ஒற்றனின் காதலி | 7 | சுபா

 ஒற்றனின் காதலி | 7 | சுபா

தற்கு வீணாக வளர்த்துக் கொண்டு?

நான் போயிருந்த சமயம், அவள் கணவன் வெளியூர் போயிருந்தான். விஜயகுமார், நல்லவன். அதுதான், அவள் கணவன். அவளைக் காதலித்து மணந்தவன். ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸில் பதிவுத் திருமணம். தாலி எல்லாம் வேண்டாம். அது பெண்களுக்கு மூக்கணாங்கயிறு மாட்டுவது போல என்று சொல்லி, விஜயகுமார், தான் ஒரு முற்போக்கானவன் என்று, அவளிடம் காட்டிக் கொண்டிருக்கிறான்.

அவனும், உமாதேவியும் கணவன் – மனைவி என்பதற்கு அடையாளமாக மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டால் போதும் என்று உமாதேவியைச் சம்மதிக்க வைத்து, மோதிரத்தையும் அவனே வாங்கிக் கொடுத்து, அவனுடைய பெருந்தன்மையை ஆரம்ப நாட்களில் வியக்க வைத்தவன். இங்கே தக்கலை தங்க வயலில் உள்ளே சுரங்கத்தில், தங்கம் வெட்டும் தொழிலாளர்களுக்கு ஸுப்பர்வைஸர் பதவியில் இருப்பவன். அதனால், அவன் வேலை பொருட்டு, அவளையும் சேர்த்து இங்கே கொண்டு வந்து சேர்த்திருப்பவன்.

தஞ்சாவூருக்குப் பக்கத்தில் திருக்காட்டுப்பள்ளியோ, திருநாட்டுப்பள்ளியோ என்கிற கிராமத்தில், அவன் முன்னோர்கள், அவனுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். பத்து வீடுகள். இருந்த வயலை எல்லாம் விற்றுக் காசாக்கி, வீடாக்கி, அத்தனையையும் அவன் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு, அவன் முன்னோர்கள் மண்டையைப் போட்டிருக்கிறார்கள்.

இவனுக்கு மாதம் முதல் தேதி பிறந்தால், கால், தங்கவயலில் தங்காது. திருக்காட்டுப்பள்ளி நோக்கிச் செல்லத் துடிக்கும். அங்கே போய் வாடகை வசூல் பண்ணிவிட்டு வரவேண்டும் அவனுக்கு. குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது ஆகும். அப்படிப் போகும் போது மனைவியைக் கூட்டிக் கொண்டு போகமாட்டான். காரணம், செலவாகிவிடுமே.

அவன் பெருந்தன்மை எல்லாம் கல்யாணத்திற்கு முன்போடு சரி. கல்யாணத்திற்குப் பின்தான் அவன் எவ்வளவு மோசமான சந்தேகப்பிராணி என்று அவளுக்குத் தெரிந்தது.

ஜன்னல் அருகில் போய் அவள் நின்றால், அவளுக்குத் தெரியாமல், அவள் தோளுக்குப் பின்னால் வந்து நின்று, அவள் பார்வை எங்கே போகிறதென்று பார்ப்பான்.

என்றைக்காவது விசேஷ நாட்களில் அவள் கோவிலுக்குப் போகலாம் என்று அழைத்தால், உடன் வரமாட்டான். அவளைத் தனியாகப் போய் வரச்சொல்லுவான். ஆனால், அவள் போனபின், அவளறியாமல் அவளைப் பின் தொடர்வான். அவள் நிஜமாகவே கோயிலுக்குத்தான் போகிறாளா… அங்கே போய் யாரைச் சந்திக்கிறாள்… என்று வேவு பார்ப்பான்.

தற்செயலாக அவள், அவனைப் பார்க்க நேரிட்டு விட்டால், ஏதாவது ஒரு அசட்டுக் காரணம் சொல்லி சமாளிப்பான்.

