அஷ்ட நாகன் – 24| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 24| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

நாகங்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் அவ்வளவு விஷயங்கள் உள்ளன.நாகங்கள் மீதும், நாக வழிபாட்டின் மீதும் முழு நம்பிக்கை வைத்து நீங்கள் வழிபட்டு வந்தால் நாகர்களின் அருளும் ஆசிர்வாதமும் கிடைப்பது சத்தியம்.

நாக வழிபாடு உலகம் முழுவதும் உள்ளது.அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பாதாள லோகத்திற்கான பாதை உள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளும் நடந்த வண்ணம் உள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள மர்மமான…யாராலும் திறக்க இயலாத ரகசிய அறையை மிக அபூர்வமான அதீத சக்தி வாய்ந்த நாகங்கள் காவல் காப்பதாக கருதப்படுகிறது.

நம் தமிழகத்தில் நாகங்களால் பிரசித்த பெற்ற பல கோயில்கள் உள்ளன.குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் திருநாகேஸ்வரம் (ராகு ஸ்தலம்), கீழ் பெரும்பள்ளம் (கேது ஸ்தலம்),நாகர் கோவில் “நாக ராஜா” கோயில், திருப்பாம்புரம் ஆகியவை ஆகும்.மேற்க்கண்ட கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருவதன் மூலம் நாகர்களின் அருளாசிகளை எளிதில் பெறலாம்.ஆனால், திடமான இறைநம்பிக்கை மிக முக்கியம்.

திருநாகேஸ்வரம் கோயில் பிரசித்தி பெற்றதற்கு ஒரு செவி வழி செய்தி கூறப்படுகிறது.சுமார் 150 வருடங்களுக்கு முன்பு இக்கோயிலுக்கு ஒரு நாகம் வந்து இக்கோயிலில் ஒரு மறைவான இடத்தில் “நாக மாணிக்கம்” என்கிற விலைமதிப்பற்ற கல்லை உமிழ்ந்ததாக கூறுப்படுகிறது.இத்தொடரை எழுதும் அடியேன் என் சிறுவயதில் இக்கோயிலில் ஒரு சிறு நாக பாம்பை பார்த்துள்ளேன்.நம்பினால் நம்புங்கள்.நான் எதையும் மிகைப் படுத்தி கூறவில்லை.

திருப்பாம்புரம் என்னும் நாகர்களின் கோயிலுக்கும் ஒரு முறை சென்று வந்துள்ளேன்.இக்கோயில் சில வருடங்களுக்கு முன்பு சுமார் ஆறடி நீளமுள்ள ஒரு நாக பாம்பு இக்கோயிலின் மூலவரான லிங்க திருமேனி மீது தன் பாம்பு சட்டையை உரித்து போட்டு சில நிமிடங்கள் ஈசன் மீது படமெடுத்த நிலையில் இருந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டது.இன்றும் இத்திருக்கோயில் நீங்கள் அந்த நாக பாம்பின் நீளமான பாம்பு சட்டையை காணலாம்.

இப்போது கூறப்போவது தான் மிக முக்கியமான சங்கதி.கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோயிலுக்கு சற்று அருகில் “தேப்பெருமா நல்லூர்” என்று ஒரு சிவ ஸ்தலம் உள்ளது.இத்திருகோயிலுக்கு மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே செல்ல இயலுமாம்.இத்திருத்தலத்திலும் ஒரு அதிசியமான அபூர்வமான சில நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இக்கோயிலில் நாகர்கள் மற்றும் நாக கன்னிகள் வழிபட்டு வந்ததாக ஸ்தல புராணம் கூறுகின்றது.

