எழுத்துலக ஜாம்பவான் ஏ.எல்.நாராயணன் || காலச்சக்கரம் சூழல்கிறது – 20

 எழுத்துலக ஜாம்பவான் ஏ.எல்.நாராயணன் || காலச்சக்கரம் சூழல்கிறது – 20

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

நடிகர் ஆர்.எஸ்.மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ் தயாரித்த நாடகங்கள் அனைத்திலும் பிரதான பாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகராக நாடக மேடையில் வலம் வந்தவர் ஹெரான் ராமசாமி.

ஒருகண் இல்லாத அசுரகுரு சுக்ராச்சாரியாராக சூரபத்மன் எனும் நாடகத்தில் நடித்தபோது மிகப்பெரிய புகழ்பெற்றார் ஹெரான்.

அதுவே அவருக்கு ஒரு பெரிய சோதனையையும் ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த நாடகங்களில் எல்லாம் நடிக்கப் பிடிக்காமல் பல்வேறு மனத்தாங்கலுடன் நேஷனல் தியேட்டர்ஸ்சை விட்டு விலகி வெளியே வந்த போது நாகன் எனும் பெயரைக் கொண்ட ஒரு நல்ல மனிதர் ஹெரானுக்காகவே லட்சுமி தியேட்டர்ஸ் எனும் ஒரு புது நாடகக் குழுவை தொடங்கினார்.

அந்த நாடகக் குழுவிற்காகத் திரைப்பட உலகில் மிகப்பெரிய கதை வசனகர்த்தாவாக கோலோச்சிய திரு ஏ.எல். நாராயணன் அவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்தது தான் ‘ஆச்சார்யா ராவணா’ எனும் முதல் நாடகம். அதில் ராவணனாக நடித்து ஹெரான் தன் வெற்றிப் பயணத்தைத் தொடங்கினார்.

எங்கு பார்த்தாலும் ‘ஆச்சாரியா ராவணா’ பற்றியும், வெண்கலக் குரல் கொண்ட ஹெரானின் நடிப்பைப் பற்றியுமே பேச்சாக இருந்தது. 

விரைவில் அது ஹெரானை பரமபத ஏணி போல் உயரத்திற்கு அழைத்துச் சென்றது. கதை, வசனகர்த்தாவாகிய A.L.நாராயணன் அவர்களின் உரையாடல்கள் எல்லோரையுமே வியக்க வைத்தது.

அந்த நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படைப்பாக கிருஷ்ண பகவானை  முதன்மைப்படுத்தி மகாபாரதக் கதை ஒன்றை எழுதி ஹெரான் நாடகக் குழுவிற்கு வாங்கினார் A.L. நாராயணன்.

அந்த நாடகம்தான் ‘கலியுகம் பிறந்தது’. ஹெரானின் நடிப்பு, துரியோதனன் வேடத்தில் அவரது கம்பீரத் தோற்றம், குரல் எல்லாமே A.L.நாராயணனை வியக்க வைத்தது.

எத்தனையோ நடிகர்களைத் திரைப்படத்தில் அவர் பார்த்திருந்தாலும் அவர்களிடமிருந்து ஒரு வித்தியாசமான நடிப்பு, மாடுலேஷன், குரல் வளம் எல்லாமே ஏ.எல்.நாராயணன் அவர்களைப் பெருமைப்பட வைத்தது.

தன் எழுத்துத் திறமையை நிரூபிக்க மேலும் ஒரு நாடகத்தை வடித்தார்.

அந்த நாடகம்தான் ‘வால்மீகி’. அந்த நாடகத்தில் ஹெரான் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரனாக ‘ரட்ஷன்’ எனும் பாத்திரத்தில் நடித்தார்.

ஒருமுறை ரட்ஷன் நாரத முனிவரைச் சந்தித்தபோது அவன் செய்யும் வழிப்பறி கொள்ளையில்தான் குடும்பத்தைக் காப்பாற்றுவதாகவும் தாய், தந்தையரை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளவும் முடிகிறது என்றான்.

அப்போது நாரதர் கேட்கிறார், “உன்னுடைய தவறான பாதையில், நீ சம்பாதிக்கும் பொருளை எல்லாம் சந்தோஷமாகப் பெற்றுக் கொள்ளும் உன் தாய், தந்தையர் உன் பாவத்தில் பங்கு கொள்வார்களா?” என கேட்க, ரட்ஷன் உடனே சென்று தன் தாய் தந்தையர்களிடம் இதைச் சொல்லி “நீங்கள் என் பாவத்திலும் பங்கேற்பீர்கள் அல்லவா?” என்று  கேட்க, “இல்லை ரட்ஷா. அவரவர் பாவத்தை அவர்கள்தான் அனுபவிக்க முடியும்” என்று சொல்ல, ரட்ஷன் மனம் உடைந்து மரத்தடியில் போய் அமர்ந்து “மரா… மரா” என்று சொல்லியவண்ணம் தவம் செய்யத் தொடங்குகிறான்.

பல ஆண்டுகள் தவம் இருந்த ரட்ஷனுக்கு இறைவன் காட்சியளித்து “இனி நீ வால்மீகி என்று அழைத்து போற்றப்படுவாய், அதுமட்டுமல்ல, எனது சரிதத்தையும் நீயேதான் எழுதப் போகிறாய். மங்களம் உண்டாகட்டும்” என்று ஆசிர்வதிக்கிறார்.

அன்றையிலிருந்து ரட்ஷன் ஆக இருந்த கொள்ளைக்காரன் வால்மீகியாக மாறினான். அவர் மூலம் நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் தான் வால்மீகி ராமாயணம்.

A.L.நாராயணன் போன்ற மிகப் பெரிய எழுத்தாளர்களால்தான் இது போன்ற படைப்புகளை நாடகமாக எழுதி வெற்றி காண முடியும். இது எல்லாமே  திரு.A.L.நாராயணன் அவர்களுக்கு கைவந்த கலை.

ஹெரானின் நடிப்பாற்றலுக்கு ஹரிச்சந்திராவையும் எழுதி, தான் எழுதிய தமிழை அரிச்சந்திரனாக நடிக்கும் ஹெரான் நடிப்பின் மூலம் கண்ணால் பார்க்கலாம், காது குளிர உரையாடலைக் கேட்கலாம் என்று எண்ணினார்.

நடிகர் திலகத்திற்குப் பல படங்களுக்கு வசனம் எழுதிய A.L.நாராயணன் தன் எழுத்து திறமையால் எண்ணற்ற மேடை நாடகங்களையும் எழுதி, நாடக மேடையையும் அலங்கரித்தவர்.

எழுத்துலக ஜாம்பவான் என நான் மனதார போற்றுவது நாடகத் திரைப்பட உலகில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்த A.L.நாராயணன் அவர்களைத்தான்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...