“வானத்தையே அளக்கலாம் வா வா…|முனைவர் சுடர்க்கொடி கண்ணன்”

 “வானத்தையே அளக்கலாம் வா வா…|முனைவர் சுடர்க்கொடி கண்ணன்”

                      

எனக்கு மட்டும் அதிர்ஷ்டமே இல்லை…

நான் எதைச்செய்தாலும்
தோல்வியிலேயே முடிகிறது…

எனக்கு மட்டும் ஏன் இப்படி?…

என்று புலம்பிக் கொண்டிருக்கும் இளைஞரா நீங்கள்?

அப்படியென்றால்

இந்தக்கட்டுரை உங்களுக்குத் தான்.

அதிர்ஷ்டமே இல்லை என்று புலம்பும் நீங்கள், வாழ்வில் சாதனைகள் பல படைத்த வெற்றியாளர்களைக் கொஞ்சம் கவனித்திருக்கிறீர்களா?

அவர்கள் வீட்டு வாசலில் மட்டும் வாய்ப்புகள் வந்து கதவைத்தட்டிக் கொண்டு வரிசை கட்டி நிற்கின்றனவா?…

இல்லையே.

பிறகு அவர்கள் மட்டும் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

இங்கு தான் நீங்கள் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

வெற்றியாளர்களுக்குரிய சிறப்புத் தகுதியே, அவர்கள் வெற்றிடத்தில் இருந்தும் கூட வாய்ப்புகளை உருவாக்குவார்கள்.

ஒரு சின்ன வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்தாலும் உடனே அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெரிய பெரிய சாதனைகளைப் படைப்பார்கள்.

வாய்ப்புகள் எப்போது வரும் என்று இவர்கள் காத்திருப்பார்கள். நள்ளிரவில் வந்து வாய்ப்பு ஜன்னலைத் தட்டினாலும், இறுகப் பற்றிக் கொள்வார்கள்.

இதுதான் வெற்றியாளர்களின் ஸ்பெஷல்.

 வாய்ப்புகளைவசப்படுத்துங்கள்

ஆக, வாய்ப்புகள் எப்போதும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு நம்மிடம் வருவதில்லை.வாய்ப்பை வசப்படுத்த நாம் தான் தயாராக இருக்க வேண்டும்.

நம் தகுதியை வளர்த்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். கொக்குப் போல் அமைதியாய் சமயம் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும்;

காலம் வாய்த்த போது கொக்கு தன் அலகால்  சரியாகக் குத்தும் செயல் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

மடைத்தலையில் ஓடு மீன் ஓட  உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு’  – என்கிறார் ஔவையார்.

அதாவது, தண்ணீருக்கு நடுவே வாட்டத்துடன்  பசியோடு நிற்கும் கொக்கு, அதன் காலைச் சுற்றிப் பல சிறிய மீன்கள் ஓடிக் கொண்டிந்தாலும் அந்தக் கொக்கு அவற்றைக் கவ்வித்தின்பதில்லை.

ஏன் அது அவ்வாறு காத்துக் கொண்டிருக்க வேண்டும்? அந்தக் கொக்குக்கு மீனைப் பிடிக்கத் தெரியாதா? இல்லை.
அந்தக் கொக்கு அவசரப்படாது. தன் பசியைத் தீர்க்கக்கூடிய பெரிய மீன் வரும்வரை  பொறுமையாகக் காத்திருக்கும்.

பெரிய மீன் வரும் போது கொக்கு தூங்கிக் கொண்டிருந்தால் அதன் அலகில் மீன் எப்போதுமே இருக்கப்போவது இல்லை.
ஆகவே, நல்வாய்ப்புகளுக்காக நாமும் காத்திருக்கலாம்.
ஆனால் வரும் வாய்ப்புக்களைத் தவறவிடக்கூடாது.

“வெற்றிநிச்சயம்..!”

 வாய்ப்புகள் எப்படி இடம், பொருள், ஏவல் பார்த்து வராதோ,
அதேபோல வயதைப் பார்த்தும் வருவதில்லை.

எந்த வயதிலும் உங்களுக்கான வாய்ப்பு வரலாம். மிகச்சிறுவயதிலேயே கூட வரலாம்.
இன்றைக்கு சாதனை படைத்த வெற்றியாளர்களெல்லாம் பெரும்பாலும் இளைஞர்களே.