இக்கோயிலில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு நல்ல பாம்பு இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக கருதப்படும் வில்வ மரத்தில் ஏறிச் சென்று அதிலிருந்து ஒரு சில வில்வ இலைகளை தன் நாவால் பறித்து,இத்திருக்கோயிலின்மூலவராக கருதப்படும் ஈசன் சன்னிதியின் அபிஷேக நீர் வெளிவரும் துவாரத்தின் வழியே உள்ளே சென்று மிகச் சரியாக ஈசன் திருமேனி மீது வில்வத்தை சாற்றி மூலவரை பூஜித்தது.இதனை இக்கோயிலில் இருந்த சில ஆன்மீக பக்தர்கள் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது.அந்த நாகமானது ஈசனுக்கு வில்வம் சாற்றி வழிபட்ட நாளில் சூரிய கிரகணமும் நிகழ்ந்தது.இதே மாதிரி இரண்டு முறை இத்திருக்கோயிலில் நடைபெற்றுள்ளது.

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே தேப்பெருமா நல்லூர் திருக்கோயிலுக்குள் அடியேடுத்து வைக்க முடியும்.இந்த தொடரை வாசிக்கும் நீங்கள் ஒரு வகையில் அதிஷ்டசாலியாக இருக்கலாம்.வாய்ப்பிருந்தால் இத்திருத்தலத்திற்கு சென்று இறைவன் இறைவியை வழிபட்டு மறுபிறவி இல்லாத மோட்ச கதி அடையலாம்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

 

ஏலக்காய் சித்தரின் குடில் !

நாக சாஸ்திர ஏடுகளும் அதனை காவல் காத்து வந்த ராஜ நாகமும் காணவில்லை என்பதை அறிந்த ஏலக்காய் பேரதிர்ச்சி அடைந்தவராக அதிலிருந்து மீளாமல் காணப்பட்டார்.அவருக்கு நந்தனும் காணவில்லை என்ற செய்தி மேலும் அவர் மனதில் பலவித பலத்த கேள்விகள் எழுப்பியது.

ஏலக்காய் சித்தரால் நந்தன் மீது சந்தேகம் படவும் முடியவில்லை அதே நேரம் சந்தேகம் படாமல் இருக்கவும் முடியவில்லை.அவர் இருதலை கொள்ளி எறும்பு போல தவித்தார்.

“சாமி ! இப்போ என்ன பண்றது? என்று முருகேசன் ஏலக்காய் சித்தரிடம் படுவேகமாக கேட்டான்.

“சாமி ! அங்க நடுகாட்டுல அரவிந்தன் காணாமல் போயிட்டாரு.இங்க நாக சாஸ்திர ஏடுகளையும் அதை இது நாள் வரை காவல் காத்துக்கிட்டு வந்த ராஜ நாகத்தையும் நந்தனையும் காணும்‌.எனக்கு ரொம்ப பயமாக இருக்கு.இப்போ நாம என்ன பண்றது?” என்று யோகினியும் தன் மனதில் உள்ள அத்தனை கேள்விகளையும் எழுப்பினாள்.

முருகேசன் மற்றும் யோகினி என இருவரின் கேள்விகளுக்கும் எந்த பதிலும் கூறாமல் ஏலக்காய் சித்தர் தன் குடிலில் இருந்த ஸ்படிக லிங்கத்தின் தன் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார்‌.

அவரின் செயல் முருகேசனுக்கும் யோகினிக்கும் அச்சம் ஊட்டுவதாக இருந்தது.

சுமார் 18 நிமிடங்கள் கழிந்த நிலையில் நாக சாஸ்திர ஏடுகளை காவல் காத்து வந்த ராஜ நாகம் வேகவேகமாக வந்து தியானத்தில் இருந்த ஏலக்காய் சித்தரின் முன் ‘ஸ்ஸ்ஸ்’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு படமெடுத்த நிலையில் காணப்பட்டது.

அந்த ராஜ நாகத்தை கண்ட யோகினிக்கும் முருகேசனுக்கும் ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் மறுபக்கம் மகிழ்ச்சியாக இருந்தது.

ராஜ நாகத்தின் வாசனை மற்றும் அதன் ‘ஸ்ஸ்ஸ்’ என்ற மூச்சு விடும் சப்தத்தைக் கேட்டு ஏலக்காய் சித்தர் கண் விழித்தார்.அவரின் கண்களில் கோபம் மிகுந்து காணப்பட்டது‌.

