பயணங்கள் தொடர்வதில்லை | 17 | சாய்ரேணு

 பயணங்கள் தொடர்வதில்லை | 17 | சாய்ரேணு

16. காப்பிட்ட பெட்டி

“லாக்கர்ஸ்” என்றாள் ஸ்ரீஜா. “இதை நான் முதலிலேயே யோசிச்சிருக்கணும்.”

தன்யாவும் தர்ஷினியும் மௌனமாக அவள்கூட நடந்தார்கள்.

“அதுதான் மறைவானது, அதுதான் பாதுகாப்பானது, அதுதான் நீங்க தேடாதது” – தொடர்ந்தாள் ஸ்ரீஜா.

தர்மா சற்றுப் பின்னால் நடந்தான். அவன் கண்கள் பரபரவென்று அலைந்தன. எல்லோரும் டைனிங் காரில் இருக்கிறார்கள், கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும்… தன்யா கொலைகாரனை நெருங்கிவிட்டாள் என்ற செய்தி இதற்குள் அந்த நபருக்கு எட்டியிருக்கும். பொறியில் அகப்பட்ட எலி நார்மலாக நடந்துகொள்ளாது. அங்குமிங்கும் ஓடும்; தப்பிக்க சிறிய ஓட்டை இருக்கிறதா என்று பார்க்கும்; முண்டியடித்து வெளியே வர முயலும்; தடுப்பவரைக் கண்மண் தெரியாமல் கடிக்கும்.

கவனம், தர்மா!

டைனிங் கார் இருந்த முனைக்கு எதிர்முனைக்கு நடந்து சென்றார்கள். வழியில் அத்தனை கேபினுள்ளும் தர்மாவின் பார்வை அலைந்து திரும்பியது. அவைகள் காலியாய், பகையாய் அவனை முறைத்தன.

எதிர்முனையில் வழக்கமாய் இருக்கும் கழிவறைகள் பகுதி இல்லை. கதவு திறந்தால் சிறு அறை. கதவுக்கு நேர் எதிரே அடுத்த கம்பார்ட்மெண்ட்டுக்குச் செல்லும் வழி அடைக்கப்பட்டிருந்தது. அதற்கு இருபுறச் சுவர்களிலும் ஜன்னல்கள் இல்லை. அதற்குப் பதிலாக பக்கத்துக்கு நான்கு கதவுகள், ஸ்டீலில்.

லாக்கர்கள். விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாபுடன் வைத்துக் கொள்ள. கேபினுள் நுழையும்போது கொடுத்த வெல்கம் கிட்டில் அவரவர்க்கான லாக்கரின் கீ கார்டும் கொடுக்கப்பட்டது.

உடன்வந்த ஒரு அட்டெண்டர் தன் கையிலிருந்த மாஸ்டர் கீ கார்ட் மற்றும் மற்ற கார்டுகள் கொண்டு அனைத்து லாக்கர்களையும் திறந்தார்.

எல்லாம் காலி. ஒரே ஒரு லாக்கரைத் தவிர. அதில் சில நகைப்பெட்டிகள். கல்யாணத்திற்காக சுப்பாமணி கொண்டுவந்தது. அவரிடம் ஒரு செட் கொடுத்து அனுப்பியிருந்தார்கள் போலும்.

துப்பாக்கி என்ற பேச்சுக்கே இடமில்லை – எந்த லாக்கரிலும்.

ஸ்ரீஜா தளர்ந்தாள்.

“நீங்க சொன்னதைக் கேட்டுத் துப்பாக்கி லாக்கரில் கண்டிப்பா இருக்கும்னு நினைச்சுட்டேன்” என்றாள்.

“வாங்க உங்க கூப்பேல உட்கார்ந்து பேசலாம்” என்றாள் தன்யா. எல்லோரும் முதல் கூப்பேயை நோக்கிச் சென்றார்கள். ஸ்ரீஜா ஜன்னலோரத்தில் அமர்ந்தாள். அடுத்துத் தன்யா, தர்ஷினி அமர்ந்தார்கள். தர்மா காரிடாரிலேயே நின்றுகொண்டான்.

