பயராமனும் பாட்டில் பூதமும் | 7 | பாலகணேஷ்

 பயராமனும் பாட்டில் பூதமும் | 7 | பாலகணேஷ்

ரிபட்டர் ஆறடி உயரத்தில், கேட்டை இடித்துப் பெரிசாக்கினால்தான் வீட்டுக்கு உள்ளே வரமுடியுமோ என்று ஐயப்படும்படி இரண்டாள் அகலத்தில் இருந்தார். அடர்த்தியான சிகையை மேல்நோக்கித் தூக்கிச் சீவி குடுமி போட்டிருந்தார்.

“அடேங்கப்பா… ஏதோ ஒரு படத்துல வடிவேலு தலைமுடியை கோபுரம் மாதிரி வெச்சுக்கிட்டு வருவாரே… அந்த சைஸுலல்ல இருக்குது இவர் குடுமி..?” நிஷாவின் காதில் குமார் கிசுகிசுக்க, கிக்கிக்கியென்று வாய் பொத்திச் சிரித்தாள் அவள்.

இப்போது ஹரிபட்டரின் முதுகுக்குப் பின்னாலிருந்து உற்பத்தியானாள் அவள். இளைஞி. கேரள பாணியில் பார்டர் வைத்த வெள்ளைப் புடவை கட்டி, தலைமுடியைக் கொண்டை போட்டிருந்த அவளுக்கு வயது பதினெட்டுக்கு மேலிருக்காது என்று சத்தியமே செய்வீர்கள் நீங்கள் பார்த்ததுமே.

“வாங்க ஹரி. இது என் டாட்டர் நிஷா. அவ பக்கத்துல இருக்கறவன் என் தங்கச்சி பையன் குமார். இவர்தான் என் மாப்ளை. பேரு ஜெயராமன்.” சங்கரன் அறிமுகப்படுத்த, “ஹலோ..” என்று கை குலுக்கினார் ஹரி.

“அதுசரி… இவங்க யாரு..?” என்றான் குமார் ஆவலுடன் கண்கள் 100 வாட்ஸாய் மின்ன. அடுத்த செகண்ட், முதுகில் நிஷா குத்திய வேகம்… முன்னோக்கிப் பாய்ந்து ஹரிபட்டரின் காலில் விழுந்து வைத்தான். அவன் தலை மோதிய வேகத்துக்கு ‘ஆஆஆ’ என்று அலறியபடி ஒரு காலைத் தூக்கி நடராஜ போஸில் ஆடினார் ஹரி. “எவ்ளவு மரியாதை தெரிஞ்ச தம்பி. எந்திர்றா..” என்று எழுப்பி விட்டார்.

“இவ யாருன்னாக்கே…” என்று அவர் ஆரம்பிக்க, “ஞான் பறையாம். ஞான் இவரோட சீடையாக்கும்..” என்றாள் அவள்.

“வெல்லச் சீடையா, உப்புச் சீடையா நீயி..” சிரித்தாள் நிஷா.

“ஏய்… அதல்லா…” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க, கை நீட்டித் தடுத்தார் ஹரிபட்டர். “கொஞ்சம் சும்மா இரு ஜெயந்தி. தமிழ்ல சீடைன்னா திங்கற சமாச்சாரம். சிஷ்யைன்னு சொல்லணும் கேட்டியோ..?” இவர்கள் பக்கமாகத் திரும்பி, “இது ஜெயந்தி. மலையாள மந்திரவாதி. என்கிட்ட சிஷ்யையாச் சேந்திருக்கா. ரெண்டு மாசமாறது… போறுமா..?”

