பொற்கயல் | 4 | வில்லரசன்

 பொற்கயல் | 4 | வில்லரசன்

4. மாவலிவாணராயன்

பாண்டியர்களின் மதுரை நகரம் தான் இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தலைநகரம். சோழர்களும், சேரர்களும் பாண்டியப் பேரரசின் கீழ் அடிபணிந்து விட்டதின் விளைவுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைநகரமாக மதுரைக்கு முடி சூட்டியது.

அதுமட்டுமின்றி பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட பாண்டியர்களது மதுரை நகரமானது தமிழகத்தின் பெரும் வாணிபத் தளமாகவும் செயல்பட்ட வண்ணம் இருந்தது.

அல்லங்காடி, பகலங்காடி என இடைவிடாமல் வணிகம் நடந்து கொண்டிருப்பதால் பல நாட்டவரும் மதுரை வீதிகளில் பொருட்களை விற்பது, வாங்குவது எனக் கூட்டம் கூட்டமாகக் குவிந்து கிடந்தார்கள்.

அப்படி விறுவிறுப்புடன் செயல்படும் வணிக வீதிகளில் எல்லாம் வணிகப் பொருட்கள் சுமக்கும் தள்ளு வண்டிகள், மனிதர்கள், புரவிகள் என இடைவிடாது பயணிப்பதால் கூட்ட நெரிசலில் மக்கள் தேனீக்கள் போல் தெரிந்தனர்.

“வழிவிடுங்கள்! வழிவிடுங்கள்!” என்கிற மூட்டை சுமப்போரின் கரகரத்த குரல்களும், மக்கள் பேரம் பேசும் குரல்களும் அந்த வணிக வீதிகளில் எங்கும் எழுந்தவண்ணம் இருந்தது. இது போல் பல வணிக வீதிகளை உள்ளடக்கியிருந்தது அந்த பிரம்மாண்டமான மதுரை நகரம்.

இவ்வணிக வீதிகளை எல்லாம் ஒன்றிணைக்கும் கூடல் பகுதியானது மிகவும் பெரியது. வட்டவடிவில் இருக்கும் அந்தச் சந்திப்பில் அனைத்து அங்காடி வீதிகளும் இணைந்து தொடங்குவதால் நகரின் மிகப்பெரும் செல்வந்த வணிகர்களின் கடைகள் அக்கூடலில் எங்கும் பரவிக்கிடந்தன.

அன்று அந்தக் கூடலின் நடுப்பகுதியானது வழக்கத்திற்கு மாறாக தென்பட்டது. நடுவே அமைந்திருக்கும் ஓர் மரத்தைச் சுற்றி மக்கள் படை போல் சூழ்ந்து ஆரவாரித்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட பலரும் அங்கு கூடினார்களே தவிரக் கூட்டம் குறைந்தபாடில்லை.

திடீரென ஆரவாரம் எழுவதும் குறைவதுமாக மக்கள் கூச்சலிட, அவர்கள் மத்தியில் இரண்டு வீரர்கள் சமர் செய்துகொண்டிருந்தார்கள்.

இருவரில் ஒருவன் பாண்டியப் பேரரசின் கீழ் கட்டுப்பட்டு வாழும் சிற்றரசனான மாபெரும் வலிமை வாய்ந்த மாவலிவாணராயன். மற்றொருவன் பெருத்த உடலைக் கொண்ட அரேபிய வணிகன்.

மாவலி பெயருக்கேற்ப மிக வலிமையானவன் என்பதை நன்கு படர்ந்து விரிந்த அவனது மேனியும் நீண்டு வளர்ந்த உடலும் வெளிக்காட்டின. அந்த வலிமை அனைத்தையும் உபயோகித்து அந்த அரேபியனை விடாது தாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

மாவலிவாணராயன் ஓங்கி அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவனுடன் போரிடும் அரேபியன் பின்வாங்கத் தொடங்கினான்.

“என்னையே எதிர்க்கிறாயா? ம்ம்ம்…. எத்தனை துணிவு?” என்று வெறிபிடித்தது போல் வினவியபடியே அந்த அரேபியனைத் தனது வாள் வீச்சால் பதறவைத்த மாவலிவாணராயன், அடுத்த நொடியே அந்த அரேபியனின் உடலில் வாளைப் பாய்ச்ச, அரேபியன் குருதி கொப்பளிக்க அவன் மேல் சாய்ந்தான்.

