கால், அரை, முக்கால், முழுசு! | 9 | காலச்சக்கரம் நரசிம்மா

 கால், அரை, முக்கால், முழுசு! | 9 | காலச்சக்கரம் நரசிம்மா

9. அசுரர்களுக்கு வீழ்ச்சி

டிரினிட்டி இந்தியா டிவியின் கான்ஃரன்ஸ் ரூம் !

தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடித்திருந்த நிலையில், அந்த ஏசி ரூம் குளிரை தாண்டி அனல் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டிருந்தனர், டார்க் டெமன்சும், கங்கணா மற்றும், சஞ்சனாவும்.

இன்னும் பிரதீப் நஞ்சுண்டன் தனது இருக்கையில் வந்து அமரவில்லை. ஆனால் ஏற்கனவே அங்கே குழுமியிருந்த ஆறு பேர்களின் அனல் பார்வை, அந்த அறையில் வெப்பத்தை அதிகரித்து, ஓர் இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்தது.

”பாய்ஸ்..! வீ ஆர் வின்னிங்..! கார்த்திக்..! சர்வே முடிவுகளை பற்றி நீ பிரசெண்டேஷன் கொடுக்கிறதுல, அந்த எல்லாம் தெரிஞ்ச பிரம்மாவுக்கு பாட்டி கங்கணா பிரமிச்சு போயிடணும். குறுக்கா ஏதாவது கேள்வி கேட்டாள்னா பதற்றம் அடையாதே. உன் தன்னம்பிக்கையைக் கெடுக்கறதுக்காகவே அதுங்க ரெண்டும், கேள்விகளை கொடுக்கும். Funk ஆகிடாதே..!” –ஆதர்ஷ், கார்த்திக்கிடம் எச்சரிக்கை செய்தான்.

”நிச்சயம் ஆட்சி மாற்றம் உண்டு போல இருக்கே..!” — சஞ்சனா தான் பொதுவாக கூறினாள்.

”ஆமாம்..! உங்க ரெண்டு பேரோட ஆட்சி மாறி, டார்க் டெமன்ஸ் ஆட்சி டிரினிட்டி டிவியில் ஏற்படப் போகுது..!” –சற்று உரக்கவே தினேஷ் முணுமுணுக்க, ஏதோ சொல்ல வந்த சஞ்சனாவின் கையை அமுக்கினாள், கங்கணா..!

சரியாக பிரதீப் நஞ்சுண்டன் உள்ளே நுழைந்தான்.

”ஹாய் friends..! so.. survey results ரெடியா..! கார்த்திக்..! நான் ரொம்ப ஆவலா இருக்கேன்… டெக்னீகலிட்டிஸ் உள்ளே போகாம, முதல்ல யார் ஆட்சியைப் பிடிக்கிறாங்கன்னு சொல்லு..! அப்புறம் பிரசென்ட்டேஷனைத் தொடங்கு..!” –பிரதீப் உத்தரவிட்டான்.

கார்த்திக் எழுந்து கங்கணாவை வெறித்துப் பார்த்துவிட்டு, பிரதீப்பை நோக்கிப் பேச ஆரம்பித்தான்.

”மிஸ்டர் பிரதீப்..! தமிழக மக்கள் ஒரு பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ண போறாங்க. ஆளுங்கட்சி ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியை பிடிச்சு, பத்து வருஷமா ஆண்டுக்கிட்டு இருக்கு. நாங்க செய்த சர்வே முடிவுகளின்படி, இந்த முறை ஆளுங்கட்சி ஹாட்ரிக் அடிக்கப் போகுது. அதாவது… ஆளுங்கட்சி மூன்றாவது முறையா, 130 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்க போவுது. இதுதான் பைனல் சர்வே ரிசல்ட்.” –கார்த்திக் முடித்திருக்கக் கூடமாட்டான்…

”நோ வே..!” –காட்டமான குரலில் கூறினாள், கங்கணா..!

