ரிஷிவந்தியா பாஸ்கர் – நறுக்ஸ் நொறுக்ஸ் விமர்சனம் – மயிலாடுதுறை ராஜசேகர்

 ரிஷிவந்தியா பாஸ்கர் – நறுக்ஸ் நொறுக்ஸ்  விமர்சனம் – மயிலாடுதுறை ராஜசேகர்

திரு. ரிஷிவந்தியா அவர்களின் பன்முகத்திறமைகள் கொண்டவர். அவர் ஜோக்ஸ், சிறுகதைகள், பஞ்ச், கவிதைகள் என்று பல தடங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அவர் எழுதிக் குவித்துவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட “நறுக்ஸ் நொறுக்ஸ்”களால் அவருடைய பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் நண்பர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார்.

தற்சமயம், அவர் எழுதியுள்ள நறுக்ஸ் நொறுக்ஸ்களை புத்தக வடிவில் கொண்டுவந்து அச்சுத்துறையிலும் பிரபலமாகியுள்ளார். நறுக்ஸ் நொறுக்ஸ் புத்தகம் இரண்டாம் பதிப்பு வந்துள்ளதே அவரின் வெற்றிக்கு சான்று. இந்நூல் மேலும் பல பதிப்புகள் காண வேண்டும் என முதலில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூலின் முதல் பதிப்பு தமிழக எழுத்தாளர்கள் குழுமத்தின் திருவண்ணாமலை சந்திப்பில் மாண்புமிகு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு,பிச்சாண்டி அவர்களால் வெளியிடப்பட்டது,

திரு. ரிஷிவந்தியா அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நறுக்ஸ் நொறுக்ஸ்களை எழுதியிருந்தாலும், அவற்றிலிருந்து இருநூறை மட்டும் பொறுக்கியெடுத்து, பக்கத்திற்கு இரண்டுவீதம் நூறு பக்கங்களில் அழகாக டிசைன் செய்து நமக்கு வழங்கியுள்ளார். நறுக்ஸ் நொறுக்ஸ் அனைத்தும் அழகான நிழற்படங்களடன் இடம் பெற்றுள்ளன. கருத்துக்கேற்ற நிழற்படங்களா, நிழற்படங்களுக்கேற்ற கருத்துகளா என்று வியக்கவைக்கும் வகையில் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போடுகின்றன.

அழகாக அச்சிட்ட பாண்டியன்-வைகை பதிப்பகத்தையும் நாம் பாராட்டியாக வேண்டும். புத்தகத்தை கையில் எடுக்கும்போதே படிக்கத் தூண்டுகிறது அதன் முன்அட்டைப்படம். இன்ஸ்டாகிராமில் நறுக்ஸ் நொறுக்ஸுகளுடன் இடம்பெற்ற பல நிழற்படங்கள் முன் அட்டையில் வண்ணங்களில் மிளிர்கின்றன. பின் அட்டையில் திரு. ரிஷிவந்தியாவின் வண்ணப்படம். அதற்கும் கீழே அவருடைய குரு திரு கே. பாக்கியராஜ் அவர்களின் வண்ணப்படமும் அணிந்துரையின் சிறப்ப பகுதியும் நூலுக்கு கூடுதல் ஈர்ப்பைத் தருகின்றன.

ரிஷிவந்தியா இந்நூலை தன்னுடைய தாய் தந்தையருக்கு சமர்ப்பித்துள்ளார். திரைப்பட இயக்குநர் திரு. கே.பாக்கியராஜ் அவர்களுடைய அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது. தஞ்சை மண்ணின் சிறப்பு வாய்ந்த எழுத்தாளர்கள் திரு ஹரணி, திரு தஞ்சைத் தாமு, திரு.ப்ரணா, கோவை திரு நா.கி.பிரசாத், சேலம் திரு. ச. கோபிநாத், திருச்சி திரு. சிவம், தமிழக எழுத்தாளர்கள் குழுமத்தின் அட்மின் திருமயம் திரு.பெ.பாண்டியன் ஆகியோர் நூலைப் படித்து சிறப்பான அணிந்துரை மற்றும் வாழ்த்துரை எழுதியுள்ளனர்.