ராஜ நாகத்தை வரவழைக்க அதற்குரிய மந்திரத்தை ஏலக்காய் சித்தர் உச்சரிக்கவே அந்த ராஜ நாகம் ஏலக்காய் சித்தரின் குடிலுக்கு வந்துள்ளது.

“ராகினி ! என்ன நடந்தது சொல்?” என்று ஏலக்காய் சித்தர் அந்த ராஜ நாக ரூபத்தில் இருந்த இச்சாதாரி நாகத்தை பார்த்து கேட்டார்.

அவர் அப்படி கேட்கவும் நாக ரூபத்தில் இருந்த “ராகினி” என்கிற அந்த இச்சாதாரி நாகினி மானிட ரூபத்தை அடைந்தார்.

அந்த காட்சியைக் கண்ட யோகினியும் முருகேசனும் ஆச்சர்ய அதிர்ச்சி அடைந்தனர்.

இதுவரை ஒரு முறைக்கூட இச்சாதாரி நாகத்தை கற்பனையாக கருதி வந்த யோகினிக்கும், ஒரு இச்சாதாரி நாகத்தை முதன் முறையாக நேரில் பார்த்த முருகேசனுக்கும் தாங்கள் காண்பது கனவா? அல்லது நனவா? என்ற கேள்வி எழும்பியது.

“சுவாமி ! இதுநாள் வரை நாக சாஸ்திர ஏடுகளை நான் காவல் காத்து வந்தேன்.இப்போது நாக சாஸ்திர ஏடுகள் நந்தன் வசம் உள்ளது.நாக சாஸ்திர ஏடுகள் இனி எங்கு இருக்க வேண்டுமோ அங்கு செல்ல போகிறது” என்று இரத்தின சுருக்கமாக ராகினி கூறினாள்‌.

ராகினியையும் ஏலக்காய் சித்தரையும் யோகினியும் முருகேனும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எந்த கேள்வியும் எழுப்ப தோணவில்லை.

“ராகினி நீ ஏன் நந்தனிடம் நாக சாஸ்திர ஏடுகளை கொடுத்தாய்?இப்போது நந்தன் எங்கு இருக்கிறான்?” என்று ஏலக்காய் இரண்டு கேள்விகள் மட்டும் ராகினியிடம் எழுப்பினார்.

“சுவாமி ! நாகாம்சம் பொருந்தியவர்களால் தான் “அஷ்டநாக லிங்கேஸ்வரர்” என்னும் இச்சாதாரி நாகர்களின் கோயிலுக்குள் காலெடுத்து வைக்க முடியும்.நந்தன் நாகாம்சம் பொருந்தியவன்.நந்தன் நாக சாஸ்திர ஏடுகளை அஷ்டநாக லிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள மூலவர் மடியில் வைக்க சென்றுக் கொண்டிருக்கிறேன்.நாக சாஸ்திர ஏடுகளை கைப்பற்ற புல்லாங்குழல் சித்தர் முயற்சி செய்கிறார்.அவருக்கு துணையாக அவரின் மந்திர கட்டில் உள்ள அரவிந்தன் நாக சாஸ்திர ஏடுகளை நந்தனிடமிருந்து கைப்பற்ற நந்தனைத் தேடி கோரக்கர் குகை பக்கம் சென்றுக் கொண்டிருக்கிறேன்.நடப்பது எல்லாம் ஈசன் செயல் ! நான் ஒரு கருவி மட்டுமே.என்னாலும் விதியின் செயலைத் தாண்டி செயல்பட இயலாது” என்று ராகினி அனைத்தையும் அங்கிருந்த அனைவருக்கும் புரியும்படி மிகத் தெளிவாக கூறினாள்.

“ராகினி ! உன்னால் எங்களுக்கு உதவ முடியுமா?” என்று யோகினி கண்ணீரோடு ராகினியைப் பார்த்து கேட்டாள்.