“என்னை எதிர்த்தவர்களை உயிரோடு விடும் பழக்கம் எனக்கில்லையடா!” என அவன் காதருகே கூறியவன் அரேபியனைக் கீழே தள்ளி விட்டுவிட்டு இரு கைகளையும் உயர்த்தி மக்களை பார்க்க, அனைவரும் அவனுக்காக ஆர்ப்பரித்தார்கள். பிறகு மாவலிவாணராயன் தன் பின் இருக்கும் மரத்தின் கீழ் அடர்ந்த நிழலில் தெரிந்தும் தெரியாமலும் நின்றிருக்கும் தங்கத் தேர் ஒன்றின் முன் சென்று நின்று,

“இளையவரே! உங்கள் உயிர்த் தோழன்தான் வெற்றி பெற்றான்” எனப் பெரும் சிரிப்புடன் தெரிவித்தான்.

அந்தத் தேரினுள் பாண்டிய மன்னன் குலசேகரனின் தம்பி இளைய பாண்டியன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருளில் அமர்ந்திருந்தான். மாவலிக்கு அங்கு பாய்ந்த நிலாவெளியானது அவனருகில் மதுக் குவளையுடன் அமர்ந்திருந்த கன்னி ஒருத்தியின் கைகளை மாத்திரம் வெளிப்படுத்தியது.

இரண்டடி முன் சென்று நின்று,

“இளையவரே!” என மீண்டும் அழைத்தான் மாவலிவாணராயன.

“ஆங்… சொல் நண்பா… சமரில்…. யார்?…” என விக்கியவன் தட்டுத்தடுமாறி வார்த்தையை வெளியிட்டான். அவனது பேச்சின் சாயலானது அவன் மதுவில் நன்கு திளைத்திருக்கிறான் என்பதை வெளிக்காட்டியது.

“நான் தான் வென்றேன் அரசே!”

“ம்ம்ம்…! அருமை மாவலி!” எனப் பாராட்டியவனின் கை மட்டும் வெளிவந்தது. அதிலிருந்த வைர ஆரத்தை மாவலிவாணராயனிடம் கொடுத்தான் இளையபாண்டியன்.

அதைப் பெற்றுக் கொண்ட மாவலி பெரும் சிரிப்புடன் மக்களிடம் அதைக் காட்டி மகிழ, மக்கள் அனைவரும் பெரும் கூச்சலிட்டு அவனை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

“நண்பா… இது நன்றாக இருக்கிறது வேறு யாருடனாவது சமரிடு…” என்றான் தேரினுள் வீற்றிருந்த இளைய பாண்டியன்.

“நிச்சயமாக இளையவரே!” என்ற மாவலிவாணராயன், கூட்டத்தை நோக்கி,

“இக்கூட்டத்தில் வேறு யாரேனும் என்னுடன் சமரிட இருக்கிறீர்களா? துணிவு உள்ளவர்கள் முன்வரவும்! என்னை வென்றுவிட்டு இதோ மூட்டை நிறையப் பொற்காசுகள்! இவற்றை அள்ளிச் செல்லலாம்” எனத் தேர்ச் சக்கரத்திடம் கிடக்கும் தங்க மூட்டையைத் தன் வாளின் நுனி மூலம் சுட்டிக்காட்டியவன், அதே வாளால் அவனுடன் போரிட்டு அங்கு மடிந்து கிடக்கும் பலரைச் சுட்டிக் காட்டிவிட்டு கூட்டத்தை ஏறிட்டான்.

அப்போது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன் வந்து நின்றார்கள் பொற்கயலும், கயல்விழியும். அக்கை கயல்விழியின் கைப்பற்றி இழுத்து வந்த பொற்கயல் கூட்டத்தை முழுவதும் ஏறிட்டுவிட்டு, மாவலிவாணராயனையும் அவன் பின் மரநிழலில் கிடக்கும் தேரையும் பார்த்தவள்,

‘சற்று முன்பு தந்தைக்கு வந்த செய்தி இதுதான் போலும்’ என எண்ணினாள்.

தங்கச்சிலையெனக் கூட்டத்திலிருந்து முன் வந்து நிற்கும் பொற்கயலைக் கண்டு முறுவலித்தான் மாவலி.