இந்நூலின் விலை ரூபாய்; 130/-
பக்கங்கள்; 126
வெளியீடு: பாண்டியன் – வைகை பதிப்பகம். காரைக்குடி.
நூல் பெற ; திரு. ரிஷிவந்தியா அவர்கள், தஞ்சாவூர். +919629039552

—————————————————–

இந்நூலில் இடம்பெற்றுள்ள இருநூறு கவிதைகளையும் இருநூறு கோப்பை தேநீர்கள் என்று பாராட்டியுள்ளார் திருச்சி திரு. சிவம் அவர்கள். அவற்றில் ஓரு சில கோப்பைகளை மட்டும் இங்கே ருசிக்கலாம். மற்றவைகளை புத்தகம் வாங்கி ருசித்து பருகுங்கள் தோழர்களே!

நாம் வாழத் தேவையான உயிர்க்காற்றை மரங்கள் நமக்கு வழங்குகின்றன. தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளில் உள்ள மரங்கள் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உயிர்க்காற்றில் இருபது விழுக்காட்டினை வெளியிடுகின்றன என்ற ஒரு செய்தியை அண்மையில் வாசித்தேன். ஆனால், நம் நாட்டிலோ, இருக்கின்ற மரங்களை வெட்டிக்குவிக்கின்றனர.

இந்நூலில் மரங்களின் பயன்பாடுகளை போற்றும் பல கவிதைகளை கவிஞர் படைத்துள்ளார். நாம் ஒன்றை மட்டும் பார்ப்போம்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். இது அனுபவத்தில் வந்த சொலவடை. வெயிலை அனுபவிக்காமல் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்போர்க்கு நிழலின் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேகாத வெய்யிலில் வியர்வை சொட்டச் சொட்ட பாடுபடும் தொழிலாளி, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் தரும் மரங்களை நாடிச் செல்வான். அப்போது அந்த மரம் தரும் குளிர்ந்த காற்று அவனது வியர்வையைப் போக்கும்.

ஆனால், மரமே தகித்தால், அவன் எங்கே போவான்? மரம் ஏன் தகிக்கிறது? அதற்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. மண் வறண்டு கிடக்கிறது. அதனால் அதன் வேர்கள் வியர்வையைச் சிந்துகின்றன. அந்த வேர்களின் வியர்வையை எந்த மரத்தின் காற்றும் துடைக்க முடியாது. காற்று மேலே வீசும். ஆனால், வேர்கள் மண்ணுக்குள் பரவிக்கிடக்கும். வேர்களின் வியர்வையைத் துடைக்க வேண்டுமானால், மண் குளிர வேண்டும். அதற்கு மழை வேண்டும். மழை வேண்டுமானால், மரங்களை வெட்டக்கூடாது. மரங்களை வெட்டிச் சாய்க்காதீர்கள் என்ற ஒரு செய்தியை எவ்வளவு கவிநயத்துடன் கவிஞர் சொல்லியிருக்கிறார் பாருங்கள்

“எந்த மரக்காற்றும்
துடைப்பதில்லை
வேர்களின் வியர்வையை…….”

அடுத்து நம்முடைய குடும்ப உறவுகள் எப்படியிருக்கின்றன என்பதைப் பற்றி கவிஞர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம். தடுக்கிவிழுந்தால் தனிக்குடித்தனம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, நாட்டில் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்டன. கணவன், மனைவி, ஒன்றோ,இரண்டோ பிள்ளைகள் என்று வாழ்பவர்களுக்கே இப்போதெல்லாம் வீடுகள் வாடகைக்கு சுலபமாக கிடைக்கின்றன. வீடு வேண்டும் என்றாலே எத்தனை பேரு என்ற எதிர்க் கேள்வியுடன்தான் வீட்டைப் பார்க்கவே அனுமதிக்கிறார்கள் வீட்டுச் சொந்தக்காரர்கள். அப்படியென்றால், கணவனைப் பெற்றவர்களோ, மனைவியைப் பெற்றவர்களோ தள்ளாத வயதில் எங்கே அடைக்கலமாவது? “முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவது தானே? ஏன் கூடவே வச்சிக்கிட்டு அவஸ்தைப் படுறேள்?” என்பன போன்ற அறிவுரைகள் இப்போதெல்லாம் சரளமாக வந்து விழுகின்றன.

