சிவகங்கையின் வீரமங்கை | 13 | ஜெயஸ்ரீ அனந்த்

“பார்த்தால் தெரியாது, பழகினால் தெரியும்.” என்ற சிகப்பி, சலீம் மாலிக்கை கண்களால் எச்சரித்தாள்.

புரிந்து கொண்ட மாலிக்கும் தனது பேச்சை மாற்றி புத்தி பேதலித்தவன் போல் பிதற்றினான்.

“ஐம்பது குதிரை… ஐம்பது குதிரை .. ம்ஹா…. ரெண்டு வெள்ளிக் காசு… நீ வெள்ளிக் காசு பார்த்து இருக்கியா? என்கிட்ட நிறைய வெள்ளிக் காசு இருக்கு. அது எல்லாம் பானையில போட்டு கிணற்றுக்குள் போட்டு விட்டேன். ஹஹஹா… நீயும் உன் வெள்ளிக் காசுகளை கிணற்றுக்குள் போடு. எல்லாம் பத்திரமாக இருக்கும். ” என்று மாலிக் பேசவும்,

“பார்த்தாயா… இக்கோட்டிக்காரனை… இவனுடனா உனது வியாபாரத்தைச் செய்ய விரும்புகிறாய்? அது சரி…. இனம் இனத்தோடு அல்லவா சேரும்..? சரி, நீங்கள் வியாபாரத்தை முடித்து வாருங்கள். நான் சென்று வருகிறேன்” என்ற குயிலி அங்கிருந்து புறப்பட்டவளை “சற்று நில்லுங்கள். நானும் வருகிறேன்” என்று அவளை பின்தொடர்ந்து சென்றான் சுமன் .

இவர்கள் இருவரும் செல்லும் வரை காத்திருந்த சிகப்பி, சலீமிடம் “நல்ல ஆளைப் பார்த்திரே உமது வியாபாரத்திற்கு… வந்தவர்கள் யாரென்று தெரியுமா? இளவரசியின் உடன்பிறவாத் தங்கை குயிலி. அவளிடம் நட்புக் கொண்டால் உங்கள் விவரம் அனைத்தும் இளவரசியின் செவிக்குச் சென்று விடும். அதன் பிறகு உங்களால் ஒரு அடி நிலம்கூடச் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. கொண்டு வந்த குதிரையிலேயே நீங்கள் அரபு நாட்டுக்குச் செல்ல வேண்டியது தான்.”

“ஓ…. நல்ல காரியம் செய்தீர்கள். ஏன்… இளவரசி அப்படி பட்ட வஞ்சகம் நிறைந்தவரா..?”

“இல்லை. மிகவும் புத்திசாலி…. சற்று யோசனை செய்து பாருங்கள் உங்கள் தேசத்திற்கு அன்னியர் ஒருவர் வந்து நீங்கள் வசிக்கும் இருப்பிடம் கேட்டால் விட்டு தருவீர்களா..?”

“மன்னிக்க வேண்டும். எங்கள் தேசம் வறண்ட பூமி. ஆனால் உங்கள் தேசத்திலோ இயற்கையும் உங்களுடன் நட்புறவு கொண்டு செல்வ வளங்களை வாரி வழங்குகிறது. இதை விட்டுத்தானா உங்கள் மக்கள் எங்கள் தேசம் வரப்போகிறார்கள். நடவாத ஒன்று. அப்படியே வந்தார்கள் என்றால்…. ம்…. யோசிக்க வேண்டிய ஒன்று தான்.”

“சரி.. அது போகட்டும். நீங்கள் எனக்கு ஒரு காரியம் செய்தால் கைமாறாக உங்கள் மக்களுக்கான காணி நிலத்தை என்னால் பெற்றுத்தர முடியும் நான் சொல்லும் காரியத்தை நிறைவேற்றி தருவீர்களா..?”

“தாராளமாக…. என்ன காரியம் என்பதை மட்டும் சொல்லுங்கள்.”

“ஒரு கொலை….” என்றவளை அதிர்ந்து பார்த்தான்.

குயிலியைத் தொடர்ந்து வந்த சுமன் ஆழ்ந்த யோசனையில் இருப்பதைப் பார்த்த குயிலி, “என்ன தீவிர யோசனை..? அந்த அரேபியனிடம் குதிரை வாங்கவில்லை என்ற ஏக்கமா..?”

“அதில்லை… குயிலி, நம் நாட்டில் அன்னிய நாட்டவரின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். இது கொஞ்சம் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.”

“எதை வைத்துச் சொல்கிறீர்கள்..?”

