ஓ.பி.சி. 27% இடஒதுக்கீடு: நடந்தது என்ன?
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பல் மருத் துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று அரசு கூறியிருக் கிறது. இதற்குக் கணாரம் நீண்ட சட்டப் போராட்டம், அரசியல் கட்சிகள், மாணவர் தரப்பு கொடுத்த அழுத்தம் போன்றவையே.
இதில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலி வடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவை மைல்கல் நடவடிக்கை என்று அழைக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு களைப் பெறவும், சமூக நீதியின் புதிய கட்டத்துக்குச் செல்லவும் உதவியாக இருக் கும் என்று கூறியுள்ளார்.
தற்போதைய நடைமுறையின்படி, மாநிலங்களில் உள்ள அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகள், மத்திய தொகுப்புக்கு என அவற்றின் 15 சதவிகித இடங்களை இளநிலை படிப்புக்கும், 50 சதவிகித இடங்களை மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேல்படிப்புக்கும் வழங்கிட வேண்டும். இந்த மத்திய ஒதுக்கீடு இடங்கள்தான் மத்திய தொகுப்பு (சென்ட்ரல் பூல்) என அழைக்கப்படுகிறது.
இதுநாள்வரை நீட் எனப்படும் தேசிய தகுதிகான் நுழைவுத்தேர்வில் பட்டியலினத் தவர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இனி பிற பிற்படுத்தப்பட்டோரும் இடஒதுக்கீடு சலுகையை பெறுவர்.
மருத்துவ படிப்புகளில் எந்த மாநிலத்தவரும் தான் பிறந்த மாநிலம் அல்லாத வேறு மாநிலத்துக்குச் சென்று படிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க அகில இந்திய இடஒதுக்கீடு முறை 1986ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.
தொடக்கத்தில் இந்த அகில இந்திய ஒதுக்கீடு 2007ஆம் ஆண்டுவரை எவ்வித இடஒதுக்கீடும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டது. பிறகு பட்டியலினத்த வர்களுக்கு 15 சதவிகிதம், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதம் என்று அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு அளவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது.
இந்த நிலையில், ‘மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம்’ 2007ஆம் ஆண்டில் நடை முறைக்கு வந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய கல்வி நிறுவனங்களான சஃப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹாரிங்டன், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம் போன்றவற்றில் மத்திய அரசு அமல்படுத்தியது. எனினும் இதே முறை, மாநில அரசுகளால் நடத்தப் படும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் கடைப்பிடிக்கப்படாமல் இருந்தது.
பிறகு மருத்துவ படிப்புகளில் சேர 2010ஆம் ஆண்டில் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு என்ற திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது. நீண்ட இழுபறி, விவாதத் துக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வு முறை இந்தியாவில் அமல்படுத் தப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவப் படிப்புகளிலும் மருத்துவ மேல் படிப்புகளிலும் சேர முடியும் என்ற நிலை உருவானது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட சில மாநில அரசுகள் இந்த நீட் தேர்வு முறைக்கு எதிராக உள்ளன. அந்த தேர்வு முறையே கூடாது என்று தமிழக அரசு கோரி வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு, உயர் கல்வி நிறுவனங்கள் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவந்த மோதி அரசு, அரசியலமைப்பு விதியில் செய்த திருத்தத்தின் விளை வாகப் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு உயர் கல்வியில் 10 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்கும் வழி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையிலும் பிற்படுத்தப்பட் டோர், பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்தது.
எனினும், கடந்த ஜூலை 12ஆம் தேதி நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பை இந்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தபோது, பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீடு இல்லாமலேயே தேர்வு நடைபெறும் என்று கூறியிருந் தார். இதனால், பல மாநிலங்களில் மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்து வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோதியிடம் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர்ந்து விவாதித்து வந்தனர். கடைசியாக கடந்த புதன்கிழமை கூட தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துப் பேசினர். அவர்களின் சந்திப்புக்கு பின் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனேயே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் வில்சன், பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க தங்களுடைய கட்சி மேற்கொண்ட சட்ட முயற்சி களைப் பட்டியலிட்டார்.
“ஒவ்வொரு கட்டத்திலும் இடஒதுக்கீடு வழங்காமல் அப்போது மத்தியில் இருந்த அரசுகள் தாமதப்படுத்தியபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சுட்டிக்காட்டியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும் அரசுக்கு அழுத்தம் தொடர்ந்தோம். அத்தகைய போராட்டங்களே இந்த முடிவை எடுக்க மத்திய அரசை தூண்டியிருக்கிறது,” என்று வில்சன் தெரிவித்தார்.
மாநிலங்களவை பாமக உறுப்பினரான அன்புமணி ராமதாஸ், “மருத்துவக் கல்விக் கான அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் நலனுக்கான பா.ம.க.வின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15%, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50% இடங்களும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், அந்த இடங்களில் ஓரிடம் கூட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்றி அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.
இதற்காக உச்சநீதிமன்றத்தில் நான் தான் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தேன். பின்னர் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி உயர்நீதிமன்றத்திலும் நான் வழக்கு தொடர்ந்தேன். தமிழகத்தின் பிற கட்சிகளும் இதே வழக்கை தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஆணையிட்டது.அதன் பின்னர் ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் இப்போது தமிழ்நாட்டில் மட்டு மின்றி, நாடு முழுவதும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட் டிருக்கிறது. இதன் மூலம் தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5000 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இது பிற்படுத்தப் பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நனவாக்கும். இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும். இது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கோரி முதன்முதலில் வழக்குத் தொடர்ந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் இப்போது பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மட்டும் முறையே 15%, 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்படி இந்த இட ஒதுக்கீட்டை பட்டியலினம், பழங்குடியினத் தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 2007-08 ஆம் ஆண்டில் நான் தான் வழங்கினேன். இப்போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு, நான் தொடர்ந்த வழக்கின் காரணமாக நடைமுறைப்படுத்தப்படுவது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு ஆகும். மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவில் எந்தக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைத்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அகில இந்திய தொகுப்பு ரத்து செய்யப்பட்டு, அனைத்து இடங்களும் மாநில அரசுகளால் நிரப்பப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை ஆகும். அந்த இலக்கை அடைவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாமக மேற்கொள்ளும் என்றும் அன்பு்மணி ராமதாஸ் கூறியுள்ளார்.