”மிஸ்டர் பிரதீப்..! அவங்க ஒரு பக்கம் சர்வே செய்ய, நான் swing தொகுதியான பர்கூர்ல ரகசிய சர்வே செய்தேன். இதுவரைக்கும் ஒரு தடவை தவிர, எல்லா தடவையும், பர்கூர்ல ஜெயிக்கிற கட்சிதான் ஆட்சியை பிடிக்கும். நான் செய்த சர்வேயில், எதிர்க்கட்சி வேட்பாளர்தான், பெரிய வாக்கு வித்யாசத்துல ஜெயிக்கப் போறார். அதும்படி பார்த்தால், பத்து வருடங்களுக்கு அப்புறமா, எதிர்க்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கப் போகுது.” –கங்கனா கூற, டார்க் டெமோன்ஸ் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

ஆதர்ஷ் எழுந்தான். ”மிஸ்டர் பிரதீப்..! ஆளுங்கட்சிக்கு எதிரா எந்தப் புகார்களும் இல்லை. மக்களிடையே ஆளுங்கட்சி மீது வெறுப்பும் இல்லை. அதனால, கார்த்திக் சொன்னபடி ஆளுங்கட்சிதான் ஜெயிக்கப் போகுது. தெருவில நடந்து போகறப்ப, ‘பரவாயில்லை பா இந்த ஆட்சின்னு’ மக்கள் பேசிக்கிறாங்க.” — ஆதர்ஷ் சொன்னான்.

”இல்லை மிஸ்டர் பிரதீப்..! அண்டர் கரெண்ட் ஒண்ணு வேலை செய்யுது..! எதிர்கட்சிதான் ஆட்சியை அமைக்குது..!” –கங்கணா கூறினாள்.

கார்த்திக் எரிச்சலுடன் தன இருக்கையில் உட்கார்ந்துவிட்டு, ”மிஸ்டர் பிரதீப்..! எனது presentation-னை கொடுக்கட்டுமா, வேண்டாமா.!?” — கார்த்திக் காட்டத்துடன் கேட்க, பிரதீப் கங்கணாவைப் பார்த்தான்.

”மிஸ் கங்கணா..! கார்த்திக் பேசி முடிக்கட்டும்..! அப்புறம் உங்க கருத்தைச் சொல்லுங்க..!” –பிரதீப் கூற, கங்கணா அமைதியானாள்.

”எப்படியும் சொதப்பப் போகுதுங்க..! நீ கவலைப்படாதே கங்கணா.! வெற்றி நமக்கே..!” –சஞ்சனா சொல்ல, ரேயான் அவளை எரிச்சலுடன் பார்த்தான்.!

கார்த்திக் வெற்றிப் புன்னகையுடன் தான் சேகரித்திருந்த சர்வே தகவல்களை மாவட்ட ரீதியாக விளக்கினான்.

”ஆக, ஆளும்கட்சிக்கு 120 இடங்களும், எதிர்கட்சிக்கு 65 இடங்களும், கிடைக்கும். மீதி தொகுதிகள் ரெண்டு சைட்ல இருக்கிற கூட்டணி காட்சிகள் பங்கிட்டுக்கும்.” என்றவுடன், பிரதீப் யோசித்தான்.

”மிஸ் கங்கணா..! கார்த்திக் presentation-ல முழு தன்னம்பிக்கையை பார்க்கிறேன். அவர் கூறியது, லாஜிக்காவும் சரியா இருக்கு. மக்களுக்கு ஆளுங்கட்சி மேல அதிருப்தி இல்லைனு சொல்லும்போது, எதற்காக இன்னொரு கட்சிக்கு வாக்கு அளிக்கப் போறாங்க..? மாற்றம் வேணுமின்னா, எதிர்க்கட்சியைக் கொண்டு வரலாம். ஆனால் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை, 52 சதவீதம் திருப்தி தெரிவிச்சு இருக்காங்க. எனக்கென்னவோ, கார்த்திக் சொல்றதுதான் நடக்கும்னு தோணுது.”

