வந்தியத்தேவன் பாதையில் செல்ல வாருங்கள்…

 வந்தியத்தேவன் பாதையில் செல்ல வாருங்கள்…

“கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினம் 1950ல் எழுதப்பட்டது. இன்று வரை விற்பனையில் பெஸ்ட் செல்லர் அதுதான். நாடகமாக நடிக்கிறார்கள், திரைப்படமாக எடுக்கிறார்கள். இந்நிலையில் கல்கியால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கல்கி நிறுவனம் அதை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும்..? என் மனதில் விழுந்த இந்தச் சிந்தனை இன்று இப்படிப் பிரம்மாண்ட வடிவம் கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறது.” என்றார் திருமதி லக்ஷ்மி நடராஜன்.

திருமதி லக்ஷ்மி நடராஜன் உரை…

சொன்னது நேற்று (03.08.2022) நுங்கம்பாக்கத்தில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில். ‘பராக்! பராக்! கல்கியின் பொன்னியின் செல்வன்- வந்தியத்தேவன் பாதையில் ஓர் பயண அனுபவம்’ என்ற தலைப்பில், வந்தியத்தேவனின் புரவிப் பயணம் தொடங்கிய வீரநாராயணபுரம் (வீராணம்) தொடங்கி, அவரது புரவிப் பாதையிலேயே பழையாறை, தஞ்சை வழி பயணித்து கடம்பூர், திருக்கோயிலூர் என விரிந்து கடல் மல்லையில் நிறைவடையும் ஓர் சிறப்பான, பிரமிக்கத்தக்க பயண அனுபவத்தை வாசகர்களுக்கு அளிக்க உள்ளனர் கல்கி குழுமம்.

இந்தப் பயணத்தை வழங்கி, வழிநடத்தியிருப்பவர் பிரபல சரித்திர எழுத்தாளர் ‘காலச்சக்கரம்’ நரசிம்மா. சரித்திரம் சார்ந்த தகவல்களுடன், தெரியாத பல தகவல்களையும், புதிதாகக் கண்டறிந்த சரித்திர ஆய்வுத் தகவல்களையும் வாசகர்களுக்கு விவரித்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார். அந்தப் பயணம் 50க்கும் மேற்பட்ட இடங்களில், 30 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடத்தப்படடு, 15 வீடியோ தொகுப்புகளாக யூட்யூபில் வெளியிடப்பட இருக்கிறது. (கட்டணம் இல்லை, அனைவரும் பார்க்கலாம் என்பது ஹைலைட்).

டீசர் காணொளிகளை கல்கியின் பெயர்த்தி திருமதி.சீதா ரவி வெளியிட்டார்…

காலச்சக்கரம் நரசிம்மா தன் பேச்சில் சில முக்கிய விஷயங்களைக் குறிப்பிட்டார்.

• பேராசிரியர் கல்கி 1950ல் எழுதிய புதினம் இன்றளவும் கொண்டாடப்படுவதற்குக் காரணம் என்ன..? பலப்பல ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த நம் மக்கள் சுதந்திரம் பெற்றபின் பெருமையாகச் சொல்லிக் கொள்ள வீரவரலாறுகள் எதுவும் அப்போது இல்லை. 1950ல் கல்கி ‘பொன்னியின் செல்வன்’ மூலம் நம் முன்னோரின் பெருமைகளை உணர்ந்து பெருமிதம் கொள்ளச் செய்கிற கதை எழுதினார். காதல், வீரம், தியாகம், துரோகம், நகைச்சுவை… என்ன இல்லை ‘பொன்னியின் செல்வ’னில்..? இனிவரும் தலைமுறைகளும் கொண்டாடும் ஒரு புதினம் ‘பொன்னியின் செல்வன்’.

