கிரிக்கெட் திருவிழா இம்முறை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடைபெற உள்ளது என்பது கூடுதல் ஜாக்பாட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு.

13வது ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி துவங்க உள்ளது.

முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே கோலாகலமாக தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 48 போட்டிகள் கொண்ட இந்தக் உலகக் கோப்பை தொடர் 45 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறும் சில இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டிகளில் சில மாற்றங்கள் செய்யவேண்டி, போட்டிகள் நடைபெறும் மாநிலத்தின் காவல்துறை பிசிசிஐ நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, அந்தக் கோரிக்கைகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு தற்போது உலகக் கோப்பை போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் செய்து வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, மொத்தம் ஒன்பது போட்டிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றில் சில போட்டிகள் ஒரு நாளுக்கு முன்பும், சில போட்டிகள் பகல் – இரவு ஆட்டமாகவும் மாற்றப்பட்டு உள்ளன.

குறிப்பாக, இந்தியா அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் விளையாடும் போட்டி தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

புதிய அட்டவணையின்படி அக்டோபர் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 14ம் தேதி நடைபெறும் என மாற்றி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல், அக்டோபர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும், அக்டோபர் 12ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுவதாக இருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அதைப்போலவே, அக்டோபர் 13ம் தேதி நடைபெற இருந்த ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...