பயராமனும் பாட்டில் பூதமும் | 9 | பாலகணேஷ்

 பயராமனும் பாட்டில் பூதமும் | 9 | பாலகணேஷ்

‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம், ஜய்யடா ஜ்ய்யடா ஜய்யடா’ என்று பாடியபடியே மிதந்து கொண்டிருந்த ஜீனி, சட்டென்று நின்றது. ‘யாரோ பார்க்கிறார்கள்’ -அதன் உணர்வு உறுத்தியது. சட்டென்று மனதைக் குவித்து யார் என்று அறிய முயன்றது.

மனத்திரையில் கோரைத் தலையுடன், சிவப்பு எல்ஈடி லைட் போன்ற கண்களுடன், தெற்றாக நீண்ட கிழிப்பற்களுடன் ஒரு சூனியக்காரி முகம் தெரிந்தது. “ஐயையோ…” என்று துள்ளிக் குதித்தது ஜீனி. புயல்வேகத்தில் அவ்விடத்தை விட்டுப் பறக்க ஆரம்பித்தது. அரை நாழிகை நேரம் பறந்து ஆசுவாசித்துக் கொண்டு நிமிர்ந்தது.

இப்போது, அந்த சூனியக்காரியின் உருவமே எதிரில் நின்றது. “என்னடா பயலே…. பயந்துட்டியா..?” என்று குனிந்து நிமிர்ந்து சிரித்தது எதிர்நின்ற உருவம்.

”ஆ… பே.. பே… பே…” என்று ஜீனி தவிக்க… “பேய் இல்லடா நானு… என்னைத் தெரியலையா..? இப்பப் பாரு..?” என்று அது சொன்னதும் சட்டென்று உருவம் மாறியது.

இப்போது ஓர் அழகிய இளம் பெண் ஜீனியாக அது எதிரில் மிதந்தது.

“ஆகா…. மோகினி, நீயா..?”

“நல்லவேளை…. நினைவு வெச்சிருக்கே..” என்று சிரித்தது அது. பிரதாபனாகிய ஜீனி, குருகுலத்தில் பயின்று கொண்டிருந்தபோது உடன் பயின்றவள் அந்த மோகினி. இருவரும் காதலர்கள். அப்போது. பிரதாபன் சாபம் பெற்ற சமயம், அவனுக்காக குருநாதரை எதிர்த்துப் பேசியதால் மோகினியும் சாபம் பெற்று, சமீபத்தில்தான் விடுதலையாகியிருந்தது(தாள்.).

இந்தக் கதைச் சுருக்கத்தை விவரித்துவிட்டுக் கேட்டது மோகினி. “எப்படா நம்ம கல்யாணத்த வெச்சுக்கலாம்..?”

“ஐயோ… இப்போதைக்கு வேணாம். நானே நூறு வருஷமா பாட்டில்ல அடைபட்டுக் கெடந்து வீக்கா இருக்கேன். என்னால ரத்தம்தர முடியாதும்மா இப்போ..” பரிதாபமாகச் சொன்னது பிரதாபன்.

“டேய்… அதெல்லாம் எனக்குத் தெரியாது. உடனே நம்ம கல்யாணம் நடந்தாகணும். இல்ல… நானே உன் கழுத்தக் கடிச்சு ரத்தத்தைக் குடிச்சிடுவேன்..” கோபமாகச் சொன்னது மோகினி.

விஷயம் வேறொன்றுமில்லை. ஜீனிகளுக்குக் கல்யாணம் நடக்க வேண்டுமென்றால் மாப்பிள்ளையின் ரத்தத்தை ஒரு டம்ளர் நிறைய எடுத்து, மணமகள் குடிக்க வேண்டும், அதுதான் கல்யாணம் நடந்ததன் அடையாளம். வந்திருக்கும் சகபிசாசுகளெல்லாம் கைதட்டி வாழ்த்திவிட்டு அவையவை ரத்தம் குடிக்கப் போய்விடும். இது ஜீனீக்கள் உலக வழக்கம்.

“ஆளவிடு…. நீ என்ன செஞ்சாலும் இப்போதைக்கு என்னால முடியாது. இன்னும் கொஞ்சநாள் என்னை விடுவிச்சவருக்கு வேற சேவை செஞ்சாகணும் நான்.” என்றபடி திரும்பி ஓட ஆரம்பித்தது பிரதாபன்.

