வரம்புமீறிய காவல்துறை || மறுக்கப்பட்ட நீதி || வழியறியா வழக்கறிஞர்கள்

 வரம்புமீறிய காவல்துறை || மறுக்கப்பட்ட நீதி || வழியறியா வழக்கறிஞர்கள்

மறுக்கப்பட்ட நீதியை ‘நீதியைத் தேடி’ எனும் தலைப்பில் படங்களுடன் ஆய்வு நூலை மிகவும் எளிய நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் முனைவர் அரங்க.சம்பத்குமார். மக்களுக்கு நீதி வேண்டுமென்றால் வழக்கறிஞர்களிடம் முறையிடுவார்கள். ஆனால் வழக்கறிஞர்களுக்கே நீதி மறுக்கப்பட்டபோது யாரிடம் முறையிடுவார்கள்? மக்களிடம்தான். அப்படித்தான் இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது. அராஜக அசம்பாவிதம் நடந்த அந்த வழக்கு பத்து ஆண்டுகாளாக முடங்கிக் கிடக்கும் வேளையில் மனம்தாளாது ஆற்றாமையில் எழுதி அதிகார ஆளுமைகளைப் பார்த்து பல கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர்.

ஈழத் தமிழர் தனி ஈழ விடுதலைப் போர் உச்சத்தை அடைந்தபோது இறுதிக்கட்டப் போரைத் தடுக்கக்கோரி தமிழ்நாடெங்கும் கட்சிகள், மக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் போர் நிறுத்தம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது வழக்குரைஞர்கள் மத்தியிலும் இந்த எழுச்சி ஏற்பட்டு 2009ஆம் ஆண்டு நீதிமன்ற வளாகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நீதிமன்ற வழக்குப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்து  தொடர்ந்துகொண்டிருந்தனர்.

யாரும் எதிர்பாராதவிதமாக 19-2-2009ஆம் நாள் காவல் துறையினர் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டார்கள். அதில் நீதிபதிகள் உட்பட பல வழக்குரைஞர்கள் பல காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தை கோவையாக்கி ‘நீதியைத் தேடி’ என்கிற புத்தகமாக எழுதியிருக்கிறார் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் முனைவர் அரங்க.சம்பத்குமார்.

அவரே எழுதிய அந்தக் காட்சிகளை விவரிப்பதைப் பார்க்கலாம்.

“நிகழ்வு நாளான 19-2-2009ஆம் நாள் காலை முதலே உயர் நீதிமன்ற வளாக வாயில்களில் காவல்துறையினர் முகாமிட்டிருந்தனர். இலங்கைத் தமிழர்களின் ஆதரவுத் தொடர் போராட்டம் நீதிமன்றப் புறக்கணிப்பு ஆகியவை முடிவுக்கு வந்த நாள். நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் வழக்கம்போல் சென்றனர். அதனால் பெரும்பாலோர் காவலர்களின் குவிப்பைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காவல்துறை வாகனங்கள் சில உயர் நீதிமன்ற B2 காவல் நிலையத்தின் முன்பாக நின்று கொண்டிருந்தன. அதையும் பலரும் பொருட்படுத்தவில்லை.

முற்பகல் பணி முடியும் வரை பெரிய அளவில் வளாகத்திற்குள் தகராறு நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. பிற்பகல் மூன்று மணியளவில் வடக்கு வாயிலிலிருந்து நான்கு நான்கு காவலர்களாக உயர் நீதிமன்றக் காவல்  நிலையம் நோக்கி ஓடினார்கள். அப்பொழுதுதான் ஏதோ வழக்கத்திற்கு மாறாக நடக்கிறது என்பதனைக் கண்ணுற்றேன். கூட்டமும் ஓசையும் அதிகமாயின. உயர் நீதிமன்ற வளாகக் காவல் நிலையமருகில் காவல் துறையின் இரண்டு வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அதைச் சுற்றிச் சீருடையுடன் காவலர்கள் நின்றிருந்தனர்.

கறுப்புச் சீருடை அணிந்த இளம் காவலர்கள் பலர் வழக்கறிஞர்களை நோக்கிக் கற்களை வீசினர். அப்பொழுது நேரம் மாலை 3.30 இருக்கும்.

தலைமை நீதிபதியின் அறைக்குச் சென்றேன். கூடவே எனது இளைய வழக்கறிஞர் திரு. நவாப் அவர்களும் வந்தார். இருவரும் தற்காலிகத் தலைமை நீதிபதி நீதியரசர் மகாஉபாத்தியாய அவர்களைச் சந்தித்தோம். சென்னை காவல் ஆணையர்தான் காவலர்களை அழைத்து வந்திருக்கிறார் என்பது அப்போது எனக்கு மட்டுமல்ல, எவருக்கும் தெரியாது.

நான் உரிமையியல் நீதிமன்றக் கட்டட மொட்டை மாடியிலிருந்து பார்த்தேன். காவல் துறையினர் அவர்கள் கொண்டுவந்திருந்த கறுப்பு வண்ண வாகனத்திலிருந்த கற்களை எடுத்து வழக்கறிஞர்களை நோக்கி வீசுகிறார்கள். அதே கற்களை எடுத்துக் காவல் துறையினரை நோக்கி வழக்கறிஞர்களும் வீசுகின்றனர்.