“யோகினி ! நீ நாகர்களின் அருள் பெற்றவள்.நடக்கப் போவதை நம்மால் எதுவும் தடுக்க முடியாது.அரவிந்தனால் நந்தனுக்கோ அல்லது நந்தனால் அரவிந்தனுக்கோ இந்த பெளர்ணமி இரவில் பெரிய கண்டம் உள்ளது.இருவரில் ஒருவர் மட்டுமே மிஞ்சுவர் ” என்றாள் ராகினி.

யோகினி தன்னை ஒரு அனாதை போல உணர்ந்து கேவி கேவி அழுதாள்.அரவிந்தன் மற்றும் நந்தனை காப்பாற்ற வேண்டும் இல்லையெனில் தானும் இந்த கொல்லிமலை காட்டில் மடிந்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு கையில் ஒரு தீப்பந்துத்துடன் கோரக்கர் குகை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“சுவாமி ! இனி நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை.இந்த பூமியில் எனக்கிருந்த வேலை முடிந்துவிட்டது.உடனே நான் நாக லோகம் சென்றாக வேண்டும்.விடைக் கொடுங்கள்” என்று கூறிவிட்டு ராகினி ஏலக்காய் சித்திரை வணங்கி நின்றாள்.

“ராகினி ! இதுநாள் வரை என்னுடன் இருந்து நாக சாஸ்திர ஏடுகளையும் என்னையும் பாதுகாத்து வந்ததற்கு மிக்க நன்றி.நந்தனையும் அரவிந்தனையும் காப்பாற்ற வழியே இல்லையா?அவர்கள் என்னை நம்பி வந்தவர்கள்.தன்னை நம்பி வந்தவர்களை தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டியது ஒரு சித்தனின் கடமை” என்று உருக்கமாக ஏலக்காய் சித்தர் ராகினியிடம் பணிவோடு கேட்டாள்.

“சுவாமி ! அரவிந்தனையும் நந்தனையும் தேடிச் சென்றுக் கொண்டிருக்கும் யோகினியைத் தொடர்ந்து நீங்களும் செல்லுங்கள்.ஆதிசேஷன் அருளால் நடப்பது நல்லதாக இருக்கும்.கவலை வேண்டாம்.நன்றி” என்று கூறிவிட்டு மீண்டும் நாக ரூபத்திற்கு மாறிய ராகினி நாக லோகத்திற்கு செல்வதற்கான தன் பயணத்தை ஆரம்பித்தாள்.

ஏலக்காய் சித்தர் முருகேசனை தன் குடிலில் உள்ள ஸ்படிக லிங்கத்தை பாதுகாக்க சொல்லிவிட்டு தானும் ஒரு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு யோகினி சென்ற பாதையில் செல்ல ஆரம்பித்தார்.

முருகேசன் ஏலக்காய் சித்தர் உருவம் மறையும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

********************************

புல்லாங்குழல் சித்தர் அரவிந்தன் நெற்றியில் பூசிய மாரண மை நன்றாக வேலை செய்தது.அரவிந்தன் தன்னை ஒரு தேர்ந்த மாவீரன் போல கருதிக் கொண்டு கம்பீரமாக நந்தனைத் தேடி கோரக்கர் குகை உள்ள பகுதியில் தேட ஆரம்பித்தான்.

போகும் வழியெங்கும் “நந்தா ! நந்தா !” என்று குரல் எழுப்பிக் கொண்டே சென்றான்.

ஒன்றரை மணி நேர தேடலின் முடிவில் அரவிந்தன் நந்தன் நடந்து செல்வதை கண்டான்.காட்டில் வேகமாக நடந்து வந்ததில் அரவிந்தனுக்கு நன்றாக வியர்க்க ஆரம்பித்தது‌‌.அரவிந்தன் தன்னிச்சையாக அவன் நெற்றியில் இருந்த மாரண மையை தன் வலது கை மணிக்கட்டால் அழித்தான்.அடுத்த சில விநாடிகளில் அரவிந்தன் சுய நினைவுக்கு வந்தான்.

