ஒற்றனின் காதலி | 2 | சுபா

 ஒற்றனின் காதலி | 2 | சுபா

போன வருடம் வரை யாக்கோபு என்றும், போன மாதம் வரை யோவான் என்றும், நேற்று வரை தாவீது என்றும் பெயர் வைத்துக் கொண்டிருந்தேன்.

இன்றைக்கு மாற்றி விட்டேன். காரணம் நான் போகப் போகிற ஏரியா அப்படி. இன்றையிலிருந்து என் பெயர் சிவரஞ்சன். பெயர் பரவாயில்லையா? ஓ.கே.வா? தாங்க்ஸ்.

நான் உங்கள் ஊருக்கு வந்தால், ஆயிரம் பேருக்கு நடுவில் என்னைத் தனியாக அடையாளம் காண முடியும். காரணம், என் முகத்து ஒளிர் தேஜஸ். அருட்ஜோதி. இந்த தேஜஸையும், அருட் ஜோதியையும் உயர்ந்த எண்ணங்கள் கொண்ட மனிதர்களாலும், போஷாக்கான சத்துணவு உண்ணும் மனிதர்களாலுமே பெறமுடியும் என்று, ஏதோ ஓர் புத்தகத்தில் படித்திருந்தேன். சிக்கெனப் பற்றிக் கொண்டேன். என் தேஜஸிற்குக் காரணம் போஷாக்கான சத்துணவு. அதற்குக் காரணம் என் கையில், பையில், பாங்க் அக்கவுண்ட்டில் புரளும் பணம். அதற்குக் காரணம் என் தொழில். அதில் நான் கையாளும் சில வழிமுறைகள்.

தாவாதீர்கள். நான் ஒன்றும் ஹர்ஷத் மேத்தா இல்லை. அந்த அளவுக்கு சில்லறைக்காரன் இல்லை. ஏதோ என் புத்திக்கு எட்டியவரையில், நான் செய்யும் சில காரியங்கள் என்னைச் சில்லறையாளனாக ஆக்கியிருக்கின்றன.

நான், இக்கதையின் கதாநாயகன். நெகடிவ் ஹீரோ. உங்கள் தமிழ் சினிமாக்களில் வருகிற ஹீரோக்கள் எல்லாம் ராபர்ட் ப்ரூஸின் வாரிசுகளாக இருக்கிறார்கள். அல்லது ராபின் ஹுட்டின் அவதாரங்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஹீரோக்களை எல்லாம் ஸெலூலாயிட் திரையில்தான் காண முடியும். நான் எளிமையானவன். உங்களில் ஒருவன். குறுக்கு புத்திக்காரன். உங்கள் மனங்களை எப்போதாவது நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்டுப் பாருங்கள். அங்கே நான் ஒளிந்திருப்பது தெரியும். சிவரஞ்சன்.

பூடகமாகப் பேசுகிறேன் அல்லவா? நிறுத்திக் கொள்ளலாம். நேரடியாக சம்பாஷிக்கலாம் அல்லது உரையாடலாம்.

நான் ஐந்தடி, எட்டங்குலம். கொஞ்சம் நீளவாக்கில் முகம். அதனாலேயே என் முகத்தை எப்படி வேண்டுமானாலும் திருத்தியமைக்க என்னால் முடிகிறது. நான் எந்த மாநிலத்தில் இருக்கிறேனோ, அந்த மாநிலத்தின் கலாச்சார வழக்கப்படி உடையணிவேன். நேரு மாதிரி, ராஜீவ் மாதிரி, எல்லா மாநில மொழிகளையும் நான் அந்தந்த மாநிலக்காரர்கள் போலவே பேசுவேன். தனியன்.

ஒரு பொண்டாட்டியும், சில பிள்ளைகளும் என்பது, வாழ்க்கையில், நான் தூக்க வேண்டிய நிரந்தரப் பல்லக்கு என்பதால், அந்தப் பாரத்தை நான் சுமக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அதற்காக என்னை சாமியார் என்று ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்தி, ஜெயேந்திரர், பங்காரு, சாயி வரிசையில் சேர்த்து விடாதீர்கள். நான் அப்படி இல்லை. பெண்கள் விஷயத்தில் அறிவாளி. யார், எப்படி மடங்குவாள் என்பதை ஒருமுறை முகத்தைப் பார்த்தாலே கணிக்க முடியும். என் கணிப்புப் பொய்யானதே இல்லை. நான் குறி வைத்தால், வைத்ததுதான். வீழ்த்தி விட்டுத்தான் அடுத்த வேலைக்கு நகர்வேன்.