”இல்லை மிஸ்டர் பிரதீப்..! நீங்க வேணுமின்னா பாருங்க..! மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிட்டாங்க..!” –கங்கணா உறுதியுடன் சொன்னாள்.

”அப்ப ஒண்ணு செய்யலாம்..! சர்வே முடிவுகளை செஞ்சுட்டு, swing தொகுதி முடிவு இப்படி இருக்கு. அதனால எதிர்க்கட்சி ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு இருக்குன்னு சொல்லலாமா..?” — பிரதீப் கேட்டான்.

ஆதர்ஷ் கோபத்துடன் எழுந்தான்.

”நம்ம viewers சிரிப்பாங்க..! ஒண்ணு இவங்க ஜெயிப்பாங்கனு சொல்லுங்க. இல்லை, அவங்க ஜெயிப்பாங்கனு சொல்லுங்க. ரெண்டு பெரும் ஜெயிப்பாங்கன்னு சொன்னா, அது என்ன சர்வே..?” –ஆதர்ஷ் கேட்டான்.

“எஸ் மிஸ்டர் பிரதீப்..! இவ்வளவு சிரமப்பட்டு நாங்க சர்வே செஞ்சிருக்க, ஏசி ரூம் உட்கார்ந்துகிட்டு, பர்கரை கடிச்சுக்கிட்டு, பர்கூர்ல ஜெயிக்கிறவங்கதான் ஆட்சி அமைப்பாங்கனு சொன்னா, இது என்ன கிளி ஜோசியமா, இல்லை ஷா பூ த்ரீ விளையாட்டா..?” –கார்த்திக் கேட்டான்.

கங்கணா எழுந்தாள்.

”மிஸ்டர் பிரதீப்..! நான் கள நிலவரத்தைத்தான் சொன்னே. என்னோட ரகசிய சர்வேயை நீங்க டிவியில வெளியிடணும்னு சொல்லலை. But I have my certainty.! நான் சொல்றதுதான் நடக்க போகுதுன்னு உள்ளுணர்வு சொல்லுது…” –கங்கணா சொல்ல, நண்பர்கள் வெற்றிக்களிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

”தேர்தல் முடிவு வரும் அன்னைக்கு கங்கணாவுக்கு கல்தா..!” –ரேயான் நண்பர்கள் காதில் கிசுகிசுத்தான்.

கார்த்திக்கின் சர்வே முடிவுகளை அன்று இரவு ஒன்பது மணிக்கு பிளாஷ் செய்யும்படி கட்டளையிட்டான், பிரதீப் நஞ்சுண்டன்.

லைலா மஜ்னு குடியிருப்பில் டார்க் டெமன்ஸ் உறுப்பினர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். தேர்தல் முடிவுகளைக் காண வேண்டும் என்பதற்காக, அவர்கள் வைத்திருந்த செல்போன் அலாரம் ஒலிக்க மறுத்திருந்தது. கார்த்திக் தனது செல்லை சார்ஜ் செய்ய மறுத்திருந்ததால், செல் உயிரிழந்திருந்தது.

நால்வரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, திடீரென்று குடியிருப்பின் அழைப்பு மணி ஒலிக்க, நான்கு பேரும் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர்.

ஆதர்ஷ்தான் ஓடி சென்று கதவை திறந்தான்.

கையில் கிண்ணம் நிறைய பாதம் ஹல்வாவுடன், வலது கையில் ஸ்பூன் ஒன்றுடன், சாட்சாத் அன்னபூரணி தேவி ஆண்வடிவம் எடுத்து வந்து நின்றது போல, நின்றிருந்தார், ஹவுஸ் ஓனர், வாத்ஸாயன மாத்ருபூதம், என்கிற பூதம்.