விளைவு பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு, கல்வி வியாபாரமானது போல் முதியோர் இல்லங்களும் வியாபாரமாகிவிட்டன. தெருவுக்கு ஒன்றாய் முளைக்கத் தொடங்கிவிட்டன. முப்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் முதியோர் இல்லங்கள் என்பவை குழந்தைகள் இல்லாத, வசதியற்ற முதியவர்கள், அனாதையாய் தெருக்களில் திரிபவர்கள் சென்று சேருமிடமாக இருந்தன.

இப்போது குழந்தைகளைப் படிப்பதற்காக விடுதியில் சேர்ப்பது போல், முதியவர்களுக்கும் பணம் கட்டி சேர்த்து விடுகின்றனர். இப்படியான ஒரு கலாச்சாரத்தில் வாழும் நம் குழந்தைகள் என்ன செய்வார்கள் என்பதை இங்கே அழகாக கூறுகிறார் பாருங்கள்.

“அதிர்ந்தார் அப்பா
குழந்தைகள் விளையாடினர்
முதியோர் இல்லம்
மணலில் கட்டி……”

“ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம். இருவரும் சம்பாதித்தால்தான் குடும்பத்தை நடத்தமுடியும். முன்னேமாதிரியெல்லாம் ஆண்கள் பேப்பரை படிச்சிக்கிட்டு பொழுதைக் கடத்த முடியாது. மனைவிக்கு எல்லா வகையிலும் உதவியாய் இருக்கவேண்டும். அப்போதுதான் சோறு கிடைக்கும்” என்பவையெல்லாம் இப்போது அன்றாட நடைமுறை ஆகிவிட்டன.

நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் வீட்டுக்கு விளக்கேற்ற ஒரு மருமகள் வரவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்கள். விளக்கேற்றுவது என்பது மின்சார பல்புகளை ஒளிரவிடுவதல்ல.பூஜை அறையிலும், வாசலிலும் அன்றாடம் காமாட்சி விளக்கோ, அகல் விளக்கோ ஏற்றி வைப்பார்கள் பெண்கள். வயதான முதியவர்களால் அதனை செய்ய முடியாதபோது, மருமகள் அதனைச் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிள்ளையைப் பெற்ற தாய்க்கு வருவது இயல்பு. அப்படி அந்த மருமகள் விளக்கேற்றி வைத்தால் வீட்டுக்கே கூடுதல் பிரகாசம் கிடைக்குமாம். “நம் குடும்பத்தை இவள் நிச்சயம் கட்டிக்காப்பாள்” என்ற நம்பிக்கை பிள்ளையைப் பெற்ற தாய்க்கு உண்டாகுமாம். கவிஞர் அழகாக சொல்லுகிறார் பாருங்கள்.

“மருமகள் விளக்கேற்ற
கூடுதல் வெளிச்சம்
குடும்பத்தில்…….”

அக்காலத்தில் புலவர்களோடு உடன்பிறந்தது வறுமை என்றெல்லாம் படித்திருக்கிறோம். வறுமையில் வாடும் புலவர்கள், தம் பிள்ளைகள் பசி தீர்க்க, அரசனைப் புகழ்ந்து பாடி பரிசினைப் பெற்றுச் சென்றுள்ளனர். திருவிளையாடல் படத்தில் கூட ஒரு வசனம் வருமே “சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் “ என்று, அதுபோல இப்போதும் நம் நாட்டில் வறுமையைப் பாடாத கவிஞன் இல்லை. எழுத்தையே நம்பி வாழும் எழுத்தாளர்களும், கவிஞர்களும் இப்போதும் வறுமையில்தான் வாடுகின்றனர். வறுமையைக் குறித்து பல கவிதைகள் இத்தொகுப்பில் இருந்தாலும் இரண்டை மட்டும் நாம் பார்ப்போம்.
நம் நாடு ஏழைகள் நிறைந்த நாடு. நாடு விடுதலை பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னமும் ஏழை ஏழையாகவே இருக்கிறான். வறுமைக்கோடு என்ற ஒன்றை கிழித்துவைத்துள்ளார்கள். அவனால் அதை தாண்டவே முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகாலம் இதே நிலைமை நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஒரு சாண் வயிற்றுக்காக ஒவ்வொரு ஏழையும் எவ்வளவு கஷ்டப்படுகின்றான் என்பதை நாம் அன்றாடம் பார்க்கின்றோம்.