அவளுக்கென்று ஒரு தனிக் கருத்து இருப்பதை, அவனால் ஒத்துக் கொள்ள முடியாது. அவள் கமலை ரசிக்கிறாள் என்று தெரிந்தால், கமல் படம் வெளியான ஒரு பத்திரிகை கூட வீடு வந்த சேராது. கமல்ஹாசன் படம் ஒன்றுக்குக் கூட, அவளைக் கூட்டிக் கொண்டு போகமாட்டான்.

ஏதாவது சப்பைக்கட்டுக் காரணங்களை வைத்திருப்பான். செலவு ஆகிறது. சிக்கனமாக இருக்க வேண்டும். இப்படி நிறைய காரணங்கள்.

அவன் ஒரு கோழை. தன்னுடைய சந்தேகங்களை, மனைவியிடம் நேரடியாக வெளிப்படுத்திக் கேட்காதவன். மௌனமாக மனதில் குமைபவன். மூன்று நாட்கள் ஊருக்குப் போய் வந்த பின்பு, ஒரு வாரம் அவளிடம் பேசக் கூட மாட்டான்.

அவன் இல்லாத மூன்று நாட்களில், தன் மனைவி யார், யாரிடம், எப்படி எல்லாம் பழகினாளோ, பேசினாளோ, தொட்டாளோ, சிரித்தாளோ என்ற கற்பனை, அவனுக்கு ஏற்படுத்தும் வேதனை காரணமாக.

*

நான், அவளுடன் பழக ஆரம்பித்த ஒரு மாதத்தில் இத்தனை விஷயங்களும், என்னை வந்து அடைந்து விட்டன. கல்யாணமானவள் என்பதால், நான் தவித்த தவிப்பு அர்த்தமற்றது என்பது இந்த ஒரு மாதத்திற்குள் எனக்குத் தெரிந்து விட்டது.

அவளை வீழ்த்துவது வெகு சுலபம். மேலே பறக்கும் காற்றாடியை, இன்னொரு காற்றாடியை செலுத்தி அறுத்து வீழ்த்துவது போல.

எப்போது, எப்படி நான் அவளை நெருங்கினேன் என்று என்னைக் கேட்டால், என்னால் நாட்களை, மணிகளை, நிமிடங்களை, வினாடிகளை வரிசைப்படுத்த முடியாது. ஆனால், நெருங்கி விட்டேன். சில சாகசங்களின் மூலம்.

என்னுடைய சின்னச் சின்னப் பரிசுகள், அவளைப் பரவசப்படுத்தின. நான் கொடுத்த தோடுகளை எனக்காகப் போட்டுக் காட்டினாள். ‘நன்றாக இருக்கிறதா சிவா, நன்றாக இருக்கிறதா சிவா’ என்று சிரித்துச் சிரித்துக் கேட்டாள்.

நான் கொடுத்த பொம்மைகளுக்கு என் முன்பாகவே தித்திக்கும் முத்தங்கள் கொடுத்தாள். நான் அவளுக்குக் கொடுத்த புடவையை எனக்கு முன்பாகவே உடுத்திக் காண்பித்தாள்.

லோ – ஹிப். சரிந்த இடை. குழிந்த வயிறு.

அட, அட, தங்க வயல் தேவதைதான். ஈடன் தோட்டத்து ஏவாள்தான்.

ஈடன் தோட்டத்து ஏவாளுக்கும், என் தங்கவயல் தேவதைக்கும் ஒரே வித்தியாசம். அவளுக்கு வயிற்றுக்குழிவு இல்லை. என் தேவதைக்கு அது இருந்தது. அதுவும் கவர்ச்சியாக.

நான் எப்போது அவளை ஒருமையில் அழைக்கத் தொடங்கினேன் என்று கேளுங்கள், தெரியாது.

