செயற்கை நுண்ணறிவு – ஆபத்தானதா?
உலகில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களைத் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளன. அதாவது ரோபோவைவிட செயல்பாடுகள் அதிகமுள்ளது. நாம் சொல்லும் உத்தரவைக் கேட்டு அதுவாகவே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட மனிதர்களைப் போலவே செயல்படும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) திறன்கள் கொண்டது. அதன் வருகை பற்றிய அச்சம் தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய விவாதங்களும் உலகளவில் நடந்து வருகின்றன. அதைப் பற்றிப் பார்ப்போம்.
செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படும் ஜெப்ரி ஹின்டன், அண்மையில் கூகுளில் தனது பணிக்கு விடைகொடுத்ததோடு, தனது பணிகளுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு சாட்பொட்ஸ்களின் சில ஆபத்துகள் சற்றுப் பயமுறுத்துவதாக உள்ளது என்று ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் குறித்துப் பேச பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துள்ளனர்.
கூகுள், மைக்ரோசொப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து எத்தகைய பாதுகாப்புக் கவசம் உள்ளது என்று அவர்கள் வினவினர்.
செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஓப்பன் ஏஐ (OpenAI), கூகுள் டீப்மைண்ட் (Google Deepmind)-ன் தலைவர்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் (Centre for AI Safety) வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்ட இது போன்ற பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் .
“செயற்கை நுண்ணறிவின் காரணமாக மனிதகுல அழிவிற்கான ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, கொரோனா, அணு ஆயுதப் போர் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரான யோசுவா பெங்கியோவும் இந்த அறிக்கைக்கு ஆதரவளித்துள்ளார்.
டாக்டர் ஜாஃப்ரி ஹிண்டன், பேராசிரியர் யோசுவா பெங்கியோ மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் யான் லீகுன் ஆகியோர் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அவர்களின் அற்புதமான ஆரம்பகட்ட பங்களிப்புகளுக்காக செயற்கை நுண்ணறிவின் தந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி அவர்கள் மூவரும் கூட்டாக 2018-ம் ஆண்டின் டூரிங் விருதை வென்றனர். இது கணினி அறிவியலில் ஒருவரின் மிகச் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
ஆனால் மெட்டாவில் பணிபுரியும் பேராசிரியர் LeCun, மனித அழிவு குறித்த இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவைகளாகவே இருக்கின்றன என்ற கருத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை உடனடியாகத் தடுத்தது நிறுத்தவேண்டும் என கடந்த மார்ச் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் உள்ளிட்ட வல்லுநர்கள் கூட்டாக கையெழுத்திட்டு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவினால் மனிதகுலத்துக்கு ஆபத்து என்ற செய்தியின் மீது ஊடகங்கள் அதிக அளவில் தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கின.
அந்தக் கடிதத்தில், “செயற்கையாக உருவாக்கப்படும் மனங்கள் (non human minds) ஒரு கட்டத்தில் மனிதர்களைவிட திறமை மிக்கவைகளாக மாறி, அதிக எண்ணிக்கையில் பெருகி, மனித இனத்தையே அழித்துவிடும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. உடனடியாக இந்த ஆபத்துகள் குறித்த ஆலோசனையை அனைவரும் தொடங்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இந்த அறிக்கை, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் ஆபத்துகளையும், அணு ஆயுதப் போரால் ஏற்படும் அபாயத்துகளையும் ஒப்பிடுகிறது. OpenAI, தனது வலைப்பதிவு ஒன்றில், அணுசக்தியைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் செயல்படுவதைப் போலவே, செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தவும் உலக அளவில் ஒரு கட்டுப்பட்டு அமைப்பை உருவாக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
சாம் ஆல்ட்மேன் மற்றும் கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை இருவரும் அண்மையில் பிரிட்டன் பிரதமருடன் செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை பற்றி விவாதித்தவர்களில் இடம்பெற்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ரிஷி சூனக், செயற்கை நுண்ணறிவினால் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.
“முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செயல்பட உதவுவது, நோயெதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிப்பது போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவின் உதவி அளப்பரிய அளவில் இருந்தாலும், அதைப் பாதுகாப்புடன் பயன்படுத்தும் தேவை இருப்பதை மறுக்கமுடியாது,” என்றார் அவர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடுத்த சில ஆண்டுகளில் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். AI பயன்பாடுகள் அவற்றின் தற்போதைய வடிவத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வேலைகளை மாற்றுவது குறித்து அவர் சந்தேகம் தெரிவித்தார்.
ஏஐ டிஜிட்டல் தொழில்நுட்பம் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தளங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்க மாட்டோம்,” என்று சந்திரசேகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
AI இன் அதிகரிப்பால் வேலை இழப்பு பற்றிய கவலைகளை நீக்கிய அமைச்சர், “AI சீர்குலைக்கும் அதே வேளையில், அடுத்த சில ஆண்டுகளில் வேலைகளை மாற்றுவது அல்லது வேலைகளை அகற்றுவது போன்ற அச்சுறுத்தலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்றார்.
“ஒரு வகையில், நச்சுத்தன்மை, சட்டவிரோதம், குற்றவியல் மற்றும் பயனர் தீங்கு ஆகியவற்றின் ஏற்பட்டால், அரசாங்கம் விரைவில் ஒரு புதிய தரவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் என்று கூறினார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000க்கு நவீன மாற்றாகக் கூறப்படும் டிஜிட்டல் இந்தியா மசோதாவில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், ஜூன் மாதம் வரைவு மசோதா வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.