
தந்தை பெரியார் கருத்துகளில் ஈடுபாடு உடைய மருத்துவர் தருமாம்பாள் துணிச்சலோடு பல கலப்பு மணங்களையும், விதவை மறுமணங்களையும் நடத்தி வைத்ததோடு கணவன்மாரால் கைவிடப் பட்ட பெண்களை மீண்டும் இணைத்து வாழ வைத்த வீரத்தமிழன்னை.
வேளாண் செட்டி மரபில் தோன்றி கருந்தட்டாங்குடி எனும் ஊரில் பிறந்த டாக்டர் எஸ். தருமாம் பாளின் தந்தையார் பெயர் சாமிநாதன், தாயார் பெயர் நாச்சியார் எனும் பாப்பம்மாள். தந்தையார் பெரிய துணிக் கடை வைத்திருந்தார். பாட்டனார் திவான் பேஷகராக இருந்தவர். இத்தகைய பெரும் செல்வாக்குள்ள குடும்பத்தில் 1890ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் சரசுவதி. இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்தார். இலக்குமி என்னும் வளர்ப்புத் தாயால் வளர்க்கப்பட்டார்.
இயல்பாக சிறுவயதிலேயே தருமாம்பாளுக்கு நாடகத்தின் பால் ஆர்வம் அதிகமிருந்தது. அதன் தாக்கத்தால் சிறந்த நாடக நடிகரான குடியேற்றம் முனிசாமி நாயுடுவைத் திருமணம் செய்து கொண்டார். கணவரோடு சிறிது காலம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தவர் பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், தன் சுய முயற்சியால் தமிழ் மற்றும் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ச்சிப் பெற்றார். 1930இல் இவர் பிரசித்திப் பெற்ற சித்த மருத்துவராக மக்களிடையே அறியப்பட்டார். மாநகராட்சி உதவியுடன், சென்னை தங்கசாலையில் சித்த மருத்துவ மையம் ஒன்றை நிறுவி, ஏழை, எளிய மக்களுக்குச் சேவை செய்தார். இதன் மூலம் மக்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆலோசகராக இவர் விளங்கினார். அம்மையாரின் பொதுப் பணி கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.
தருமாம்பாள் அம்மையாரோடு தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் நீதிக்கட்சி முதல் தி.மு.கழகம் வரையுள்ள இயக்கங்களைச் சார்ந்தவர்களானாலும் அவர்கள் அனைவரும் அம்மை யாரை மதித்துப் போற்றி அவருடைய பரிந்துரைகளை ஏற்றுச் செயல்படுத்தியுள்ளனர்.
தருமாம்பாள் அம்மையார் அரசியல் பயணம் நீதிக்கட்சி, தீராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் எனத் தொடர்ந்தது.
தந்தை பெரியார் கருத்துகளில் ஈடுபாடு உடைய இவர் துணிச்சலோடு பல கலப்பு மணங்களையும், விதவை மறுமணங்களையும் நடத்தி வைத்தார். கணவன்மாரால் கைவிடப்பட்ட பெண்களை மீண்டும் இணைத்து வாழ வைத்திருக்கிறார். பல பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கான உதவி, சில பெண்களுக்குக் கல்லூரிகளில் இடம் வாங்கிக் கொடுத்தல், வேலை வாய்ப்புகள் மற்றும் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தல், செல்வந்தர்களிடம் உதவி பெற்று பெண்கள் கல்வி கற்க உதவி புரிதல் என இவர் பொதுத் தொண்டு வானளாவ உயர்ந்தது.
