ஜெய்பீம் சர்ச்சைகள் அறிக்கைப் போர் ஆரம்பம்
கல்வியாளர், கம்யூனிஸ சித்தாந்தவாதிகள், மாற்று திராவிடர் கழகத் தினர் ஆகியோர் இணைந்து ஜெய்பீம் படத்துக்கு ஆதரவாகவும் நடிகர் சூர்யாவுக்கு அச்சுறுத்தல் தரும் வன்னியர் சங்கத்தினர் மற்றும் பா.ம.க.வினருக்கு எதிரானவும் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அதற்கு பா.ம.க.வின் துணைத் தலைவர் கவிஞர் திலகபாமா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவை இங்கே.
வசந்திதேவி (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்), எஸ்.வி.ராஜ துரை (மார்க்சிய, பெரியாரிய ஆய்வாளர்), பெருமாள் முருகன் (எழுத்தாளர்), ச.தமிழ்ச்செல்வன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), சொக்கலிங்கம் (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்), கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), கு.ராமகிருஷ்ணன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்) இரா.அதியமான் (ஆதித்தமிழர் பேரவை), தியாகு (தமிழ் தேச விடுதலை இயக்கம்), ப.பா.மோகன் (மூத்த வழக்குரைஞர்), இந்திரன் (எழுத்தாளர்) உள்பட நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் ஜெய்பீம் திரைப்படத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது :
‘‘வணக்கம். சமூகநீதி அரசியலை, அதிகார அத்துமீறலை முன்வைத்து வெளி யான ஜெய் பீம் திரைப்படம், தமிழக மக்களின் பரவலான ஏற்பைப் பெற்று மிகப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் தமிழ் சினிமாவுக்கு ஜெய்பீம் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ்த் திரை உலகின் நட்சத்திர நடிகரான சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார். சாதிய ஏற்றத்தாழ்வு, மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களின் துயர் சூழ்ந்த வாழ்வு ஆகியவை பற்றியது ஜெய்பீம் திரைப்படம்.
சமூகநீதி பற்றிய இந்த ஜெய்பீம் திரைப்படம், தமது சாதிக்கு எதிரானது எனத் தமிழகத்தில் உள்ள ஒரு சாரார், இந்தப் படத்திற்கும், இதன் இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு, ஜெய்பீம் படத்தைத் தயாரித்து நடித்த நடிகர் சூர்யாவுக் கும், அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்கள். ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள், ஒரு சாதியைப் பிரதிநிதித் துவப் படுத்துவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய அச்சுறுத்தலை விடுத்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் இப்பிரச்சனை பெரிதாவதற்கு முன்பே ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞான வேல், தாமாகவே முன்வந்து ஆட்சேபத்திற்கு உரியது எனச் சொல்லப்படுகிற குறியீட்டுப் பிம்பத்தை அகற்றி இருக்கிறார். இதற்குப் பின்னும் ஜெய்பீம் படக் கலைஞர்கள், அவர்தம் குடும்பத்தினர்மீது வன்முறையைத் தூண்டும் வகையில் குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சார்ந்தவர்கள், பொது ஊடகங் களில் தொடர்ந்து பேசியும், நிர்பந்தித்தும், அறிக்கைகள் வெளி யிட்டும் வருகிறார்கள்.
வன்முறையான அழுத்தங்கள் தருவதன் மூலம் கலைஞர்களைப் பணியைச் செய்வது என்பது, எதிர்காலத்தில் இனி எந்தக் கலைஞரையும் சுதந்திரமாகப் படைப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுவ தினின்றும் முடக்கிவிடும் ஆபத்து கொண்டது என நாங்கள் கருதுகிறோம். இத்தகைய போக்கு சாதி மத பேதங் கள் கடந்த பொதுச் சமூகத்தின் சொத்தான கலைஞர்களின் சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல, குடிமைச் சமூக உரிமைகளுக்கே எதிரானது எனவும் நாங்கள் உறுதியாக நம்பு கிறோம். தவிரவும் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை வலியுறுத்தி நீதிமன் றங்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி உள்ளன என்பதையும் இத்தருணத்தில் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்பு கிறோம்.