“ஏழைகள் வாழ்வு முன்னேற பாடுபடுவோம்” வாய் கிழிய பேசுகிறார்கள் நம் அரசியல் வாதிகள். ஆனால், நடப்பவையெல்லாம் எதிர்மறையாகவே உள்ளன. சாலை ஓரங்களில் பூ விற்கும் பெண்களை தினசரி கடந்து செல்கிறோம் அல்லது அவர்களிடம் பேரம் பேசுகிறோம். ஆனால்,சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் இயற்கை உபாதைகளை அடிவயிற்றில் சுமந்துகொண்டு அவர்கள் படும் வேதனைகளை எத்தனை பேர் நினைத்துப் பார்த்திருப்போம். இதோ கவிஞர் வேதனைப் பட்டுள்ளார் பாருங்கள்

“சாணுக்காக
முழம்….
ஏழைப் பூக்காரி”

ஏழ்மையைக் கண்டு வேதனையடையும் கவிஞரின் மற்றொரு கவிதை: ஓர் ஏழைத்தாய் கதவில்லாத ஒரு குடிசையில் வசிக்கிறாள். அவளிடம் ஒரே ஒரு சேலை தான் இருக்கிறது.அதை அவள் உடுத்தியிருக்கிறாள். இன்னொரு சேலை வாங்க அவளிடம் பணமில்லை. அந்த அளவிற்கு அவள் ஏழ்மையில் துன்புறுகிறாள். கிராமங்களில் கூலி வேலை செய்து பிழைக்கும் பெண்கள் பலர் இதுபோன்ற நிலைமைகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

வயல்களில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் பெண்கள் ஆற்றிலோ, குளத்திலோ குளிப்பார்கள். கட்டிய புடவையுடன் குளித்துவிட்டு, மேலே வந்து புடவையின் ஒரு முனையை மரக்கிளைகளிலோ, வேலிக்கால்களிலோ கட்டுவார்கள். புடவையின் மறுமுனையை உடலில் சுற்றிக்கொண்டு,புடவையின் நீளத்திற்கேற்றவாறு சிறிது தூரத்தில் நின்று, புடவையை காயவைப்பார்கள். புடவை காய்ந்ததும் மீண்டும் அதையே உடுத்திக்கொண்டு வீடு திரும்புவார்கள். ஆண்களாயிருந்தால், கோவணத்தைக் கட்டிக்கொண்டு இடுப்பு வேட்டியை காயவைத்துவிடுவார்கள்.

ஆனால், பெண்கள் மானம் காக்க வேண்டுமே! ஈரப் புடவையைத்தான் உடம்பில் சுற்றியிருப்பார்கள். அவர்களின் வெப்ப பெருமூச்சில் சேலை காய்ந்துவிடும். பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஜீவா அவர்கள் மாற்று வேட்டி கூட இல்லாமல் ஏழ்மையான (எளிமையான) வாழ்க்கை வாழ்ந்தார் என்று படித்துள்ளேன். ரிஷிவந்தியாவின் கவிதையில் வரும் பெண் இதுபோன்ற ஏழ்மையில்தான் வாடுகிறாள். அழுகின்ற குழந்தையை தூளி கட்டிப்போட்டு தூங்க வைக்க நினைக்கிறாள். தூளிக்கு துணியில்லை. இருப்பதோ ஒரு சேலை மட்டுந்தான். அதை அவள் உடுத்தியுள்ளாள்.

சரி, வந்தது வரட்டுமென்று கட்டியிருக்கும் சேலையை அவிழ்த்து தூளி கட்டிவிடலாமென்றால், குடிசைக்கு கதவு இல்லை. கதவு இல்லாத குடிசையிலே புடவையில்லாமல் எப்படி நிற்பது? தவித்துப்போகிறாள் அவள். இதோ கவிதையைப் பாருங்கள்:

“தூளி கட்டத் துணியில்லை…..
கட்டிய சேலை
கதவில்லாக் குடிசை
தவித்தாள் தாய்……..”