தன்னை நோக்கி முறுவலித்த அவனைக் கண்டு முறைத்துவிட்டு இளைய பாண்டியனின் தேரை நோக்கி முன் நகர்ந்தவளை பிடித்து இழுத்து நிறுத்தினாள் அக்கை கயல்விழி.

“வேண்டாம் பொற்கயல்! வா சென்று விடலாம்” பதைப்பதைத்தாள் அவள்.

“நீ பேசாமல் என்னுடன் வா! நான் பார்த்துக் கொள்கிறேன்!” என அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றாள் பொற்கயல். விறுவிறுவென தேரை நோக்கிச் செல்லும் இருவரையும் குறுக்கிட்டு நிறுத்தினான் மாவலிவாணராயன். தங்கள் பாதையில் வந்து வழிமறைக்கும் அவனைத் தீப்பொறிகள் தெறிக்கும் விழிகளால் பார்த்துவிட்டு

“எதற்காக எங்களை வழி மறைக்கிறாய் மாவலிவாணராயா?” எனக் கேட்டாள் பொற்கயல்.

“நான் வழி மறிக்கவில்லை! காவல் காக்கிறேன்! இளைய பாண்டியரை இப்போது யாரும் சந்திக்க இயலாது”

“எனக்கு கட்டளையிட நீ யார் மாவலி? உன் வேலை இதுவல்ல! இளையவரை பாதுகாக்கும் அளவு கோனாட்டவர்கள் *(தற்போதைய புதுக்கோட்டை) செல்வாக்கு பாண்டிய நாட்டில் ஓங்கி விட்டதா என்ன? அதற்கு தானே தென்னவன் ஆபத்துதவிகள் இருக்கிறார்கள்!” எனக் கூட்டத்தில் ஆங்காங்கே பாதுகாப்புக்காக நின்றிருக்கும் பாண்டிய ஆபத்துதவிகளை சுட்டிக்காட்டிவிட்டு மாவலியை சற்றும் குறையாத கோபத்துடன் பார்த்தாள்.

பொற்கயல் கேட்ட கேள்வியால் அங்கிருந்த மக்கள் அனைவரும் ஏளனமாக சிரித்தார்கள். அனைவரது சிரிப்பு சத்தத்தையும் பொறுக்க முடியாத மாவலி,

“உனக்குத் திமிர் அதிகம் பொற்கயல்! உன் தந்தையின் வளர்ப்பு அல்லவா நீ? அப்படித்தான் இருப்பாய்! இறுதியாகக் கூறுகிறேன் இங்கிருந்து சென்று விடுங்கள். இளையவரைக் காண அனுமதிக்க முடியாது!”

“பொற்கயல்! வா, சென்று விடலாம்” எனக் கயல்விழி அவள் கரம் பற்றி இழுத்தாலும்,

அதைக் கேளாத பொற்கயல் அவனைப் பார்த்து “வழி கொடுக்கிறாயா இல்லையா?” எனத் தன் இடுப்பில் வைத்திருந்த குறுவாளை உருவினாள்.

“பெண் என்று பார்க்கிறேன்! எனக்கு முன் ஆயுதம் எடுத்த எவரையும் நான் மன்னித்தது இல்லை!” கடுகடுத்தான் மாவலி.

“உன்னிடம் மன்னிப்புக் கேட்பவள் அல்ல இந்த காலிங்கராயரின் புதல்வி. என்னுடன் மோதிப்பார்.”

மீண்டும் கூட்டம் சிரிக்க இம்முறை மாவலி சினம் எல்லைக் கடந்தது.

“உன்னை என்னச் செய்கிறேன் பார்!” எனப் பல் கடித்தவன், பொற்கயலின் தோளைப் பற்ற முற்பட்டான். அப்போது எங்கிருந்தோ “விர்ரென்று” பறந்து வந்த வளரி ஒன்று பொற்கயலை நோக்கி நீண்ட மாவலியின் கையைப் பதம் பார்த்து விட்டு செல்ல…

வலி பொறுக்க முடியாமல் மாவலி துடிதுடித்துப் போனான்.

பொற்கயலை நோக்கி நீண்ட தன் கையை பட்டென்று வளரி ஒன்று அடித்ததால், வலி பொறுக்க முடியாமல் கையை உதறிக்கொண்டு குதித்தான் மாவலிவாணராயன்.

வளரி வந்து சென்றதுமே அங்கு மின்னவன் இருக்கிறான் என்பதை அறிந்த பொற்கயல் தன் எதிரே துடிதுடிக்கும் மாவலியைப் பார்த்துவிட்டு கூட்டத்தை சுற்றம் ஏறிட்டாள்.

