சிவகங்கையின் வீரமங்கை | 22 | ஜெயஸ்ரீ அனந்த்
இளவரசரும், இளவரசியும் தம்பதி சமேதராகப் பெரியவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டிருந்த சமயம், “வெற்றிவேல், வீரவேல்” என்ற கோஷத்துடனும் வேல் மற்றும் வாள் பிடித்த விரர்களுடனும் சுமனும் குயிலியும் குதிரையில் வந்திறங்கினர்.
“இளவரசருக்கு வணக்கம்,” என்ற சுமனைப் பார்த்து, “நண்பா, வந்து விட்டாயா?” என்று அழைத்தவாறு இளவரசர் அவனை ஆரத்தழுக் கொண்டார்.
“தாமதமானாலும் சரியான சமயத்தில் தான் வந்து இருக்கிறோம்.” என்றவன், மரத்தினால் செய்யப்பட்டு வேலைப்பாடு நிறைந்த சிறு பேழை ஒன்றை இளவரசரிடம் தந்தான்.
“தமையன் இதைத் தங்களது திருமணப் பரிசாக அனுப்பியுள்ளார்” என்று கூறி அப்பேழையை இளவரசரிடம் தந்தான்.
அதனுள் அழகான, விலை மதிக்க இயலாத இரண்டு வைர மோதிரங்கள் ஜொலித்தன.
“ஆஹா…. என்ன ஒரு அற்புதமான பரிசு.” என்றவர் ஒன்றை நாச்சியார் விரல் அணிவித்து, இன்னொன்றைத் தனது விரல்களில் அணிந்து கொண்டார்.
“அக்கா, இவர் யாரென்று தெரியுமா..? மதுரை விஜயகுமார நாயக்கரின் தமயன். நம்மிடம் பொய் உரைத்துள்ளார்.”
“அப்படியா..?” என்றவளின் உதட்டு ஓரத்தில் சற்று மெலிதாகப் புன்னகை அரும்பியது அந்த புன்னகை இந்த உண்மையை அவள் அறிந்திருந்தாள் என்பதை காட்டியது.
“அக்கா… இந்த உண்மையும் தங்களுக்குத் தெரியுமா..?” என்றவள் சற்றே ஏமாற்றம் அடைந்தவளாய் முகம் வாட்டம் கொண்டாள்.
“குயிலி… என்ன இது..? ஏன் இந்த முகவாட்டம்..? இது இளவரசரின் கட்டளை. அதனால்தான் உன்னிடம்கூடக் கூறவில்லை. அது இருக்கட்டும்… முதன்மந்திரி பசுபதி எப்படி இருக்கிறார்..? அவருக்கு உதவியாக கீழக்கரை சீதக்காதி செயல்பட்டதாக நான் அறிந்தேன்.”
“ஆம் அக்கா, தக்க தருணத்தில் தேவிப்பட்டிணத்தில் மராட்டியப் படையினரை முதன்மந்திரி எதிர்த்த விதத்தை நீங்கள் பார்க்கவில்லையே… என்ன ஒரு உத்வேகம் தெரியுமா..? உருமியைக் கொண்டு பளீர் பளீரென்று சுழற்றி அடித்ததைப் பார்க்க வேண்டுமே… அடடா… “
“ஆம்…. உங்கள் தமக்கை குயிலி ஒன்றும் சளைத்தவள் அல்ல. மிகவும் தைரியமாக குதிரையில் வாள் பிடித்து நின்றதைப் பார்த்தவுடன் நான் வியந்து, பிரமித்துத்தான் போனேன். அப்படியே உங்களை பார்த்தது போன்று ஒரு பிம்பம்.” என்றான் சுமன். இவ்வாறு அவர்களின் வெற்றியை மீண்டும் மீண்டும் வர்ணித்து, வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
அங்கு சிறிது நேரம் கலகலப்பு நிறைந்திருந்தது. அச்சமயம் அரசர் செல்லமுத்து விஜயரகுநாதரின் தமக்கை முத்து திருவாயி நாச்சியார் அவ்விடம் வந்தார்.
“மருமகளே, உச்சிக்காலபூஜை ஆரம்பிக்க உள்ளது. தாமதிக்க வேண்டாம், பூஜை முடிந்ததும் பிறகு உங்களின் பேச்சுகளை தொடங்கலாம்” என்றாள்.
“ஆகட்டும் அத்தை” என்றவள். தனது கண் அசைப்பில் முத்துவடுகநாதரை அழைத்தாள். இதைத் தெரிந்துக் கொண்ட குயிலியும், “அக்கா, நீங்கள் அத்தானுடன் செல்லுங்கள். இவரிடம் கேட்க வேண்டிய சில கேள்விகள் நிலுவையில் உள்ளது. அதைக் கேட்டு விட்டு பின் உங்களுடன் இணைந்துக் கொள்கிறேன்” என்றவளை அர்த்தம் ததும்பும் புன்னகையால் பதிலுரைத்து விட்டு வேலுநாச்சியார் முத்துவடுகநாதருடன் சென்றாள்.
அவர்கள் சென்ற திசையைப் பார்த்து நின்று கொண்டிருந்த சுமனைக் கை தட்டி அழைத்தாள் குயிலி.
“ஐயா… மதுரை இளவரசரே.. இப்படிக் கொஞ்சம் திரும்பும்.” என்ற குரல் காதில் விழாதபடி சுமன் நிற்கவும், பொறுமையிழந்த குயிலி அவன் பார்வையில் படுமாறு முன் வந்து நின்றாள்.
“ஓ… நீயா..? நீ உன் அக்காவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு சென்றிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்..?”
“போதும் பரிகாசம். என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தெரிகிறது..?”