“ஸ்ரீஜா, கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இந்தக் கேஸைப் பொறுத்தவரை, இரண்டு துப்பாக்கிகள் ஸீனில் இருந்தது. ஒன்று, உங்களோட துப்பாக்கி, மற்றொன்று சுப்பாமணியோட துப்பாக்கி.

“நான் கெஸ் பண்றது, உங்க துப்பாக்கி ரிலேட்டிவ்ஸ் மீட் போது யாராலோ திருடப்பட்டிருக்கு. அதை வெச்சு சுப்பாமணியைக் கொல்ல நினைச்சிருக்காங்க, ஆனா… சுப்பாமணியுடைய துப்பாக்கி பறிக்கப்பட்டிருக்கு. அதை வெச்சுத்தான் சுப்பாமணி கொல்லப்பட்டிருக்கணும். சுப்பாமணியுடைய உடல் வெளியே வீசப்பட்ட பிறகு, அந்தத் துப்பாக்கி மறைக்கப்பட்டிருக்கு.

“உங்களுடைய துப்பாக்கியை ரிடர்ன் பண்ண நினைச்சிருக்காங்க. ஆனா, அதுக்குச் சரியான நேரம் வாய்க்கலைன்னு நினைக்கறேன். ஏன்னா, அதுக்கு உங்க கூப்பேக்கு வரணும் – நீங்களோ, உங்க செகரட்டரியோ எழுந்துகொள்ள சான்ஸ் இருக்கு. ஸோ, காலையில் செய்துக்கலாம்னு நினைச்சிருக்கலாம். அதுக்குள்ள, நீங்க எழுப்பப்பட்டு, வெளியே போயிட்டீங்க. திரும்ப வந்தா, சுப்பாமணி உடல் கண்டுபிடிக்கப்பட்டாச்சு, போலீஸ்க்கு விஷயம் போயாச்சுங்கற செய்தியோட வரீங்க! உங்களை நெருங்க முடியலை.

“இதற்கிடையில்தான் இராணி கந்தசாமி கொலையாளிக்கு சிக்னல் கொடுக்கறாங்க. அவங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெரியும்னு சொல்றாங்க! உடனே, உடனே கொலையாளி செயல்பட்டாகணும்! மறைச்சு வெச்சிருந்த துப்பாக்கி வெடிக்குது. சத்தமில்லாம இயங்கும் சைலன்ஸர் பிஸ்டல் அது.

“இதுக்கு முன்னாடி துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், கீழே கிடந்தது, எடுத்து வெச்சிருக்கேன்னு கொலையாளி சொல்லிடலாம், ஏன்னா சுப்பாமணி கொலை நடந்தது அந்தத் துப்பாக்கியால் இல்லையே! இனி அப்படிச் சொல்ல முடியாது, எனவே அதுவும் கெட்டிக்காரத்தனமா மறைக்கப்பட்டிருக்கு.”

“கதை நல்லா சொல்றீங்க, ஆனா துப்பாக்கி, ஓகே பன்மையில் சொல்லணும், துப்பாக்கிகள்… எங்கே?” என்று கேட்டாள் ஸ்ரீஜா.

“அவ்வளவுதானா கேள்வி? சுப்பாமணியோட துப்பாக்கி ஏன் அவர் கேபினிலிருந்து எடுக்கப்பட்டது, ஏன் அது வெளியே வீசப்படலை, இந்தக் கேள்வியெல்லாம் இல்லையா?” என்று சிரிப்புடன் கேட்டாள் தன்யா.

ஸ்ரீஜா உதட்டைச் சுளித்தாள். “சரி, அதுக்கும்தான் பதில் சொல்லுங்களேன்” என்றாள்.

