தமிழகம் கண்ட மாமனிதர் வைத்தியநாத அய்யர்

 தமிழகம் கண்ட மாமனிதர் வைத்தியநாத அய்யர்

ஆம் அவர் அய்யர், ஆனால் போராடியதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக‌. அவர் அன்றே வழக்கறிஞர் என்றாலும் போராட வந்தார்.  உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் கலந்து கொண்டு வெள்ளையனால் அடியும் உதையும் வெறும் தரையில் 400 மீட்டர்கள் இழுத்துச் செல்லபட்டு சித்திரவதைகள் எல்லாம் பெற்ற வர். அப்பழுக்கற்ற சுதந்திரப் போராட்ட வீரர். அவரைப் பற்றிப் பார்ப்போம்.

தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாளுக்கு எட்டு குழந்தைகள். அதில் இரண்டாவது குழந்தையாக, 1890-ம் ஆண்டு மே மாதம் 16-ம் நாள், (16-05-1890)  வைத்தியநாத ஐயர் பிறந்தார்.  மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். இவர் பின்னர் வழக்கறிஞராக மாறினார்.

திருமணத்தின்போது ஐயருக்கு வயது 18, மனைவி அகிலாண்டத்திற்கு வயது 9, சுமார் 12 ஆண்டுகள் அதாவது அகிலாண்டம் 21 வயது ஆகும்வரை, குழந்தையே பிறக்கவில்லை. அப்போதெல்லாம் வைத்தியநாத ஐயர் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்த வக்கீலாகத் திகழ்ந்தார். அவருடைய உறவினர்கள், அவருக்குக் குழந்தை இல்லாததால் அவர் மறுமணம் செய்துகொள்ள ஆசை வார்த்தை களுடன் தங்களின் பெண்களைக் கொடுக்க முன்வந்தனர். ஆனால் அவர், “திரு மணத்திற்குப் பின் ஒரு பெண்ணுக்குக் கணவன்தான் ஆதரவு. ஆண்டவனின் நியதிப்படி, என்ன குறைகள் இருந்தாலும் கணவர் அன்று பிடித்த மனைவியின் கையை இறுதிவரை கைவிடலாகாது” என்று பதிலளித்து மறுமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

ஆண்டவன் அருளால், ஐயர் தம்பதிக்கு சுந்தரராஜன், சங்கரன், சதாசிவன் என்ற மூன்று புத்திரர்களும், சுலோசனா, சாவித்திரி என்ற 2 புத்திரிகளும் பிறந்தனர்.

ஒருமுறை சிறையில் இருந்தபொழுது மூத்த மகன் இறந்தான் அவருக்கு பரோல் கிடைக்கவில்லை சிறையிலே அழுதார், மகள் திருமணத்திற்கு பரோலில் ஒரு நாள் வந்திருந்தார்.

கவனியுங்கள், சட்டம் படித்தவர். கொஞ்சம் வெள்ளையனுக்கு ஒத்துழைத்திருந் தால் ஏராளமான கைதிகளுக்கு வாதாடி சம்பாதித்திருக்கலாம், வக்கீல் எத்திராஜ் அளவு சம்பாதித்து கல்லூரி எல்லாம் கட்டி இருக்கலாம். ஆனால் மனிதர் பாரதி, வ.உ.சி வழியில் வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணித்தார்

வைத்தியநாத அய்யர் எதில் தனித்து நிற்கின்றார் என்றால் முதன்முதலில் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்தில் அனுமதிக்க வேண்டும் எனப் போராடினார் அல்லவா? அங்கு நிற்கின்றார்

ஆம் மதுரையில் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆலயத்தில் நுழைய இடைப்பட்ட காலத்தில் தடை இருந்தது. அவர்கள் நுழைந்தால் பஞ்சம் வந்துவிடும் என்ற மூட நம்பிக்கை இருந்தது.

1924லே வைக்கம் சென்ற பெரியார் கூட மதுரை பக்கம் வருவதற்கு யோசிக்கும் அளவிற்கு நிலமை சிக்கலாய் இருந்தது.

1937ல் மதுரைக்கு வந்த காந்தி அந்த ஆலயத்தில் தாழ்த்தப்பட்டோர் நுழைய முடியாது என அறிந்து, அவர்கள் நுழையாத ஆலயத்தில் நானும் நுழையமாட் டேன் என அறிவித்தார் என்றால் நிலைமையின் வீரியத்தைப் புரிந்துகொள்ளுங் கள். ஆனால் வைத்தியநாத அய்யர் துணிந்தார். அவருக்குப் பசும்பொன் தேவர் முழு ஆதரவு அளித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைய முதல்வர் ராஜாஜி மதுரை ஆலயத்தில் எல்லா சாதியும் நுழைய தடை இல்லை என அறிவித்தார்.

