இயற்கை எழில் கொஞ்சும் ஆலப்புழா படகு வீட்டின் அனுபவங்கள்
நாங்கள் கடந்த டிசம்பர் மாதம் கேரளா சுற்றுலா சென்றோம். அதில் ஒரு பகுதி யாக ஆலப்புழா படகு வீட்டில் ஒரு நாள் தங்கினோம். நான் எர்ணாகுளம் வரை புகைவண்டியில் சென்று அங்கிருந்து காரில் சென்றோம். 55 கி.மீ. கார் வாடகை ரூ 2000. காலை 9 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பி 10.30 மணிக்குப் படகுத் துறைக்குச் சென்றடைந்தோம். நம் வாழ்நாளில் பார்க்கவேண்டிய மிகச் சிறந்த அழகான இடங்களில் இந்தியாவின் வெனிஸ் என்றழைக்கப்படும் ஆலப்புழாவும் ஒன்று.
இங்கு ஒரு அறை 2 அறைகள் கொண்ட தனிப் படகுகள் முதல் 8 அறைகள் முதல் 20 அறைகள் வரை உள்ள பெரிய படகுகள் வரை பலவித படகுகள் உள்ளது. கட்ட ணம் நீங்கள் போகும் காலத்தைப் பொறுத்து மாறுபடும். விடுமுறை காலங்களில் அதிகமாகவும் சாதாரண நாட்களில் குறைவாகவும் இருக்கும்.
நாங்கள் முன்பதிவு செய்திருந்த படகு கீழ் தளத்தில் இரட்டைப் படுக்கை வசதி கொண்ட 6 அறைகள் மற்றும் மேல்தளத்தில் 4 அறைகள் கொண்டது. தனியாக உணவு அரங்கம் மற்றும் படகின் முன் பக்கம், முதல் தளதிலும் நின்று பார்க்கும் வசதியும் இருந்தது. அனைத்து அறைகளிலும் இணைந்த குளியல், கழிப்பறை கொண்டது.
நாங்கள் முன் பதிவு செய்தது குளிர் சாதன வசதிகொண்ட இரட்டைப் படுக்கை அறை. மூன்று வேளை உணவு உட்பட ரூ.10,000. அன்றைய நாளில் தனிப் படகில் செல்ல ரூ 22,000 வசூலித்தார்கள். பகல் 12 மணிக்கு படகு கிளம்பியது. ஒரு மணிக்குத் தரமான மதிய உணவு வழங்கப்பட்டது. தட்டு சேவை அதாவது buffet system.
படகு தொடந்து சென்றுகொண்டு இருந்தது. இரு புறமும் அழகான இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்தோம். மாலை 5 மணிக்கு ஒரு கிராமத்தில் படகை நிறுத்தினார்கள். இதற்கு முன் அனைவருக்கும் தேநீர், பஜ்ஜி வழங்கினார்கள். அங்கிருந்து சிறு கட்டுமரம் போன்ற படகில் ஒரு மணி நேர சுற்றுலா உள்ளது. அதற்கான கட்டணம் ஒரு ஆளுக்கு ரூ.1000. சாதாரண நாட்களில் மிகவும் குறை வாம்.
அந்தப் படகு குட்ட நாட்டின் உட்புற கிராமங்களுக்குள் செல்லும் சிறு கால்வாய் கள் வழியே செல்கிறது. இரு புறமும் வயல் வெளிகள், மரங்கள், சிறு சிறு வீடுகள், கிராமக் கோவில்களைக் கண்டோம். அந்தப் பகுதிக்குச் செல்ல ஒரே போக்குவரத்து வசதி. இந்தப் படகுகள் மட்டும்தானாம். நான் பார்த்த பெரும் பாலான வீடுகளின் வாசல்களில் ஒரு சிறு படகு இருந்தது. மீண்டும் பெரிய படகுக்கு வந்து சேர்ந்தோம். ஆனால் சிலர் வராததால் படகு கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்றார் ஓட்டுநர். எனவே நானும் இன்னும் சிலரும் நடந்து உள்ளே உள்ள கிராமத்துக்குச் சென்றோம்.
அங்குள்ள ஒரு கிராமக் கோவிலில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. செண்டை மேளம், புலி ஆட்டம் பார்த்து ரசித்தோம். எனக்கு மலையாளம் ஓரளவு பேசத் தெரியும் என்பதால் அங்குள்ளவர்களிடம் உரையாடினேன். பிறகு படகுக்கு வந்தோம். கிளம்பிய சிறிது நேரத்தில் படகை ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். அங்குள்ள சிறு கடையில் மீன், நண்டு கிடைக்கும் என்றும், வாங்கிக் கொடுத்தால் தனியாகச் சமைத்து தரப்படும் என்று படகின் சமையல்காரர் கூறினார். இறங்கி சென்று பார்த்தபோது மீன் இருந்தது. ஆனால் பழைய மீன். விலையும் அதிகம். ஒருவர் மட்டுமே வாங்கினார்.
