“தயக்கத்தைத் தகர்த்துவிடு” | முனைவர் சுடர்க்கொடிகண்ணன்
நாம் சிறுபிள்ளைகளாய் பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கும் போது, வகுப்பில் ஆசிரியர் பொதுவாக ஒரு கேள்வியைக் கேட்பார். அதற்கு மாணவர்கள் யார் வேண்டுமானாலும் எழுந்து பதில் சொல்லலாம். அந்தக் கேள்விக்கான விடை கூட நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் எழுந்து பதில் சொல்ல ஏதோ ஒருவித தயக்கம் நம்மைத் தடுக்கும். நாம் தயங்கிக் கொண்டே உட்கார்ந்திருக்கும் அதே நேரத்தில், நமக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நம் நண்பன், சட்டென்று பதில் சொல்லி விடுவான். உடனே, ஆசிரியரும் நண்பன் விடை சொன்னதற்காக அனைத்து மாணவர்களையும் கைதட்டச் சொல்லி ஊக்கப்படுத்துவார். அப்போது தான் நமக்கு உள்ளே ஒரே வருத்தமாக இருக்கும். நமக்குத்தான் விடை தெரியுமே, நாமே எழுந்து விடை சொல்லி இருக்கலாமே என்று தோன்றும். கைதட்டலையும், ஆசிரியரின் பாராட்டுகளையும் நாம் பெற்றிருக்கலாமே என்று மனம் ஆதங்கப்படும். நம் தயக்கத்தினால் கைக்கெட்டிய வாய்ப்பு கைநழுவிப் போயிருக்கும். இந்த அனுபவத்தை ஏறக்குறைய நாம் எல்லோருமே எதிர் கொண்டிருப்போம்.
ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாத தயக்கம் ஒருபுறம் என்றால், வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களையும் கேட்கத் தயங்குவார்கள் பலர். ‘நம் கேள்வி சரியானது தானா, கேட்டால் எல்லோரும் நகைப்பார்களா’ என்றே தயங்கித் தயங்கி, சந்தேகத்தைக் கூடத் தீர்க்க முடியாமல், வாயை மூடிக்கொள்பவர்களும் உண்டு. இதில் யாருக்கு நஷ்டம்? நிச்சயமாக நமக்குத்தான். கேள்வி சரியோ தவறோ, தயங்காமல் கேட்க வேண்டும். தெரியாதவற்றை தெரிந்து கொள்வதற்கும், புரியாதவற்றை புரிந்து கொள்வதற்கும், கேள்வி கேட்கும் திறன் உதவும். கூச்ச சுபாவத்தின் காரணமாகவும் சிலர் அமைதியாகி விடுகிறார்கள். இதனால், சரியான திறமை இருந்தும் தயக்கத்தினால் வெளிகாட்ட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களது, திறமை அவர்களுடனே மக்கிப் போய்விடுகிறது. ஆகவே, இளைஞர்களே! தயக்கத்தை விடுத்துத் தைரியமாய் கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
“இறங்கி ஆடுங்கள்”
இன்றைய தலைமுறையின் பெரிய பலவீனம் தோல்வி குறித்த பயமும், நம்மால் முடியுமா என்ற தயக்கமும் தான். ‘வெற்றி மட்டுமே வாழ்க்கை’ என்று நினைக்கின்றனர். இதனால் தோல்வி அடைந்து விடுவோமோ என்று பயந்து, வாழ்க்கை என்னும் மைதானத்தில் இறங்கி ஆடவே தயங்கு கின்றனர். இறங்கி ஆடினால் தானே வெற்றியோ, தோல்வியோ கிடைக்கும். ஆடவே தயங்கினால்?. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி தான் வரும். ஆகவே, இளைஞர்களே! தோல்விக்குப் பயப்படாதீர்கள். ‘அச்சம்தவிர்’ என்ற மகாகவியின் வரிகளை மனதில் வையுங்கள். தயக்கத்தைத் துறந்து, அச்சத்தை விடுத்து, வெற்றியோ, தோல்வியோ ஒருகை பார்த்து விடுவோம் என்று துணிந்து இறங்குங்கள்.
