பத்துமலை பந்தம் | 37 | காலச்சக்கரம் நரசிம்மா
37. வாராய் நீ வாராய்
மூன்றாவது நவபாஷாணச் சிலையை குகன்மணிதான் தனது பொறுப்பில் வைத்திருக்கிறான். குனுங் தகான் மலைக்கு மயூரியை அழைத்துச்சென்று அவளுக்கு அந்த சிலையைக் காட்ட போகிறான் ? எதற்காக அவள் மீது அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறான்..? காரணம், அவனது இதயத்தில் அவள் மீது நாட்டம் கொண்டிருக்கிறான். மலேசியாவின் சைனா டவுன் பகுதியில் இவ்வளவு பெரிய எஸ்டேட்டின் உரிமையாளர், எதற்காக மயூரியை பிடித்துக் கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறான்..? அவளைவிட, கவர்ச்சியும், புகழையும் கொண்டிருக்கும் இவளைத்தானே நாட வேண்டும்..? இவளைக் கண்ட மாத்திரத்தில் இவள் மீது ஈர்ப்புக் கொண்டிருக்க வேண்டாமா..? எதற்காக அந்த காரைக்கால் அம்மையாரைச் சுற்றிக் கும்மி அடித்துக் கொண்டிருக்கிறான்..?
மூன்றாவது நவபாஷாணச் சிலை குகன்மணி என்கிற கம்பீரனிடம்தான் இருக்கிறது. செல்வம், கம்பீரம், மிடுக்கு, செல்வாக்கு என்று அத்தனையும் கொண்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் அவன் வசம் உள்ள மூன்றாவது சிலையாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு அபிஷேகம் செய்து, அந்த மூலிகைத் தண்ணீரைச் சேகரித்து, அன்றாடம் குடித்து தனது நாடிச் சக்கரங்களை வளப்படுத்திக் கொள்கிறானோ..?
அந்த ஒரு கணத்தில் கனிஷ்காவின் மனதில் ஒரு தீர்மானம் எழுந்தது. எல்லாச் சிறப்புகளும் எனக்குத்தான் என்கிறபோது, குகன்மணி அவன் ஆஸ்தி, அவனிடம் உள்ள மூன்றாவது நவபாஷாணச் சிலை அனைத்துமே தனக்குத்தான் என்கிற உத்வேகம் பிறந்தது. எப்படியாவது, குகன்மணியை வசப்படுத்தி, அவனை மணந்து, பத்து எஸ்டேட்டில் இருந்தே உலகை ஆளவேண்டும். குறுக்கே வரும் மயூரியை நகத்தால் கிள்ளி எறிய வேண்டும்.
மயூரியை எளிதாக அப்புறப்படுத்தலாம். ஆனால் மிதுன்ரெட்டி? தனது மாமன் மகளைத் திருமணம் செய்ய இருந்த அவனை விரட்டிச் சென்று, அவன் திருமணத்தை தடுத்து நிறுத்தி, அவனை முழுவதுமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். இப்போது திடீரென்று ‘நான் குகன்மணியை விரும்புகிறேன்’ என்று கூறினால், அவன் சும்மா இருப்பானா..?
அதெல்லாம் தெரியாது..! இவளுக்குக் குகன்மணியும் வேண்டும்..! மூன்றாவது நவபாஷாணச் சிலையும் வேண்டும்..!
கனிஷ்காவின் செல்போன் ஒலித்தது. காலர் ஐடியைப் பார்க்க, மிதுன்ரெட்டி என்று பெயர் பிரதிபலித்தது.
“Think of the Devil and there it is.! இவன் எதற்கு இப்போது போன் செய்கிறான்..?”
“ஹாய் மிதுன்..! என்ன திடீர் போன்..? உன்னோட ஹெக்டிக் ப்ரோக்ராம்ல என்னைப் பத்தியெல்லாம் நினைக்கக்கூட நேரம் இருக்கா..? அதுவும், உலக அழகி மித்ரா ராவ் பக்கத்துல இருக்கறப்ப..?” —கிண்டலடித்தாள் கனிஷ்கா.
“இதுதானே வேண்டாங்கிறது..! நான் ஒரு முக்கியமான விஷயமா போன் செஞ்சுருக்கேன். ஸ்டார் நைட் நேத்து ரொம்ப க்ராண்டா நடந்து முடிஞ்சது. நீதான் வரமாட்டேன்னு சொல்லிட்டே..! ஸ்டார் நைட் வெற்றிகரமா முடிஞ்ச சந்தோஷத்துல, மார்த்தாண்டம் சார் ஒரு உல்லாசப் பயணம் ஏற்பாடு செஞ்சிருக்காரு. அதுக்காவது என்னோட வாயேன்..!“ —மிதுன்ரெட்டி கேட்டான்.
