கலைஞர் நூலகம் பாராட்டுக்குரியது || – பட்டுக்கோட்டை பிரபாகர்
மதுரையின் மதிப்புமிகு புதிய அடையாளச் சின்னமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கட்டமைப்பு வசதிகள் எல்லாம் உலகத் தரத்தில்.
கனடா சென்றிருந்தபோது டொரண்ட்டோ நகரில் அமைந்துள்ள பல நூலகங்களுக்குச் சென்று பிரமித்து இந்தத் தரத்தில் இத்தனை வசதிகளுடன் நம் நாட்டில் நூலகங்கள் இல்லையே என்று ஏக்கப்பட்டேன்.
கிட்டத்தட்ட அந்தத் தரத்தில் சென்னையில் இயங்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவன் நான். சென்னையில் இருந்தும் இன்னும் அதன் உள்ளே செல்லாத பலருக்கும் சிபாரிசு செய்துவருபவன்.
அங்கு காண்ட்டீன் வசதி மட்டும் முக்கியமான தேவையாக இருக்கிறது. மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நிதி ஒதுக்கி செப்பனிட்டு வருகிறார்கள்.
இதை விடவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்திற்கு விரைவில் செல்ல மனம் உந்தப்படுவது நிஜம்.
18 மாதங்களில் இதைக் கட்டியிருக்கிறார்கள். இங்கு அமைக்கப்பட்டுள்ள வசதிகளின் பட்டியலைப் பார்க்கும்போது தமிழ்நாடு அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
மூன்றாம் பாலினத்தவருக்காகத் தனிக் கழிவறை என்கிற வசதி வேறெங்குமே இல்லாதது. இதற்காக ஒரு சிறப்புப் பாராட்டும்.
மதுரை மற்றும் தென் மாவட்டத்து மக்கள் அனைவரும் மூன்றரை லட்சம் புத்தகங்களுடன் நாளை முதல் இயங்கத் தொடங்கும் இந்தச் சிறந்த நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது பாராட்ட வேண்டிய விஷயம் என்பதை உணராமல் அரசியல் ரீதியாக அணுக விரும்பும் நண்பர்கள் மாற்றுப் பாதையில் செல்லலாம்.
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூல் பக்கத்திலிருந்து…