“உண்மையைக் கூறவா..? நேரில் பார்ப்பதற்கு பதுமையைப் போன்று உள்ளாய். ஆனால் வீறு கொண்டாய் என்றால், மகிஷாசுரமர்த்தினியின் அவதாரத்தை நியாபகப்படுத்துகிறாய். அப்பப்பா… என்ன ஒரு வேகம்..? உன் வாள் வீச்சிற்கு எதிரிகள் தலை மண்ணில் உருண்டோடியது இன்னமும் நினைவு வருகிறது.”
“பேச்சை மாற்றாதீர்கள். முதல் முறை உங்களைச் சந்தித்த பொழுது ஆடு மாடுகளை திருடும் கயவன் போல அறிமுகம் ஆனீர்கள். பின், வழி தவறிய வீரன் என்று அறிமுகம் செய்து கொண்டீர்கள். பல மொழியில் வித்தகராக இருந்ததால், கல்வி கற்றுத் தரும் ஆசானாக இருந்தீர்கள். ஒரு சிலம்பைக்கூட சுழற்ற தெரியாத சாதாரண மானிடனாய் தோற்றம் தந்தீர்கள். தனியாகப் பயணம் செய்ய பயந்தவனாய் நடித்திர்கள். எனக்கு ஆபத்து என்றதும் தான் உங்களின் உண்மை முகத்தை எனக்குக் காட்டினீர்கள்.” என்றவள் சற்று நாணம் கொண்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
“சொல்… ஏன் நிறுத்தி விட்டாய்..?”
“அம்மா, அப்பாவை இழந்த இந்த அனாதையின் மேல் அவ்வளவு பிரியமா உங்களுக்கும்..?”
இந்த கேள்விக்குப் பதிலாய் சுமன் அவள் முகத்தை தன் கரங்களாய் நிமிர்த்தினான். காதல் ததும்பிய அவள் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக உருண்டது.
“உன்னைப் பார்த்த மாத்திரத்தில் என் மனதை இழந்து விட்டேன். அதற்குப் காரணம் இளவரசராக கூட இருக்கலாம். ஏனெனில் அடிக்கடி அவர் உனது வீரத்தையும் புத்திக்கூர்மை பற்றி வியந்து கூறியதையும் கேட்ட எனக்கு உன்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது. அத்தருணத்திற்காகக் காத்திருந்த நேரத்தில் தான், இளவரசர், இளவரசிக்குத் துணையாக ராமநாதபுரம் செல்லுமாறு கேட்டுக்கொள்ளவும் தாமதிக்காமல் வந்து விட்டேன். உனக்கு ஒன்று தெரியுமா..? உன்னைச் சந்திக்கவே தினம் தினம் ஆட்டைத் திருட வந்தேன்.” என்றான்.
சுமன் சொல்லச்சொல்ல உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அள்ளிப் பருகியவாறு தன்னையும் மறந்து இமைகொட்டாமல் குயிலி அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த தருணம், சுமனின் உண்மையான காதல், மலையில் தவழ்ந்து வந்த தென்றலின் ஸ்பரிசம், வெற்றியின் களிப்பு, சகோதரியின் திருமணம் சொந்த பந்தங்களின் பாசம் என்று கட்டுண்டு கிடந்தாள். இந்த நிமிடம் இப்படியே நின்று விட வேண்டும் என்று அவள் மனம் எண்ணியது.
சிவகங்கை அரண்மனையில் வைத்தியர், தாண்டவராய பிள்ளையிடம் விடைபெற்றுக் கொண்டு சற்று மனம் தெளிந்த கெளரியுடன் தனது இருப்பிடம் நோக்கிப் புறப்பட ஆயத்தமானார். “வருகிறேன். இளவரசியிடமும், இளவரசரிடத்திலும் நாங்கள் விடை பெற்றுக் கொண்டதாகத் தெரிவியுங்கள். உங்களின் அன்புக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என்ற வைத்தியர், கெளரியுடன் நகர்ந்தார்.
“ம்மா… கெளரி. நான் உன் தகப்பன் ஸ்தானத்தில் இருப்பவன். அதன் உரிமையில் உன்னிடம் ஒன்று கூறிக்கொள்ள நான் ஆசைப்படுகிறேன்” என்ற அமைச்சர் தாண்டவராய பிள்ளை மேலும் தொடர்ந்தார். “இளவரசர் மீது நீ வைத்திருக்கும் உண்மையான அன்பு நிச்சயம் என்றால் அது கண்டிப்பாக உன் ஆசையை நிறைவேற்றும். இதை தவிர வேறொன்றும் சொல்ல என்னால் இயலவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் மறுபடியும் நீ விபரீத முடிவை எடுக்க மாட்டேன் என்று எனக்கு உறுதியளிப்பாயாக” என்று கேட்டார்.
இதைக் கேட்ட கெளரி சற்றே துணுக்குற்று, “மாமா, நீங்கள் போய் என்னிடத்தில்…. நிச்சயம் மாட்டேன். ஐயம் சிறிதளவும் வேண்டாம். விதி எப்படியோ… அவ்வாறே என் வாழ்க்கை அமையட்டும் ஈசன் என்னைக் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றவள் தன் . கண்களில் துளிர்த்த கண்ணீரை மறைத்தவாறு பல்லக்கில் ஏறி அமர்ந்தாள். வைத்தியரும் பல்லக்கும் சென்று மறையும் வரை காத்திருந்தார் தாண்டவராய பிள்ளை.
அச்சமயம் வீரன் ஒருவன் ஓலை ஒன்றைக் கொண்டு வந்தான்.
1 Comment
ஆஹா அருமையான கதை.தொய்வில்லாமல் செல்கிறது. குயிலியுடன் சுமித்திரன் உரையாடல் ப்ரமாதம். வாழ்த்துகள் தொடருங்கள்