“ஏன் அந்த உலக அழகி மித்ரா ராவ் வரலியா..?“ —கனிஷ்கா நக்கலுடன் கேட்டாள்.
“அவளை ஏன் அனாவசியமா இழுக்கறே..! அவள் சென்னைக்கு கிளம்பி போயாச்சு..! நாம ரெண்டு பேரும், ஜாலியா போயிட்டு வரலாம். ப்ளீஸ்..! எனக்காக வாயேன்..!”
“எங்கே போறீங்க…?” —கனிஷ்கா கேட்டாள்.
“மலேசியா வந்துட்டு ஒரு வாரமாவது தங்கிட்டு போங்கன்னு சொன்ன மார்த்தாண்டம் சார், எங்களை அடுத்த வாரம் குனுங்தகான் மலையில ட்ரெக்கிங் ஏற்பாடு செய்திருக்காரு. நானும் நீயும், ட்ரெக்கிங் செய்தபடி, நம்மை எதிர்காலத்தை பத்தி முடிவு எடுக்கலாம்..!” —மிதுன்ரெட்டி உற்சாகமாகக் கூறினான்.
‘குனாங்தகான் மலையா..?’ —கனிஷ்கா பரபரப்படைந்தாள்..! மயூரியும், குகன்மணியும் அந்த மலைக்குப் போய்த்தானே மூன்றாவது நவபாஷாணச் சிலையைக் காணப் போகிறார்கள். அதிருஷ்டம் இவளைக் கைதட்டி அழைக்கிறது. இவளும் மிதுனுடன் தகான் மலைக்கு சென்று அவர்களைப் பின்தொடர போகிறாள்.
“சரி, நான் வரேன்..! என்னைக்குப் போறீங்க..?” —கனிஷ்கா கேட்டாள்.
“சனிக்கிழமை பாகங் மாகாணத்துல இருக்கிற டமான் நெகாரா தேசிய வனத்திற்கு போறோம். மறுநாள் விடியலுல குனுங் தகான் மலைக்கு ட்ரெக்கிங் கிளம்பறோம்.” —மிதுன்ரெட்டி கூற, உடனே கனிஷ்காவின் மூளை வேகமாக செயல்படத் தொடங்கியது.
மிதுன்ரெட்டியின் சென்று குகன்மணியையும், மயூரியையும் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் பின்தொடர்ந்து மூன்றாவது நவபாஷாணச் சிலை இருக்கும் இடத்தைக் கண்டறிய வேண்டும். அவர்களுக்குத் தெரியாமல் சிலையை அபகரிக்க வேண்டும். சிலையைக் காட்டி அபியிடமிருந்து தேஜஸைக் காப்பாற்றிவிட்டு, அபியின் கதையை முடித்துவிட்டு இந்தியாவுக்குக் கம்பி நீட்டி விட வேண்டும்.
“என்ன திடீர்னு சைலெண்டாயிட்டே..?” —மிதுன் கேட்டான்.
“எப்படியும் நீதான் என் எதிர்காலம்னு ஆகிடுச்சு. நீ எங்கே கூப்பிட்டாலும் நான் வந்துதானே ஆகணும்..! உங்களுக்குச் சாதகமாத்தான் பழமொழியே சொல்லி வச்சிருக்காங்களே. ராமன் இருக்குமிடம்தான் சீதைக்கு அயோத்தின்னு..! உனக்காக வரேன்..! வாராய்… நீ வாராய்ன்னு பாடிக்கிட்டே மலை மேலே நீ அழைச்சுக்கிட்டுப் போ..!” —என்றபடி சிரிக்க தொடங்கினாள்.
அவள் நல்ல மூடில் இருக்கும்போதே அவளிடம் சம்மதம் வாங்கிவிட வேண்டியதுதான்.
“கனிஷ்கா..! அஃபிஷியலா நான் தகான் மலை உச்சியிலே உனக்கு ப்ரபோஸ் செய்ய போறேன்..!” —மிதுன்ரெட்டி கூறினான்.
குகன்மணியைச் சந்திப்பதற்கு முன்பாக மிதுன் இதைச் சொல்லியிருந்தால், உண்மையிலேயே கனிஷ்கா மகிழ்ந்திருப்பாள். ஆனால் இப்போது அவளுடைய மனமெல்லாம், குகன்மணியின் கம்பீர உருவம் வியாபித்திருந்தது. எனவே, மிதுன் கூறியதை அவ்வளவு ஆர்வத்துடன் கேட்கவில்லை.