“அந்தக் கேள்விகளுக்கு நாளைக்குப் பதில் சொல்றேன். இன்றைக்கு உங்க ஒரிஜினல் கேள்விக்குப் பதில் சொல்லிடறேன். சுப்பாமணியோட துப்பாக்கி லாக்கர்ல இருக்கு…”

“லாக்கரா? பாசஞ்சர் லாக்கர்களைத்தான் பார்த்துட்டோமே!” என்றாள் ஸ்ரீஜா வியப்பாய்.

“இந்த கோச்சில் பாசஞ்சர்கள் தவிர, அட்டெண்டர்கள் ரெண்டுபேர் பிரயாணம் பண்றாங்க, ஸ்ரீஜா” என்றாள் தன்யா அமைதியாக.

ஸ்ரீஜா தன்யாவையே பார்த்தாள்.

“பாசஞ்சர்களுக்கு லாக்கர் கோச்லயே ப்ரொவைட் பண்றது ஸ்பெஷல். அதைத் திறக்கவும் கீ கார்ட், அட்டெண்டரோட மாஸ்டர் கார்ட்னு ஏகப்பட்ட சாங்கியங்கள்.

“ஆனா கதவுக்குப் பக்கத்தில் அட்டெண்டர் உட்கார்ந்திருக்கிற சீட்டுக்குப் பின்னாலேயே அவருக்காகச் சிறிய லாக்கர் ஒண்ணு இருக்கு. சின்னதா சாவி போட்டுத் திறக்கறது… அதைத் திறக்க ஒரு க்ரெடிட் கார்ட், இல்லை ஸேஃப்டி பின் கூடப் போதும்… அதில்தான் சுப்பாமணியோட துப்பாக்கி இருக்குன்னு நான் ஊகிக்கறேன்” என்றாள் தன்யா.

இருந்தது.

*

“எக்ஸ்ப்ளெயின்” என்றாள் ஸ்ரீஜா, வியப்பாக.

“இருங்க, உங்க துப்பாக்கி எங்கே இருக்கும்னும் சொல்லிடறேன், அதையும் சரிபார்த்துடலாம்” என்றாள் தன்யா.

“வெல்? எங்கே இருக்கு?””

“எங்க கேபினில்.”

ஸ்ரீஜா, தர்மா முகங்களில் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது.

கேபின் வந்தது. தன்யா, தர்ஷினியின் பெட்டி, பைகள் அலசப்பட்டன. துப்பாக்கி இல்லை.

“என் கெஸ் தப்பு” என்றாள் தன்யா, முகம் சுருங்கி.

“இல்லை, கரெக்ட்” என்றான் தர்மா, அதிர்ச்சி நீங்காதவனாய். அவன் கையில் அவனுடைய பிரயாணப் பையிலிருந்து எடுத்த துப்பாக்கியைப் பிடித்திருந்தான். பல்லியையோ கரப்பான்பூச்சியையோ கையில் பிடித்தது போல் முகம் அருவெறுப்பைக் காட்டியது.

*

ன்யா… இங்கே யாரும் இல்லை… உ… உண்மையைச் சொல்லிடுங்க… நீ… நீங்களா… இதையெல்லாம் பண்ணினது?” தடுமாறிக் கொண்டு கேட்டாள் ஸ்ரீஜா.

“வாட் டூ யூ மீன்?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் தன்யா.

“இல்லை, நீங்க கரெக்டா துப்பாக்கி இருக்கற இடத்தைச் சொல்றீங்க… சுப்பாமணி தன் வாழ்நாளில் எத்தனையோ பேரைப் பகைச்சுக்கிட்டார், அதில் நீங்களும் ஒருத்தரா? அவரைக் கொல்ல ப்ளான் பண்ணி இந்த ட்ரிப்ல கலந்துக்கிட்டீங்களா? அப்படி ஏதாவது இருந்தா எங்கிட்ட சொல்லிடுங்க. இந்த ட்ராமாவை இங்கேயே நிறுத்திடுவோம், உங்களுக்கு நான் ஹெல்ப் பண்றேன்…”

“நான்சென்ஸ்” என்றாள் தன்யா.