தமிழகத்தின் சமூகநீதிக்கும், சமூக அமைதிக்கும் எதிரான வன்முறையைத் தூண்டும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைச் சனநாயக இயக்கத்தினர், மனித உரிமையாளர்கள், வழக்குரைஞர் கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், பெண்நிலைவாதிகள், சமூகச் செயல்பாட்டாளர் களான நாங்கள் கண்டனம் செய்கிறோம். நீதியான, சமத்துவமான, அமைதியான தமிழகத்தை விழைகிற அனைவரும் இத்தகைய வன்முறைக்கு எதிராக, எம்முடன் இணைந்து சனநாயகக் கடமையாற்ற வருமாறு கனிவுடன் அழைக்கிறோம். நன்றி.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. துணைத் தலைவர் கவிஞர் திலகபாமா அறிக்கை இங்கே…
“பேச்சுரிமை, கருத்துரிமை, ஜனநாயகம் என்கிற வார்த்தைகளுக்கு எல்லாம் தாங்கள் மட்டுமே ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள் என்கிற திமிருடன் உலா வரும் ஒரு இனவெறி கும்பல் – வன்னியர் களுக்கு எதிராகவும் ஜெய்பீம் படத்துக்கு ஆதரவாகவும் கூட்டறிக்கை விடுத்துள்ளது.
இந்த கும்பல் முழுமையும் வன்னியர்களுக்கு எதிரான ஆழ்மன வன்மத்தால் பீடிக்கப்பட்ட மன நோயாளிகள் கும்பல் ஆகும்.
எடுத்துக்காட்டாக, தமிழ்த் தேசியம் அமைந்தால் வன்னியர்களை நாடு கடத்து வோம் என்று சொன்ன திருமுருகன் காந்தி; தைலாபுரம் தோட்டத்தில் வெடிகுண்டு வீசுவேன் என்று சொன்ன கீற்று நந்தன்; வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கவே கூடாது என்று கொந்தளித்த தியாகு, கொளத்தூர் மணி – இப்படி பல மனநோயாளிகள்தான் கூட்டறிக்கையின் பெயரில் தமது இனவெறி அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளனர்.
—————
“வன்னிய போபியா என்றால் என்ன?”
வன்னியர்கள் மீதான தேவையற்ற வெறுப்புணர்வு, அச்சம், தப்பெண்ணம், ஓரவஞ்சனை உள்ளிட்ட வற்றை வன்னியபோபியா என வரையறுக்கலாம். தமிழ்நாட்டில் வன்னியர் என்கிற ஒரு சமூகம் இருக்கவே கூடாது, அவர் களை எல்லா வகைகளிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற இனவெறி யாக இது வெளிப்படுகிறது.
தமிழகத்தில் குறிப்பிட்ட சிலருக்கு இந்த வன்னியபோபியா மனநோய் பீடித்துள்ளது. இவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, ‘வன்னியரல் லாதோரிடம்’ ஒரு பொதுவான ‘வன்னியர் எதிர்ப்பு மனநிலையை’ பரப்பி வைத்துள்ளனர். வன்னியர் கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் இந்த மனநோய் தான் காரணம் ஆகும்.
ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் ‘இனவெறியின் ஒரு வடிவம்’ ஆகும். யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமி யர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத் தப்படுகிறது.
அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம். மனித உரிமைகள் கோட்பாடுகளின்படி இவற்றை “racism, racial discrimination, xenophobia and related forms of intolerance” என அழைக்கிறார்கள்.
—————
“இனப்படுகொலை செயல்திட்டம்”
ஒரு சமுதாயத்தின் மீது திட்டமிட்டு கட்டுக்கதைகளை சுமத்துவது சாதாரண மான செயல் அல்ல. அது அந்த சமுதாயத்தை முழுமையாகவோ, பகுதியாகவோ அழித்தொழிப்பதற்கான இனப் படுகொலை செயல்திட்டத்தின் முதல் படிநிலை ஆகும் (Genocide – intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such).