அப்போது கூட்டத்தை விலக்கிக் கொண்டு மின்னலெனத் தன் புரவியில் அங்கு வந்து கொண்டிருந்தான் படைத்தலைவன் மின்னவன்.

தன் கையைப் பதம் பார்த்தது ஓர் வளரி என்பதை அறிந்ததுமே மாவலிவாணராயனுக்கு கோபம் எழுந்தது.

அதைத் தன்னைவிட அந்தஸ்தில் சிறியவன் ஒருவன் எறிந்துள்ளான் என்பது அவனை மேலும் கோபம் மூட்டியதால் வருபவன் பாண்டிய மன்னனின் நண்பன் என்பதைக்கூட சில நொடிகள் அவன் மறந்து விட்டான்.

கூட்டத்தின் மத்தியில் இவர்களுக்கு அருகே வந்து நின்ற மின்னவன் புவியியல் இருந்து கீழே குதித்து நின்றதும்,

“மின்னவர் வாழ்க! படைத்தலைவர் வாழ்க!” என மக்கள் முழக்கமிடத் தொடங்கி சற்று நேரத்தில் அடங்கினார்கள்.

மின்னவன் தனது வேல் விழிகளை மாவலிவாணராயனை நோக்கி குத்திவிட்டு, பிறகு அவன் எதிரே நின்று கொண்டிருக்கும் பொற்கயலையும் கயல்விழியும் பார்த்தான்.

இங்கேயே இப்போதே அவனை வெட்டி வீசிவிடக் கரங்கள் துடித்தாலும் சுற்றி நிற்கும் மக்களும், மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நண்பன் அவன் என்கிற இரண்டுமே மாவலியை அமைதி காக்க வைத்தது. பிறகு பொய்ச் சிரிப்புடன்,

“வருக மின்னவா” என்றான் மாவலி.

அவனை மதிக்காத மின்னவன் பொற்கயலை நோக்கி, “பொற்கயல், நீ இங்கு என்ன செய்கிறாய்?” எனக்கேட்டான்.

“இளையவரைக் காண வந்தேன்” எனக் கயல்விழியை நோக்கி விழிகளைத் திருப்பியவள், பிறகு கீழ்நோக்கி, “இளையபாண்டியரைக் காண இவரது அனுமதி வேண்டுமாம். அதான் சிறு வாக்குவாதம் நிகழ்ந்தது” என்றாள்.

பொற்கயல் பின் நிற்கும் கயல்விழியையும் அவள் சிவந்த கன்னத்தையும் கரங்களில் ஏற்பட்டுள்ள கீறல்களையும் பார்த்ததுமே ஏதோ நிகழக் கூடாதவை நகழ்ந்திருக்கிறது என்பதையும் இளைய பாண்டியரும் கயல்விழியும் காதலர்கள் என்பதையும் அறிந்தவன், இளையபாண்டியர் கயல்விழியை காயப்படுத்தியுள்ளார், அதை தட்டிக் கேட்கவே அக்கையை இங்கு அழைத்து வந்திருக்கிறாள் பொற்கயல் என்பதையும் புரிந்து கொண்டான்.

மின்னவனுக்குத் தன் காதலியான பொற்கயலின் துணிவு பெருமிதத்தை தந்தாலும் எப்போதும் இடம் பொருள் ஏவல் என்பதை அறியாமல் எரிமலையாய் வெடித்துக் கொட்டும் அவளது முன்கோபமும் சுபாவமும் அப்போது அவனுக்கு சிறுமையையேத தந்தது. எத்தனை உணர்ச்சிகள் எழுந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை மின்னவன். அப்போது குறுக்கிட்ட மாவலிவாணராயன்,

“மின்னவா! இளையவர் சற்று.. இல்லை இல்லை… அளவிற்கு அதிகமாகவே மது அருந்தியுள்ளா.ர் அது மட்டுமின்றி அவருடன்…” எனப் பேச்சை இழுத்தான் மாவலிவாணராயன். அவன் கூறுவதைக் கேட்ட மின்னவன் மாவலியின் பின் மரநிழலில் தெரிந்தும் தெரியாமல் சிறிதாக வெளிப்படும் இளையபாண்டியனின் தங்கத் தேரைப் பார்த்துவிட்டு, பிறகு மாவலிவாணராயனைக் கண்டு “மாவலிவாணராயரே, இங்கு என்ன நடக்கிறது? ஏன் கூட்டம் கூடியுள்ளது?” என வினவினான்.