“நில்லுடா….” கோபமாகக் கத்தியது மோகினி. பிரதாபன் திரும்ப, “இங்கபாரு…. நான் சொல்ற பேச்சக் கேக்கலன்னா, நானும் உன்னோடவே பூமிக்கு வந்து நீ செய்யற எல்லாத்துலயும் குழப்பத்தைப் பண்ணிடுவேன். உன்னைவிட நான் பவர்ஃபுல். உனக்கே அது தெரியும்…” சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தது.

“பூமியில என்ன..? ஈரேழு பதினாலு உலகங்கள்லயும் உங்க இனம்தான் பவர்ஃபுல். யாரு இல்லேங்கறா..? ஆனா, என்ன ஆனாலும் சரி, நீ சொல்றதுக்கு ஒத்துக்க முடியாது. உன்னால ஆனதப் பாத்துக்கடி..”

“என்கிட்டயா சவால் விடற..? நீயா நானான்னு பாத்துரலாமாடா..?”

“சர்த்தான் போடி..” என்று கடுப்பாகக் கத்திவிட்டுப் பறந்தது பிரதீபன். கண்கள் சிவக்க, அது பறப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது மோகினி.

ஜெயராமன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்க, அவன் அருகில் நின்று வெடிக்கத் தயாராயிருக்கும் வெடிகுண்டைப் பரிசோதிக்கும் நிபுணர்போல படபடப்பாக அவன் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான் குமார்.

படக்கெனக் கண் விழித்தான் ஜெயராமன். அத்தனை க்ளோசப்பில் குமாரின் முகத்தை எதிர்பார்க்காததில் பயந்து ‘யேய்யேய்…’ என்று அலறியபடி எழுந்து உட்கார்ந்தான்.

“பிசாசுக்குப் பொறந்த பயலே…. ஏண்டா இப்டி முகத்துக்கிட்ட வந்து முறைச்சுட்டிருக்க.?”

“இல்லப்பா. நீங்க நார்மலாயிட்டீங்களான்னு பாத்தேன்….”

“ஏன்..? நார்மலா இல்லாம நான் என்ன சட்டையக் கிழிச்சுட்டா திரியறேன்..?”

“இல்லப்பா. ஜஸ்ட், அதுக்கு முந்தின ஸ்டேஜ், அவ்வளவுதான்..” சிரிக்காமல் சொன்னான் குமார்.

“அடேய்…” என்று ஆரம்பித்த ஜெயராமன் சட்டென்று அடங்கினான். நேற்றுக் கிடைத்த ‘அனிதோபதேசம்’ நினைவுக்கு வந்தது. எதுவும் பேசாமல் மகனைப் பார்த்துப் புன்னகைத்தபடி எழுந்து போனான்.

“என்னாச்சு இவருக்கு..? ஏதோ திட்ட வந்து சட்னு சைலண்ட்டாயிட்டுப் போறாரே..? ஸ்டில் ஸம்திங் ராங்..” என்று வாய்விட்டே புலம்பியபடி அப்புறம் நகர்ந்தான் குமார்.

ஹாலில் சங்கரனும், நிஷாவும், குமாரும் சேர்களில் அமர்ந்திருக்க, உள்ளிருந்து வந்த ஜெயராமனைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினார்கள். குளித்து, காவி உடையணிந்து, நெற்றியில் பட்டையாகத் திருநீறு பூசி, மத்தியில் பெரிதாகக் குங்குமம் வைத்து, ஆசிரமம் நடத்துகிற (போலிச்) சாமியார் கெட்டப்பில் இருந்தான்.

“மாப்ளே… என்னாச்சு உங்களுக்கு..?”

“ஓம் சிவோஹம். எனக்கு நேற்றே என்னப்பன் நீலகண்டனின் அருள் கிடைத்துவிட்டது மகனே.” சாந்தமாக வெளிப்பட்டது ஜெயராமனின் குரல். “தென்னாடுடைய சிவனின் பேரருளால், நீ விரும்புவதைச் செய்ய என்னால் முடியும் இப்போது.”

“அப்பா… என்னதிது உளறல்..? காலைலகூட நல்லாத்தான இருந்தீங்க..?”