தான் எங்கிருக்கிறோம்?இவ்வளவு நேரம் என்ன செய்துக் கொண்டிருந்தோம்? என்ற எந்த விஷயமும் அவன் நினைவிற்கு வரவில்லை.ஆனால்,அவன் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரிந்த நந்தனை பார்த்து “நந்தா‌ நில்லுடா” என்று குரலெழுப்பிக் கொண்டே நந்தனை நோக்கி ஓட ஆரம்பித்தான்.ஆனால் நந்தன் பிரமை பிடித்தவன் போல நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து வெளிப்பட்ட வெளிச்சத்தை பின் தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தான்.

நந்தன் செல்லும் வழியெங்கும் ஏகப்பட்ட நாகங்கள் புடலங்காய் மாதிரி வளைந்து நெளிந்து மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்தன.ஆனால், எந்த நாகமும் நந்தனைப் பார்த்து சீற்றம் கொள்ளவில்லை.நந்நனுக்கு தன்னை சுற்றி நடப்பது எதும் தெரியவில்லை.

நாகங்களை கண்ட அரவிந்தன் கிலியில் நடுங்கினான்.இருப்பினும் மிக ஜாக்கிரதையாக நந்தனை பின் தொடர்ந்து சென்றான்.

சில நிமிடங்களில் இருவரும் “அஷ்டநாக லிங்கேஸ்வரர்” என்னும் இச்சாதாரி நாகர்களின் கோயிலை அடைந்தனர்‌.

கோயில் முழுக்க முழுக்க கருங்கல்லால் உருவாக்கப்பட்டிருந்தது.கோயிலைச் சுற்றி கோரை புற்களும்,தாழம்பூ செடிகளும் அங்கங்கே காணப்பட்டன.கோயிலைச் சுற்றி மனோ ரஞ்சித மரங்கள் பூக்களை சொறிந்துக் கொண்டிருந்தன.

நந்தன் கோயிலின் வாயிலுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தான்.அரவிந்தன். வேகவேகமாக வந்து நந்தனின் தோள்பட்டையை அழுத்தினான்‌.அப்போது நந்தனுக்கு சுய நினைவு வந்தது.

அரவிந்தனுக்கு அலைந்து திரிந்ததில் மிகுந்த கலைப்பு ஏற்பட்டிருந்தது. மூச்சிறைத்தது.

அரவிந்தனைக் கண்ட நந்தன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்‌.அரவிந்தனை ஆரத்தழுவிக் கொண்டான்.இருவரும் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.அவர்களை பெளர்ணமி நிலவு மட்டும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

“நந்தா ! இது தான் “அஷ்டநாக லிங்கேஸ்வரர்” கோயிலா? என்று அரவிந்தன் கேட்டான்‌.

“தெரியலடா அரவிந்தா.ஆனால் இது தான் அஷ்டநாக லிங்கேஸ்வரர் கோயிலாக இருக்குமுன்னு நினைக்கிறேன்.”

“நந்தா ! நான் கண்ட கனவு பலிக்க போகுதா? கனவுல நான் பார்த்த கோயில் மாதிரியே இது இருக்குடா.கனவுல பார்த்த மாதிரியே இன்னைக்கு பெளர்ணமி வேற” என்று அரவிந்தன் புலம்ப ஆரம்பித்தான்.

“டேய் ! லூசு மாதிரி பேசாதடா.நான் இருக்குற வரைக்கும் உனக்கு ஒண்ணும் ஆகாது.வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம்.செத்தாலும் ஒண்ணா சாவோம்” என்று நந்தன் அரவிந்தனிடம் கண்ணீர் மல்க கூறினான்.

இருவரும் தைரியத்தை வரவழைத்து கொண்டு “அஷ்டநாக லிங்கேஸ்வரர்” கோயிலின் நுழைவு வாயிலில் அடியெடுத்து வைத்தனர்.

அப்போது தான் அந்த விபரீதம் அரங்கேறியது.

