“இளமை திரும்பும் இந்தியன்- 2 கமல்ஹாசன் -சங்கரின் அசத்தல் அப்டேட்”
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட இயக்குநர் ஷங்கர் அதன் VFX பணிகளுக்காக ஹாலிவுட்டின் புகழ்பெற்ற Lola VFX நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனத்துடன் ஷங்கர் இணைய காரணமே டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பக்காவாக செய்யத்தான். விக்ரம் படத்திலேயே இந்த விஷயம் வரப்போவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போன நிலையில், ரஜினியையே வெள்ளையாக்கிய ஷங்கர் இந்தியன் 2 படத்தில் இந்த விஷயத்தை களமிறக்குகிறார்.
தற்போது அதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட் தான் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், சிவாஜி, அந்நியன், எந்திரன், ஐ, 2.0 என ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டத்தையும் பிரம்மிப்பின் உச்சத்தையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திரையில் கொடுத்து வரும் டெக்னோ டைரக்டராகவே ஷங்கர் கெத்துக் காட்டி வருகிறார்.இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் மூலம் மீண்டும் தனது ஒட்டுமொத்த வித்தையையும் களத்தில் இறக்க காத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிரபலமான லோலா விஎஃப்எக்ஸ் நிறுவனத்தில் தான் தற்போது இந்தியன் 2 படத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிறுவனம் தான் முதன் முதலில் எக்ஸ்மென் படத்திற்காக புரொபஸர் எக்ஸ் மற்றும் மேக்னட்டோ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களின் வயதை குறைத்து டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை சிறப்பாக திரையில் கொண்டு வந்திருந்தது.
தற்போது அந்த நிறுவனத்தில் அமர்ந்து கொண்டு அங்கே உள்ள அட்வான்ஸ் டெக்னாலஜியை ஸ்கேனிங் செய்துக் கொண்டிருக்கிறேன் என இயக்குநர் ஷங்கர் ஒரு போட்டோ வெளியிட்டு மாஸ் காட்டி உள்ளார்.இந்தியன் படத்தில் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் கமல் எப்படி நடித்திருந்தாரோ அதே போல இந்தியன் 2 படத்தில் வரும் ஃபிளாஷ்பேக் காட்சியிலும் கமல்ஹாசனை திரையில் காட்டுவார் ஷங்கர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மேஜிக் மட்டும் சரியாக நடந்து விட்டால், இந்திய சினிமாவே மலைத்துப் பார்க்கும் படமாக இந்தியன் 2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மறைந்த நடிகர்களான விவேக் மற்றும் நெடுமுடி வேணு கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுக்கும் வித்தையையும் இந்த நிறுவனத்துடன் இணைந்து செய்யப் போவதாகவும், பாடி டபுள்கள் மூலம் எடுக்கப்பட்ட மீதிக் காட்சிகளை வைத்து மறைந்த நடிகர்கள் நடித்ததை போலவே லைவ் ஆக்ஷனாக திரையில் காட்டும் முயற்சியிலும் ஷங்கர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.