தியாகச்செம்மல், கம்யூனிஸ்ட் தலைவர் ஜமதக்னி
தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வடஆற்காடு மாவட்டத்தின் பங்கு உன்னதமானது. அதிலும் குறிப்பாக வாலாஜாபேட்டை தாலுகாவில் தோன்றிய ஜமதக்னியின் தியாகங்கள் என்றும் மறக்க முடியாதவை.
தியாகச்செம்மல் அறிஞர் ஜமதக்னி ஆற்றிய பணிகளும் தியாகமும் என் றென்றும் தமிழக மக்கள் நினைவுகூரத்தக்கவை. அன்னாரது வாழ்க்கை யில் பெரும் பகுதி போராட்டக் களங்களிலே கழிந்தது. ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம், எஞ்சிய நாட்களில் ஆற்காடு மாவட்டம் முழுமையும் பிரயாணம் செய்து விடுதலைக் கனலை ஊட்டி ஊட்டி வளர்த்தார்.
க. இரா. ஜமதக்னி (ஏப்ரல் 15,1903), மார்க்சிய சிந்தனையாளர், நூலாசிரியர், கவிஞர், பன்மொழிப் புலவர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். சார்லஸ் டார்வின் எழுதிய நூல்களை ஆய்ந்து உயிர்களின் தோற்றம் என்று தமிழில் எழுதியவர். காரல் மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ இவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது.
இன்றைய வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டம் காவேரிப்பாக்கத்தின் அருகில் அமைந்துள்ள கடப்பேரி கிராமத்தில் ராகவன் நாயக்கர் – முனியம் மாள் தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் நாள் மகனாகப் பிறந்தார் ஜமதக்னி. வேலூர் ஊரிஸ் கல்லூரியில் இன்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்து படித்தார். படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டார். பிறகு அதே கல்லூரியில் ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றினார். அதன் பின்னர் காந்தி அடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு சுதந்திர வேள்வியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
இவர் சுதந்திரப்போராட்ட வீராங்கனை தியாகத்தாய் கடலூர் அஞ்சலையம் மாளின் மகள் லீலாவதியைக் காதலித்து மணம் புரிந்துகொண்டார். வேலூர் சிறையில்தான் இவர்களது காதல் மலர்ந்தது. பிற்காலத்தில் சென்னையில் வாழ்ந்து வந்தார். வாலாஜா பேட்டையில் உள்ள தீனபந்து ஆசிரம நிறுவனர்களில் இவரும் ஒருவர். இவருடைய ஒரே மகள் சாந்தி தற்போது பேராசிரியரும் முன்னாள் தமிழ் நாடு திட்டக்குழு துணைத் தலைவருமான நாகநாதன் என்பவரை மணம் புரிந்து வாழ்ந்து வருகிறார்.
ஜமதக்னியின் எழுத்துப்பணி
75 ஆண்டுகள் தாண்டிய நிலையிலும் கார்ல் மார்க்ஸின் தாஸ் காப்பிடல் (மூலதனம்) என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்க்க முற்பட்டார். ஏறத்தாழ நான்காண்டுகள் இரவு பகலாக உழைத்து 10,000 பக்கங்களில் அதனை மொழிபெயர்த்தார். நோய்வாய்ப்பட்டிருந்தபோதும் எழுத்துப்பணியை அவர் தொடர்ந்து செய்தார். 1981இல் இப்பணியை அவர் முடிக்கும்போது “உலகில் என் பணி முடிந்துவிட்டது” என அடிக்கடி கூறி வந்தார்.
இந்த 10,000 பக்கங்களையும் இந்திய அரசே அச்சிடுவதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மற்றும் பேராசிரியர் ந.சஞ்சீவி ஆகியோர் பரிந்துரை செய்தனர். ஆனால் இந்திரா காந்தி அதற்குரிய ஆணை பிறப்பிப்பதற்கு முன்பே மறைந்துவிட்டார். மீண்டும் 10,000 பக்கங்களும் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதியிடம் தரப்பட்டது. முழுமையாக இவர் எழுதிய மிகைமதிப்பு, மூலதனம் ஆகிய நூல்கள் தமிழக அரசு நிதியுதவி தர மறுத்துவிட்டபோதிலும் அதற்குப்பின் அச்சாகி வெளிவந்தது.
ஜமதக்னி குறித்து, அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வாழ்த் துக் கடிதம்
“மார்க்சிய அறிஞர் க.ரா.ஜமதக்னி அவர்கள் தியாகத் தீயில் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கமாக ஒளிவிட்டவர். “பிறநாட்டு நல்லறிஞர் சரித்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்தல் வேண்டும்,” என்ற பாரதியின் வாக்கை செயல் படுத்தும் வண்ணம் பொதுவுடைமை சிற்பி காரல் மார்க்ஸ் படைத்திட்ட ‘மூலதனம்’ மற்றும் ‘மிகைமதிப்பு’ நூல்களை, இந்திய மொழிகளிலேயே முழுமையாகத் தமிழ் மொழியில் வழங்கியுள்ளது கண்டு பேருவதை கொள்கின்றேன்.
சமூக அறிவியலின் பலதுறைகளில் ஆய்வு நூல்களை – ஆவணங்களை, பல ஆண்டுகள் பயின்று, உணர்ந்து, தெளிந்து உருவாக்கிய காரல் மார்க்சின் படைப்புகள் அறிவின் எல்லைக் கோட்டை எட்டிப்பிடித்த வாழ்வியல் களஞ்சியங்களாகும். நாட்டின் விடுதலைப் போரில் குடும்பத்தையே ஈடுப டுத்திக்கொண்டு பல ஆண்டு சிறையிலேயே பெரியவர் ஜமதக்னி அவர்கள் அறிவித்திறன் – மொழிப்பற்று – தியாக உள்ளம் இவற்றின் காரணமாக தன் பெயரை, புகழை நட்டவர்.