”பாய்ஸ்..! இன்னுமா தூங்கறீங்க..? எல்லாரும் எழுந்து பல்லை விளக்கிட்டு வாங்க..! என்னோட ஸ்வீட்டி தனது கையால கிளறின பாதாம் அல்வா-வை உங்களுக்குத் தரச்சொல்லி அனுப்பியிருக்கா. கமான்….கமான். பாதாம் அல்வா …இஸ் வெயிட்டிங் ஃபார் யு…!”

”யாரு கங்கணாவா..? என்ன விஷயம்..?” –கார்த்திக் முகம் சுளித்தான்.

”என்ன விஷயமா..? டிவியில வேலை பார்க்கறீங்க… என்ன விஷயம்னு கேட்கறீங்க..? விடியல் வந்துடுச்சு..! வெற்றிநடை பின்தங்கிடுச்சே.” –என்று பூதம் சொன்னதுதான் தாமதம்…

”ஐயோ… தேர்தல் முடிவுகள்..! கார்த்திக்..! உன்னை அலாரம் வைக்கச் சொன்னேன் இல்ல..?” –ஆதர்ஷ் கத்த, கார்த்திக் தனது செல்போனை எடுத்து பார்த்தான்.

”சார்ஜ் சுத்தமா அவுட்..!”

ரேயான் அவரசரமாக சென்று டிவியை ஆன் செய்ய, சரியாக பர்கூர் தொகுதியில் எதிர்க்கட்சி அதிக வாக்கு பெற்று ஆளுங்கட்சியை முந்திக்கொண்டிருக்கிறதுஎன்று செய்தியாளர் அறிவிக்க, நான்கு பேரும் இடிந்து போய் சோபாவில் சரிந்தனர்.

”என்னடா நடக்குது..? திருத்தணி, பழனி திருச்செந்தூரை வச்சுதானே நம்ம சர்வேயை நடத்தினோம்..? எல்லாமே ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தானே காட்டிச்சு. அப்புறம் எப்படி மாறிச்சு..?” –கார்த்திக் புலம்பினான்.

”ஆட்சியை யார் வேணும்ன்னாலும் பிடிச்சு தொலைக்கட்டும். இப்ப ஆபிஸ்ல அந்த கங்கணா கொடி இல்லே பறக்கும்..?” –ஆதர்ஷ் கலக்கத்துடன் டிவியை பார்த்தான். அவனுடைய ஆணாதிக்க மனப்பான்மையால் இந்த திடீர்த் திருப்பத்தை ஜீரணிக்க இயலவில்லை.

”கமான்..! என் அருமைக் காதலி, கங்கணா கிண்டிய பாதம் அல்வா வேண்டுமா வேண்டாமா..?” –பூதம் கேட்டது.

”கெட் lost யு… ஜொள்ளு பூதம்..! அந்த சொர்ணாக்கா கங்கணா கிண்டிய கண்றாவி பாதாம் அல்வாவை நீயே கிழக்குப் பார்த்து உட்கார்ந்து கொட்டிக்கோ..” –தினேஷ் அலறினான்.

”ஹவ் டேர்..! என்னை ஜொள்ளுனு சொன்னதைக்கூட பொறுத்துப்பேன். என்னோட கங்கானாவை சொர்ணக்கானு சொன்னீங்க பாருங்க..! அதை மன்னிக்க முடியாது. எல்லோரும் இப்பவே இந்த இடத்தை காலி செய்யுங்க..!” –பூதம் உறுமியது.

ஆதர்ஷ் அவரச அலட்சியமாகப் பார்த்தான்.