“இளையபாண்டியர் பொழுதைக் கழிக்கச் சமர்க்களம் அமைக்கச் சொன்னார்! அதற்காக தான் இதெல்லாம்” வேண்டாவெறுப்பாகச் சொன்னான் மாவலி.

“பெரும்பெரும் சரம்புச்சாலைகள் போர்க்கருவிகள் எனப் பாண்டியப் படை பயிற்சி எடுக்கும் இடத்தில் நிகழ்த்தாமல் இந்த வணிக வீதியில் ஏன்?”

“அது இளைய பாண்டியரின் விருப்பம்”

“அப்படியா..? அப்படியென்றால் பதில் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை நான் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்..” என மின்னவன் பேசிக் கொண்டிருக்கும் வேளையில்..

“மாவலி…” எனும் இளைய பாண்டியனின் குரல் எழ,

மரநிழலை நோக்கி திரும்பினார்கள் அனைவரும்.

“இதோ வருகிறேன் இளையவரே” என மாவலிவாணராயன் தன் முன் நிற்கும் மின்னவன், கயல் சகோதரிகள் ஆகிய மூவரையும் மதிக்காமல் இளையவன் தேர் நிற்கும் இடத்தை சென்றடைந்தான்.

மின்னவனின் பார்வை செல்லும் மாவலியைப் பார்த்துவிட்டு பிறகு பொற்கயலையும் அவள் கையில் பிடித்திருந்த குறுவாளையும் நோக்கித் திரும்பியது.

மின்னவனைப் பார்த்த பொற்கயல் அவனது பார்வையை புரிந்தவளாக குறுவாளை பின்னே மறைத்தாள். பிறகு மின்னவன் கயல்விழியைக் கண்டு,

“நீங்களாவது உங்கள் தங்கையிடம் கூறக் கூடாதா?” எனக் கேட்டான்

“நான் எவ்வளவோ எடுத்துரைத்தேன் மின்னவரே, இவள் கேட்கவில்லை!”

“ம்ம்ம்… உங்கள் தங்கை சொல்பேச்சு கேட்டிருந்தால் தான் வியப்பு!” எனப் பொற்கயலை முறைத்தபடி பேசினான்.

அவனைக் காண திராணி இல்லாத பொற்கயல் பார்வையைக் கீழ்நோக்கியே நிலைத்திருந்தாள்.

“பொற்கயல் எனக்காகவே இங்கு வந்து சண்டையிடுகிறாள் மின்னவரே! இளையவர் என்னிடம் நடந்துக் கொள்ள கூடாத விதத்தில் நடந்து கொண்டதால் தான் இவள் கோபமுற்றாள்! ஆனால் இந்த மாவலியும் எங்களை இளையவர் போல் அவமதிக்கிறான்! எங்கள் மேல் எவ்விதத் தவறும் இல்லை!” கூறிவிட்டு விம்மினாள் கயல்விழி.

அப்போது மாவலி அங்கு வந்து நின்றான்.

“மின்னவா, இளையபாண்டியர் இப்போது யாரையும் பார்க்க இயலாது என்று சொல்லச் சொன்னார்”

“அப்படியா? எனக்கு அவரை இப்போதே பார்க்க வேண்டுமே.. நான் என்ன செய்வது?”

“அவரை இப்போது காண வேண்டுமென்றால் சமரில் வென்று பரிசு பெற வேண்டுமாம். நீ என்னுடன் சமரிட தயாரா?” என்று வஞ்சப் பார்வையுடன் கேட்டான் மாவலி.

இது மாவலி தன்னிடம் நேரடியாக விடும் சவால் என்பதை நன்கறிந்த மின்னவன் தன் மீது வைத்திருக்கும் வெறுப்பை இந்த நேரத்தில் உபயோகித்துக் கொள்ள அவன் முயல்வதையும் நன்குணர்ந்து முறுவலித்தான்.

“நீங்கள் வயதில் மூத்த கோனாட்டு* (தற்போதைய புதுக்கோட்டை) அரசர்! நானோ சற்று வயதில் இளையவனானவன். தங்களை எதிர்த்து போரிடுவதா? ஈசனே! என்னிடம் தோற்றால் உங்களுக்கல்லவா இழுக்கு?” என மின்னவன் கேட்ட கேள்விக்கு பொற்கயல் வெடுக்கென சிரித்தாள்.