“இதோ, இந்த கோட்டிக்காரனை வைத்து தான். நீ ஒன்று கவனித்தாயா..? அந்த அரேபியன் உண்மையில் கோட்டிக்காரன் அல்ல. அவர்கள் நம்மிடம் ஏதோ நாடகம் ஆடுகின்றனர்.”

“ஆமாம்…. நீங்கள் சொன்னதிலிருந்து எனக்கும் அந்த சந்தேகம் எழுகிறது.”

“நான் கணித்தவரையில் கூடிய சீக்கிரம் நம் நாட்டில் ஏதோ ஒன்று நடக்கப் போவதாக உணர்கிறேன். உண்மையில் நமக்குப் பகைவர்கள் சேரரோ, சோழரோ இல்லை. இந்த டச்சுகாரர்களும் ஆங்கிலேயரும்தான். அவன் சொன்னதைக் கவனித்தாயா? கிணற்றில் வெள்ளிக் காசுகளைப் போட்டதாகக் கூறினான் அல்லவா? அதில் ஏதோ மர்மம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.”

“ஆமாம். நீங்கள் கூறுவதும் சரிதான். அரசரும் இதை கருத்தில் கொண்டு தான் ராஜசிம்ம மங்கள ஏரியின் 48 மடைகளையும் அடைத்து மதகுகள் முழுதும் நீர் நிரப்ப நமக்கு அவசர உத்தரவு பிறப்பித்தாரோ..?”

“என்ன… அரசரின் உத்தரவா..? …ஓ… அதனால் தான் நாம் ராஜசிம்ம மங்களம் சென்று கொண்டிருக்கிறோமா..?”

“ஆம்…. அங்கிருக்கும் அணையின் மதகுகளிலிருந்து சீறிப் பாயும் தண்ணீரால்தான் நம் விவசாயம் வளம் கொழித்து சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதைத் தெரிந்து கொண்ட எதிரிகள் இந்த மதகைத்தான் கைப்பற்ற நினைக்கிறார்கள்.” என்றவள் நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்தாள். மேற்கே தோன்றிய பூரண சந்திரன் மெல்ல மேலே ஏறிக் கொண்டிருந்தான். ஆங்காங்கே ஒவ்வொன்றாக நட்சத்திரங்களும் மினுக்மினுக் என்று மின்னிக் கொண்டிருந்தன.

“இரவு தொடங்கி விட்டது. நாம் இங்கு ஏதேனும் சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்து காலையில் கிளம்பலாம்” என்றவள் குதிரையுடன் அருகில் இருந்த ஜெகன்நாதப் பெருமாள் ஆலயத்தை நோக்கிச் சென்றாள்.

ப்ரான்மலை நோக்கி பல்லக்கு நகர்ந்து கொண்டிருக்க, அருகில் இளவரசர் பல்லக்கை ஒட்டினாற் போல் குதிரையில் வந்து கொண்டிருந்தார். இவர்கள் வரும் செய்தி அறிந்த மக்கள் இருபுறமும் சூழ்ந்து கொண்டு வெற்றிவேல் வீரவேல்.. கோஷமும் வாழ்க கோஷமும் போட்டுக் கொண்டிருந்தனர். இளவரசி இவர்களுக்கு முன்னதாகச் சென்று இவர்கள் வரும் செய்தியை அத்தை அகிலாண்டேஸ்வரியிடமும் தெரிவிக்கச் சென்றாள்.

மலை சூழ்ந்து ரம்மியமாக இயற்கை எழிலோடு காட்சியளித்த எம்பிரான்மலை (பிரான்மலை) க்கு நடுவில் சிவஸ்தலம் ஒன்று ஓங்கி உலகளந்து ஊருக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருந்தது. கோவிலின் முன்புறம் அமைந்துள்ள மது புஷ்கரணியில் சிவ பக்தர்கள் சிலர் நீராடிவிட்டு தேவாரம், திருவாசகத்தை மனனம் செய்து கொண்டிருந்தனர். சிவனோட்டம் போல் வடக்கிலிருந்து பாதயாத்திரையாக வந்த அடியார்கள் சிவனைத் தரிசித்து விட்டு வெளிப் பிரகாரங்களில் ஓய்வெடுத்து கொண்டிருந்ததும் தெரிந்தது. (தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் இது 5 வது தலம்).

இவற்றை ரசித்தபடி குதிரையில் வந்த நாச்சியார், கோவிலை ஒட்டினாற் போல் அமைந்துள்ள குன்றின் அடிவாரத்தில் கீற்றுகளினால் வேயப்பட்ட குடில் ஒன்றினுள் சென்றவள், “அத்தை….” என்று குரல் கொடுத்தாள்..

