நகராட்சித் தேர்தல் : அரசியல் கட்சிகளை விஞ்சும் சுயேட்சைகள்
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் வரலாறு காணாத கடுமையான போட்டி நிலவியது. இதில் அரசியல் கட்சிகளுக்கு நிகராக சுயேட்சை வேட்பாளர் களும் களத்தில் உள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சிக்குத் தற்போது தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பெருநகரத்திற் கான வளர்ச்சிகளை மேற்கொள்வதற்கு இநத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந் துள்ளது.
ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணி கட்சிகள் 200 இடங்களில் போட்டியிடு கின்றன. இதில் தி.மு.க. மட்டுமே 167 வார்டுகளில் போட்டியிடுகிறது. காங் கிரஸ் 16, விடுதலை சிறுத்தைகள் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, இந்திய கம்யூனிஸ்ட் 3, ம.தி.மு.க. 2, இந்தியன் யூனியன் லீக் 1 என மாநக ராட்சித் தேர்தல் களத்தில் உள்ளன.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணி 200 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதேபோல் நாம் தமிழர் கட்சி 199 இடங்களிலும், அ.ம.மு.க. 190 இடங்களிலும், தே.மு.தி.க. 141 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 177 இடங்களி லும், சமத்துவ மக்கள் கட்சி 17 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி வந்த பா.ஜ.க.வும் அனைத்து வார்டு கவுன்சிலர் பதவிகளிலும் தனித்துப் போட்டியிட்டிருக்கிறது.
200 கவுன்சிலர் பதவிகளுக்கு 2,670 பேர் போட்டிப் போடுகிறார்கள். அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டும் 1,124 பேர் போட்டியிடுகிறார்கள். ஆனால் சுயேட்சைகளோ 1,546 பேர் களத்தில் நிற்பதால் ஓட்டுகள் சிதறும் வாய்ப்பு உள்ளது.
நகர்ப்புறத் தேர்தலில் குறைந்த அளவிலான ஓட்டுகளே வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பதால் தி.மு.க. – அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
செல்வாக்கு மிக்க சுயேட்சை வேட்பாளர்களும் வரிந்துகட்டுவதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் சில இடங்களில் கலக்கம் அடைந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 61 லட்சத்து 73 ஆயிரம் வாக்காளர் கள் உள்ளனர். 5,790 வாக்குச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
ஒவ்வொரு வார்டுகளிலும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாக்காளர்கள் உள்ளனர். இதில் 60 சதவிகிதம் வாக்குகள் பதிவானாலும்கூட வெற்றி பெறும் வேட்பாளர்கள் ஆயிரம், இரண்டாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெறக்கூடிய சூழல் நிலவுகிறது.
21 மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வெற்றி பெறும் வார்டு கவுன்சிலர்கள், மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்கள் போன்ற பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால் ஆளும் கட்சியான தி.மு.க. அதிக வார்டு களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வியூகங்களை வகுத்து செயல்பட்டது. அ.தி.மு.க.வும் சளைக்காமல் வேட்பாளர்களை நிறுத்தி பிரசாரம் செய்து மக்கள் ஆதரவைக் கேட்டுள்ளது.
எனவே இன்று 19-2-2022 நடைபெற்ற தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது வருகிற 22ஆம் தேதிதான் தெரியும். இந்தத் தேர்தலில் சுயேட்சைகளும் கணிசமாக வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்கள் பொறுப்போம்.