• வந்தியத்தேவன் பயணித்த பாதையில் இப்போது நாங்கள் பயணித்தபோது, ஏஸி காரில் பயணித்திருந்தாலுமே பயணக் களைப்பு அசத்தியது. அன்று இந்தக் கதைக்காகக் குறிப்பெடுக்க கல்கி இத்தனை இடங்களுக்கும் பயணித்திருக்கிறார். இத்தனை வசதிகள் இல்லாத காலத்தில் மாட்டு வண்டியில்கூடப் பயணித்திருக்கிறார் என்றால் என்னவென்று சொல்ல..? அத்தனை பாடுகளின்பின்தான் இன்று நமக்கு ‘பொன்னியின் செல்வன்’.

• வெளிநாடுகளில் சரித்திரக் கதை எழுத வேண்டுமென்றால், அந்தந்த நினைவிடங்களில் தேவையான குறிப்புகளும், படங்களும் தந்துவிடுவார்கள். கோடியக்கரையில் கல்கி குறிப்பிடும் கலங்கரை விளக்கத்தை நேரில் சென்று பார்த்தபோது அது ஒரு சிறிய பாறைத் திட்டாக இருந்தது. ஒரு காலத்தில் பிரம்மாண்ட கப்பல்களுக்கு வழிகாட்டிய கலங்கரை விளக்கம்! நாம் சரித்திர ஆவணங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.

நரசிம்மா அழைத்துச் செல்லும் இந்தப் பயணத்தின் நான்கு விதமான டீஸர்கள் வெளியிடப்பட்டன சந்திப்பில். Busiupadvt நிறுவனத்தைச் சேர்ந்த ராஜ்கமல் மற்றும் அவரது குழுவினர் திரைப்படப் படப்பிடிப்பினைப் போன்ற பிரம்மாண்டத்தையும் துல்லியத்தையும் காட்டி பயணத்தைச் சிறைப்பிடித்துத் தந்துள்ளனர். ட்ரோன் காமிரா மூலமாக எடுக்கப்பட்ட காட்சிகள் பிரமிக்க வைப்பதாக அமைந்திருந்தன. காணொளியில் விவரிக்கப்படும் இடங்களையும் சம்பவங்களையும் ‘பொன்னியின் செல்வன்’தொடருக்கு பத்மவாசன் வரைந்த வண்ண ஓவியங்களைக் காண்பித்து தொகுத்து வழங்கிய ஐடியா மிகச் சிறப்பானது. பயணத்திற்குச் சுவை கூட்டுகிற விஷயம் அது.

வந்தியத்தேவனின் வரலாற்றுப் பாதை பயணக் குழு….

இனி, பயணம் பற்றிய தகவல்கள்…..

• இந்த நான்கு மணி நேர பிரம்மாண்ட தயாரிப்பான 15 வீடியோ தொகுப்பின் வெளியீட்டு விழா செப்டம்பர் 24, 2022, சனிக்கிழமை அன்று நடைபெறும். அதன் பிறகு காணொளிகள் கல்கி ஆன்லைன் யூடியூப் சேனல் வழியாக தொடர்ந்து வெளியிடப்படும்.

• Parry Travels நிறுவனத்தார் ஏற்பாட்டில் இந்த வந்தியத்தேவன் வழிப் பயணமானது ஒன்பது நாள், ஆறு நாள், மூன்று நாள் என்று பலவிதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

• இந்தப் பயணத்திற்கான முன்பதிவுகள் தொடங்கி விட்டன. செப்டம்பர் 10ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொண்டால், பயணக் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி பெறலாம் நீங்கள்.

• புக்கிங் செய்வதற்கும், மேலும் விரிவான விவரங்களுக்கும் நீங்கள் www.kalkionline.comஎன்ற இணையதளத்தை அணுகலாம். அல்லது 73059 15554 எண்ணிலும் அழைத்தும் ஐயமின்றி அறிந்து கொள்ளலாம்.

சரித்திரம், இலக்கியம் இரண்டையும் நுகர்ந்தபடி ஓர் இனிமையான பயண அனுபவத்துக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்தானே… உங்கள் இனிய பயணத்திற்கு எங்கள் ‘மின்கைத்தடி’யின் வாழ்த்துகள்.

ganesh

1 Comment

  • மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்
    பயணம் சிறக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...