உத்தரவு வந்தும் நிலைமை சுமூகமாக இல்லை. கோவில் கோஷ்டி அராஜகத்தில் இறங்கியது. பின் பசும்பொன் தேவர் வந்ததும் அக்கோஷ்டி கோவிலை இட மாற்றுகின்றோம் என ஓடிவிட்டது. ஆம் தாழ்த்தபட்டோர் வந்தால் ஆலய அர்ச்சனை செய்யமாட்டோம் என சொல்லி ஓடிய கும்பல் பின் 1945ல்தான் கோவி லுக்குள் வந்தது. வைத்தியநாத அய்யர் தாழ்த்தப்பட்டவர்களுடன் கோவிலுக்குள் நுழைந்தார். மிகப்பெரும் புரட்சி அங்கு நடந்தது.

காந்தி அதனைப் பாராட்டி நாடெல்லாம் சொன்னார். தன் பத்திரிகை எங்கும் எழுதி மகிழ்ந்தார். அதன்பின் அவரும் மதுரை ஆலயத்துக்குள் நுழைந்து வழிபட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி அது. நாடே திரும்பிப் பார்த்தது மதுரை ஆலயத் தில் நடந்தது தாழ்த்தப்பட்டோருக்கான முதல் வெற்றி.

அதன் பின்னும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஹரிஜன் சேவா சங்கம் போன்ற சங்கங்களை நடத்தி அவர்களுக்காகப் பாடுபட்டார் வைத்தியநாத ஐயர்.

புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர் பெரும் பணம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தபோதும் அதைவிடுத்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் தனது குடும்பத் தையும் ஈடுபடுத்திக் கொண்டார்.

வேதாரண்யத்தில் நடந்த உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது ராஜாஜி கைதான பிறகு அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது ‘புளியமர விளாரால்’ அய்யரை ஆங்கிலேயர் தாக்கினர். வைத்திய நாத ஐயரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திர வதை செய்து உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர். இவர் கள்ளுக் கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் போன்ற விடுதலைப் போராட்டங் களில் ஈடுபட்டதால் ஆங்கிலேயரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பல தடவை சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டார்.

வைத்தியநாத ஐயர் விடுதலைப் போராட்டத்திற்கான செலவிற்காகத் தனது மனைவியின் நகைகளையும், வீட்டுப் பொருள்களையும் அடகுவைத்தும், விற் றும் பணம் அளித்தவர். நீதிமன்ற அபராதத்துக்காக ஆங்கிலேய அரசு அவரது கார் மற்றும் சட்டப் புத்தகங்களை ஜப்தி செய்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவி னால் கைத்தறித் தொழில் பெரிதும் பாதிப்படைந்தது. அத்தொழிலில் ஈடுபட் டிருந்த குடும்பங்கள் பெரிதும் வறுமையில் வாடின. அவர்களுக்கு ஐயர் தமது சுயவருமானத்தைக் கொண்டு உணவுப் பொருட்கள் வழங்கச் செய்தார்.

நோய் வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதியும் செய்து கொடுத்தார். அந்த மக்களுக்கு அவர் தம் தொழிலில் இயல்புநிலை திரும்பும் வரை தொடர்ந்து தேவைப்பட்ட உதவிகளை  அன்புடன் செய்து வந்தார்.

இவர் தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம் அம்மாளை ஈடுபடச் செய்தார். இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தார். தனது இளையமகன் சங்கர னையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவைத்தார். சங்கரனும் பல மாதங்கள் சிறையில் வாடினார்.

வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார். இதனால் அவரால் மகனின் இறுதிச் சடங்கில்கூட பங்கேற்க முடிய வில்லை. இவரது மகளின் திருமணம்கூட சிறை தண்டனை பரோல் காலத்தி லேயே நடந்து முடிந்தது.

காந்திஜி, சர்தார் பட்டேல் மற்றும் இராஜாஜி போன்ற தேசியத் தலைவர்களின் வற்புறுத்தல்களால் வைத்தியநாத ஐயர் 1946-ல் சட்டமன்ற தேர்தலில் மதுரை – மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பதவியை விரும்பாத இவர், கட்சி தனக்கு அமைச்சர் பதவி வழங்க முன்வந்தபோதும், அதை ஏற்க மறுத்து விட்டார்.

நாட்டுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்த வைத்திய நாதய்யர் 1955 பிப்ரவரி 23ம் தேதி மறைந்தார். அவர் தியாகம் என்றென்றும் வாழும். அவரை வணங்குவோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...