ஊசிக்குள்ள நூல் நுழையும்னு நமக்கெல்லாம் தெரியும். ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும்னு சிலபேரு சொல்லுவாங்க. அதெல்லாம் வேற கதை. அது நமக்கு வேண்டாம். வயசுப் புள்ளைங்க ஊசியில நூலைக் கோர்க்க முடியாமல் தவிக்கும்போது, பல்லுப்போன கிழவி அசால்ட்டா நூலைக் கோர்ப்பதையெல்லாம் கிராமங்களில் பார்த்திருப்போம். அந்த அளவுக்கு கிழவிக்கு பளிச்சுன்னு கண்கள் தெரியுது.

ஆனால், பொழுதுக்கும் செல்போன்லயே மூழ்கிக் கிடக்குற இளவட்டங்களுக்கு ஊசியில நூலைக் கோர்க்க முடிவதில்லை. சோடா புட்டி கண்ணாடிகளை மாட்டிக்கிட்டு நிக்குதுங்க. நூலையும் ஊசியையும் வைத்து ஒரு கவிதை புனைந்திருக்கிறார் ரிஷிவந்தியா. ஆனால் அவர் சொல்லியிருக்கிற நூல் கோர்ப்பதல்ல. படிப்பது. படிக்கிற புத்தகத்தை நூல் என்று சொல்வோமல்லவா? அதைச் சொல்லி நம்மை திகைக்கச் செய்து விட்டார். நம்மிடையே நூல் படிக்கும் பழக்கம் இருந்தால் நம் வாழ்க்கை என்றென்றும் வீணாகப் போகாது. நம் வாழ்க்கையை செப்பனிடுபவை நூல்களே! இனி கவிதையைப் பார்ப்போம்.

”நூல் இருக்க
ஊசிப் போகாது
வாழ்க்கை”

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது ஒரு பழமொழி. நாமெல்லாரும் அறிவோம். அதிலும் தமிழ் படித்தவர்கள், புலவர்கள் நன்கறிவார்கள். இப்ப நம்ம தமிழ்நாட்டுல இருக்கிற பலபேருக்கு தாய்மொழி தமிழ்தானா என்ற சந்தேகம் நமக்கெல்லாம் அடிக்கடி வருகிறது. பலருக்கு தமிழை பிழையற எழுதப் படிக்கத் தெரியவில்லை. பள்ளிகளைத் தாண்டி, கல்லூரி வரை சென்று படித்தவர்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல என்ற நிலையே இன்றைய இளைஞர்களிடம் காணப்படுகின்றது. கேட்டால், “தமிழைப் படித்து என்ன செய்யப் போகிறேன்?” என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.

தாய்மொழியின் மீது பற்றில்லாத சமூகம் எப்படி வளரும்? வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்றார் அண்ணா. வடக்கத்தியர்கள் அவர்களுடைய தாய்மொழியிலேயே கற்கிறார்கள். அதோடு மட்டுமின்றி,அதனை பரப்பவுதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறார்கள். ஆனால், நம் பெற்றோர்கள் தாய் மொழியில் படிப்பதைக் கேவலமாகக் கருதி ஆங்கிலவழிப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். நம் தாய்மொழிக்கு நாம் எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. தாய் மொழியில் பேசுவதை ரசிப்பதில்லை. குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால்தான் பெற்றவர்களின் முகம் பிரகாசிக்கிறது.

நம்முடைய தாய்மொழியில் எண்ணற்ற இலக்கியங்களும், இலக்கணங்களும் எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளனர் நம் மூதாதையர்கள். அவற்றையெல்லாம் நாம் படிப்பதேயில்லை.திருக்குறளையும், நாலடியாரையும், ஆத்திச்சூடியையும் ஆரம்பப் பள்ளியில் படித்ததோடு சரி.அதன்பிறகு அனைத்தையும் மறந்துவிட்டோம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்று எத்தனை எத்தனை நூல்கள் நம் நூலகங்களில் குவிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் படிப்பவர்கள் பெரும்பாலும் தமிழாசிரியர்களாக பணியாற்றுபவர்கள் மட்டுமே! மற்றவர்களிடம் குறுந்தொகையிலோ, புறநானூற்றிலோ ஒரு பாடலைச் சொல்லி அதற்கு பொருள் கேட்டால், எதுவுமே தெரியாமல் தவிப்பார்கள். இதுதான் இன்றைய எதார்த்தம். இதோ கவிஞரின் வேதனைக்குரலைக் கேளுங்கள்.

