எவர்கிரீன் காமெடி கிங் நாகேஷ்
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணாராவ் மற்றும் தாயார் ருக்மணி அம்மாள். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார் நாகேஷ்.
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக்கொண்டு கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துக் கொண் டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் இவரது முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார்.
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட நாகேஷ் நாடகங்களில் நடித்து வந்தார். 1959ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார்.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார். திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் ஆகியோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
தன்னுடைய முதல் திரைப்படமான தாமரைக்குளம் படத்தின் ஷூட்டிங்கின்போது, நாகேஷ் சரியாக நடிக்கவில்லை என்று கண்டித்திருக்கிறார்கள். இதனை உடன் நடித்துக் கொண் டிருந்த எம். ஆர்.ராதாவிடம் சொல்லியிருக்கிறார். உடனே அவர், “மத்தவன் எல்லாம் நடிகன் நீ மட்டும் தான் கலைஞன் கவலைப்படாம நடி…” என்று சொல்லி தேற்றினாராம்!
திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, ‘நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். ‘கிழவா ரெடியா’ என்று எம்.ஜி.ஆரை கேலி செய்து தப்பி வந்த ஒரே நடிகர் நாகேஷ்.
முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. ஆனால், திரைப்பட நடனத்தில் ‘நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!.
நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குநர் கே. பாலச்சந்தர். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
நகைச்சுவையில் மட்டுமல்ல ‘நீர்க்குமிழி’ படத்தில் குணச்சித்திரம், ‘சர்வர் சுந்தரம்’ படத் தில் ஹீரோ, ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லன், ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடித்தார். அவ்வை சண்முகி திரைப்படத்தில் மேக்கப் மேன் என்று வெளுத்துக்கட்டியவர் நாகேஷ்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல், ரஜினி, தனுஷ் என பல தலைமுறை நடிகர்களோடு நடித்து 1000 திரைப்படங்களை தொட்ட இக்கலைஞனுக்கு ‘நம்மவர்’ படத்துக் காக மட்டும் தேசிய விருது கிடைத்தது.
தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லை நாகேஷுக்கு.
நாகேஷ் மீது கமலுக்கு தனி மரியாதை இருந்தது. இதனாலோ என்னவோ நாகேஷின் கடைசிப் படமாக கமல் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரமாக அமைந்துவிட்டது.
‘தசாவதாரம்’ கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், ‘என் கடைசிப் படம் நல்ல படம். I am honored-டா கமல்!’என்றிருக்கிறார்.
கமலைப் போலவே நாகேஷின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த ரஜினி, நாகேஷ் இறந்த பிறகு தன்னுடைய கோச்சடையான் திரைப்படத்தில் நாகேஷை உயிர்த்தெழ வைத்து திரையில் காண்பித்தார்.
2009-ம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுசென்றும் சிகிச்சை பலனின்றி தனது 75ஆவது வயதில் இறந்தார்.
1000 படங்களில் நடித்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் மறைந்த தினம் இன்று. அவர் நினைவைப் போற்றுவோம்.