நூலகத்துறையின் தந்தை வே.தில்லைநாயகம் பிறந்த நாள்

 நூலகத்துறையின் தந்தை வே.தில்லைநாயகம் பிறந்த நாள்

தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் நாள், தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி – அழகம்மை இணையரின் தலைமகனாகப் பிறந்தார் தமிழக நூலகத் துறையின் தந்தை எனப் போற்றப்படும் வே.தில்லைநாயகம்.

சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், உத்தமபாளையம் மாவட்டக் கழகப் பள்ளியில் உயர்நிலை கல்வியைப் பெற்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை இளங்கலைக் கல்வியைப் பெற்றார். அங்கு தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார், ஆங்கிலப் பேராசிரியர் இரஞ்சிதம் ஆகியோர்தம் அன்பைப் பெற்ற மாணவராகத் திகழ்ந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று நூலக அறிவியல் பட்டயமும், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியலில் முதுவர் பட்டமும், மதுரை தியாகராசர் கல்லூரியில் கல்வி இளவர் பட்டமும் நிறைவு செய்தார். தில்லிப் பல்கலைக்கழகத்தில் பயின்று நூலகவியலில் முதுவர் பட்டமும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பிரான்சு, ஜெர்மன் மொழிகளில் சான்றிதழ்களும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று சோதிடத்தில் சான்றிதழும் பெற்றார்.

1962ஆம் ஆண்டு கன்னிமரா நூலகத்தின் நூலகராகவும், 1972ஆம் ஆண்டு தமிழக அரசின் பொது நூலகத் துறையின் முதல் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.

தமிழில் ‘வேதியம் 1008’ உட்பட, 25 நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

விடுதலை பெற்ற இந்தியாவில் ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயக்குநராக இருந்தவர் இவர் ஒருவரே ஆவார். தேசிய, மாநில பல்கலைக்கழக நூலகக் குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார்.

நூலக இயக்கத்தின் பண்பும், பயனும் என்றும் இல்லாத அளவு உயர்ந்த வீச்சினைப் பெற்ற இவரது ஆட்சிக்காலம், தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் என்று நூல்சார்ந்த எல்லோரும் இவரைப் புகழ்ந்துள்ளார்கள். எனவேதான் இந்திய நூலகத்துறை முன்னோடி அரங்கநாதனின் ஏகலைவ மாணவரான இவரைத் தமிழக பொது நூலக இயக்கத்தின் தந்தை எனப் புகழ்கின்றனர்.

1951-1982 இல் இவர் பதிப்பித்த நூற்றொகைகள், குழந்தை நூற்றொகைகள், நூல்கள் அறிமுக விழா மலர்கள் முதலியன தமிழ் நூல்கள் வளம் காட்டுவன. இவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள், நூலக வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வேடுகளாகும்.

இந்திய நூலக இயக்கம் என்னும் இவரது நூல், இவர் 40 ஆண்டுகளாகச் சேகரித்த தகவல்கள் 400 பக்கங்களில் 4000 ஆண்டு வரலாற்றைக் கொண்டதாக இருக்கிறது.

இவர் எழுதிய நூலக உணர்வு, வள்ளல்கள் வரலாறு, இந்திய நூலக இயக்கம் முதலியன தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை.

‘இந்திய நூலக இயக்கம்’ நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. ‘இந்திய அரசமைப்பு’ தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பரிசினைப் பெற்றது.

இவரது குறிப்பேடு என்னும் நூல்தான் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டுநூல் (Year Book) ஆகும்.

1972 ஜூலை 31ஆம் நாள் பிற்பகலில் தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து 1982 ஆகஸ்ட் 31 ஆம் நாள் ஓய்வு பெற்றார். தனது 88வது வயதில் 11.03.2013 அன்று காலமானார்.

அவர் ஆற்றிய பணிகள் என்றும் அவர் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...