ஒரு தமிழறிஞர் தமிழ் இலக்கியங்களை கரைத்துக் குடித்துவிட்டு பேசினால், அதை யாரும் ரசிப்பதில்லை.ஏன் ரசிப்பதில்லை என்றால், அதனைப் புரிந்துகொள்ளும் திறனை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை. விளைவு நாம் புரிந்துகொள்ளுகிறமாதிரி அவர் பேச வேண்டியுள்ளது. அப்போதுதான் அவருடைய பேச்சும், பாட்டும் ரசிக்கப்படும். செருப்புக்கு தக்கபடி காலை வெட்டிக்கொள்ளும் செயல் இது. அதைத்தான் மெத்தப்படித்த நம் தமிழ் அறிஞர்கள் இன்று செய்யவேண்டியுள்ளது என்பது எவ்வளவு வேதனையான விசயம்.இதோ கவிதையைப் பாருங்கள்;

“கரைத்துக் குடித்தது
பத்துப்பாட்டு…..
கஞ்சி ஊற்றுவதோ
குத்துப்பாட்டு……”

கிராமங்களில் கோவில் திருவிழாக்களின்போது நடைபெறும் நாடகங்களை நம்மில் பெரும்பாலானோர் பார்த்து ரசித்திருப்போம்.. நாடகத்தின் முக்கிய பகுதியான புராண நாடகம் தொடங்குவதற்கு முன், நாடகம் பார்க்க வந்திருக்கும் சனங்களை மகிழ்விக்க பபூன் என்று ஒருவர் வருவார். மக்களை சிரிக்க வைப்பதுதான் அவரது தொழில். மேடையில் அவர் ஆடுவார், பாடுவார்,ஜோக் சொல்லுவார்,அவர் கற்ற அத்தனை வித்தைகளையும் அங்கே போட்டுக் காட்டுவார். அவருடைய தொழில் தர்மம் பார்வையாளர்களை சிரிக்க வைப்பது மட்டுமே! ஆனால், அவர் எப்படி இருப்பார்? அவரது உடல் எப்படி இருக்கும்?மேடையில் ஆடுவதற்கும், குதிப்பதற்கும் அவர் எவ்வளவு சிரமப்படுகிறார்? அவருக்கு என்னென்ன உடல் உபாதைகள் இருக்கின்றன? அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு காசுக்காக அவர் எப்படியெல்லாம் நடிக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

நாடகக் கலைஞர்களின் நலிவடைந்த வாழ்க்கையைப் பற்றி பார்வையாளனாக நமக்கு எதுவுமே தெரியாது. சினிமா, தொலைக்காட்சி, இணையம், முகநூல் என்று பொழுதுபோக்கு சாதனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், இயல், இசை, நாடகம் போன்ற நம் பாரம்பரிய சொத்துக்கள் நலிவடைந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக நாடகக்கலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. பபூன் என்று சொல்லப்படும் கோமாளி எப்படி இருக்கிறார் என்றால்,ஒரு முகமூடியை அணிந்துள்ளார்.அது வெளியே புன்னகையால் நிறைந்துள்ளது. ஆனால் உள்ளே வியர்வையும் உப்பும் பூத்துள்ளது. இதைத்தான் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய் என்றார்கள் போலும். சமுதாய அக்கறை உள்ள ஒரு கவிஞனாக ரிஷிவந்தியா அவர்கள் தன் வேதனையை இப்படி பதிவிடுகிறார் பாருங்கள்;

“வெளியே புன்னகை பூத்து…..
உள்ளே உப்பு பூத்து…..
கோமாளியின் முகமூடி”