“தயக்கம் வெற்றிக்கு முட்டுக்கட்டை”
ஒருவரின் முன்னேற்றத்திற்குத் முட்டுக்கட்டையாக இருப்பதே இந்தத் தயக்கம் தான். திறமைகள் உங்களிடம் கொட்டிக் கிடந்தாலும், மனதில் தயக்கம் இருந்தால் ஒருசெயலைத் துணிச்சலுடன் செய்ய முடியாது. நாம் செய்யும் செயல் சரியா, தவறா என்று தயங்கிக் கொண்டேயிருந்தால் எந்தச் செயலையும் சரிவர செய்ய முடியாது. வேலைக்கான நேர்காணலின் போதுகூட அதிகப்படியான உங்களின் தயக்கம் உங்கள் ஆற்றலை, திறமைகளை மறைத்துவிடும். ஆனால், திறமை குறைந்த ஒருவர் தயக்கமின்மையின் காரணமாக வாய்ப்புகளை எட்டிப்பிடித்து வாழ்வில் முன்னேறி விடுவார்கள். உங்களின் தயக்க உணர்வு நீங்கினால் தான் உங்களின் ஆற்றல் தங்கு தடையில்லாமல் வெளிப்படும். ஆகவே, இளைஞர்களே! தயங்கினால் சரித்திரம் படைக்க முடியாது. பயமும், தயக்கமும் உள்ளவர்களைத் தோல்வி துரத்திக் கொண்டே தான் இருக்கும். மனதில் நினைக்கும் நல்ல செயல்களை ஆற்றலுடனும், தைரியத்துடனும் செயல் படுத்துங்கள். வாழ்க்கையில் சரியான குறிக்கோளை உங்களின் மனதில் விதையுங்கள். நல்ல எண்ணங்களாகிய நீரூற்றுங்கள். கடும் உழைப்பை உரமாக்குங்கள். தோல்வியின் அடையாளம் தயக்கம். வெற்றியின் அடையாளம் துணிச்சல். தோற்றவர் கூட அடுத்தமுறை வெல்லலாம். ஆனால் தயங்கியவர் என்றுமே வென்றதில்லை என்பதை மனதில் வையுங்கள்! “துணிவு” என்ற துடுப்பைக் கையிலெடுங்கள். உங்களின் முன்னேற்றத்தை நங்கூரம் இட்டு நிறுத்தி வைத்திருக்கும் உங்களின் தயக்கத்தைத் தள்ளி வையுங்கள். கவிஞர் சாந்தி சரவணன் அவர்களின் வரிகள்:
‘விதை மண்ணை முட்டிச் செடியாகத் தயங்கவில்லை!
செடி வேர் பிடித்து மரமாகத் தயங்கவில்லை!
மொட்டு மணம் வீசி மலராகத் தயங்கவில்லை!
மலர் காயாகத் தயங்கவில்லை!
காய் கனியாகத் தயங்கவில்லை!
கனி விதையாகத் தயங்கவில்லை!
கரு உருப்பெற்று மழலையாகத் தயங்கவில்லை!
கற்கள் உளியால் அடிபெற்று சிற்பங்களாகத் தயங்கவில்லை!
மேகம் மழையாகத் தயங்கவில்லை!
தென்றல் புயலாகத் தயங்கவில்லை!
ஆறு அருவியாகத் தயங்கவில்லை!
பகல் இரவாகத் தயங்கவில்லை!
இளைஞனே! நீ மட்டும் ஏன் எல்லாவற்றிற்கும்
த…ய…ங்…கு…கி… றா…ய்!’
ஆகவே, இன்றைய இளைஞர்களே! தயக்கத்தைத் தகர்த்துவிடுங்கள்! தகுதியினைக் காட்டி விடுங்கள்! வெற்றியினை எட்டி விடுங்கள்!
–முனைவர் சுடர்க்கொடி கண்ணன்