1. ஒரே மாதிரியான எதிர்மறைக் கருத்துகள் (Negative stereotypes) தப்பெண் ணமாக/முன்முடிவாக (prejudice) மாறுதல்,
2. தப்பெண்ணம் வெறுப்பு பேச்சாக (Hate Speech) வெளிப்படுதல்,
3. வெறுப்பு பேச்சு என்பது வெறுப்புக் குற்றத்தை (Hate Crime) தூண்டுதல்,
4. வெறுப்புக் குற்றம் இனப்படுகொலையாக (Genocide) மாறுதல்
– என்கிற படிநிலையில் தான் உலகெங்கும் இனப்படுகொலை நடத்தப்பட்டது.
—————-
“தமிழ்நாட்டில் நடப்பதும் இன அழிப்பு சதிதான்”
1. ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் வன்முறையானவர்கள் என்கிற கருத்துகள் பரப்பப்பட்டுள்ளன. இதுபோன்று பல வடிவங்களில் வன்னியர்கள் குறித்த கட்டுக்கதைகள், வன்னியர்கள் குறித்த தப்பெண்ணமாக/முன்முடிவாக மிக வலுவாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது (Negative stereotypes and prejudice).
2. இதன் தொடர்ச்சியாக, இப்போது கூட்டறிக்கை கும்பலை சேர்ந்தவர்கள் பல இடங்களில் வன்னியர் எதிர்ப்பு கருத்துகளை மிக அதிகமாக உமிழ்கின்றனர். “வன்னியர்களை இழிவாக பேசுது நியாயம் தான். ஏனெனில், வன்னியர்கள் தவறானவர்கள், அவர்களை தவறாகத் தான் பேச வேண்டும்” – என்கிற தப்பெண்ணம்/முன்முடிவு மிக வலுவாக நிலைப்பெற்றுள்ளது (Violent abuse becomes more acceptable) என்பதன் எடுத்துக்காட்டு இதுவாகும்.
3. வன்னியர்களும், பொதுச் சமூகமும் இப்போது போல எப்போதும் இவற்றை அமைதியாக வேடிக்கை பார்ப்பது தொடருமானால், அடுத்தக் கட்டமாக – “வன்னியர்களை தாக்கலாம், கொலை செய்யலாம், அவர்களது உடைமை களை கொள்ளை அடிக்கலாம், அவர்கள் வீட்டு பெண்களை என்ன வேண்டு மானாலும் செய்யலாம்” – (Escalation of racist abuse. Physical violence and hate crimes) என்கிற காலமும் வரும்.
4. இவ்வாறாக, வன்னியர்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் மிகப்பெரிய இன அழிப்பு (Genocide) சதியில் ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுகின்றது என நம்பக்கூடிய அளவிலேயே ஜெய்பீம் படம் தொடர்பான வன்னியர் எதிர்ப்பு செய்திகள் அமைந்துள்ளன.
—————-
“வெறுப்பு கட்டுக்கதை: ஒரு பேரழிவு ஆயுதம்!”
சமுதாயங்களுக்கு எதிரான கட்டுக்கதைகள் சாதாரணமானவை அல்ல. அவை தான், மாபெரும் இனப்படுகொலையின் தொடக்கம் ஆகும். தமக்கு தெரிந்த வர்கள், சமூகத்தில் பிரபலமான நபர்கள் என பலராலும் ஒரு சமுதாயத்தை குறித்த தப்பெண்ணம் ஒரே மாதிரியாக பரப்பப்படும் போது, காலப்போக்கில் அந்த தப்பெண்ணம் உண்மை தான் என்று பலராலும் நம்பப்பட்டுவிடுகிறது.
கூடவே, இயல்பான நிகழ்வுகளை திரித்து சுட்டிக்காட்டுதல், புள்ளிவிவரங் களை தமக்கேற்ற வகையில் மாற்றி அளித்தல் என பலவிதமான கதை யாடல்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி அந்த தப்பெண்ணம் வலுவாக உறுதி செய்யப்படுகிறது.