”மிஸ்டர் பூதம்..! எங்களுக்கும், கங்கணாவுக்கும் தொடக்கத்தில் இருந்தே ஒத்துக்கலை..! தேர்தல்ல நாங்க ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும்னு சொன்னோம். கங்கணா எதிர்கட்சிகதான் ஜெயிக்கும்னு சொன்னா..! இப்ப அவள் சொல்றபடி நடந்துடுச்சு. இனிமே அவள் கொடிதான் ஆபிஸ்ல பறக்கும். சோ… எப்படியும் நாங்க எங்க வேலையை ராஜினாமா செஞ்சுட்டு இங்கிருந்து காலி செஞ்சு, அவங்கவங்க ஊருக்கு புறப்படப் போறோம்..!” –ஆதர்ஷ் சொன்னான்.

சட்டென்று ரேயானுக்கு ஓர் யோசனை..!

”மிஸ்டர் பூதம்..! கங்கணா கொடி டிரினிட்டி டிவில பறக்கறது மட்டும் இல்லே. கங்கணாவை பார்த்து ஏற்கனவே எங்க சிஈஓ மயங்கிட்டாரு. இப்ப அவர் சேர்மன் ஆகிட்டு, கங்கணாவை சிஈஓ ஆகிடுவாரு ! அப்புறம், உங்க காதல் அம்போதான்..! உங்களுக்கும் பாதாம் அல்வாதான்.”

பூதம் திடுக்கிட்டார்.

”கதை அப்படி போகுதா..? இதுவரைக்கும் நான் யாரையும் இவ்வளவு தீவிரமாக் காதலிச்சது கிடையாது. கங்கணா என் கண்ணுல படணும்னுதான் இவ்வளவு நாளா எனக்கு கல்யாணம் ஆகலை போல இருக்கு. எப்போ என்னோட குடியிருப்புல அவள் காலடி எடுத்து வச்சுட்டாளோ, இனிமே அவள் எனக்கு உரியவள். சாரி பாய்ஸ்..! எதோ கோபத்துல உங்களை காலி செய்ய சொன்னேன். நீங்க இங்கேயே இருங்க. நமக்குள்ள ஓர் ஒப்பந்தத்துக்கு வருவோம்..” -பூதம் உரிமையுடன் ஆதர்ஷ் பக்கத்தில் அமர்ந்தார்.

”என்ன ஒப்பந்தம்..?” –ஆதர்ஷ் திகைத்தான்.

”உங்க ஆபீஸ்ல உங்களுக்கு எதிரியாக இருக்கிற கங்கணாவை வேலையை விட்டு விரட்ட நான் உதவி செய்யறேன். அவள் வேலையை விட்டு வீட்டுல இருந்தாதான் அவள் எனக்கு கிடைப்பாள். இல்லைனா அந்த சிஈஓ அவளைக் கொத்திகிட்டு போயிடுவான். அதனால, ஆஃபீஸ்ல இருந்து அவளை விரட்ட நான் எல்லா உதவியும் செய்யறேன். பதிலுக்கு நீங்க, அவள் மீது நான் கொண்டிருக்கும் காவியக் காதலை வெற்றி பெறச் செய்யணும்..! டீலுக்குத் தயாரா..?” –கட்டை விரலைக் காட்டினார் பூதம்.

”அவளை எப்படி ஆபிஸ்லேர்ந்து விரட்டுவீங்க..?” –ரேயான் கேட்டான்.

”ரொம்ப சிம்பிள், பாய்ஸ்..! பெண்கள் கிட்டே எப்பவும் சவால் விட்டீங்கன்னா, இரவு பகலா எப்படியும் அந்த சவாலுல ஜெயிக்கணும்னு வேலை செய்வாங்க. ஆனால் நாம் சவால் விட்டுட்டு அதைப்பற்றி நினைக்கவே மாட்டோம். எனவே பெண்களை ஜெயிக்கணும்னா சவால் விடவே கூடாது. பெண்களோட வீக் பாய்ண்டுல அடிக்கணும்..!” –பூதம் சொல்லியது.

”அதென்ன வீக் பாய்ண்ட்..?” –தினேஷ் கேட்டான்.

