“மாவீரன் நமக்குள் ஒருவன்-விமர்சனம்”

 “மாவீரன் நமக்குள் ஒருவன்-விமர்சனம்”

நம்ம வீட்டு பிள்ளை என்று பெண்களாலும் கோலிவுட் பிரின்ஸ் என்று ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் இன்று காலை வெளியானது. முதல் நாள் முதல் காட்சி என்கிற பெருமிதமும் பேரார்வமும் ரசிகர்களின் இதயத்துடிப்பில் இணைந்து விட்டது. கடந்த முப்பது வருடங்களாக குறிப்பாக 80-களின் இறுதியில் ரஜினி படங்களை முதல் நாள் பார்ப்பதென்பது கின்னஸ் சாதனைக்கு இணையாக வர்ணிக்கப்பட்ட காலம். கமல், விஜயகாந்த். பிரபு, கார்த்திக் போன்றவர்களுக்கும் பெருமளவில் ரசிகர்கள் இருந்தாலும் ரஜினிக்கு இருந்த வெறித்தனமான ரசிகர்கள் நடத்திய கொண்டாட்டம் என்பது அன்று தொடங்கி இன்றுவரை பேசுபொருளாக இருப்பதை அறிவியல் விதிகள் போல் மாற்ற மற்ற விதியாக விதைக்கப்பட்டுவிட்டது. மற்ற நடிகர்களின் மற்றும் ரசிகர்களின் எண்ணங்களையும் மடைமாற்றம் செய்தது இந்த ஆரவார கொண்டாட்டங்கள்.
தங்களது அபிமானத்துக்குறிய நடிகர்களுக்கும் அப்படி ஒரு கொண்டாட்டத்தை அடையாளப்படுத்திவிட வேண்டும் என்கிற ஆவலை தூண்டியதன் விளைவு கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக 10 ஆண்டுகளாக சமூவலைத்தளங்களின் தாக்கத்தால் வீரியமாக விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த கொண்டாட்ட மனநிலை விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டார். இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கவே சில காட்சி அமைப்புகள் திணிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தாலும் அதுவே தீவிர ரசிகர்கள் வளர்ச்சிக்கும் ஒப்பனிங் எனப்படும் வசூல்களுக்கும் ஏதுவாக இருப்பதால் நடிகர்களும் சுலபமாக இதில் ஈர்க்கப்படுகின்றனர். எம்.ஜி.ஆர் படங்களில் படத்தின் சுவரஸ்யத்துக்காக கமர்ஷியல் அம்சங்கள் சேர்க்கப்பட்டது. ரஜினி காலகட்டத்தில் அது ரசிகர்கள் மற்றும் வெகுஜன மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கான காட்சி அமைப்புகள் வைக்கப்பட்டது.
அதனாலேயே ரஜினி படங்களின் பன்ச் டயலாக்களுக்கு இருந்த எதிர்பார்ப்புக்களும் ஆரவாரங்களும் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை மற்ற நடிகர்களின் ரசிகர்களை தாண்டி அவர்களது வசனங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களும் தங்களது திரைப்பயணத்தின் கதாநாயக பிம்ப கதையின் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர தொடங்கிவிட்டனர். தற்போது, அவர்களின் வளர்ச்சி பிரம்மிக்கதக்கதாக இருந்தாலும் ரஜினி ஒப்பீடே அவர்களின் வளர்ச்சியும் பின்னடைவும், ஐம்பதை கடந்துவிட்ட அஜித்தும் நெருங்கிவிட்ட விஜய்யும் அடுத்த தலைமுறை நடிகர்களுடன் ரஜினியை போல் களம் காண்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்பதே யதார்த்தம். இந்த சூழலில் எம்ஜிஆர், ரஜினி பர்முலாவில் பயணித்த விஜய் தற்போது  விஜயகாந்த் பாணியில் அரசியல் பாதைக்கு திரும்புவது போன்ற செய்திகள் வலம் வரும் நிலையில் ரஜினி முருகன், சீமராஜா, டான் என கமர்ஷியல் கிங் வரிசையில் இணைந்த சிவகார்த்திகேயன் தற்போது சமூக கருத்துக்களுடன் வசனம் பேசி மாஸ் ஹீரோவாக முயன்று வெற்றியும் கண்டுள்ளார் அந்த வகையில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இப்படி பல பல நட்சத்திரங்களின் மூலம் மாபெரும் எதிர்பார்ப்பை மாவீரன் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது. அதுமட்டுமின்றி இப்படத்தில் தனது குரல் மூலமாக நடித்துள்ள விஜய் சேதுபதியும் இந்த எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். இப்படி பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள மாவீரன் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் {சத்யா} ஓவிய கதைகள் எழுதி வருகிறார். இந்த ஓவியத்தில் வரைந்து வரும் கதாபாத்திரம் தான் மாவீரன். அநீதியை எதிர்த்து, போராடி மக்களுக்கு நீதியை வழங்கி, மக்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுபவன் தான் இந்த மாவீரன். இப்படி தனது கதையில் மாவீரனை தைரியமான கதாபாத்திரமாக வடிவமைக்கும் சிவா, தனது நிஜ வாழ்க்கையில் மிகவும் பயந்த சுபாவத்துடன் எந்த பிரச்சனை தனக்கும் தனது குடும்பத்திற்கும் வந்தாலும், அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டும் என சொல்லும் நபராக இருக்கிறார். இப்படி இருக்கும் கதாநாயகன் சிவாவை தேடி அரசியல் ரீதியான பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனையில் சிவகார்த்திகேயனுக்கு எமனாக என்ட்ரி கொடுக்கிறார் அமைச்சர் மிஷ்கின் {YM ஜெயக்கொடி}. சிவகார்த்திகேயனுக்கு மட்டுமின்றி அவரை சுற்றி இருக்கும் மக்களுக்கும் மிஷ்கினால் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. இந்த பிரச்சையில் இருந்து தன்னை எப்படி சிவகார்த்திகேயன் பாதுகாத்துக் கொண்டார். மாவீரன் எப்படி சிவகார்த்திகேயனுக்கு உதவினார்? கதையில் வரும் மாவீரன் போல் நிஜ வாழ்க்கையில் மக்களுக்காக போராடினாரா சிவகார்த்திகேயன் என்பதே படத்தின் மீதி கதை..