“வேலைக்குச் சேர்ந்தவுடனேயே ரெண்டு மாசமா..? நீங்க பெரிய ஆளு ஸார்…” என்று வாயைப் பிளந்தான் குமார். மறுபடி பின்னங்கழுத்தில் ஒரு வெட்டு விழுந்தது நிஷாவிடமிருந்து. “டேய் லூசு… அவ வேலைக்குச் சேர்ந்து ரெண்டு மாசமாச்சுங்கறார். எப்பப்பாரு அடல்ட்ஸ் ஒன்லி சிந்தனைலயே இரு…”

சங்கரன் கையைப் பற்றி நாலடி தள்ளி அழைத்துப் போனான் ஜெ.ரா. “அடேய்… இவர் வந்தா எப்பேர்ப்பட்ட பேயையும் விரட்டிடுவார்னு சொன்னியே, ரொம்ப கரெக்ட்டுடா. இவர்ட்டருந்து அடிக்கற கப்புக்கு பேயே மூக்க பொத்திக்கிட்டு தெறிச்சு ஓடிடும். குளிக்கவே மாட்டாராடா உன் ப்ரெண்டு..?”

“மெல்லப் பேசுங்க மாப்ள. அவருக்குப் பாம்புக் காது.”

“பாம்புக்கு ஏதுடா காது..? கால் வேணா இருக்கு..”

“காலா..?” சங்கரன் விழிக்க, ஜெ. சொன்னான். “ஆமா, கால் இல்லன்னா அது பம்பாயிடுமே…”

“நீங்களும் உங்க கடியும்…” மெலிதாகத் தலையில் தட்டிக் கொண்டு நகர்ந்தான் சங்கரன்.

“என்ன சங்கரா… என்ன சொல்றாரு உன் மாப்ளை..?” கேட்டார் ஹரி.

“அது… வேற ஒண்ணுமில்லை. நீங்க எப்டி பேய ஓட்டுவீங்கன்னு கேக்கறார். அவ்ளவுதான்.”

“இப்ப நேர்லயே பாத்துடப் போறார். எங்கே உன் தங்கச்சி..?” என்று ஹரி கேட்க, “இவதான்..” என்று தனலட்சுமியைக் கூட்டிவந்து நிறுத்தினான் சங்கரன்.

அதேநேரம், பின்னால் நின்றிருந்த மைதிலிப் பாட்டி, நிஷாவின் தோளில் விரலால் கொத்தினாள். “இவளப் பாருடி. என்ன அழகா தலைய வாரிக் கொண்டைல்லாம் போட்ருக்கா. நீயும் இருக்கியே, எப்பப் பாரு பிசாசாட்டம் தலைய விரிச்சு விட்டுண்டு..”

“பாட்டீ…” திரும்பிப் பார்த்து பல்லைக் கடித்தாள் நிஷா. “கொஞ்ச நேரம் பேசாம இருங்க. பேய், பிசாசுன்னு ரெண்டு நாளா அம்மாவும் பிள்ளையும் பண்ற அலும்பு தாங்க முடியல…”

மைதிலிப் பாட்டி வாயைச் சாத்திக் கொண்ட அதே நேரம்….

உச்சிக் குடுமியும், நெற்றியில் பட்டைகளும், சற்றே மை எழுதிய அகன்ற கண்களும், விரிந்த மூக்கும், தடித்த உதடுகளுமாக ஹரிபட்டரை சாதாரணமாகப் பார்க்கும்போதே ஏதோ ராட்சஸனைப் பார்க்கிற பிரமையில் உடல் நடுங்க நின்றிருந்தாள் தனம். இப்போது கண்ணை அகல உருட்டி விழித்துக் கேட்டார் ஹரி. “ஏய், சொல்லு… உன் பேர் என்ன..?”

“தனலட்சுமிங்க…”

“அது நீ இருக்கற இந்த உடம்போட பேரு. எனக்கு வேண்டியது உன்னோட பேரு. மரியாதையாச் சொல்லிடு…”

“உங்களுக்காக ராஜலட்சுமின்னுல்லாம் மாத்திச் சொல்ல முடியாது. எனக்கு உள்ள, வெளிய எல்லாம் ஒரே பேர்தாங்க. நான் தனலட்சுமி.” என்றாள் தனம் சற்றே சலிப்பாக.

“இப்டிக் கேட்டா சொல்ல மாட்டே..” என்றவர் தன் கழுத்திலிருந்த ருத்ராட்சக் கொட்டையை இறுகப்பற்றியவாறு, “ஜெய் ஜாலக்காள்… காளி, நீலி, சூலி..” என்று மேலே பார்த்துக் கத்தினார்.