அந்த ஒற்றை வார்த்தை ஸ்ரீஜாவை அறைந்திருக்கவேண்டும். பயந்தவள்போல் தன்யா, தர்ஷினியிடமிருந்து திரும்பினாள். பாவம், அவள் நேர் பார்வையில் தர்மாவா நிற்கவேண்டும்? அதுவும் கையில் துப்பாக்கியோடு?

அலறிவிட்டாள் ஸ்ரீஜா. “இவன் தான்! இவன் தான்!” என்று கூவியது மனது.

தர்மா மெதுவாக அவளை நெருங்கினான். “ப்ளீஸ், மேம். ரொம்பப் பயந்திருக்கீங்க. நீங்க மற்றவர்களோடு டைனிங் காரில் இருங்க. ராத்திரி ஆகிடுச்சு. இனி இந்தக் கேஸ் பற்றி காலையில் பேசலாம். இன்றைக்கு இவ்வளவு போதும்!” (கடைசி வாக்கியம் தன்யா, தர்ஷினியை நோக்கிச் சொல்லப்பட்டது.)

*

ஸ்ரீஜா டைனிங் காரில் ஒரு டேபிளைத் தேடி அமர்ந்தாள். அங்கே இருந்த ஷான் இப்போது அந்த டேபிளுக்கே வந்துவிட்டாள். முகம் கவலையால் நிரம்பியிருந்தது.

லவுஞ்ச் கோச்சில் இருந்த இரு குடும்பங்களுக்கும் விஷயங்கள் முழுவதும் அறிவிக்கப்பட்டு அவர்களும் டைனிங் காரில் இருந்தார்கள். இத்தனைபேர் இருந்தும் டைனிங் கார் அமைதியாக இருந்தது. யாரேனும் பேசினாலும் தணிந்த குரலிலேயே பேசினார்கள். தமிழுக்கு நடுநடுவே பிள்ளை வீட்டாரின் பெங்காலியும் மெலிதாகக் கேட்டது. எல்லோர் முகங்களும் பீதியடித்துக் கிடந்தன.

பிள்ளை வீட்டாரில் ஒரே தமிழனான பரத்குமாரின் குழந்தை சில சமயம் சிரித்து விளையாடுவதும் சில சமயம் வீறிட்டு அழுவதுமாய் இருந்தது. தங்களையறியாமல் எல்லோருடைய பார்வையும் அதன்மேல்தான் பெரும்பாலும் இருந்தது.

தன்யா, தர்மா, தர்ஷினி அவர்கள் கேபினிலேயே இருந்தார்கள். “கொஞ்ச நேரம் தூங்குங்க. நாளை மிகப் பெரிய நாள். யெஸ், டுமாரோ இஸ் அ பிக் டே” என்றான் தர்மா.

“நீ என்ன பண்ணப் போற? ராத்திரி பூரா முழிச்சுட்டுத் தேவுடு காக்கப் போறியா?” என்றாள் தர்ஷினி.

தர்மாவின் மௌனமே பதிலானது.

“எல்லாரையும் டைனிங் காரில் பேக் பண்ணிட்டோம். நாம மட்டும்தான் இருக்கோம், என்ன ஆபத்து வந்துடும்னு நினைக்கற?”

“திங்ஸ் கோ இன் த்ரீஸ்னு சொல்லுவாங்க. இரண்டு அசம்பாவிதங்கள் நடந்தா, நிச்சயம் மூன்றாவதும் நடக்குமாம்! அது மூடநம்பிக்கைன்னு நீங்க சொன்னாலும், நான் அதை நம்பறேன், ப்ளஸ் இப்போ கொலையாளி பரிதவிப்பில் இருப்பான், எதையாவது பண்ணித் தப்பிச்சுக்கப் பார்ப்பான், என்ன ஆபத்து வேணும்னாலும் வரலாம்” என்றான் தர்மா.

அவன் கூற்று சீக்கிரத்திலேயே உண்மையாகப் போகிறது என்பது அவனுக்கோ, தன்யா-தர்ஷினிக்கோ எப்படித் தெரியும்?