மயூரியின் கண்முன்பாக குகன்மணியின் விஸ்தார எஸ்டேட்டும் பிரம்மாண்ட மாளிகையும் தோன்ற, மிதுன் எல்லாம் இனி இவளுக்கு சரிப்பட்டு மாட்டான் என்கிற எண்ணத்திற்கு வந்துவிட்டிருந்தாள். இப்போது அவனைக் கழட்டிவிடக் கூடாது. குகன்மணியை இவளது வலையினுள் சிக்க வைத்துவிட்டு, பிறகு மிதுன்ரெட்டியைக் கழட்டி விட வேண்டும்.
தனக்காக அவனது மாமன் மகளுடன் நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தையும் ரத்து செய்திருந்தான் என்றெல்லாம், கனிஷ்கா யோசிக்கவில்லை. தனக்கு எது தேவையோ அதை அடைவதில் மட்டுமே குறியாக இருப்பாள்.
“நீ ப்ரபோஸ் பண்ணு..! ஆனால் நான் உன்னுடன் வரச் சம்மதிச்சதே என்னோட பர்சனல் காரணங்களுக்காக. நாம குனோங் தகான் போகிற அதே நாள், மயூரியும், அவள் நண்பர் குகன்மணியும் அதே இடத்துக்கு வராங்க. அவங்க கிட்டேருந்து ஒரு ரகசியத்தை வாங்கணும். அதனால நான் அவங்களைப் பின்தொடர்ந்து போயே ஆகணும். உனக்கு ஆட்சேபம் இல்லைன்னா, நான் உன்னோட வரேன். ஆனா அங்கே வந்து, இங்கே நிக்காதே, அங்கே நிக்காதேன்னு சொல்லக்கூடாது. ஓகேயா..?” —கனிஷ்கா நிபந்தனை விதிக்க, மிதுன் ரெட்டி தலையசைத்தான்.
பாவம்..! குனோங் தகான் மலை மேல் நடக்க இருந்த பயங்கரத்தை அப்போது அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
—தொடரும்…
//////////////////////////////////////////////////////////////
* குனுங் தஹான் மலேசிய தீபகற்பத்தின் மிக உயர்ந்த மலை. பகாங் மாகாணத்தில் டாமன் நெகாரா தேசிய பூங்காவில் உள்ளது. மியன்மாரில் தொடங்கி தாய்லாந்து,மலேசியா வழியாக செல்லும் இந்த மலைத்தொடர் 1,700 கிமீ செல்கிறது. மிகவும் ஆபத்தான ட்ரெக்கிங் பாதையை கொண்டது. எனவேதான் தகுதியுடைவர்களால் மட்டுமே பொறுத்து கொள்ள இயலும், என்கிற அர்த்தத்தில், அதற்கு இந்த பெயர்.
இந்த மலைச்சரிவில் காட்சிகள் மிக ரம்மியமாக இருக்கும். யானைகளும், புலிகளும் வாழும் இடம். குளவிகளும் , தேனீக்களும் அமைதியாக இருக்கும், நாம் அவற்றை சீண்டாதவரையில். கூட்டமாக வரும் குழவிகளிடம் சிக்கினால், உயிர் பிழைப்பது அரிது.
இந்த மலையில் இரண்டு ட்ரெக்கிங் பாதை கல் உள்ளன. சிறிய புதிய பாதை 32 கிமீ பயணிக்க வேண்டும். சுங்கை ரெலோ என்கிற இடத்தில் தொடங்கி, கோலா ஜுராம், கோலா லூயிஸ், லதா லோய்ஸ், கேம் கார், பெர்மாத்தாங், குபாங், பெல்லுமட், பொன்சாய், கேம் போடாக் வழியாக தகான் மலை உச்சியை அடையவேண்டும்.
இதில் முக்கியமான இடம் போகர் சாலை.! பள்ளங்கியில் குணா குகைதான் பழைய போகர் பாசறை. அதே போன்று, குனோங் தகான் மலையிலும் போகர் சாலை இருந்திருக்கிறது. போன்ஸாய் என்று தற்போது அழைக்கப்படும் மலைப்பகுதியில் குகைகள் அதிகம் இருப்பதால், இங்கே போகர் வாசம் செய்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.)
ஆனால் பழைய பாதை ஒன்று உள்ளது. இந்த பாதையில் மலை உச்சிக்கு சென்று வர, ஏழெட்டு நாட்கள் ஆகும். வழுக்கு பாறைகளும்,நீர் வீழ்ச்சிகளும், அபத்தனா விலங்குகளும் உலவும் பகுதி. தனியாக செல்ல இயலாது. மேலும் பல ட்ரெக்கர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.
//////////////////////////////////////////////////////////////
1 Comment
Great going..