”பெண்களை எப்பவுமே சீண்டினால் வேலைக்காகாது. சீந்தாம இருக்கணும்..! அவர்கள் கண்ணெதிரேயே இல்லை போல நடமாடனும். அவங்க பக்கம் திரும்பியும் பார்க்க கூடாது. அவங்க துப்பட்டவையோ, புடவை தலைப்போ நம்ம மேல உரசினா, நம்ம கற்பு பறிபோனது போல ஆட்டம் போடணும். இப்ப சொல்றேன் கேட்டுக்க..! நீங்க ஆளுக்கு ஓர் ஜோடியை தேடிக்கிட்டு, உன்னைவிட எல்லா விதத்துலயும் திறமையானவளை, உன்னைவிட அழகா, உன்னைவிட பண்பு அதிகமா, உன்னைவிட, நேசம் அதிகம் உள்ளவளா, நான் கண்டு தேர்தெடுத்துட்டேன்” –ன்னு அவள் காது பட பேசுங்க. பெண்ணுன்னா என் காதலியைப் போல உண்டானு, கங்கணா காதுபடச் சொல்லுங்க. அவளுக்கு வயிறு எரியும். ”உன்னை விட சிறப்பானவள்னு நீங்க சொல்லச் சொல்ல, பொறாமையால் வெந்து, வேலையை ராஜினாமா செஞ்சுட்டு, ஓடி வந்து என் காலடியில விழுவா..! நான் அவளை அரவணைச்சு, ஏத்துக்குவேன்..!” –பூதம் சொல்ல, நண்பர்கள் வாயில் கை வைத்து, பொங்கி வநத சிரிப்பை அடக்கி கொண்டார்கள்.

”சரி..! உங்களுக்கு அல்வா வேண்டாம்னா நானே சாப்பிட்டுக்கறேன்..! பாய்ஸ்… இனிமே நாம ஒருவருக்கொருவர் உதவிக்கிட்டு காரியங்களைச் சாதிப்போம்..!” –பூதம் சொல்லிவிட்டு அல்வாக் கிண்ணத்துடன் நழுவியது.

”என்ன தெனாவட்டு அந்த கங்கணாவுக்கு..! தனது சர்வேதான் ஜெயிச்சுதுனு சொல்ல பாதம் அல்வாவைக் கிண்டி, பூதம் கிட்டே கொடுத்து அனுப்புறா..! விடக்கூடாது அவளை..!” –ஆதர்ஷ் கோபத்துடன் சொன்னான்.

”நாம ஓர் காதலியைக் கண்டுபிடிச்சு, ‘உன்னைவிட எவ்வளவு சிறப்பானவள் பார் என் ஆள்..!’ –ன்னு சொன்னா நல்லாத்தான் இருக்கும். ஆபிஸ்ல கப்பிள்ஸ் பார்ட்டி நடக்கற அன்னைக்கு, நாம ஓர் காதலியை அழைச்சு வந்து அவளை வெறுப்பேத்தினால் நல்லாத்தானே இருக்கும்.. பரவாயில்லை.! பூதம் நல்ல ஐடியாதான் கொடுக்குது..” ரேயான் கூறினான்.

”சூப்பர்..! இப்பவே நான் ஐஸ்வர்யா ராயை விட அழகான காதலியை தேடப்போறேன்..!” –கார்த்திக் அறிவித்தான்.

”நான் என்னை பத்திரமா பார்த்துக்கொண்டு, அப்பப்ப பாக்கெட் மணியை கொடுக்கிற பணக்கார விதவையை காதலிக்கப் போறேன்..!” — தினேஷ் கூற, ரேயான் உடனே தனது எதிர்பார்ப்பை கூறினான்.

”என் அப்பாவின் கண்களில்படாத, என்னை உண்மையா நேசிக்க கூடிய, நான் சொல்றதை கேட்கப்போற பெண்ணா நான் தேடப்போறேன்..!” ரேயான் சொன்னான்.

