ஓவியர் ஜெயராஜ்
இன்று ஓவியர் திரு.ஜெயராஜ் அவர்களுக்கு பிறந்தநாள்
ஜெயராஜ் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் 400க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஓவியங்களை வரைந்துள்ளார். அட்டைப்பட ஓவியங்கள், படைப்புகளுக்கான ஓவியங்கள், சித்திரக்கதை போன்ற துறைகளிலும், திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சிற்பி என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியுள்ளார்.
ஓவியச் சக்ரவர்த்தி, ஓவியச் செம்மல் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் வரைந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் 47 பத்திரிக்கைகளில் வந்துள்ளன
ஓவியர் ஜெயராஜ் நேர்காணல்
கே: சுஜாதா என்றாலே ஞாபகத்திற்கு வருவது கணேஷ், வசந்த். அவர்களை வாசகர் கண்முன்னே உலவவிட்ட அனுபவத்தைச் சொல்ல முடியுமா?
ப: சுஜாதாவின் பாணியே தனி. அதுவரை வாசகர்கள் படித்திராத நடை; புதுமையான கரு; வித்தியாசமான கதைப்போக்கு. நவீனமானதுன்னு சொன்னாக்கூட சுஜாதாவைக் குறைத்து மதிப்பிடுவதாகும். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை என்னும்படி நிறையத் தகவல்களை அறிந்து வைத்திருந்தார். தனக்குத் தெரிஞ்ச எல்லா விஷயங்களையும் வாசகனுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணமுங்கற ஆர்வம் அவருக்கு இருந்தது. நான் கிறங்கிப் போய் அவருடைய கதைகளைப் படிப்பதுண்டு. சுஜாதா கதைக்குப் படம் போடணும்னு சொன்னதும் எனக்குத் தலைகால் புரியல்லை. கணேஷ், வசந்த் இருவரையும் ஸ்கெட்ச் வரைந்து, மைலாப்பூரில் இருந்த அவரிடம் சென்று காட்டினேன். வாங்கிப் பார்த்த அவர், “இதைவிட பர்ஃபெக்டாகப் போட முடியாது. இதுவே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டார். கணேஷ் கொஞ்சம் சீரியஸான ஆசாமி. வசந்த் குறும்புக்கார இளைஞன். அதை நான் அந்த ஓவியத்தில் பிரதிபலித்திருந்தேன். அது எஸ்.ஏ.பி.க்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், “வஸந்தை இண்ட்ரட்யூஸ் செய்ய முடியுமா, முகவரி தெரியுமா?” என்று காலேஜ் பெண்களிடமிருந்து கடிதங்கள் வந்ததுதான்.
கே: அப்புசாமி, சீதாப்பாட்டி உருவானது குறித்துச் சொல்லுங்கள்!
ப: அது ரொம்ப சுவாரஸ்யமானது. குமுதத்தின் ஆசிரியர் குழுவில் ஜ.ரா. சுந்தரேசனும் ஒருவர். அவர் என்னிடம், “இதுவரை எல்லோரும் இளசுகளையே நாயகன், நாயகியாக வைத்து எழுதியிருக்கிறார்கள் நான் ஒரு மாறுதலுக்கு ஒரு தாத்தாவை வைத்துக் கதை எழுதப் போகிறேன். நல்ல பழுத்த கிழம். ஆனால் அப்பாவி. அவரைப் பார்த்தாலே சிரிப்பு வர வேண்டும். அந்த மாதிரி வரையுங்கள்” என்று சொன்னார். நானும் யோசித்து ஒரு தாத்தா உருவத்தை வரைந்தேன். அது அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. ஆசிரியரிடம் காட்ட உள்ளே எடுத்துச் சென்றார். நான் அதற்குள் அந்த தாத்தாவுக்கு ஜோடியாக, ஒரு பாட்டியையும் வரைந்துவிட்டேன். அப்புசாமித் தாத்தாவின் முகத்தையே, பாட்டிக்கும் போட்டேன். அதற்கு மேலே தலைமுடி, மூக்குக் கண்ணாடி, குங்குமம் என்று சில எக்ஸ்ட்ரா விஷயங்களைச் சேர்த்தேன். இரண்டு படங்களையும் பார்த்த எஸ்.ஏ.பி. சிரியோ சிரி என்று சிரித்தார். வாசகர்களிடமும் நல்ல வரவேற்பு. இளமையாக, கவர்ச்சியாக வரைந்த இளம் பெண்களின் படங்களை விட, எனக்கு அதிகமான பெயர், புகழ் பெற்றுக் கொடுத்தது, அப்புசாமி-சீதாப்பாட்டி தான். ரசகுண்டு, பீமா ராவ், கீதாப் பாட்டி, அரைபிளேடு அருணாசலம் என்று நிறைய துணைப் பாத்திரங்கள். சிறுகதை, தொடர்கதை, சித்திரக்கதை என்ற மூன்று வடிவங்களிலும் வந்திருக்கும் ஒரே கதை அப்புசாமி கதைதான் என்று நினைக்கிறேன். எந்தப் பத்திரிகையில் அப்புசாமி கதை வந்தாலும், அதற்குப் படம் போட என்னையே அழைத்தனர்.
ஓவியர் ஜெயராஜ் நேர்காணல்
நன்றி: தென்றல்