காவல்துறையினர் திட்டமிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அப்பொழுதுதான் அங்கிருந்த அனைவரும் தெரிந்துகொண்டனர்.

மாநிலத்தின் ஆட்சியை அசைத்துப் பார்க்கும் அளவிற்கு அதிகாரம் கொண்ட உயர் நீதிமன்றம் செய்வதறியாது திகைத்து நின்றது என்றே சொல்லவேண்டும்.

மெல்ல மெல்ல மனுநீதிச் சோழன் சிலை வரை வந்தனர். அபோது காவல் துறையினர் எதிரே துரத்தி வருவதையும் நீதியரசர்கள் பார்த்தனர். நடையின் வேகம் மேலும் தளர்ந்தது. அதற்குள் நீதியரசர் ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் அவர்களின் மண்டையைக் காவல் துறையினர் உடைத்துவிட்டனர். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

சில வழக்கறிஞர்கள்  காவலர்களை நோக்கி கையசைத்து தாக்குதல் வேண்டாம், நீதியரசர்கள் வருகிறார்கள் என்று சைகை காட்டினர். ஆனாலும் காவலர்கள் தடியுடன் ஓடிவருவதும் பிறகு பின்வாங்குவதுமாக  உயிரச்சத்தை உருவாக்கினர். மேலும் காவலர்கள் கற்களையும் நீதியரசர்களை நோக்கி வீசினர். அத்துடன் அனைத்து நீதியரசர்களின் நடையும் நின்றது. பின்வாங்கிப் போவதைத் தவிர நீதியரசர்களுக்கும் வேறு வழியில்லை.

19-2-2009ஆம் நாளன்று நடந்த நிகழ்வுகளைப் பல ஊடகங்கள், செய்தித்தாள்கள் புகைப்படங்களுடன் வெளியிட்டன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியோடு தொலைக்காட்சியில் நடந்த நேரடி ஒளிபரப்பினைப் பார்த்ததாகக்கூட உச்ச நீதிமன்ற நீதியரசர் சதாசிவம் அவர்கள் சொன்னதாகச் செய்திகள் உலவின. ஆனால் அவை அனைத்தும் காற்றில் கரைந்த காட்சிகளாக மறைந்து அறம் பிறழ்ந்தாரின் கையில் கடந்த பத்து ஆண்டுகளாகச் சிக்கிக்கொண்டு தவிக்கிறது.

இனியும் எனக்குக் காத்திருக்க மனமில்லை. அறம் பிறழ்ந்து அட்டூழியம் செய்தவர்களைத் தண்டிப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இலை. ஆகவே மௌனம் கலைத்து மனம் திறந்து எனக்குத் தெரிந்தவற்றை மக்கள் மன்றத்தில் பதிவு செய்கிறேன்” என்று தொடர்கிறார் நூலாசிரியர் முனைவர் அரங்க.சம்பத்குமார்.

  • கண்ணில் பட்டவர்களையெல்லாம் காயப்படுத்தியதை சட்டமறிந்த எவரும் ஏற்கமாட்டார்கள், ஆனால் இதை ஏதோ பயன் கருதிச் செயல்பட்டார்களா?
  • மிகப் பெரிய படையை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவந்ததன் பயன் என்னவாக இருக்கலாம்?
  • காவல் துறையினர் நீதிமன்றத்தைவிட அதிகாலம் படைத்தவர்கள் என்று காட்ட வேண்டும் என்கிற நோக்கமா?
  • வழக்கறிஞர்களைத் தாக்கி இலங்கை தமிழர்களுக்கான ஆதரவுப் போராட்டத்தை ஒடுக்கமுடியும் என்பதுதான் காரணமென்றால் அதனால் காவல் துறைக்குப் பயனுண்டா?
  • 18-3-2009ஆம் நாள் தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தால் உரிய பிரதிவாதிகளை வழக்கில் சேர்க்காத அற்பக் காரியத்திற்காகத் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படியானால் ஏன் அந்தச் சிறு பிழையைச் செய்யவேண்டும்? தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆணை அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவா?

போன்ற பல கேள்விகளை இந்த நூலில் எழுப்பியுள்ளார் நூலாசிரியர் முனைவர் அரங்க.சம்பத்குமார்.

மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், அனைத்திந்திய தமிழ் கவிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் கவிஞர் ம.இரவிபாரதி, வழக்கறிஞர் ஆர் சங்கரசுப்பு, முனைவர் இரா.கு.ஆல்துரை, முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் மு.கண்ணன் ஆகியோர் மதிப்புரை வழங்கியிருக்கிறார்கள்.

வரலாற்றிலேயே இடம்பெறக்கூடாத இந்தச் சம்பவம், அரசையும் மக்களையும் காக்கும் கடைசி ஆயுதம் சட்டத்துறைக்கு ஏற்பட்ட களங்கம். இதை ஆதாரத்தோடு தைரியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் அரங்க.சம்பத்குமார். இந்த நூல் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.

~ பக்கங்கள் : 144,

~நூலின் விலை :150

~ வெளியீடு : மகேஸ்வரி பதிப்பகம், சென்னை

~ தொடர்பு எண். 9444123939

மூலவன்

1 Comment

  • ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் அவர்கள் இந்நூலைப் பற்றி பேசிய காணொளி: https://youtu.be/AD8FXXFvCMI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...