1940இல் தமிழாசிரியர்களின் ஊதிய உயர்விற்கும், அவர்களது சமூக மரியாதைக்கும் அரசுடன் போராடி இவர் வெற்றி பெற்றார். தமிழிசை இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு பணியாற்றி னார். மேலும், பள்ளி மாணவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றலுக்காக, ‘சென்னை மாணவர் மன்றம்’ எனும் அமைப்பைத் தோற்றுவித்து பத்து ஆண்டுகள் அதன் தலைவராகப் பணியாற்றினார். அதற்காகச் சொந்தக் கட்டடம் அமைக்கச் செல்வர்களை நாடிப் பொருள் பெற்று அவர் உருவாக்கிய கட்டடம் மயிலை சிவமுத்து நிலையம் எனும் பெயரில் வடசென்னையில் இன்றும் உயர்ந்து நின்று தமிழ் மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அம்மையார் சமூகத் தொண்டைவிட அவர் முதல் இந்தி எதிர்ப்புப் போரில் காட்டிய தீவிரம் அவரின் மொழிப் பற்றிற்குச் சிறந்த அடையாளம். இதற்காக அம்மையார் வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார். இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் மகளிர் கலந்துகொள்ள அம்மையார் எடுத்துக்காட்டாக விளங்கி னார் என்றால் மிகையில்லை.
மஞ்சள் பத்திரிகை நடத்திய லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் வெள்ளை அரசு தவறாக எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராசா ஸ்ரீராமுலு ஆகியோர் கைது செய்யப்பட்டு பாகவருக்கும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் தண்டனை வழங்கப்பட்டு அந்தமான் தீவில் கழிக்க வேண்டும் எனத் தீர்ப்பாயிற்று. டி.ஏ.மதுரம் அம்மையார் செய்வதறியாது திகைத்து தருமாம்பாளை அணுகினார். நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அக்காலத்தில் லண்டனிலுள்ள பிரிவு கவுன்சிருக்குச் செல்லுவதுதான் நடைமுறையாக இருந்தது. லண்டனுக்குச் சென்று வழக்கு நடத்துவது என்பது எளிதானதன்று. அது எல்லோராலும் இயலாது. ஆனால் டாக்டர் தருமாம்பாள் சென்னையிலுள்ள பல செல்வந்தர்களை அணுகி வழக்கினை நடத்தச் செய்து வெற்றியும் பெற்றார். ஏழிசை மன்னரும் கலைவாணரும் விசாரணைக் காலத்திற்குப் பிறகு விடுதலை பெற்று வெளியே வந்தார்கள்.
தருமாம்பாளின் தீரச்செயல்களைப் பாராட்டி டாக்டர் ஆ.சிதம்பரநாதன் செட்டியார் 1951ஆம் ஆண்டு தருமாம்பாளுக்கு ‘வீரத் தமிழன்னை’ என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.
பொதுத் தொண்டோடு பெரியோர்களைப் பாராட்டி மகிழ்வதிலும் தருமாம்பாள் முன்னின்றார். இவர் ஈ.வெ.ரா. அவர்களுக்குப் ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்கிற பட்டத்தையும், எம்.எம்.தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ என்கிற பட்டத்தையும் வழங்கியது எவ்வளவு பொருத்தம்.
தமிழின்பால் பற்றுகொண்ட தருமாம்பாள் தஞ்சை கருந்தட்டான் குடியிலிருந்த தம் பூர்வீக வீட்டை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக அளித்தார். தனது உழைப்பு, சிந்தனை அனைத்தை யும் தமிழ், தமிழ் மொழி, தமிழிசை, தமிழ் மக்கள் இவற்றுக்காக அர்ப்பணித்த அம்மையார் 1959ஆம் ஆண்டு தனது 69வது வயதில் காலமானார்.
தருமாம்பாள் பெயரில் தமிழக அரசால் டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம் எனப் பெயர் சூட்டப்பெற்று 1990 – 91ஆம் ஆண்டு முதல் ரூபாய் பத்து லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1990ஆம் ஆண்டு மே திங்கள் ராஜா அண்ணாமலை மன்றத்தில் தருமாம்பாளுக்குப் பொன்னாடைகள் போர்த்தியும் மலர் மாலைகள் சூட்டியும் கலைஞர் கருணாநிதி பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தார்.
மகத்துவம் நிறைந்த மாதர்குலத் திலகமாகத் திகழ்ந்த தருமாம்பாள் மறையவில்லை, தன் தொடர்ந்த சேவையால் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதே உண்மை.
