
கலைஞரின் அரை நூற்றாண்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்கமுடியாத நிழல் உருவம் சண்முக நாதன். 2018ஆம் ஆண்டு கலைஞர் காலமானதை அடுத்து வயோதிகம் காரணமாக சண்முக நாதனுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவ்வப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
சுறுசுறுப்பு தேனியாகச் செயல்பட்ட கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றினார். அரசியல் வட்டாரத்தில் கலைஞரின் நிழல் என்று அழைக்கப்பட்ட சண்முகநாதன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் (21-12-2021) இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 80.
திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் மிகச் சிறிய கிராமமான திருக்கண்ண மங்கையில் நாதஸ்வர வித்வானின் மூத்த மகனாகப் பிறந்தவர் சண்முகநாதன். 1942ம் ஆண்டு பிறந்த இவருக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். அம்மையப்பன் பள்ளியிலும் பிறகு வி.எஸ்.டி. பள்ளியிலும் படித்த அவர் படிப்பு முடிந்ததும் திருவாரூர் கூட்டுறவு வங்கியில் எழுத்தர் பணியில் மாதம் 50 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார்.

வழக்கு குறித்த கோப்புகளில் வழக்கு விவரங்களை எழுதுபவர் சண்முகநாதன். சுருக்கெழுத்து தெரிந்த அவர் கருணாநிதியின் பொதுக் கூட்டங்களுக்குச் செல்வார். அப்போது அவரது பேச்சுகளை எத்தனை மணி நேரமாக இருந்தாலும் எத்தனை நீளமான பேச்சாக இருந்தாலும் சரி உடனுக்குடன் குறிப்புகளை எடுக்கும் ஆற்றல் கொண்டவர் சண்முகநாதன்.
அவரை ஒரு சில கூட்டங்களில் பார்த்த கருணாநிதி, அவரது குறிப்பெடுக்கும் திறனைக் கண்டு வியந்தார் கலைஞர். இதையடுத்து கலைஞரின் நண்பர் திருவாரூர் தென்னனிடம் கருணாநிதி “எனது கூட்டங்களில் ஒருவர் குறிப்பெழுதுவாரே அவரை அழைத்து வாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 1969ஆம் ஆண்டு கருணாநிதி மக்கள் நலத்துறை அமைச்சராகப் பொறுப்போற்றார். அப்போது தனக்கு நேர்முக உதவியாளராக இணைந்து கொள்ளுமாறு சண்முகநாதனிடம் கேட்க, அதற்கு உடன்பட்டு உடனே இணைந்தார். அன்று முதல் கருணாநிதி இருந்தவரை அவர் பேசும் எந்த ஒரு வார்த்தையையும் விடாமல் குறிப்பெடுத்து வந்தார் சண்முகநாதன்.

பத்திரிகைகளுக்கான அறிக்கைகள், செய்திக் குறிப்புகள், கலைஞரின் பொதுக் கூட்டப் பேச்சுகள் என அனைத்தையும் அவர் வாசிக்க சண்முகநாதன் குறிப்பெடுத்துக் கொள்வார்.
கருணாநிதி குறித்து அனைத்தையும் தெரிந்த ஒருவர் சண்முகநாதன். முக்கிய பேச்சுவார்த்தையின் போதும் முக்கிய தலைவர்களை கருணாநிதி சந்திக்கும்போதும் அவருடனேயே இருந்தவர் சண்முகநாதன். அவர் கண் அசைவிற்கு ஏற்ப சண்முகநாதன் செயல்படுவார். கருணாநிதி என்ன மனநிலையில் இருக்கிறார் என அவரது மகன்கள், மகள்கள் சண்முகநாதனைக் கேட்டுத்தான் தெரிந்துகொண்டு பின்னர் போய் தங்களுக்குத் தேவையானதைக் சொல்வார்களாம். கருணாநிதி பேசும்போது எதையாவது தேடினால் அவர் எதைத் தேடுகிறார் என்பதும் சண்முகநாதன் தெரிந்து கொண்டு அதை எடுத்துக் கொடுப்பாராம்.
கலைஞர் கருணாநிதி ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர். தனிமனித உழைப்பில் தனித்தன்மை பெற்ற வர். அவரிடம் வேலை பார்ப்பது மிகவும் கடினமான விஷயம். கலைஞர் சினிமா, அரசியல், இலக்கியம், ஆட்சிப் பொறுப்பு, தி.மு.க. கட்சிப் பிரமுகர்கள் கூட்டம், குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பு என மாறி மாறி ஒரு நாளில் 18 மணி நேரம் செயல்படுபவர் கலைஞர். அவரிடம் ஈடுகொடுத்துப் பணியாற்றுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதைத் திறம்பட 50 ஆண்டுகள் நிறைவு செய்து கலைஞரிடமே நல்ல பேர் வாங்கியவர் சண்முகநாதன்.