********************************

தீவிர தேடுதலின் முடிவில் யோகினியும் திட்டத்திட்ட அஷ்டநாக லிங்கேஸ்வரர் கோயிலுக்கு அருகில் வந்துவிட்டாள்.

யோகினியை பின் தொடர்ந்து தேடி வந்துக் கொண்டிருந்த ஏலக்காய் சித்தரால் யோகினியை கண்டு பிடிக்க இயலவில்லை.

ஏலக்காய் சித்தர் சற்றும் எதிர்பாராத வகையில் புல்லாங்குழல் சித்தர் அவர் முன் வந்து நின்றார்.

“நீ என் வழியில வராத. நான் உடனே நந்தன்,அரவிந்தன் மற்றும் யோகினியை காப்பாத்தி ஆகணும்.என்னை என் வழியில விடு” என்று ஏலக்காய் சித்தர் கர்ஜித்தார்.

“நீ பெரிய சாமியாராக இருந்தா இருந்துட்டு போ எனக்கு ஒண்ணும் கவலையில்ல.எனக்கு வேண்டியதெல்லாம் நாக சாஸ்திர ஏடுகள்.அது எனக்கு கிடைச்சிட்டா போதும்.இன்னும் கொஞ்ச நேரத்துல அரவிந்தன் நாக சாஸ்திர ஏடுகளோட என்னைத் தேடி வந்துடுவான்.அதுவரை இந்த இடத்துலே பேசாமல் இரு.நாக சாஸ்திர ஏடுகள் எனக்கு கிடைச்சதும் நான் இந்தக் காட்டை விட்டே கிளம்பி போயிடுவேன்” என்று புல்லாங்குழல் சித்தர் என்ற அந்த நபர் ஏலக்காய் சித்தரை எச்சரித்தார்.

“உன் ஜம்பமெல்லாம் என்கிட்ட பலிக்காது” என்று கூறிவிட்டு ஏலக்காய் சித்தர் தன் வழியில் பயணிக்க ஆரம்பித்தார்.

மிகுந்த கோபம் அடைந்த புல்லாங்குழல் சித்தர் என்ற அந்த நபர் தன் வசமிருந்த உருட்டுக் கட்டையால் ஏலக்காய் சித்தரை அடிக்க முயன்றார்.

அப்போது அங்கு ஐந்து தலை நாகம் ஒன்று பிரசன்னமானது.

இந்த நாகம் தான் முருகேசன் முன்பு பார்த்த ஐந்து தலை நாக சித்தர்.

அந்த ஐந்து தலை நாகமானது தன் ஐந்து தலைகள் பதிய ஏலக்காய் சித்தரின் தலையில் ஆசிர்வதித்தது.அடுத்த சில நொடிகளில் ஏலக்காய் சித்தர் ஒரு அடைப்பூச்சி போல சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார்‌.

ஐந்து தலை நாகத்தை பார்த்த பயத்தில் திக்பிரமை பிடித்து புல்லாங்குழல் சித்தரும் மயக்கமடைந்து தரையில் சாய்ந்தார்‌.

அடுத்து சில நொடிகளில் ஐந்து தலை நாக ரூபத்தில் இருந்த நாக சித்தரும் தன் வழியில் பயணிக்க ஆரம்பித்தார்.

– தொடரும்…

< இருபத்தி மூன்றாம் பாகம்

கமலகண்ணன்

2 Comments

  • அதிரடி திருப்பங்களும் அமானுஷ்யங்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அருமை. வெகு சிறப்பு. அடுத்த அத்தியாத்துடன் முடிவடைகிறது என்பது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. இருப்பினும் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்று இருந்தே ஆக வேண்டும் என்பது நியதி. மேலும் முகப்பு பகுதியில் நாகம் வில்வ இலைகளால் சிவலிங்கத்தை பூஜித்த வீடியோவை வாட்ஸ்அப் பதிவில் நானும் கண்டு ரசித்திருக்கிறேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அத்தனையும் வெகு சிறப்பு . நன்றி.

    • மிக்க நன்றி நண்பரே… எல்லாம் இறைவன் அருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...