சிவகார்த்திகேயன் மீண்டும் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் நிரூபித்துள்ளார். மாவீரனுக்கு முன் வெளிவந்த படம் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்கள் அனைத்தையும் மாவீரன் படத்தின் மூலம் அடித்து நொறுக்கியுள்ளார். குறிப்பாக பயந்த சுபாவத்துடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகள் கைதட்டல்களை அள்ளுகிறது. மேலும் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார்.மாவீரன் குரலாக வரும் விஜய் சேதுபதி திரைக்கதையின் ஓட்டத்திற்கு சிறப்பாக உதவியுள்ளார். வில்லன் மிஷ்கின் மிரட்டலான நடிப்பு. ஆனாலும் கூட இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். நடிகை சரிதாவின் அனுபவ நடிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் தனக்கு கொடுத்த ரோலில் நன்றாக நடித்துள்ளார். ஆனால் காட்சிகள் கொஞ்சம் குறைவு தான்.

சுனில் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து விட்டது. மேலும் திரையரங்கில் உள்ள அனைவரையும் தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவையில் மூழ்கடித்து விட்டார் யோகி பாபு. சிவாவின் தங்கையாக நடித்துள்ள மோனிஷா தனக்கு கொடுக்கப்பட்ட ரோலில் சிறப்பாக நடித்துள்ளார். மற்றபடி அனைவரும் அவரவர் வேலையை திரையில் சரியாக செய்துள்ளனர். இயக்குனர் மடோன் அஸ்வின் தனது திரைக்கதையின் மூலம் அசர வைத்துவிட்டார். சில இடங்களில் தொய்வு இருந்தாலும், அவை யாவும் குறை சொல்லும் அளவுக்கு இல்லை. அனைவரையும் எளிதில் கவரும் வகையில் மாவீரனை வடிவமைத்த விதம் சிறப்பு. மண்டேலா படத்திற்கு பின் மீண்டும் சிறப்பாக படைப்பை கொடுத்துள்ளார். ஆக்ஷன், நகைச்சுவை இருந்தாலும், தன்னுடைய அரசியல் சார்ந்த விஷயங்களை அழகாக படத்தில் எடுத்துக்காட்டியுள்ளார். ஒளிப்பதிவு படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறது. எடிட்டிங் பக்கா. பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே. சிவகார்த்திகேயன் நடிப்பு, விஜய் சேதுபதி குரல், சரிதா, மிஸ்கின், மடோன் அஸ்வின் திரைக்கதை, ஆக்ஷன் காட்சிகள், மாவீரன் கதாபாத்திரம் என படத்தில் பல பிளஸ்கள் ஒருசில இடங்களில் தொய்வைக் கண்டாலும் மொத்தத்தில் மாவீரன் நமக்குள் ஒருவன்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...