தாம் கலைஞரிடம் நெருக்கமாக இருக்கிறோம் என்பதற்காக, தனக்கோ தனக்குத் தெரிந்தவர் களுக்கோ சிபாரிசு செய்யாதவர், ஒளிவு மறைவின்றி பணியாற்றக்கூடியவர் சண்முகநாதன்.
அரசியல், ஆட்சி, இலக்கியம் என்று யார் கலைஞரைச் சந்திக்கச் செல் லும்போதெல்லாம், ‘தலைவர் பேசிக்கிட்டே இருப்பார். 10 நிமிஷம் எடுத்துக்கங்க…’ என்று அவர் காட்டும் கறாரில், கலைஞர் மீதான அவரது அக்கறையே வெளிப்படும்.
தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த கலைஞர் முதுமை காரணமாக செயல்பட முடியாமல் ஓய்வெடுக் கத் தொடங்கிய பிறகும்கூட தினமும் கோபாலபுரம் வந்துகொண்டிருந்தார் சண்முகநாதன். கலை ஞருக்கு எது தேவை என்பதை கலைஞரைவிட முழுமையாக அறிந்தவர். அது குறித்து பத்திரிகை யாளர் ஒருவர் கேட்டபோது சண்முகநாதன் கொடுத்த பதில், “எனது இந்தப் பிறவி கலைஞருக் கானது” என்பதுதான்!
கடந்த 2001ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் இணைச் செயலாளராகப் பணியிலிருந்து சண்முகநாதன் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து கருணாநிதியின் உதவியாளராக இருந்தார்.
கலைஞரின் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கிய காலகட்டத்திலும் எந்நேரமும் கோபாலபுரம் வீட்டில் ஒருவரைப் பார்க்க முடியும் என்றால் அது சண்முகநாதன் என்றுதான் இருக்கும்.
கருணாநிதியும் சண்முகநாதனும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். உள்ளப்பற்றுக்கு ஊர் பற்றும் ஒரு காரணம். திருவாரூரில் தொடங்கிய தன் வாழ்க்கைப் பயணம் இப்படி மாபெரும் தலைவரின் நிழலாக இருப்போம் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
அதற்கு ஈடாக சண்முகநாதனின் தந்தை மறைந்தபோது இடுகாடு வரை நடந்தே சென்று அஞ்சலி செலுத்தி தனது உதவியாளரை அவரது ஊரார், உறவினர்கள் முன்னிலையில் பெருமைப்படுத்தி யுள்ளார் கலைஞர். குடும்பத்தில் உள்ள உறவுகளுக்குத் தரும் மரியாதை சண்முகநாதனுக்கு வழங்கப்பட்டது.

“சண்முகநாதன் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றும் நபர் என்பதைக் காட்டிலும் என்னுடைய அகத்திலேயே இருந்து பணியாற்றும் நபர் என்றுதான் கூறவேண்டும். வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர் சண்முகநாதன்” என்று பல சந்தர்ப்பங்களில் கலைஞர் கூறியதும் உண்டு.

ஒரு இயக்கத்தின் மாபெரும் தலைவரின் உதவியாளராக உன்னதமாகப் பணியாற்றி விடை பெற்றவர் சண்முகநாதன் கலைஞர் புகழோடு வைத்துப் போற்றக்கூடியவர் என்பது வரலாற்று உண்மை.