இந்தத் தடவை நான் என் தொழிலை மேற்கொள்ளப் போவது சுரங்க நகரில். தக்கலை, தங்கச் சுரங்கம் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. ஆம், நாகர்கோவிலிற்கும், திருவனந்தபுரத்திற்கும் இடையில் இருக்கும் அதே தங்கச் சுரங்கம்தான்.

அந்தத் தங்கச் சுரங்கத்தைப் பற்றித் திடீரென்று எல்லா பேப்பர்களிலும் பத்தி, பத்தியாகச் செய்திகள். வாரப் பத்திரிகைகளில் எல்லாம் கவர் ஸ்டோரிகள். காரணம், தங்கச் சுரங்கம் தொடங்கி நூற்றாண்டு ஆகிறது. காலம் சென்ற திருமதி இந்திராகாந்தி, வருகை தந்து, சுரங்கத்தில் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கட்டியை ஒரு கையால் தூக்கப் பார்த்து முடியாமல், கைவிட்ட யாத்திரை ஸ்தலம் கொண்ட சுரங்கம்.

இன்றைக்கும் யாத்திரை போகிறவர்கள் அந்தத் தங்கக் கட்டியைத் தொட்டுத் தூக்கப் பார்த்து, ‘திருமதி இந்திரா காந்தியாலேயே முடியவில்லையா? நம்மால் முடியப் போகிறதா என்ன?’ என்று ஆதங்கப்பட்டுக் கொள்கிறார்கள்.

எனக்கு அந்தச் செய்திகள் எல்லாம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பத்தோடு, பதினொன்று என்று ஒதுக்கிப் போட்டிருக்க வேண்டிய செய்தி அது. ஆனால்…

செய்திகளை வெளியிட்டிருந்த பத்திரிகைகள், தக்கலையில் தங்கவிலை எப்படி என்று பேட்டியாக வெளியிட்டிருந்தது. பேட்டி கொடுத்திருந்தது தங்கச் சுரங்கத்தில் வேலை செய்யும் ஆண்களின் வீட்டுப் பெண்கள். ஒவ்வொரு குட்டியும் என்னமாய் வில்லாய் இருந்தாள் என்கிறீர்கள். கேரளாவும், தமிழ்நாடும் கலக்கிற இடம்.

எப்போதுமே கலப்புக்கு வீரியம் அதிகம். இரண்டு ஜாதி மாம்பழச் செடிகளைக் கலந்து, ஒரு புது ஜாதியை உருவாக்குங்கள். பழமும் கை கொள்ளாத அளவு பெரிதாக இருக்கும். இனிப்பும் திகட்டத் திகட்ட.

அதேபோலத்தான் வாழைப்பழம். இரண்டு ஜாதி கலந்தால், அருமையான, பெரிய, புது ஜாதி வாழைப்பழம்.

பத்திரிகையில் வெளியாகியிருந்த பெண்களும் கிட்டத்தட்ட அப்படித்தான் ஜொலித்தார்கள். என் தேட்டையை அல்லது வேட்டையை அந்தத் தங்க வயலில் வைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறதே என்று நினைத்தேன்.

ஒருத்தியைப் பிடித்து அனுப்பினாலே ஏகப்பட்ட சில்லறை தேறும். எப்போதும் ஒரு ஊரைத் தேர்ந்தெடுக்கும் முன்னால், அந்த ஊருக்கு ஒரு டூரிஸ்டாகப் போய் வருவது வழக்கம். ஒரு பத்து நாட்கள் இருந்து விட்டு, ஊரைப் பற்றி ஓர் அறிக்கையைத் தயார் செய்து கொண்டுதான், அந்த ஊரில் காலை வைக்கலாமா? வேண்டாமா? என்று தீர்மானிப்பது வழக்கம்.

இந்த முறையும் அதையே கையாளுவது என்று முடிவெடுத்தேன்.

