அரசியலில் தூய்மை + பொதுவாழ்வில் நேர்மை = ஓமந்தூர் ராமசாமி

 அரசியலில் தூய்மை + பொதுவாழ்வில் நேர்மை = ஓமந்தூர் ராமசாமி

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள் 1-2-2022 செய்தி

அரசியலில் தூய்மை, நிர்வாகத்தில் நேர்மை, மக்கள் நலனுக்கு முதன்மை என்று தமது கொள்கையை வகுத்துக் கொண்டு யாருடைய தலையீட்டையும் ஏற்காமல் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரலாறு படைத்தவர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்.

திண்டிவனத்துக்கு அருகில் இருக்கும் ஓமந்தூர் என்ற ஊரில் முத்துராம ரெட்டியார், அரங்கநாயகி தம்பதியினருக்கு 1-2-1895-ம் ஆண்டு பிறந்தவர் ஓமந்தூரார். தேசிய இயக்கத்திலும் விடுதலைப் போரிலும் அவர் காட்டிய ஈடுபாடு விடுதலை இயக்கத் தளபதிகளில் ஒருவராக அவரை எழுச்சிகொள்ளச் செய்தன. தென்ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.

வெவ்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் இயக்கம் நடத்திய  உப்பு சத்தியாகிரகப் போராட்டம் (1930), சட்டமறுப்பு போராட்டம் (1932), தனிநபர் சத்தியாகிரகம் (1940), வெள்ளையனே வெளியேறு போராட்டம் (1942) ஆகியவற்றில் தீவிரமாகக் கலந்து கொண்டு ஒவ்வொருமுறையும் சிறைத்தண்டனை பெற்றார்.

1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததும் 1946-ல் மாகாணத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்து காங்கிரஸ் கட்சியே அறுதிப் பெரும்பான்மை பெற்றது. முதலில் பிரகாசம் முதல்-அமைச்சர் பதவி வகிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். ஆனால் அவரது ஆட்சி யாருக் கும் நிறைவு அளிப்பதாக இல்லை. பிரகாசத்தின் மீது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவநம்பிக்கை கொண்டனர். இச்சூழலில் அவருக்குப் பதிலாக ஓமந் தூராரை முதல்-அமைச்சராக்கலாம் எனக் கட்சிப் பொறுப்பாளர்கள் முடிவெடுத்தனர். ஆனால் இதற்கு அவ்வளவு எளிதாக ஓமந்தூரார் உடன்பாடு காட்டவில்லை. மூன்று மாதங்கள் தலைவர்களின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பின்னர் ஓமந்தூரார் முதல்-அமைச்சர் பொறுப்பினை 23-3-1947-ல் ஏற்றார். பெரிய மாநிலத்தின் பொறுப்பை ஏற்ற ஓமந்தூரார் எந்த ஊழலுக்கும் இடமின்றி மக்கள் குறைகளைத் தீர்ப்பதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார்.

சென்னை மாகாணத்தின் பத்தாவது முதல்வராகப் பொறுப்பேற்ற ஓமந்தூரார் வெறும் 8-ம் வகுப்பு மட்டுமே படித்தவர். அவரது குடும்பப் பின்னணி அரச குடும்பமோ, ஜமீன் குடும்பமோ அல்ல. சாதாரண விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்.

தமது நேர்மையான ஆட்சியாலும் கண்டிப்பு வாய்ந்த நிர்வாகத்திறமையாலும் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்து ‘சிறந்த ஆட்சியாளர்’எனப் பாராட்டப்பட்டார். உயர்கல்வியே கற்காத காமராசரும், கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் முதல்வர் பதவிக்கு வருவதற்கு நல்ல முன்னுதாரணமாக ஓமந்தூரார் விளங்கினார் என்றால் மிகையாகாது.

அப்போது கோட்டையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த பல ஐ.சி.எஸ். அதிகாரி களைப் பணி ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அவரது நேர்மையும், தூய்மையும் அதிகாரிகளைச் சிறந்த முறையில் பணிபுரியத் தூண்டின.