“இப்பவும் நல்லாத்தான்டா இருக்கேன். நான் பேசறதெல்லாமே உண்மை. நீ வேண்ணா டெஸ்ட் பண்ணிப் பாரேன்….”

“ம்.. கிச்சன்ல அம்மா காபி போட்டுகிட்ருக்கா. அதை இங்க வர வையேன், பாக்கலாம்….” கேலியாகச் சொன்னான் குமார்.

ஜெயராமன், “ஜெய் கவாஸகி” என்றபடி ஜீனியைப் பார்த்துக் கைநீட்ட, அது சமையலறைக்கு மிதந்து சென்றது. அங்கே தனலட்சுமி டம்ளர்களில் காபியை ஊற்றிக் கொண்டிருக்க, அதிலொன்றைக் கவர்ந்து பறந்துவந்து குமாரின் முகத்தருகே நீட்டியது.

‘ஆ’வென வாய் பிளந்து பார்த்தார்கள் மூவரும். “எடுத்துக்கடா..” என்றான் ஜெ. பிரமிப்பு விலகாதவனாக டம்ளரைக் கைப்பற்றினான் குமார்.

“அத்தான்..” உள்ளிருந்து ட்ரேயில் காபி டம்ளர்களை ஏந்தியபடி வந்தாள் தனலட்சுமி. “காபி போட்டு ட்ரேல ஊத்திக்கிட்டே இருந்தனா..? திடீர்ன்னு ஒண்ணு காணாமப் போயிருச்சு..”

“அது எங்கயும் காணாமப் போகலை. இதபாரு, உன் மகன் குடிச்சுட்ருக்கான்.” என்று ஜெ. கையைக் காட்ட, ‘ழே’யென்று விழிக்க ஆரம்பித்தாள்.

“ஸாமீ…” ஓடிவந்து ஜெ.யின் கால்களில் விழுந்தாள் வேலைக்காரி ராதா. “என் புருசன் குடிக்கறதை நிறுத்தணும். அதுக்கு ஏதாச்சும் ஒரு வழி சொல்லு ஸாமீ…”

“அங்கேயுளதே மிட்சுபிஷி, இங்கேபார் கவாஸகி, ஜெய் ஹோண்டா -இந்த மந்திரத்தை அவன் தூங்கறப்ப தினம் காதில நாப்பத்தெட்டு நாள் சொல்லு. மறந்துடுவான்.” என்ற ஜெ. காற்றில் கை உயர்த்திக் காட்ட, ஜீனி அதில் கொஞ்சம் விபூதியைப் போட, கையைக் கீழே கொணர்ந்து அதை வேலைக்காரியின் நெற்றியில் வைத்தான் ஜெ.

“தெய்வமே.. ரொம்ப நன்றி தெய்வமே..” என்று மீண்டும் விழுந்து கும்பிட்டுவிட்டு, பரபரப்பாக வீட்டைவிட்டு வெளியேறினாள் அவள். ஜெயராமன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். அந்நாளைய அகில இந்திய வானொலியும், இந்நாளைய சகல இந்திய மீடியாக்களும் தோற்றே போய்விடும் செய்தியைப் பரப்புகிற விஷயத்தில் ராதாவின் முன்னால். இந்நேரம் ஏரியாவுக்கே செய்தியைப் பரப்பத் துவங்கியிருக்கும் ராதா எப்.எம்.

துதான் அனிதா நேற்று போட்டுத் தந்த திட்டம். பகல் நேரங்களில் சாமியார் கெட்டப், இரவில் மௌன விரதம் (ஜீனி இருக்காதே அப்போது) என்று சொல்லி அமைதியாகிவிட வேண்டும். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராது. அவள் தந்த திட்டம் வொர்க்கவுட் ஆகத் துவங்கியதில் உள்ளுக்குள் மிகவும் குஷியானான் ஜெயராமன்.

பாவம்… அவன் திட்டத்தின் வெற்றிக்கு அற்ப ஆயுள் என்பது அவனுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை. அவன் நிம்மதியைக் குலைக்கவென்றே ஒரு மோகினி ஜீனி வந்திருப்பதும் அவனுக்குத் தெரியவில்லை.

