நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.

 நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.

ரொம்பவே என்னை சிந்திக்க வைத்தன அந்த வரிகள் !

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…”

‘நம் நாடு’ படப் பாடல்,

டி.எம்.எஸ். குரலில் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது.

பாடலின் கடைசி சரணத்தில்,

“கிளி போல பேசு

இளங்குயில் போல பாடு

மலர் போல சிரித்து

நீ குறள் போல வாழு…”

ஒரு கணம் சிந்தித்தேன்.

குறள் போல வாழ்வது சாத்தியமா ?

ஏன் முடியாது ?

இந்தப் பாடலுக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம், என் நினைவுக்கு வந்தது.

இதோ, அது பற்றி சொல்கிறார் கதை – வசனகர்த்தா ஆரூர்தாஸ் :

“வழக்கமாக தேவர் பிலிம்ஸ் தயாரித்த எல்லாப் படங்களுக்கும்,

கே.வி. மகாதேவன்தான் இசை அமைத்து வந்தார் .

‘வேட்டைக்காரன்’ பட சமயத்தில், இதில் ஒரு மாற்றம் வேண்டும் என்று ஒரு சில விநியோகஸ்தர்கள் விரும்பியதன் காரணமாக, தேவரண்ணன் (சாண்டோ சின்னப்பாதேவர்) விஸ்வநாதன் வீட்டிற்குச் சென்றார்.

மொத்தப் பணத்தையும் எம்.எஸ்.வி.யிடம் நீட்டி,

தனது அடுத்த படத்திற்கு இசை அமைக்கும்படி கூறினார் தேவர்.

ஒப்புக் கொள்ளலாமா வேண்டாமா என மனதுக்குள்

நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், ‘விசு… கொஞ்சம் உள்ளே வா…’ என்று, வீட்டுக்குள் இருந்து அவரின் தாயார் அழைக்கும் குரல்.

உள்ளே போனார் எம்.எஸ்.வி.

“பளார்” என்று தன் மகனின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்ட அவரது தாயார்,

“நன்றி கெட்டவனே! ஒரு காலத்துல நீ வேலை இல்லாம கஷ்டப்பட்டப்போ, அய்யர்கிட்ட போய் (கே.வி. மகாதேவனிடம்) உதவி கேட்டப்போ, உனக்குப் போட்டுக்க சட்டை கொடுத்து, ரயில் செலவுக்குப் பணமும் கொடுத்து உன்னைக் கோயம்புத்தூருக்கு அனுப்பினாரே,

அதை மறந்திட்டியா?

அந்தப் புண்ணியவான் தொழில் பண்ற இடத்துக்கு நீ போட்டியா போகலாமா?” என்று கோபத்துடன் கூற,

அந்தத் தாயார், இந்த வயதில் தன் மகனைக் கன்னத்தில் அறைந்ததைப் பார்த்தும், கூறியதைக் கேட்டும் கதிகலங்கிப் போன தேவரண்ணன், தன் அலுவலகத்துக்கு வந்து இதைக் கூறி, ‘இப்படி ஒரு தாயும் பிள்ளையுமா?’ என்று ஆச்சரியம் அடைந்தார்..!”

.

ஆரூர்தாஸ் சொன்னதை படித்தபோது நானும் கூட ஆச்சரியம் அடைந்தேன்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”

திருக்குறள்களை நாம் வாசிக்கிறோம்.

சிலர் வாழ்ந்து காட்டி விட்டு சென்றிருக்கிறார்கள்.

ஜூலை 14 –

எம். எஸ்.வி. நினைவு தினம்.

வாழ்க எம்.எஸ்.வி. புகழ் !

வணங்குவோம்

அவரது தெய்வத் தாயை !

John Durai Asir Chelliah

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...