முதல்-அமைச்சரை சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து பார்க்கவேண்டியதில்லை, அவரவர் சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டு வேண் டிய நடவடிக்கை எடுத்தாலே போதும் என அறிவுறுத்தினார். தாம் பதவிக்கு வந்த பின்னர் எந்தப் பாராட்டுவிழாவையும் தமக்காக நடத்தக்கூடாது எனக் கண்டிப்புடன் தடுத்துவிட்டார்.

தம்மை யார் பார்க்கவந்தாலும் என்ன காரணத்திற்காகப் பார்க்கவந்துள்ளார்கள் என எழுதியனுப்பவேண்டும் என உத்தரவிட்டிருந்தார். சிபாரிசுக்காக யாரும் வரக்கூடாது என்பதிலும் சிபாரிசுக் கடிதம் யார் கொடுத்தனுப்பியிருந்தாலும் அதனைக் கிழித்துக் குப்பையில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இன்றைய முற்போக்கான திட்டங்கள் பலவற்றிற்கு அவரே முன்னோடியாக விளங்கி னார். ஜமீன் ஒழிப்பு, இனாம் ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு ஆகியவற்றிற்கான சட்டங்கள் அவரால்தான் நிறைவேற்றப்பட்டன.

பயிர் காப்பீடு திட்டம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், கிணறு வெட்ட மானி யம், விவசாயிகள் பயனடையும் வகையில் நெல், கரும்பு விலையை உயர்த்தியது, கீழ்பவானி அணைக்கட்டு, வீடூர் அணைக்கட்டு திட்டங்களுக்கு ஒப்புதல், பழைய நீர்நிலைகளைச் செப்பனிடுதல், புதிய நீர்நிலைகளை வெட்டுதல் என்று அவர் வகுத்த திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மைத்தொழில் செழிக்க வழிவகுத்தன.

திருப்பதியில் அமைந்திருந்த ஓலைச்சுவடி நூலகத்தை ஓமந்தூரார் பார்வையிடச் சென்றபோது அவரைச் சொற்பொழிவாற்றுமாறு கேட்டுக்கொண்டார்கள். தமிழில் பேசத் தொடங்கிய அவரைத் தெலுங்கில் பேசுமாறு கூறினார்களாம்.

“எனக்குத் தெலுங்கு தெரியாது. என் தாயாருக்குத் தெலுங்கில் பேச்சுவழக்குச் சொற் கள் கொஞ்சம் தெரியுமென்றாலும், தெலுங்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. என் தாய்மொழி தமிழ். நான் தமிழன். என் தாய்மொழியாகிய தமிழிலே பேசுகிறேன்” எனத் தயங்காது கூறினாராம். இவர் ஆட்சியில்தான் தமிழ் வளர்ச்சித்துறை அமைக் கப்பட்டது. தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. திருக் குறள் முதன்முதலாகப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்டதும் இவர் ஆட்சியில் தான்.

தமிழ் ஆட்சிமொழியாக்குவதற்கு முதல்கட்டமாகத் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எல்லா அரசு அலுவலகங்களிலும் தமிழை ஆட்சிமொழியாக்கினார். அரசவைப் புலவராக நாமக்கல் கவிஞரை நியமித்தார். கம்பன் விழா, பாரதி விழா எனத் தமிழ் விழாக்களை அரசு நடத்த ஆணையிட்டார்.

இவ்வளவு சிறப்பாக நடந்த ஆட்சியை ஆளும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எந்த சிபாரிசுக்கும் வழியில்லாத ஆட்சி தேவையில்லை என்றே கருதினர். நிலைமையை உணர்ந்துகொண்ட ஓமந்தூரார் வேறு யாரேனும் முதல்-அமைச்சர் பதவி ஏற்றுக்கொள்ள வழிவிடும் வகையில் 6-4-1949 அன்று பதவி விலகிவிட்டார்.

வடலூரில் நிலம் வாங்கிச் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். 25-8-1970 அன்று உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் காலமானார். அவர் மறைந்தாலும் முற்றி லும் தூய்மையும் நேர்மையும் மிக்க முதல்வர் ஓமந்தூரார் என்னும் புகழ் நம் நாட்டு வரலாற்றில் என்றும் நின்று நிலவும்.

பேராசிரியர் .சுபத்திரா

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...