ரு நல்ல நாளில் தில்லியிலிருந்து ரயில் ஏறினேன். நானிருக்கும் அறையைக் காலி பண்ணுகிறேனா என்று, அங்கே டூரிஸ்ட் சர்வீஸ் நடத்துபவன் கேட்டான். தில்லியில், நான் மெட்ராஸ் டூரிஸ்ட்காரன் ஒருவன் வைத்திருந்த லாட்ஜில்தான் தங்கியிருந்தேன். அது முழுநேர லாட்ஜ் இல்லை. மேலே டூரிஸ்ட் கம்பெனிக்காரனின் வீடு. கீழே ஒரு ஐந்து அறைகள். ஐந்து அறைகளில், கோடி அறையை நான் பர்மெனன்டாகப் பிடித்து வைத்திருந்தேன். டூரிஸ்ட் கம்பெனிக்காரன் – பான் வாயேஜ் என்று கம்பெனிப் பெயர் – ஏதோ ஓர் அபிமானத்தில் ஐந்தாவது அறையை எனக்காக ஒதுக்கி வைத்திருந்தான்.

அந்த அறை எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. மற்ற நான்கு அறைகளிலும் டூரிஸ்ட்டுகள் வந்து தங்குவார்கள். ஒருநாள், இரண்டு நாள் டெல்லியில் இருப்பார்கள். அப்புறம் இரண்டு நாள் ரிஷிகேஷ். ஹரித்வார் என்று புண்ணியம் தேடிக் கொள்ளப் போவார்கள். திரும்பி வந்து ஒரு நாள் முழுக்க ஆக்ரா – மதுரா. அவர்களுக்கு என் அறையை எட்டிப் பார்க்க நேரமே இருப்பதில்லை. அதனால், யாரும் மூக்கு நீட்டி, நான் யார்? என் பர்சனாலிட்டி என்ன? என் தொழில் என்ன? என்றெல்லாம் விசாரிக்க சுவாரஸ்யம் காட்டுவதில்லை என்பதாலேயே, நான், அந்த இடத்தை, என் தலைமையகமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கிருந்து இந்தியாவின் சகல ஊர்களுக்கும் சென்று என் தொழிலை அந்தந்த ஊர்களில் நடத்தி முடித்துவிட்டு, மறுபடி தலைமையகம் திரும்பி விடுவேன். தலைமையகத்தின் பக்கம் போலீஸ்காரர்கள் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அங்கே ஒரு லாட்ஜ் இருப்பதும் அதில் நான் இருப்பதும் போலீஸ்காரர்களைப் பொறுத்தவரை தெரியாத விஷயம்.

ஸாரி, நான், என் டெல்லி குகையைப் பற்றி நிறையவே சொல்லி விட்டேன்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், குறித்த நேரத்தில் சென்னை வந்தது. சென்னையில் இருந்து, திருவனந்தபுரத்திற்கு வேறு ஒரு ரயில் பிடித்தேன். எப்போதுமே நான் என் சொந்தப் பெயரில் ரிசர்வ் செய்வதில்லை. புனைப் பெயர்தான்.

இந்த முறை சிவரஞ்சன், அந்தப் பெயரில், ஒரு மூன்று பாஸ்போர்ட்டுகள் தயார் செய்து வைத்திருக்கிறேன். தாடி, மீசை வைத்து ஒரு படம். மொட்டை அடித்து, மீசை வழித்து ஒரு படம். கண்ணாடி மாற்றி, நடு வகிடு நரைத்த முடியுடன், கன்னச் சுருக்கங்களுடன் ஒரு படம்.

நான் கடைசியாகச் சொன்ன மேக்கப்பிலேயே, தக்கலை செல்வது என்று முடிவெடுத்திருந்ததால், திருவனந்தபுரத்தில் நான் இறங்கும்போது, “எந்தா ஸாரே முறி வேணும்?” என்று, என்னை அறை விசாரித்தான் ஒருவன்.

கேரளா வரவேற்கிறது.

‘ப்த்ச்’ என்று கேரள பாஷையில் நான், அவனை ஒதுக்கினேன். நாகர்கோவில் பஸ் ஏறி, தக்கலை வந்து சேர்ந்தேன்.