“இதுக்கு மேல இவருக்குத் தெரியாதா..? வாலி, ஜுலி, லாலி…” மெல்லிய குரலில் குமார் முனக, சிரித்தாள் நிஷா. இப்போது ஹரி, கையிலிருந்த திருநீறை தனலட்சுமியின் முகத்தில் எறிய, சினலட்சுமியானாள் அவள். “யோவ்… சும்மாருக்க மாட்ட நீ..?” சீறினாள்.

“இது உக்ரமான பேயாயிருக்கு சங்கரா. கொஞ்சம் முரட்டு வைத்தியம்தான் பண்ணனும். நீங்க பாத்தா தாங்க மாட்டீங்க. அதுனால..” என்ற ஹரி, தனத்தின் கையைப் பற்றி இழுத்தார்.

“வா என்னோட..” என்று அருகிலிருந்த அறைக்குள் சென்று கதவைச் சார்த்தி தாழிட்டார்.

“ஏய் சங்கரா… என்ன நடக்குது இங்க..? என்ன பண்ணப் போறார் அவளை..?” பதட்டமானான் ஜெ(யராமன்).

“பேடிக்கண்டா. ஸார் பேய்கான் ஸ்ப்ரே யூஸ் செய்யும். அதுக்கும் அடங்காட்டி ஆ ஜீவனை நாலு தட்டு தட்டும்.” என்றாள் ஜெ(யந்தி).

இப்போது உள்ளேயிருந்து குழப்பமான குரல்கள் கேட்டன. ‘ஆ’, ’ஐயோ’, ‘அம்மா’, ‘என்னை விட்று’, ‘ஏய் பிசாசே’ என்றெல்லாம் கலவையான அலறல்கள் வேறு வேறு குரலில் ஒலித்தன. வெளியே அனைவரும் குழப்பமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். “ஏய் ஜெயந்தி…. இப்ப உள்ள என்ன நடந்துட்ருக்கு, சொல்லு” என்று சங்கரன் கேட்க, “ஞான் அறியில்லா சாரே. இத்தர வல்லிய சத்தங்களை என்டெ சர்வீஸில் கேட்டதில்லயாக்கும்..” என்று கையைப் பிசைந்தாள் அவள்.

ஜெயராமன் துடித்தான். “அடேய் ஜீனி… நீதான் எங்க வேணாலும் பூந்து போகற ஆளாச்சே. போய் தனத்தை அவன்கிட்டருந்து காப்பாத்துடா. அடிக்கறான் போலருக்கு..” என்று மேலே பார்த்துக் கத்தினான்.

“உத்தரவு குருவே” என்றபடி அறையை நோக்கிப் பறந்தது ஜீனி.

திரும்பிப் பார்த்த ஜெயராமன் ‘ழே’யென்று விழித்தான். சங்கரன், மைதிலிப்பாட்டி, நிஷா, குமார், ஜெயந்தி எனப் பத்து விழிகளும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

“ஏய்… ஆ அம்மைக்குப் ப்ராந்தில்லா. ஈயாளுதான் ப்ராந்தனாக்கும்…” என்றாள் ஜெயந்தி.

“என்னது..? நான் லூசா..? யாரைப் பாத்து என்ன சொல்ற..?” என்று ஜெயராமன் அவள் மீது பாய, “சும்மாருங்க மாப்ள. எனக்கே அப்டித்தான் தோணுது இப்ப உங்களப் பாத்தா..” என்று சங்கரன் குறுக்கே வந்து தடுக்க, “அப்பா உங்களுக்கு என்னாச்சு..?” என்று குமார் ஒரு பக்கம் அலற….

அறைக்குள்ளிருந்து காற்றில் மிதந்து வந்தது ஜீனி. அதன் முகம் அசலாகவே பிசாசைக் கண்டதுபோல வெளிறிப் போயிருந்தது. அதைக் கண்டதும் உடனிருந்தவர்களைச் சுத்தமாக மறந்து, “ஏண்டா வந்துட்ட, என் தனத்தைக் காப்பாத்தாம..? மடையா..” என்று சீறினான் ஜெ.