மூவரும் அமைதியாக இருந்த ஆதர்ஷ் பக்கமாக பார்த்தார்கள்.

”நீ இன்னாப்பா செய்ய போறே, டார்க் டெமான்ஸ் தலைவா..?” ஒரே குரலில் நண்பர்கள் கேட்க, ஆதர்ஷ் யோசித்தான்.

”எனக்கு பெண்கள் மேல எந்த வித நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்படலை..! கல்யாணம் வாழ்க்கையில அவசியம் இல்லேன்னு நினைக்கிறேன். ஆனால் கங்கணா எனக்கு பெரும் சவாலாத் தெரியறா..! இதுவரைக்கும் நாம திட்டங்கள் எல்லாமே back fire ஆயிடுச்சு. இதுவரை நான் சந்தித்த பெண்கள் எல்லாமே உணர்வுபூர்வமா செயல்படறவங்க. அறிவுபூர்வமான செயல்படற முதல் பெண்ணை இப்பதானே பார்க்கிறேன். அவள் கிட்டே நான் தோத்து போறது, எனக்குஅவமானம். தொழில் ரீதியா, அவளோட மோதினால், பிரதீப்பின் ஆதரவு அவளுக்குத்தான் இருக்கும். இந்த தேர்தல் ரிசல்ட் மூலம் அதை நிரூபிச்சுட்டா. பூதம் சொல்றது போல, அவளோட ஈகோவை காயப்படுத்தணும்.

”அலுவலகத்துல career woman-ஆ இருக்கிறது பெரிசு இல்லே..! பெண்மையின் இயற்கையான குடும்பத்தை பேணுற பெண்ணா கொண்டு போய் நிறுத்தி, ‘பொண்ணுனா இவளை போல இருக்கணும்’னு சொல்லப்போறேன்.! அதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு நினைக்கறீங்க. வாடகைக்கு அப்பாம்மாவே கிடைக்கும்போது, காதலி கிடைக்க மாட்டாளா..? பார்த்துண்டே இருங்க..! அப்பாவிப் பெண் ஒருத்திய எனது காதலியா நடிக்க வச்சு கங்கணாவை வெத்துவேட்டுன்னு prove பண்றேன்..! நாலு பேரும் காதலிகளோட அவள் முன்னாடி போய், நின்னு உலகத்திலேயே அழகான, திறமையான, நெசமான, பண்புள்ள பெண் இவள்தான்… நீயெல்லாம் ஓர் பெண்ணான்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்கணும்.” –ஆதர்ஷ் சொன்னான்.

”சபாஷ்..! காதலியை தேடற சடலம்…சாரி படலத்தை ஆரம்பிப்போம்..!” –தினேஷ் சொன்னான்.

”அப்ப, ஆபிஸ் கிளம்பலாமா..? எதிரியான பெண் சிங்கத்தை அதன் கூண்டிலேயே சந்திக்கலாம்..!” –கார்த்திக் சொன்னான்.

”சிங்கத்தை அசிங்கப்படுத்த, தோழர்களே, புறப்படுவோம்..!” — ரேயான் கூவினான்.

டார்க் டெமன்ஸ் அணி அலுவலகத்தில் நுழைந்து, லிஃப்டில் ஏறியபோது, ஓர் அழகிய பெண் ஓடி வந்து லிஃப்டில் தொற்றிக் கொண்டாள்.

நான்கு வாலிபர்கள் நடுவே தான் ஒரு பெண்ணாக இருப்பதை லிஃப்டில் இருப்பதை உணர்ந்து அந்தப்பெண், தன்னையும் அறியாமல், தனது கையால் துப்பட்டாவை திருத்திக் கொள்வதற்காக கையை உயர்த்தினாள்.