பிரதான சாலையில் ஒரு அறை எடுத்துக் கொண்டேன். பத்து நாட்கள் அந்த ஊரைச் சுற்றி வந்தேன். கையில் ஒரு சின்ன காமிரா. எங்கேயோ இருக்கும் இயற்கையைப் படம் பிடிக்கிற மாதிரி, நான் அந்த ஊரின் அழகுச் சிலைகளைப் படமெடுத்தேன். ஊரில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணாக வர்ணிப்பது என்பது கொஞ்சம் சிரமமான காரியம். கேரளாவின் சந்தன நிறமும், தமிழ்நாட்டின் பளபளக்கும் கறுப்பும் இணைந்து, ஒரு மாதிரி மயக்கும் நிறத்துடன் கொண்ட பெண்கள். தேக்கு மரத்தில் வார்னிஷ் தடவி, ஃப்ரெஞ்ச் பாலிஷ் மினுக்கலுடன் துணி போர்த்திய பெண்கள்.

இருபது, நாற்பது என்று எந்த வயதைப் பார்த்தாலும், அள்ளிக் கொள்ளலாம் போலத்தான் இருந்தார்கள்.

இவ்வளவு பெரிய ஊரில், எனக்கென்று ஒரு ஏமாளிப் பெண் சிக்காமலா போய்விடுவாள்? காமிரா ‘க்ளிக், க்ளிக், க்ளிக்’ என்று கண்ணில் பட்டவளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது.

ஊரில் பொதுவாக ஆண்கள் சுரங்கத்தில் வேலை செய்து சம்பாதித்தார்கள். சாராயம் குடித்தது போக மீதியை வீட்டிற்குக் கொடுத்ததினால், வீட்டில் எப்போதும் ஆணுக்கும், பெண்ணுக்கும் அடிதடி. வாய்த்தகராறு. பெண்களை, ஆண்கள் சீந்துகிறாற் போலத் தெரியவில்லை.

இந்த மாதிரி உதாசீனிக்கப்பட்ட பெண்களை வயப்படுத்தவது எளிது. மேலும் அத்தனை பேரும் தமிழ்தான். தாய்மொழியாகவும் இருந்ததால், கவிதை, கதை என்று அவர்களுக்கு புரியாததொரு உயர்ந்த பீடத்தில் அமர்ந்து பேசினால், எளிதில் நம் வலையில் விழுந்து விடுவார்கள். ஒரே ஒரு குட்டி தேறினால் போதும், என்று நினைத்துக் கொண்டேன். அதற்கு இந்த வேஷம் லாயக் இல்லை. இது வயதான வேஷம். இந்த வேஷத்தில் அணுகினால் பெண்கள், அப்பா முறைதான் கொண்டாடுவார்கள். அதனால், ஒரு புதிய கோணத்தில் தக்கலையில் வந்து செட்டிலாக வேண்டும் என்று தீர்மானித்தேன்.

றுபடி தில்லி வந்து சேர்ந்தேன்.

காமிராவில் இருந்து ஃபிலிமை உருவினேன். ஏற்கனவே மூன்று ரோல்களில் சுரங்கமும், சுரங்கத்தின் சுற்றுப்புறமும், ஆட்டோக்களும், அவைகளின் பின்னணியில் சிரிக்கும் பெண்களுமாய் என் காமிராவில் சிறைப்பட்டிருந்தார்கள்.

அத்தனை நெகடிவ்களையும் கழுவி, கான்டாக்ட் பிரின்ட் போட்டு, உலர்த்தினேன். ஒவ்வொரு போட்டோவாய் ஆராய்ந்தேன். ஒருத்தி உதட்டழகி, ஒருத்தி கண்ணழகி. ஒருத்தி மூக்கழகி, ஒருத்தி உடலழகி என்று ஒவ்வொரு பெண்ணும் எனக்குச் சுரங்கமாகவும், பொன் முட்டை வாத்தாகவும் தென்பட்டார்கள்.

அட, அட, அட… என் ஆண்மைக்கு எவ்வளவு பெரிய சவால்? என் பைக்குதான் எவ்வளவு தங்க நாணயங்கள்!

தங்கச் சுரங்கமே… நான் அங்கே வருகிறேன். பெண்களே, உங்கள் ராஜகுமாரனுக்காக நீங்கள் இப்போதிலிருந்து ஏங்கத் தொடங்குங்கள்.

–காதலி வருவாள்…

ganesh

2 Comments

  • Very interesting

  • விறுவிறுப்பாகச் செல்கிறது! அடுத்து என்ன என்ற ஆவலைத்தூண்டுகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...