அவள், எப்போது முதன், முதலாக என் தோளில் சாய்ந்து, என் பின்னங் கழுத்தில் சூடாக வாய் சுவாசம் ஊதி, என்னைக் கிளுகிளுக்க வைத்தாள் என்று கேளுங்கள், தெரியாது.

நான் ஏறக்குறைய அவளை வீழ்த்தி விட்டேன். இரண்டு விஷயங்கள் தான் பாக்கி. ஒன்று, நான், அவளை முழுமையாக ஆள வேண்டும். இரண்டு, அவளுக்கு பாஸ்போர்ட்டும், விஸாவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அப்புறம்… அதை அப்புறம் சொல்கிறேனே. இப்போது அதற்கு அவசரமில்லை.

எனக்கும், அவளுக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தை நீங்கள் இரண்டே, இரண்டு சம்பவங்களையும், அதன் காரணமாகப் பிறந்த உரையாடல்களையும் வைத்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சொல்கிறேன்.

முதலாவது சம்பவம் 15 நாட்களுக்கு முன்னால் நடந்தது.

அவள் கணவன் விஜய்குமார், திருக்காட்டுப்பள்ளிக்கு அவசரமாக சென்றிருந்த ஒரு சமயம்.

திருவனந்தபுரத்திற்குக் காலையில் சென்று, மாலை திரும்பி வரலாம் என்று உமாதான் எனக்கு ஐடியா கொடுத்தாள்.

அதன்படி திருவனந்தபுரத்திற்குப் போனோம். பஸ்ஸில் ஊர்க்காரர்கள் கண்ணில் படாமல் இருக்க, வேறுவேறு சீட்.

திருவனந்தபுரத்தில், மிருகக்காட்சி சாலையில் கைகோர்த்துச் சுற்றி வந்தோம். ஒவ்வொரு மிருகக் கூண்டின் அருகிலேயும், நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து நிமிடத்திற்கு மேல் நின்றோம். என் மார்பு, அவள் முதுகில் பட்டும் படாமல், என் கை அவள் இடுப்பில் பட்டும் படாமல், என் மூச்சு, அவள் பின்னங்கழுத்தில் சூடாக மன்மத அன்பாக.

மிருகத்தைப் பார்க்க வேண்டியதுதானே. அப்படியே கழுத்தைத் திருப்பி அகன்ற விழிகளால், என்னைப் பார்த்தாள். கண்களின் பாப்பாக்கள், கருமையாக பால் திராட்சையாக என்னைச் சுழன்று, சுழன்று நோக்கின. இமைகள் படபடவென்று அடித்துக் கொண்டன. நான் கம்பிக் கூண்டின் மீது, அவளை அப்படியே என் உடலால் மெல்ல, ஒர் பூவை அழுத்துவது போல அழுத்தினேன்.

அவள் தேகம் நடுங்கியது. சிலிர்த்தது. அவள் உடலில் எனக்குத் தெரிந்த ரோமநாற்றுக்கள், அறுவடைக் கதிராகச் சாய்ந்திராமல், அப்படியே விறைத்து நின்றன.

‘ஸ்’ என்று ஒரு மெல்லிய முனகல்.

“என்ன உமா?” என்றேன் தொண்டையில் அடைத்துக் கொண்ட, அபாரமான உமிழ்நீரை விழுங்கிக் கொண்டே.

“ஒன்றுமில்லை” என்றாள் அவசரமாக, விலகி நடந்தாள்.

சிங்கக் கூண்டருகே நாங்கள் நின்றிருந்த நேரம், சிங்கம் ஒருமுறை கர்ஜித்தது. இரை வேண்டியோ, துணை வேண்டியோ?

உமாதேவி, பயந்து போய் என் மார்பில் சாய்ந்து, என்னை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவள் உடல் அப்படியே என்னுடலுடன் இழைந்தது. மழைக் குருவி போல் நடுங்கினாள்.

“என்ன உமா?” என்றேன்.