மாவலிவாணராயனுக்கு அவளது சிரிப்பு பொறுக்கவில்லை “மோதிப் பார்த்தால் தானே யார் வெல்லப் போவது எனத் தெரியும்?” என்றவனின் குரல் கொடூரமாக ஒலித்தது.

அப்போது திடீரென பின்னால் கட்டியிருந்த தன் வளரிகள் இரண்டை சரேலென்று உருவினான் மின்னவன்.

எதிர்பாராத அச்செயலால் மாவலிவாணராயன் திடுக்கிட்டு இரண்டடி பின் சென்று நின்று தன் வாளை உருவினான். அதைக் கண்ட கூட்டம் சிரித்துக் கேலி செய்ய,

“என்ன வாணராயரே? வளரிகள் வேண்டாமா? சரி!” என்று அவற்றை முதுகு உறையில் செலுத்திவிட்டு “வாணராயருக்கு பெண்களிடம் மட்டும் திடுக்கிடாமல் சமரிடத் தெரியும் போலிருக்கிறதே!” என்று அவன் சற்று முன்பு பொற்கயலிடம் நடந்துக் கொண்டதைப் பற்றி நகையாடியவன் “வேண்டுமென்றால் மல்லுக்கட்டுவோம்!” என்றான் சிறுநகையுடன்.

“ஆம்! மின்னவரே! அப்படித்தான் போலிருக்கிறது!” கூறிவிட்டு மீண்டும் சிரித்தாள் பொற்கயல்.

மாவலி வெளியெடுத்த தனது வாளை உறையில் செலுத்திவிட்டு வஞ்ச முறுவல் பூக்க மல்லுக்கட்ட தயாராக நின்றான்.

“அவன் மூக்கை உடைத்துவிட்டு வாருங்கள்!” என மின்னவன் அருகில் வந்து கூறிய பொற்கயல்; கயல்விழியுடன் அங்கிருந்து அகன்று கூட்டத்திடம் சென்று நின்றாள் .

இருவரும் சமரிடப் போவதை அறிந்த மக்கள் “மின்னவர்! மாவலியார்!” என இருவருக்கும் ஆராவாரம் செய்தனர்.

மாவலிவாணராயனுக்கு மின்னவன் மீது எப்பொழுதும் ஓர் வன்மம் இருந்துகொண்டே இருந்ததால் இன்று அவனை மக்கள் முன் வென்று தனது ஆத்திரத்தை அடக்க கிடைத்த பொன்னான வாய்ப்பாக இதை கருதினான் அவன்.

இருவரும் நெருங்கி மல்லுக்கட்டினார்கள். கீழே உருண்டு பிரண்டு ஒருவரையொருவர் மாற்றி மாற்றி தாக்கிக்கொண்டனர்.

அப்போது மரநிழலிருந்து இவர்களை நோக்கி வெளிவந்தான் இளைய பாண்டியனான மாறவர்மன் வீரபாண்டியன். பலத்த உடல்! உடலெங்கும் ஆபரணங்கள், பட்டு அங்கி, சடாமுடி எனக் காட்சியளிக்கும் அவன் முகத்தை மறைக்குமளவு பிடரியும் மீசையும் மதுவில் நனைந்து ஈரத்துடன் காட்சியளிக்க, மது போதையில் கையில் மதுக்குப்பியுடன் தள்ளாடிய வண்ணமே நடந்து வந்தான் அவன். மாறவர்மன் வீரபாண்டியனைக் கண்டதும் மின்னவனும் மாவலியும் மல்லுக்கட்டுவதை நிறுத்திவிட்டு புழுதி படிந்த அழுக்குடன் எழுந்து நிற்க, மதுக்குப்பியை பருகியபடியே இருவருக்கிடையில் வந்து நின்ற இளைய பாண்டியனான மாறவர்மன் வீரபாண்டியன் இருவரையும் ஏறிட்டான்.

இருவரும் தலை தாழ்த்தி வணங்கிவிட்டு எழுந்தார்கள். எழுந்த அவர்களிடம், “இங்கு என்ன நடக்கிறது?” எனக் கேட்டான் மாறவர்மன் வீரபாண்டியன்.