அடுத்த கணம்–

நான்கு வாலிபர்களும், இவள் லிப்ட்டில் ஏறியதை பார்த்து, குனிந்து தங்கள் பாண்ட் ஜிப்பை ஒரு முறை பார்த்து, அதை திருத்தி கொண்டனர். ஒருவன் அப்படி செய்துகொண்டிருந்தால் கூட, அந்த பெண்ணிற்கு தவறாக தோன்றியிருக்காது.

நால்வரும் ஒரே மாதிரியாக செய்ததும், அந்த பெண்ணிற்கு உக்கிரம் பொங்கியது.

”Cant you behave yourselves. இப்படித்தானா ஓர் பெண் பயணிக்கச்சே insult செய்வீர்களா..?” –ஆத்திரத்துடன் கேட்டாள் .

”நீங்க துப்பட்டாவை அட்ஜஸ்ட் செய்து உடன் பயணிக்கிற ஆண்களை insult செய்யலாம். நாங்க எங்களை தற்காத்துக்கொள்ள கூடாதா..?” –ரேயான் கேட்டதும், அந்த பெண்ணின் முகம், இன்னும் சிவந்தது.

”ஓஓ… கிருமி..!” அவசரமாக கைப்பையில் இருந்து ஒரு மாஸ்க்கை எடுத்து நாசியில் பொருத்திக் கொண்டாள் அந்த பெண்.

”இன்னும் பெரிய மாஸ்கா வாங்கியிருந்தா, முகத்தையும் சேர்த்து மறைச்சிருக்கலாம். நாங்க நிம்மதியா பயணிச்சிருப்போம்..!” –தினேஷ் சொல்ல, மற்றவர்களிடம் இருந்து எகத்தாளச் சிரிப்பு எழுந்தது.

இப்படியும் இந்த காலத்தில் வாலிபர்களா..? பெண்களைப் பார்த்தால் மரியாதை கொடுக்கும் ஆண்களைத்தான் பார்த்திருக்கிறாள். அவள். மறைவில் கேலி பேசினாலும், எதிரே மதிப்பது போல நடிக்கவாவது செய்வார்கள். ஆனால் இப்படி பகிரங்கமாக பெண்களை அவமானப்படுத்தும் வாலிபர்களை முதன்முறையாக பார்க்கிறாள். அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும், –என்ற நினைப்பில் இரண்டாவது தளத்தில் இறங்கினாள், அந்தப் பெண் .

லிப்ட்டிலிருந்து இறங்கியதும், தனது முகக்கவசத்தை கழற்றி, டார்க் டெமான்ஸ்-சை நோக்கி ஓர் உதறி உதறிவிட்டு, நடந்தாள்.

பாஃப் தலை. பச்சை நிற சுரிதார். நடிகை பூமிகா மாதிரியான முகவெட்டு. கையில் சில ஃபைல்கள்..! தோளில் கைப்பை. –அவள் பெயர் தயாளினி பார்த்திபன். நேராக, கங்கணாவின் அறையை நோக்கித்தான் நடந்தாள், தயாளினி.

டார்க் டெமன்ஸ் தத்தம் இருக்கைகளை நோக்கி நடந்தனர்.

அவர்களது கண்கள் கங்கணாவின் அறைக்கதவை நோட்டம் விட்டது. உள்ளே தனது வெற்றியை கொண்டாடிக்கொண்டிருப்பாளோ..?

சஞ்சனா இவர்கள் வருவதை மோப்பம் பிடித்திருக்க வேண்டும்! ”அப்பாடி..! விடியல் வந்தாச்சு..!” –என்றபடி கங்கணா-வின் அறையை நோக்கி நடந்தாள் .

நண்பர்கள் நால்வரும், அவளைக் குரோதத்துடன் வெறித்தனர்.

–மோதல் தொடரும்…

ganesh

1 Comment

  • பேரெல்லாம் சூப்பரா வைக்கறீங்க! சுவாரஸ்யமான மோதல் ரசிக்க வைக்கிறது! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...