அவர் தந்துள்ள இந்த மொழிபெயர்ப்புக் கருவூலம் தமிழர்க்குக் கிடைத் துள்ள புதையல். இப்பணி சிறந்திட அவருக்குத் துணையாக இருந்த பதிப் பாசிரியர்கள் டாக்டர் மு. நாகநாதன், டாக்டர் சாந்தி ஆகியோர் பாராட்டுக் குரியவர்கள்.
இந்திய சுதந்திரப் பொன் விழா ஆண்டில் இந்நூல் வெளிவருவது மேலும் ஒரு சிறப்பாகும், அன்புள்ள, மு.கருணாநிதி, 5.4.1998,” என்று தன் கைப்பட எழுதி வாழ்த்தியிருக்கிறார்.
தோழர் ஜமதக்னி 1981இல் மறைந்துவிட்டார். அதன்பின் அவரின் உற்ற தோழராக விளங்கிய அவரது மருமகன் மு.நாகநாதன் மேற்கொண்ட கடும் முயற்சிகளின் விளைவாக மூலதனம் அச்சேறி வெளியாகியது.
ஜமதக்னி 1935ஆம் ஆண்டில் சோசலிஸ்ட் கீதங்கள் என்ற நூலையும், 1938இல் மார்க்ஸிசம் சமூக மாறுதலின் விஞ்ஞானம் என்ற நூலையும், 1939-இல் ‘நீயேன் சோஷலிஸ்ட் ஆகவேண்டும்?’, ‘மனிதன் தோற்றம் பூமி யின் தோற்றம்’, ‘இந்தியாவின் சோசலிசம்’ என்ற நூலையும் 1947இல் எழுதியுள்ளார்.
இவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளில் புலமை மிக்கவர். மகாகவி காளிதாசரின் மேகதூதம், ரகுவம்சம் நூல்களையும் தமிழாக்கம் செய்துள்ளார். தினமணி நாளிதழில் கம்பராமாயணத்தைப் பற்றி கட்டுரைகள் எழுதி வந்தார். இவரது பிற நூல்கள் : கனிந்த காதல் (அ) ததும்பும் தேசபக்தி, ஸ்ரீமகாபக்த விஜயம், தேசிய கீதம், திருக்குறள், முருகாற்றுப்படை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, குமரேச சதகம் ஆகிய நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.
இவரது நூல் ஒன்று சாகித்திய அகாதமி பரிசு பெற்றுள்ளது. 1972இல் மத்திய அரசு அவரை டெல்லிக்கு அழைத்து தாமிரப்பத்திரம் அளித்து பெருமைப் படுத்தியது.
வீர சுதந்திரம் என்ற ஒரு இதழை 1934இல் சில காலம் நடத்தியுள்ளார். இது காலணா விலையில் வார இதழாக வெளியிட்டப்பட்டது.
தமிழ்நாட்டில் பல அரசியல் தலைவர்களுடன் ஜமதக்னி நட்புடன் இருந் துள்ளார். நெருக்கடி காலகட்டத்தில் (1975-73) முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்துள்ளார். ‘நம்நாடு’ வார இதழில் ‘தமிழக்குத் திராவிட இயக்கம் செய்த தொண்டு’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
ஜமதக்னியின் ஒரே மகள் சாந்தியை பேராசிரியர் நாகநாதன் திருமணம் செய்து கொண்டபோது காமராஜர் திருமலைப் பிள்ளை வீட்டில் உள்ள தனது வீட்டிற்கு புதுமணத் தம்பதிகளை அழைத்து தேநீர் விருந்து கொடுத் துச் சிறப்பித்தார். பெருந்தலைவர் காமராஜரோடு ஜமதக்னி வேலூர் சிறையில் இருந்தபோது ஒரே அறையில் இருந்ததை நினைவுகூர்ந்தார். ஜமதக்னி நடத்திய மார்க்சிய வகுப்புகள் தனக்கு மிகவும் பயன்பட்டதாக பெருமையுடன் கூறி மகிழ்ந்தார் காமராஜர்.
தரமான இலக்கியங்கள் படைப்பதிலேயே ஜமதக்னி தம் வாழ்நாள் குறிக் கோளாகக் கொண்டுவாழ்ந்தார்.
இந்தியாவின் எதிர்காலம் குறித்தும் அவர் தெளிவான பார்வையுடன் இருந் தார். அவர் கூற்றின்படி, “1930இல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஓராண்டு சிறை புகுந்தபோது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலு செட்டியாருடன் சென்னைச் சிறையில் இருந்தேன். காந்தி அடிகள் பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை அவர் வரவேற்றார். ஆனால் காந்தியடி களால் சுதந்திரம் வராது. அப்படி வந்தாலும் அது செல்வந்தர்களின் சுதந்திரமாகத்தான் இருக்கும். முதலாளி அரசாங்கமாகத்தான் இருக்கும் என்றார். அவர் வாக்கியம் என் மனதில் வேரூன்றி இருக்கிறது.” என்றார்
27.5.1981 அன்று ஜமதக்னி மூளைப்பிளவு நோயினால் அல்லலுற்று இயற்கை எய்தினார்.