உதாரணமாக, கூகுள்  நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி
திரு. சுந்தர்பிச்சை அவர்களைக் குறிப்பிடலாம்.
அவர் பெரிய வசதிகளோடும், வாய்ப்புகளோடும் பிறக்கவில்லை. நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ஆனால், கிடைத்த வாய்ப்புகளைத் திறமையாய் பற்றிக்கொண்டு வெற்றிப் படிக்கட்டுகளில் வேகமாய் ஏறியவர்.
கணினிபொறியாளரானஇவர், கூகுள் நிறுவனத்தில் பல புதுமையான முயற்சிகளை தனது தலைமையின்கீழ் மேற்கொண்டார்.

அப்படி அவர் தலைமை தாங்கியவற்றில் கூகுள்குரோம் மற்றும் குரோம்ஓஎஸ் உள்ளிட்ட கூகுளின் சில தயாரிப்புகள் நல்ல வெற்றியைக்கண்டன.

ஜீமெயில் மற்றும் கூகுள்டாக்ஸ் போன்ற பிற கூகுளின் தயாரிப்புகளின் நிர்வாக பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

இதனால், கூகுளின் மிக முக்கிய தயாரிப்புகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய மானமனிதர்” என்றுஅழைக்கப்படுகிறார்.

இத்தனை வேலைகளுக்கிடையேயும், தான் படித்த காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டிமாணவர்களுடன் ஸ்கைபில் அதிகம் உரையாடுகிறார். அந்த இளம் மாணவர்களுக்கு  உற்சாகமூட்டுகிறார்.

தன்னைப்பற்றிய அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

வருங்கால மாணவ சமுதாயத்திற்கு நம்பிக்கை ஊட்டும் இவரது செயல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன்றைய இளைஞர்கள் இவரைப் போன்ற வெற்றியாளர்களைப் பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

 

“விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி”

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான லட்சியம் இருக்கும்.

சிலருக்கு வியாபாரத்தில் சாதிக்க வேண்டும்.

சிலருக்கு படிப்பில் சாதிக்க வேண்டும்.

சிலருக்குமருத்துவராகவேண்டும். சிலருக்கு அரசியல் தளத்தில் கால்தடம் பதிக்க வேண்டும்.

இவ்வாறு நம்முடைய மனதில் பதிந்துள்ள கனவுகளை, லட்சியங்களை அடைவதற்கு பொறுமை யோடும்,  விடாமுயற்சியோடும், உறுதியோடும் காத்திருக்க வேண்டும்.

பொறுமையோடு காத்திருந்து, வாய்ப்பு எந்தப்பக்கமாக வந்தாலும் அதனை விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும்.

நமக்கான நேரம் வரும்போது நாம் யார் என்பதைக் காண்பிக்க வேண்டும்.

அதற்கு எப்போதும் விழிப்போடு இருத்தல் அவசியம்.

ஆக,
இளைஞர்கள் சிறுவயதிலேயே,

உங்கள் லட்சியம் எந்தத்துறையில் இருக்கிறது என்பதை அறிந்து, எவ்வளவு கற்க முடியுமோ அந்தத்துறையில் அவ்வளவையும் கற்றுக்கொண்டு உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

எப்போதும் தயார் நிலையில் உங்களை வைத்துக் கொண்டிருங்கள்.

உங்கள் கனவை அடையும் சக்தி உங்கள் கைகளில் உள்ளது என்று நம்புங்கள்.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,

நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும்’  

என்ற கலாம் ஐயாவின் பொன்மொழிகளை மறந்துவிடாதீர்கள்

“வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற கவிஞர் தாராபாரதியின் எழுச்சி மிக்க வரிகளை நினைவில் வையுங்கள்.

உன்னுள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன.
உனக்கு நிகர் நீயே.
உன் மீது நம்பிக்கை வை.
உன்னால் எதுவும் முடியும்
என்ற சுவாமிவிவேகானந்தரின் வரிகள் உங்களுக்குள் எழுச்சியை ஏற்படுத்தும்.

உலகில் சாதனை புரிந்த அனைவருக்குள்ளும் அணையா தீபமாய் அவர்கள் இலக்கை அடைய உதவி செய்தது அவர்களுக்குள்ளிருக்கும் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே.

ஆகவே,
ஒவ்வொரு இளைஞனும் விடாமுயற்சியோடு,

தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்து, வாய்ப்புக்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டால்…
இளைஞனே!

தோல்விகள்  ஏதும்உனக்கில்லைஇனி 

தொடு வானம் தான் உன்எல்லை

(முனைவர் சுடர்க்கொடி கண்ணன்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...