குடியரசு நாடாக மலர்ந்தது பார்படாஸ் தீவு
400 ஆண்டுகளுக்குப் பின்னர் குடியரசு நாடாக பார்படாஸ் தீவு மாறியுள்ளது. கரீபியன் கடலில் அமைந்துள்ள குட்டித்தீவு பார்படாஸ். சுமார் 3 லட்சம் பேர் வசிக்கும் கரீபியன் தீவுகளில் உள்ள மிகச் சிறிய நாடு பார்படாஸ். இந்த நாடு சுற்றுலா வருவாயைப் பெரிதும் சார்ந்துள்ளது.
வடஅமெரிக்கா அருகே உள்ள கரீபியன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த பார்படாஸ், 1966, நவம்பர் மாதம் 30ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. எனினும் பிரிட்டன் அரசி எலிசபெத் தலைமையில் சுதந்திரமான காமன் வெல்த் நாடாகச் செயல்பட்டு வந்தது. கடந்த 2008ல் பார்படாஸ், குடியரசு நாடாக மாறுவது குறித்து பொது ஓட்டெடுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் பின்னர் தள்ளிப் போடப்பட்டது.
கடந்த ஆண்டு அரசியல் ரீதியிலான முடியாட்சி முடிவுக்கு வர உள்ளதாக பார்படாஸ் அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேசிய விடுதலை வீரர்கள் நினைவு சதுக்கத்தில் இருந்து பிரிட்டன் துணை அட்மிரஸ் ஹோராடியோ நெல்சன் சிலை அகற்றப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் பார்படாஸ் பார்லிமென்ட்டில் முதன்முறையாக அதிபர் பதவிக்கு, கவர்னர் ஜெனரல் சான்ட்ரா மாசான் என்ற முன்னாள் நீதிபதியைத் தேர்வு செய்தது. இந்நிலையில் பார்படாஸ் தீவின் 55வது சுதந்திர தின விழாவும், குடியரசு நாடாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தன. இந்நிகழ்ச்சி டிவி வாயிலாக உலகம் முழுதும் ஒளிபரப்பியது. குடியரசு நாடு அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன
கேரி சோபர்ஸ், மால்கம் மார்ஷல் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களைத் தந்த குட்டித்தீவு. “Little England” என அழைக்கப்படும் பார்படாஸ் கரீபியன் தீவுகளில் செல்வச்செழிப்புமிக்க வளமான நாடாகும்.
400 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்த இங்கிலாந்துக்காரர்கள், தீவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு பார்படாஸை தங்களது அடிமை நாடாக மாற்றினர். அன்று முதல் இந்தத் தீவு இங்கிலாந் தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. தற்போது வரை இந்தத் தீவு நாட்டின் அதிகாரபூர்வத் தலைவ ராக இங்கிலாந்து ராணி எலிசபெத் இருந்து வந்தார்.
இந்தச் சூழலில் கடந்த 20 ஆண்டுகளில் இந்தத் தீவு, காலனி ஆதிக்கத்தில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதற்கான பணிகளை முன்னெடுத்தது. அதன்படி கடந்த மாதம் தீவின் கவர்னர் ஜெனரலாக இருந்து வந்த 72 வயதான சான்ட்ரா மாசான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பார்படாஸ் தீவு, சுதந்திர குடியரசாக மாறுவதாக அறிவித்தார்.
புதிய குடியரசாக அறிவிக்கும் விழா தலைநகர் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. சாம்பர்லின் பிரிட்ஜ் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கூடி யிருந்த நிலையில் நள்ளிரவு 12 மணியானதும் புதிய குடியரசு பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து ராணியின் கொடி இறக்கப்பட்டு, பார்படாஸ் நாட்டின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தேசிய கீதமும் பாடப்பட்டது.
பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
அதிபராக தனது முதல் உரையை நிகழ்த்திய சான்ட்ரா மாசான், இந்தத் தருணத்திலிருந்து, ஒவ்வொருவரும் புதிய குடியரசின் வாழும் உருவமாக மாறுவார்கள் என பெருமிதத்துடன் கூறினார். charge and call என்ற முழக்கத்தை முன்வைத்த மாசான், நாட்டின் எதிர்காலத்தை ஒவ்வொருவரும் வடிவமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் என குடியரசு தின விழா களைகட்டியது.
பார்படாசின் கொடி, சின்னம் மற்றும் தேசிய கீதம் அப்படியே இருக்கும் எனவும், ஆனால் சில குறிப்புகள் மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், பார்படாஸ் 54 நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.