“காப்பாத்த வேண்டியது அவங்களை இல்ல தலீவரே… அந்த ஹரிபட்டரைத்தான்.” கிலுகிலுவென குலுங்கிச் சிரித்தது ஜீனி. “யாத்தீ… நாயடிப் பேயடின்னு சொல்லுவாங்க. கேள்விப்பட்ருக்கேன். இப்பதான்யா கண்ணால பாக்கறேன். அதுசரி… எப்பயாச்சும் நீ உன் வொய்ப்ட்ட அடி வாங்கிருக்கியோ..?”

“ஒரு தடவை இல்ல… பல தடவை…” சற்றே வெட்கப்பட்டு நெளிந்தபடி சொன்னான் ஜெ. “அப்டீன்னா மெய்யாலுமே ஐயோ பாவம் தான்யா நீயும்…” என்று ஜீனி சொன்ன அதே நேரம்…

சாத்தியிருந்த அந்த அறையின் கதவு திறக்க, கந்தரகோலமாக வெளியே வந்து விழுந்தான் ஹரிபட்டர். குடுமி கலைந்து முடி பறக்க, நெற்றி விபூதியும், கண் மையும் கரைந்து முகத்தில் ஒரு ரங்கோலியே வரைந்திருக்க, கன்னத்தில் ஒரு பக்கம் வீங்கித் தெரிய, அதைக் கையால் பற்றியபடி அலறினான்.

“அடேய் சங்கரா… என் சர்வீஸ்ல இத்தனை வயலண்ட்டான பேயைப் பாத்ததே இல்லடா. ஆள விடு…” என்றவன், ஜெயந்தியைப் பார்த்துக் கத்தினான். “அறிவு கெட்டவளே.. என்னைக் கைத்தாங்கலாப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போ. ஓடு…”

ஜெயந்தி அவன் கையைப் பற்றி தோளில் போட்டுக் கொண்டு ஓட்டமும் நடையுமாக நகர்த்திச் செல்ல, இப்போது அறையின் உள்ளிருந்து வந்தாள் தனலட்சுமி. அவளும் தலை கலைந்து கூந்தல் பறக்க, பத்து கிமீ மாரத்தான் ஓட்டத்தை பத்து செகண்டில் ஓடிவிட்டு வந்தவள் மாதிரி புஸ் புஸ்ஸென்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடந்து வந்தாள்.

முதுகைக் காட்டியபடி நடந்து செல்லும் ஹரிபட்டரைக் கண்டதும், மறுபடி கோபமாகி, “அடேய்… நில்றா..” என்று கத்த, திரும்பிப் பார்த்த ஹரிபட்டரின் ஓட்டத்தின் குதிரை வேகம் அதிகரித்தது. வினாடியில் காணாமல் போனான் வீட்டின் வாசலிலிருந்து.

இப்போது தனலட்சுமி, ஜெயராமனின் பக்கமாகத் திரும்பினாள். “அத்தான்.. உங்களால்தானே எல்லாம்…?” என்றபடி இரண்டடி எடுத்து வைக்க, ஹரிபட்டரின் குதிரை வேகத்தையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மானின் வேகத்தில் வீட்டு வாசலுக்கு ஓடி, அனைவரின் கண்களிலிருந்தும் மறைந்தான் ஜெயராமன்.

அருகிலிருந்த சோபாவில் சரிந்து விழுந்து மெல்ல மெல்ல பெருமூச்சுகளின் வேகம் குறைந்து சிறுமூச்சாகி தனலட்சுமி கண்மூடி மயங்கிவிட, எஞ்சிய நால்வரும் ’ழே’யென்று விழித்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

–பூதம் வரும்…

ganesh

2 Comments

  • பயந்துண்டே சிரிச்சாச்சு !

  • மெர்சல்.. ஹரிபட்டரை பன்பட்டர் ஜாமாக்கிட்டேள்.டெரர் பிசாசா கீதே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...