படகு மீண்டும் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு ஒரு இடத்தில் கரையோரம் நிறுத்தினார்கள். அங்கிருந்து மின்சார இணைப்பு பெற்று A.C. இயங்கத் தொடங் கியது. பகலில் மின்னாக்கி (Electric Generator) மூலம் விளக்குகள் மற்றும் மினி விசிறி மட்டுமே இயங்கும். இரவு 9 மணிக்குத் தரமான இரவு உணவு வழங்க பட்டது. எல்லா உணவுகளிலும் சைவம் மற்றும் அசைவம் இரண்டும் உண்டு.
இரவு உணவு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு பாடகர் karaoke (karaoke என்ற சொல் ஒரு ஜப்பானிய சொல்லாம்) இசை மூலம் பாடல்களைப் பாடினார். அந்தப் படகில் எனது குடும்பம் மட்டுமே தமிழ்க் குடும்பம். மீதி அனைவரும் வட நாட்டில் இருந்து வந்தவர்கள். எனவே இரண்டு தமிழ்ப் பாட்டு மட்டுமே பாடினார்.
இரவு 10.30 மணிக்கு எங்களது அறைக்கு வந்தோம். நான் அறையின் சாளரம் வழியே இரவு காட்சிகளை ரசித்தேன். மூன்று புறமும் தண்ணீர், ஒரு புறம் கரை நிசப்தம். இரவு பூச்சிகளின் சப்தம் மட்டுமே. அந்த இரவு வேளையில் பல பேர் சிறிய பரிசலில் வந்து மீன் பிடிக்க வலை விரித்துகொண்டு இருந்தார்கள். காலை 7 மணிவரை அங்கு மீன் பிடிக்க அனுமதி உண்டாம். எனவே இரவில் எந்தப் படகும் செல்வதில்லை. இரவு 12 மணிக்கு உறங்கச் சென்றேன்.
காலை 5.30 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்துக் குளித்துவிட்டு 6 மணிக்கு படகை விட்டு வெளியே வந்தேன். அது ஒரு பெரிய Resortடின் பின் பகுதி. கரையோரம் நடந்தபோது இரவில் வலை விரித்தவர்கள் வலையை மடக்கி மீனை வெளியில் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். நடைப்பயிற்சி முடித்து மீண் டும் படகுக்கு வந்தேன். 7 மணிக்கு படகு மீண்டும் கிளம்பியது. இப்போது நேற்று சென்ற திசையில் அல்ல எதிர் திசையில் சென்றது.
இப்பொழுது ஆலப்புழா நகரத்தின் கரையோரப் பகுதியில் உள்ள கட்டடங்களைக் கண்டோம். தொலைதூரத்தில் கடல் தெரிந்தது. 8 மணிக்கு காலை உணவு தேநீருடன் வழங்கினார்கள். அன்று எங்களுடன் வந்த ஒரு தம்பதிக்குத் திருமண நாள். அவர்கள் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து அவர்களின் திருமண நாளைக் கொண்டாடினர். நாங்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னோம். படகின் பாடகர் அவர்களுக்காக ஒரு சில ஹிந்திப் பாடல்களைப் பாடினார். அவர் பாடகர் மட்டுமல்ல, படகின் சமையல்காரரும் அவர்தான்.
9.30 மணிக்கு படகு மீண்டும் கிளம்பிய இடத்துக்கே வந்து சேர்ந்தது. எங்கள் படகு பயணமும் முடிவுக்கு வந்தது. ஒரு அனுபவத்திற்காக நான் திரும்பி வரும்போது படகுத் துறையிலிருந்து Auto Rickshawவில் ரூ.100 கொடுத்து பேருந்து நிலையம் வந்து பேருந்தில் எர்ணாகுளம் வந்து சேர்ந்தோம்.
இந்தப் படகுப் பயணத்திற்கு எனக்கு செலவான தொகை (3 பேருக்கு )
பெரிய படகு -10,000
சிறிய படகு -3,000
டிப்ஸ் -1000 மொத்தம் ௹ 14,000 ( போக்கு வரத்துச் செலவுகள் தனி )
ஒவ்வொரு வருடமும் நடக்கும் புகழ் பெற்ற நேரு கோப்பை படகு போட்டி இங்குதான் நடை பெறுகிறது.
அங்கு பல படகு வகையான படகு சுற்றுலாக்கள் உண்டு. பகல் மட்டும், இரவு பகல், சில மணிநேரங்கள், இதற்கு ஏற்றாற்போல் கட்டணங்கள் மாறுபடும்.