ஒரே மாதிரியான எதிர்மறைக் கருத்துகளும் (Negative stereotypes) அவை உருவாக்கும் தப்பெண்ண மும் (prejudice) மிகமோசமான ஆபத்தை உருவாக்கக்கூடிய பெரும் கேடுகள் ஆகும். உலகின் மிக மோசமான கொடூர ஆயுதம் என்பது அணுகுண்டு இல்லை. மாறாக, இத்தகையை எதிர்மறை தப்பெண் ணங்கள் தான் கொடூரமான அழிவு ஆயுதங்கள் ஆகும்.
நேரடையாகவோ, சமூக ஊடகங்களின் வழியாகவோ ஒரே குழுவை, அல்லது ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக சேரும்போது – தமக்கு எதிரானதாக கருதிக்கொள்ளும் வேறொரு சமூகம் குறித்து இத்தகையை தப்பெண்ணத்தை வலுவாக நம்புகிறார்கள்; பரப்புகிறார்கள்.
இந்த தப்பெண்ணம் (prejudice) மீதான நம்பிக்கை ‘வெறுப்பு பேச்சு’ (Hate Speech) என்கிற நிலையில் இருந்து, வெறுப்பு குற்றம்’ (Hate Crime) என்கிற அடுத்த நிலைக்கு மாறுகிறது. மாபெரும் வன்முறை நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன. சாதாரணமானதாகக் கருதப்படும் தப்பெண்ணம்தான் – மிகப்பெரிய வெறுப்பு குற்றமாக மாறுகிறது. ஆனால், வெறுப்பு குற்றம் என்பதும் அதன் முடிவு அல்ல. மாறாக, ஒரு இனத்தை முற்றிலுமாக அழித்து முடிக்க வேண்டும் என்கிற இனப்படுகொலை நோக்கம் தான் அதன் இறுதி இலக்கு ஆகும்.
இவ்வாறாக, ஒரே மாதிரியான எதிர்மறைக் கருத்துகள் (Negative stereotypes) தப்பெண்ணமாக (prejudice) மாறுதல், தப்பெண்ணம் வெறுப்பு பேச்சாக (Hate Speech) வெளிப்படுதல், வெறுப்பு பேச்சு என்பது வெறுப்புக் குற்றத்தை (Hate Crime) தூண்டுதல், வெறுப்புக் குற்றம் இனப்படுகொலையாக (Genocide) மாறுதல் – என்கிற படிநிலையில் தான் உலகெங்கும் இனப்படுகொலை நடத்தப்பட்டது.
—————-
வெறுப்பு பிரச்சாரங்கள் (Hate Propaganda) குறிவைக்கப்படும் சமூகத்தை மட்டு மல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் வல்லமை வாய்ந்தவை ஆகும். வெறுப்புக் குற்றம் என்பது ஒரு நாட்டில் வாழும் எந்தவொரு மனிதரையும் தனித்து விடுவதில்லை. ‘குற்றம் செய்தவர்களுக்கு தானே பாதிப்பு. அதில் தொடர்பில்லாதவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை’ என யாரும் தப்பிச்சென்றுவிட முடியாது. உலகின் மேம்பட்ட நிலையை அடைந்த பல நாடுகள் இத்தகைய குற்றங்களால் படுபாதகமான கேடுகளுக்கு மாறியுள்ளன. வறுமை நிலையில் இருந்து மீண்ட பல நாடுகள் இந்த குற்றங் களால் மீண்டும் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளன.
தமிழ்நாட்டில் கட்டமைக்கப்படும் சமுதாய அடிப்படையிலான கட்டுக்கதை களை முன்கூட்டியே தடுத்து, தமிழ்நாட்டின் அனைத்து மக்களையும் காப் பாற்ற வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.
எனவே, வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை வன்னியர்களுக்கு எதிரான மன நோயாளிகள் நிறுத்த வேண்டும் என்பது ஜனநாயகத்திலும் மனித உரிமைகள் கோட்பாட்டிலும் நம்பிக்கை உள்ளவர்களின் கோரிக்கையாக இனியாவது இருக்க வேண்டும்.