பூக்கள் என்றாலே அனைவருடைய மனமும் மகிழும். பூக்களை விரும்பாதோர் உண்டா? எனக்கு மல்லிகை பிடிக்கலாம், உங்களுக்கு ரோஜா பிடிக்கலாம் என்று பூக்களின் வகைகள் வேண்டுமானால் மாறலாமே தவிர, பூக்களை பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இங்கே கவிஞர் புதிய பூ ஒன்றை அறிமுகப்படுத்துகிறார். என்ன பூ அது? மன்னிப்பூ தான். மன்னிப்பு, பாவ மன்னிப்பு என்றெல்லாம் கேள்விப் பட்டுள்ளோம். அதென்ன மன்னிப்பூ? கவிஞர் மன்னிப்பு என்ற சொல்லை பூவாக்கி அழகு பார்த்துள்ளார். பூக்கள் மலர்ந்தால் மகிழ்ச்சி பெருகும். மன்னிக்கும் குணம் மலர்ந்தால் சமரசம் உண்டாகும். எவ்வளவு பெரிய சண்டையும், சச்சரவும் ஒருவருடைய மன்னிக்கும் குணத்தால் சமரசத்தில் முடிவடையும் என்பது நிதர்சனமான உண்மை தானே? இதோ கவிதை:

“மன்னிப்பூ
மலர்ந்திட்டால்
சருகாகும்
சச்சரவு”

இறுதியாக ஒரு காதல் கவிதையைப் பார்ப்போம்.

நிலவினை வர்ணிக்காத கவிஞன் உண்டா? பெண்களை நிலவுடன், அதன் குளிர்ச்சியுடன், தேய்ந்து வளரும் அதன் தோற்றப் பொலிவுடன் பலவிதமாக ஒப்பிட்டு பல்லாயிரம் கவிஞர்கள் பாடியுள்ளனர். ஒருவன் பிறைநிலா என்பான். ஒருவன் முழுநிலா என்பான். ஒருவன் அமாவாசை கறுப்பென்பான். ஒருவன் முழுநிலவு மஞ்சத்திலே முதலிரவை முடிப்போமா என்று பாடியுள்ளான். ரிஷிவந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன? நிலவு கறைபடிந்து காணப்படுகிறது.கறையில்லா உன் முகத்தை எப்படி நிலவோடு ஒப்பிடுவது என்று தன் காதலியைப் பார்த்து கேட்கிறார்.
இதோ கவிதை:

“கறையில்லா உன் முகத்தை
எப்படி வர்ணிப்பேன்
நிலவென்று”

அன்பு நண்பர்களே! ரிஷிவந்தியாவின் நறுக்ஸ் நொறுக்ஸ் தொகுப்பில் உள்ள இருநூறு கவிதைகளையும் பலமுறை ரசித்துப் படித்தேன். படிக்கப் படிக்கத் திகட்டாத இன்பம் தரும் கவிதைகள் அவை. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிய புதிய எண்ணங்கள் என் மனதிலே கிளர்ந்து எழுந்தன. கவிஞர் எதை சொல்ல வருகிறார்? அவருடைய உள்ளக்கிடக்கை என்ன? என்றெல்லாம் பல்வேறு சிந்தனைகள் மனதில் எழுகின்றன.

வருடைய எழுத்தின் நோக்கத்தை அப்படியே நான் புரிந்து கொண்டு இருக்கின்றேனா என்று தெரியவில்லை.எனக்குத் தெரிந்த வகையில் பத்து கவிதைகளை மட்டும் அலசி ஆராய்ந்து உங்கள் முன் வைத்துள்ளேன். இவற்றை படிக்கும்போது மற்ற கவிதைகளையும் படிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதுவே இந்நூலின் வெற்றியாகும். திரு. ரிஷிவந்தியா அவர்கள் இவ்வகையில் மேலும் பல தொகுப்புகளை வெளியிட்டு வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
அன்புடன்
மயிலாடுதுறை ராஜசேகர்

பின்குறிப்பு: நான் சமீபத்தில் வாங்கிப் படித்த பல புத்தகங்களில் ரிஷிவந்தியா சாரின் “நறுக்ஸ் நொறுக்ஸ்” என்னை மிகவும் ஈர்த்தது. நான் அதைக் மிகச் சிறந்த புத்தகமாக கருதுகிறேன். அதனால், கடந்த 06.02.2022 அன்று நண்பர் ஒருவரின் மகனுக்கு திருமண அன்பளிப்பாக “நறுக்ஸ் நொறுக்ஸ்” புத்தகத்தை பரிசளித்தேன். யான் பெற்ற இன்பம் அந்த மணமகனும் மணமகளும் பெறட்டும் என்ற நல்லெண்ணத்திலேயே பரிசளித்தேன்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...