“அது.. இளவரசே! படைத்தலைவர் மின்னவரிடம் தாங்கள் கூறியதை தெரிவித்தேன்! அதை மறுத்து சமரிட வேண்டும் என அடம் பிடிக்கிறார்” என்றான் மாவலி. அவன் கூறுவதைக் கேட்டுவிட்டு, “நான் உன்னையும் அந்த பெண்களையும் கிளம்பச் சொல்லி அனுப்பினேனே! ஏன் கிளம்பவில்லை?” என மின்னவனை முறைத்து பார்த்து வினவினான் மாறவர்மன் வீரபாண்டியன்.

“இளையவரே உங்களைக் காண…” என மின்னவன் பேசும்போதே பளாரென மின்னவன் கண்ணத்தில் ஓங்கி அறைந்தான் வீரபாண்டியன்.

மது போதையில் இருந்த இளையவன் செய்த அக்காரியம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் மக்களைப் போல் பொற்கயலையும் கயல்விழியையும் அதிர்ச்சியடையச் செய்தது. பொற்கயல் விறுவிறுவென அங்கு விரைய அருகே வந்ததும் சட்டென அவள் கைப்பற்றி நிறுத்தினான் மின்னவன்.

“உனக்கு என்ன பெரும் வீரன் என நினைப்பா? ம்ம்ம்… மாவலியை வளரி கொண்டு தாக்குகிறாய்? உன் பதவிக்கேற்ப நடந்து கொள்! போரில் ஏவல் நாயாக படையை வழிநடத்தும் படைத்தலைவன் நீ எங்கே? கோனாட்டு அரசன் மாவலி எங்கே? என் அண்ணன் உனக்கு அதிக இடம் கொடுத்துவிட்டார்! அதிகப்பிரசங்கியே!” என வார்த்தைகளால் அவனை சுட்டுவிட்டான் இளையபாண்டியன். அப்போது…

“மாவலி என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார். அதனால்தான் மின்னவர் வளரி கொண்டு தடுத்தார்” வெடுக்கெனக் கூறினாள் பொற்கயல்.

“உன் அக்கைக்கு கொடுத்தது உனக்கும் வேண்டுமா?” என வீரபாண்டியன் பொற்கயலை நோக்கிக் கேட்டதும் மின்னவனுக்கு கோபம் பீறிட்டு எழ, “இளையவரே!” என்றான் மின்னவன்

“என்னிடம் நின்று பேச யார் நீ? என்ன தகுதி இருக்கிறது உனக்கு? காவல் நாயே!” என இளைய பாண்டியன் கேட்டது மின்னவனின் இதயத்தில் கணை பாய்ந்ததைப் போல் இருந்தது.

பொற்கயலுக்கோ கோபம் கடந்து கண்ணீரே வந்துவிட்டது. அதற்கு மேல் அங்கு நிற்க விரும்பாத மின்னவன், தான் கடவுளாக போற்றும் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் தமையன் என்கிற ஒரே காரணத்திற்காக மாறவர்மன் வீரபாண்டியனை ஏதும் செய்யாமல் விட்டுவிட்டு பொற்கயலின் கைப்பற்றி அங்கிருந்து கூட்டிச்சென்றான்.

கயல்விழி அவர்களைப் பின்தொடர்ந்து அழுகையுடன் செல்ல, அவளை மின்னவனின் புரவி தொடர்ந்தது.

கூட்டத்தை விளக்கிக் கொண்டு செல்லும் அவர்களைப் பார்த்தவண்ணமே “மாவலி! அவனிடம் சற்று எச்சரிக்கையாக இரு! பொல்லாதவன் அவன். எல்லாம் என் அண்ணன் கொடுக்கும் இடம்.” என்றான் இளையபாண்டியனான மாறவர்ம வீரபாண்டியன்

“ஆம் இளையவரே! உங்கள் கட்டளையை அவர் சிறிதளவும் பொருட்படுத்தவில்லை! சமரிட என்னை வலுக்கட்டாயமாக அழைத்தார்.” என, செல்லும் மின்னவனை கண்டு வஞ்சச் சிரிப்பு சிரித்தான் மாவலிவாணராயன்.

–தங்கமீன் இன்னும் நீந்தும்…

ganesh

2 Comments

  • சுவாரஸ்யம். சரம்புச் சாலைகள் -ஆயுத பயுற்சிச் சாலைகள்?

    • ஆமாம் சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...