“பயமாக இருக்கிறது. ஐயோ… பயமாக இருக்கிறது! அந்த சிங்கம் என்னைப் பயமுறுத்துகிறது.”

“அது என்ன உன்னைக் கடித்தா சாப்பிட்டு விடப் போகிறது?”

“போய்விடலாம்… போய்விடலாம்…”

நாங்கள் வெளியே வந்தோம். சந்தடி நிறைந்த திருவனந்தபுரம் சாலைகளில் நடந்தோம்.

‘நறுக்கெடுப்பு, நறுக்கெடுப்பு, நாள நறுக்கெடுப்பு’ என்று கூவிக் கூவி விற்ற லாட்டரிச் சீட்டுக்காரனையும், நுங்கை துண்டு, துண்டாக வெட்டி இளநீரில் ஐஸுடன் சோர்த்து விற்ற வியாபாரியையும், அவள் ரசித்தாள்.

நான், அவளுக்கு அந்த பானத்தை வாங்கித் தந்தேன். மாற்றான் தோட்டத்து மல்லிகை. என்னருகே மணம் பரப்பி நின்றது.

திடுமென்று அவள் துள்ளினாள். டம்ளரில் இருந்த பானம் சிதறியது.

“என்ன உமா?” என்றேன் நான், பதறி.

“விளையாடாதீர்கள்” என்றாள் வெட்கச் சிரிப்புடன்.

“இல்லையே, நான் விளையாடவே இல்லையே.”

“ஐயோ, இது பொது இடம். நூறு ஜனங்கள் இருக்கிறார்கள். யாராவது பார்க்கப் போகிறார்கள். விளையாடாதீர்கள்.”

“நான் ஒன்றுமே செய்யவில்லையே உமா” என்றேன்.

“பின்னால் நீங்கள் கிள்ளவில்லை?”

“நானா? பின்னாலா?”

“நீங்களே! பின்னாலேதான்.”

“எங்கே?”

“அதைக்கூடச் சொல்ல வேண்டுமா?”

“ஐயோ, நான் உன்னைத் தொடவேயில்லை.”

என் முகத்தின், வார்த்தைகளின் பதற்றமான உண்மை நிலையைப் பார்த்து அவள் மெல்லத் திரும்பினாள். எங்களைச் சுற்றி பானம் குடித்துக் கொண்டிருந்தவர் பலர்.

அங்கே நின்றிருந்தவர்கள் அத்தனை பேரும் நுங்கிளநீர் சர்பத் குடிப்பதிலேயே தீவிரமாக இருந்தனர்.

“எவனோ ஒரு குறும்புக்காரன், என்னை மாதிரியே உன் அழகில் மயங்கி இருக்கிறான்” என்றேன்.

“ச்சீ” என்றாள் அவள்.

அங்கிருந்து ஒரு தியேட்டருக்குப் போனோம். கடைசி வரிசை டிக்கெட் கிடைக்கவில்லை. அதற்கு முன் வரிசை டிக்கெட்தான் கிடைத்தது.

தியேட்டரில் சீட்டில் உட்கார்ந்தோம். என்னவோ ஒரு மலையாளப் படம். பெயர் காட்டுவதற்கு முன்பே முண்டு கட்டிய மலையாளப் பெண்கள் வந்து விஷு நடனமாடி என் சிந்தையைக் கவர்ந்தனர். நான் மெல்ல அவள் தோளில் சாய்ந்தேன்.

“சிவா.”

“ம்”

“இங்கேயும் வந்திருக்கிறான்.”

“யார்?”

“அஙகே கூட்டத்தில் என் பின்னால் கிள்ளியவன்.”

நான் பின் வரிசையைப் பார்த்தேன். ஆஜானுபாகுவாய், ஒருவன் மதுரை வீரபத்திரர் மீசையுடன் அமர்ந்திருந்தான்.

“சீட் மாறி உட்காருகிறாயா?”