திட்டமென்னவோ நன்றாகத்தான் வொர்க்கவுட் ஆனது. ராதா எப்.எம்.மானது தகவலைக் கனகச்சிதமாக ஏரியாவெங்கும் பரப்பி விட்டிருக்க, அடுத்த தினத்திலிருந்தே ‘பக்த கோடி’(?)கள் ஜெயராமனின் வீட்டில் குவியத் தொடங்கினார்கள். பெரும்பாலும் வாயே திறக்காமல், மையமாகச் சிரித்தே சமாளித்துக் கொண்டிருந்தான். அதனாலேயே, ‘அவர் வாய் திறந்தா பவர்ஃபுல்லாக்கும். சொல்றதெல்லாம் நடக்கும்’ என்று அவனது பிரக்(அபக்)யாதியின் க்ராப் லெவல் மேலும் எகிறிக் கொண்டிருந்தது.

டுத்த இரண்டாவது தினத்தின் காலையில், வழக்கம்போல் வந்திருப்பவர்களுக்கு ஆசி(!) வழங்கிக் கொண்டிருந்தார் ஜெயராமனார். (அப்படித்தான் போஸ்டர் அடித்திருந்தார்கள் ஊரில்). அருகில் நின்று ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தது ஜீனி(யார்). சட்டென்று அருகில் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிய ஜீனி, பேய்விழி விழித்தது. காரணம்… அருகில் மிதந்து கொண்டிருந்தது மோகினி.

“இங்கயும் வந்துட்டியா நீயி..?”

“இங்கன்னு இல்ல, ஈரேழு பதினாலு உலகங்கள்ல எங்க போனாலும் விடமாட்டேன் உன்ன. நான் வெச்ச கோரிக்கைக்கு நீ இன்னும் சம்மதம் சொல்லல.”

“அது என்னால முடியாதுன்னு ஏற்கனவே சொல்லிட்டேன். கொஞ்சக் காலம் காத்திரு. வேற வழியே இல்ல.”

“முடியாது. நீ இப்பவே சம்மதம் சொல்லணும். இல்லன்னா, என் வேலையக் காட்ட ஆரமிச்சிடுவேன்.”

“என்னடி பயமுறுத்தற..? உன்னாலானதைப் பாத்துக்க..” என்று கெத்தாக திமிர் பார்வையுடன் சொன்னது ஜீனியான பிரதாபன். அது அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான்.

“இப்ப பாரு…” என்று அங்கே அருகருகே நின்றிருந்த குமார் மற்றும் நிஷாவின் மீது கைகளை வீசி சுற்றிக் காட்டியது மோகினி. “ஹா… ஹா… ஹா… நான் நினைச்சதைச் சாதிச்சுட்டேன்டா..” என்றது பிரதாபனைப் பார்த்து.

“என்னத்தச் சாதிச்ச..? அவங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணும் ஆகல. நல்லாத்தான் நின்னுட்ருக்காங்க..” கேலியாகச் சிரித்தது பிரதாபன்.

“நினைச்சுட்டிரு. இப்பப் பாரு..” என்று அங்கிருந்த ஒரு பொடிக் கல்லை எடுத்து குமாரின் மீது எறிந்தது மோகினி.

அடுத்த கணம்…

”ஆ…” என்று பெண் குரலில் அலறினான் குமார். “யார்றா என் மேல கல்லை அடிச்சது?” என்று கூவினான்.

பக்கத்தில் நின்றிருந்த நிஷா, “ஏய் நிஷா… எதுக்கு இப்படி அலர்ற..?” என்று குமாரின் ஆண் குரலில் வினவினாள்.

“அடிப்பாவி மோகினி… என்னத்தைடி செஞ்சு தொலைச்ச..?” பதறியபடி கேட்டது ஜீனி.

“புரியல..? குமாரோட ஆவிய நிஷா உடம்புலயும், நிஷாவோட ஆவிய குமார் உடம்புலயும் மாத்தி வெச்சுட்டேன். அவ இப்ப வெளிய நிஷா. உள்ள குமார். அவன் இப்ப வெளில குமார் உள்ள நிஷா. இனி இருக்குடா உனக்கு…” சீரியல் மாமியார் போல வில்லத்தனமாகச் சிரித்தது மோகினி.

–பூதம் வரும்…

ganesh

1 Comment

  • என்னது ஒரு டம்ளர் ரத்தம் தானா ? மனுச வாழ்க்கைக்கு ஆவி உலகமே தேவலை போல இருக்கே !!! ஹா ஹா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...