“தனியா ஒண்ணும் நீ காவல் காக்க வேண்டாம். ரெண்டு ரெண்டு மணிநேரமா மாற்றி மாற்றிப் பார்த்துக்கலாம்” என்றாள் தன்யா.

“தேவையில்லை, தூங்குங்க. எனக்குத் தூக்கம் வந்தா உங்களை எழுப்பறேன்” என்று சொல்லிவிட்டுத் தர்மா வெளியே சென்றான். காரிடாரில் அவன் ஷூவின் டக், டக் சப்தம் தாளத்துடன் கேட்கத் தொடங்கியது.

“நான் சொன்னா உனக்குக் கோபம் வரும், ஆனா சொல்லாம இருக்க முடியல…” என்று மெதுவாக ஆரம்பித்தாள் தர்ஷினி.

“கோ அஹெட்” என்றாள் தன்யா, சீட்டில் நன்றாகச் சாய்ந்துகொண்டு.

“நாம எத்தனையோ தனியா சாதிக்கறோம், இல்லைன்னு சொல்லலை, ஆனா ஒரு ஆணுடைய, ஐ மீன் ஒரு சகோதரனுடைய காவல்… சப்போர்ட்… அது ரொம்பச் சந்தோஷமானதுதான், இல்லை?” என்றாள் தர்ஷினி.

“தர்ஷினி! நீ இப்படி ஒரு இன்க்யூரபிள் செண்ட்டிமெண்ட்டா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை! யாரையாவது லவ் பண்றியா?” என்று வியப்புடன் கேட்டாள் தன்யா.

“நான்சென்ஸ்” என்றாள் தர்ஷினி, சிவந்த முகத்துடன், தன்யா சொன்ன அதே பாணியில். “இன்றைக்கு ஹைலைட்டே லாக்கர்தான், இல்ல?” என்றாள் பேச்சை மாற்றும் உத்தேசத்துடன்.

“ஆமா, இங்கே பாசஞ்சர் லாக்கர் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை” என்றாள் தன்யா.

“அங்கே கல்யாண நகைகள் இருக்கும்போது, அதைத்தானே சுப்பாமணி நம்மிடம் முதலில் சொல்லியிருக்கணும்? மறந்துட்டார் போலிருக்கு”

“அவர் எண்ணம் வேறு ஏதோ, தர்ஷினி. அது என்னன்னு தெரிஞ்சா உபயோகமா இருக்கும். ஆனா மனுஷன் அதுக்குள்ள கொல்லப்பட்டுட்டார்… ஹேய்! அதுக்காகக்கூட, அந்த ரகசியம் வெளியே வந்துடக் கூடாதுன்னு கூட, அவர் கொல்லப்பட்டிருக்கலாம், இல்லை?” என்றாள் தன்யா.

“சரி, அந்த ரகசியம் என்ன? சுப்பாமணியோட மனசே பெரிய லாக்கர். அதில் ஏகப்பட்ட ரகசியங்கள் இருக்கும்போலிருக்கு. இந்தப் பர்ட்டிகுலர் ரகசியத்தை எப்படித் தெரிஞ்சுக்கறது?” பேசிக்கொண்டிருந்த தர்ஷினி திடீரென்று நிறுத்தி உற்றுக் கவனித்தாள்.

“என்னாச்சு?” என்று கேட்டாள் தன்யா.

“தர்மா… அவனோட காலடிச் சத்தம் கேட்கலையே? போய்ப் பார்க்கலாமா?” என்றாள் தர்ஷினி.

“டோண்ட் பி ஸில்லி. அவன் என்ன குழந்தையா? கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்” என்று தன்யா சொன்னாலும் மனது படபடத்தது.

ஐந்து, பத்து, பதினைந்து நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன. தர்மாவின் காலடிச் சத்தம் மறுபடி கேட்கவில்லை.

–பய(ண)ம் தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...