“ச்சே. அவனை நன்றாக நாலு வார்த்தை கேட்பதை விட்டு, விட்டு.”

“எனக்குக் கோபம் வந்தால், கொலை வரை போவேன் உமா.”

“உங்களை நம்பி ஒரு பெண் வந்திருக்கும்போது, அவளுக்காக நீங்கள் ஒரு நாலு வார்த்தை சூடாகக் கேட்கக் கூடாதா? ஆ…ஐயோ…”

“என்ன உமா?”

“மறுபடி கிள்ளுகிறான்.”

“கொஞ்சம் பொறு” என்றேன். அந்த தியேட்டரில் நாங்கள் உட்கார்ந்திருந்த வகுப்பில் எங்கள் மூவரைத் தவிர ஒரு நான்கு பேரோ, என்னவோ. மேல் வகுப்பு. பொழுது போகாதவர்கள் வந்து பொழுதைக் கழிக்கலாம் என்ற உத்தேசத்துடன் வந்திருந்தார்களோ என்னவோ? எங்களுக்கு அடுத்த வரிசையில் இருந்த நான்கு பேரும், இரண்டு ஜோடிகள். அவர்களின் காரியங்களில் கண்ணாக இருந்தார்கள்.

இடைவேளைக்காக காத்திருந்தேன். அதுவரை, அவளை நெருங்கக் கூட எனக்கு மனது இடம் கொடுக்கவில்லை. என் தொழிலில் இந்த மாதிரியான எதிரிகளை எல்லாம் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களை எப்படி விலக்குவது என்பதற்குப் பயிற்சியும் பெற்றிருக்கிறேன்.

இடைவேளை. அவன் எழுந்து போனான். அவன் போனவுடன் உமா, என் சட்டையைப் பற்றி உலுக்கு, உலுக்கு என்று உலுக்கினாள்.

“அவன் என் இடுப்பில் எல்லாம் கை வைக்கிறான். நான் சும்மா இருப்பதைப் பார்த்தால், என்னை என்னவென்று நினைத்துக் கொள்வான். நீங்கள் ஒரு ஆண்பிள்ளைதானா?”

“சீறாதே உமா. கொஞ்சம் இங்கேயே உட்கார்ந்திரு” என்று வெளியே வந்தேன்.

அவனைத் தேடினேன். இல்லை. டாய்லட் கதவு திறந்து உள்ளே நுழைந்தேன்.

அவன் இருந்தான். வாஷ்பேஸினில் முகம் கழுவிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்த போது, கண்ணாடி வழியாக என்னைப் பார்த்தான். சிரித்தான்.

‘உன்னால் என்ன பண்ண முடியுமோ, பண்ணிக் கொள்’ என்ற சிரிப்பு.

நான் அவனை நெருங்கினேன்.

“என்ன? என்றான், கடுமையான குரல்.

“ஏன் கிள்ளினாய்?” என்று நேராக விஷயத்திற்கு வந்தேன்.

“கை இருந்தது கிள்ளினேன். என்ன செய்வாய் நீ?” என்று கேட்டான்.

“போலீசுக்குப் போனால் என்ன ஆகும் தெரியுமா?”

“எந்த மயிரானிடமாவது போ” என்றான்.

நான் என் புறங்கையை கத்தி போல் வீசினேன், அவன் கழுத்தில் ஒரு நரம்பிற்குக் குறி வைத்து. அடி நான் எதிர்பார்த்த இடத்தில் பட்டது. அவன் அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு மயங்கி விழுந்தான். இரு கால்களையும், கைகளையும் விரித்து, கரப்பான் பூச்சி போல் தென்பட்டான். என் பயிற்சி அதுபோல…

அவனைக் கூழாக்க வேண்டும் போல் இருந்த ஆசையை அடக்கிக் கொண்டேன். யார் வந்து எழுப்பினாலும், அவன் சினிமா முடியும் வரை எழுந்திருக்க மாட்டான்.

–காதலி வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...