நாச்சியாரை கண்ட அன்னையின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. “கண்ணே எத்தன நாட்கள் ஆகி விட்டது உன்னை சந்தித்து. எப்படி இருக்கிறாய் குழந்தாய்.? “என்ற அகிலாண்டேஸ்வரியின் வாஞ்சையான விசாரிப்பு நாச்சியாரின் கண்களில் நீர் ததும்ப செய்தது. “அத்தை…” என்று கட்டிக் கொண்டவள், அகிலாண்டேஸ்வரியை நிமிர்ந்து பார்த்தாள்.

நெற்றியில் திருநீறு கமகமக்க, கழுத்தில் உத்திராட்ச மாலையும், படிய வாரிய தலையில் கொண்டையும் காவி உடையையும் தரித்திருந்தாள். கண்களில் தெரிந்த தெய்வீகத் தன்மை, தான் சக்கரவர்த்தியின் மனைவி என்ற அகம்பாவம் இல்லாத அருளாக ஜொலித்தது. முகத்தில் எப்பொழுதும் அமைதியும் சாந்தமும் குடிகொண்டிருந்தது.

“அத்தை… அத்தை…. என்றவள் உதடு ஆனந்தத்தில் அடுத்த வார்த்தையை உதிர்க்க அநேக நேரம் எடுத்துக் கொண்டது. “அத்தை… உங்களின் முகத்தைப் பார்த்ததும் என் மனதிலுள்ள கவலைகள் யாவும் காற்றோடு காற்றாகக் கலந்து விட்டதைப் போல உணர்கிறேன். நாட்கள் செல்ல செல்ல உங்கள் முகம் முன்பைவிட அழகாகவும் அமைதியாகவும் மாறிக் கொண்டு வருகிறது. அதிருக்கட்டும், நான் வந்த விடயம் என்ன என்பதை சொன்னால் நீங்கள் ஆனந்தம் கொள்வீர்கள்”

“அப்படியா ? அது என்னவென்று விரைவாக கூறிவிடேன்.”

“உங்களையும் பாட்டியையும் தரிசிக்க அத்தானும் பெரியப்பாவும் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரும் வரை காத்திராமல் உங்களைப் பார்க்கும் ஆவலில் நான் ஓடோடி வந்து விட்டேன். அதுசரி… பாட்டி எப்படி இருக்கிறாள்?”

“அதோ, கட்டிலில் கண்ணயந்து கொண்டிருக்கிறாள். தள்ளாமை ஆனதால் அவர்களால் நீண்ட நேரம் அமர்ந்திருக்க இயலவில்லை. வாம்மா, பாட்டியைக் கண்டு வரலாம்” என்று இளவரசியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அன்னைக்கு அன்னையான உத்திரகோசமங்கையிடம் அழைத்து சென்றார் ராணியான அகிலாண்டேஸ்வரி.

பாட்டியைப் பாத்த மாத்திரத்தில் மகிழ்ச்சி பொங்க அவரின் கால்களைத் தொட்டு வணங்கினாள் இளவரசி.

கால் ஸ்பரிசம் கண்டு சற்றுக் கண் விழித்து பார்த்த அன்னை, எதிரே நிற்பது யாரென்று தெரிந்து கொண்டாள். முகம் தானாக மலர்ந்தது. கைகளைத் தூக்கி ஆசிர்வதித்தாள். கண்களின் தேடுதலை புரிந்து கொண்ட இளவரசி, “பெரியப்பாவும் அத்தானும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

“உன் அப்பா செளக்கியமா..?” என்று தன் பேரனைக் கண்களாலேயே விசாரித்தாள் மங்கை.

“ம்…. அப்பா மிகவும் நலம். அம்மாவும் நலமாக இருக்கிறார்.” என்றாள்.

சில மணி நேரங்கள் அத்தையும் மருமகளும் உரையாடிக் கொண்டே விருந்திற்கு தேவையானவற்றை செய்து கொண்டிருக்கையில், தூரத்தில் சிவிகை வரும் செய்தி எட்டியது.

படை வீரர்கள் முன் கோஷமிட சிவிகையை ஒட்டி வலது புறம் சிவக்கொழுந்தும் சிவிகையின் இடதுபுறம் இளவரசர் முத்துவடுகநாதரும் காவல்வர, சிவிகை குடில் வந்து சேர்ந்தது.

–தொடரும்…

One thought on “சிவகங்கையின் வீரமங்கை | 13 | ஜெயஸ்ரீ அனந்த்

  1. இயல்பான நடையில் இனிமையான தொடர்! வாழ்த்துகள்!

Leave a Reply to எஸ்.சுரேஷ்பாபு Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!