பழங்குடியினப் பெண்கள் பாலியல் வழக்கில் பத்தாண்டுகள் இழுத்தடிப்பு

 பழங்குடியினப் பெண்கள் பாலியல் வழக்கில் பத்தாண்டுகள் இழுத்தடிப்பு

பாலியல் செய்யப்பட்ட நான்கு பழங்குடியினப் பெண்கள் நியாயம் கிடைக்க சட்டப்படிப் போராடி வருகிறார்கள். அந்த வழக்கு பத்து ஆண்டுகள் ஆகியும் விசாரணை தொடங்காத நிலையில் இருப்பது கொடுமையானது.

தற்போது இருளர் இன மக்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியது படம் ஜெய்பீம். இந்தப் படம் வந்ததும் இருளர் சமுதாயத்துக்கு விடிவு கிடைத்ததாக நமக்குத் தோன்றலாம். ஆனால் இந்தப் படத்தில் காட்டப்பட்ட கொடுமையைவிட மிகக் கொடுமையான சம்பவம் அதுவும் நான்கு இருளர் சமுதாயப் பெண்களைக் காட்டுப் பகுதியில் போலீஸ்காரர்கள் கற்பழித்தாகக் கூறப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் காவல் துறையால் தட்டிக்கழிப்பட்டு பத்தாண்டுகளைக் கடந்துவிட்டது. இன்னும் அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பது இந்திய நாட்டில் நடக்கும் அரச பயங்கரவாதமாகப் பார்க்கப்படுகிறது.

பழங்குடியினப் பெண்களை ஐந்து போலீஸ்காரர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு 10 ஆண்டுகள் ஆகியும் விசாரணை தொடங்கப்படாமல் இருப்பது குற்றம் சாட்டப்பட்ட போலீசாரைக் காப்பாற்ற முயற்சிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தாலுகா டி.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் நாலு பேரை திருட்டு வழக்கு விசாரணைக் காக கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி அழைத்துச் சென்ற போலீசார் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இருந்தபோதிலும் இதுவரை அந்த வழக்கு, விசாரணைக்காக எடுத்துக்கொள் ளப்படவில்லை. இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையுடன் சேர்த்து ஜாமீன் தொடர்பான உத்தரவு நகல்கள் தாக்கல் செய்யப்படாததால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் முறையான ஆவணங்களை போலீசார் இதுவரை கோர்ட்டில் தாக்கல் செய்யாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட முக்கியமான இந்த வழக்கில் விசாரணை அதிகாரி, தேவையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் இருப்பது வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்படுகின்றனரோ என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டு கின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருந்து வரும் தமிழ்நாடு பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த பி.வி.ரமேஷ் என்பவர் கூறியதாவது, “பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு, அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதற்கட்ட நிவாரணம் வழங்குவதாக அறிவித்தபோது அதை ஏற்க மறுத்து, நீதி கிடைக்கும் வரை நிவாரணம் பெற மாட்டோம் என்பதில் அந்தப் பெண்கள் உறுதியாக இருந்தனர்.

இந்த வழக்கில் குறிப்பிட்ட காலத்தில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டப்பட்ட திருக்கோவி லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.சீனிவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், போலீஸ்காரர்கள் ஆர்.தனசேகரன், ஆர்.பக்தவச்சலம், கார்த்திகேயன் ஆகிய போலீசாரின் பணி இடை நீக்கத்தை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதன் காரணமாகக் குற்றம் சாட்டப்பட்ட போலீசார், வெவ்வேறு மாவட்டங்களில் பணியில் இருந்து வருகின்றனர்.

இந்தப் புகாரைத் திரும்பப் பெற வைப்பதற்கான முயற்சியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசாரில் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு ஈடுபட்டார். தேவையான ஆவணங்களைத் தாக்கல் செய்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில்தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும்” என்றார்.

திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு கூறும்போது, ‘‘குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், விசாரணைக்காக குற்றப் பத்திரிகை ஏற்கப்படவில்லை. ஜாமீன் தொடர்பான உத்தரவு நகல்கள் காணா மல் போனதால் குற்றப்பத்திரிகையை கோர்ட்டு ஏற்கவில்லை’’ என்றார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஆஜராகி வரும் வக்கீல் பிரீதா ஞானமணி கூறும்போது, ‘‘குற்றப்பத்திரிகையில் உரிய திருத்தம் மேற் கொண்டு மீண்டும் தாக்கல் செய்யப்படாததால் வழக்கு எண் வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு, திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டருக்கு கடந்த ஜூலை மாதம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

ஜாமீன் தொடர்பான உத்தரவு நகல்கள் காணாமல் போய் இருந்தால் அதனைப் பெற்று சில நாட்களில் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் கோர்ட்டு அதனை நினைவுபடுத்தாது. போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும்’’ என்றார்.

10 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் கோர்ட்டு விசாரணை தொடங்கப்படா மல் இருப்பது விசாரணையை தோற்கடிக்கும் நோக்கில் விசாரணை அதிகாரிகள் செயல்படுவதையே காட்டுகிறது என்று குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் விரை வாக விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் “கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய இவ்வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகைகூட இன்னும் தாக்கல் செய்யப்படாதது கவலையும், வேதனையும் அளிக்கிறது.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் அங்கமாக இருந்த திருக்கோவிலூரை அடுத்த தி.மண்டபம் பகுதியில் உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் காசி. அவரை சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன் இதே நவம்பர் 22ஆம் தேதி திருக்கோவிலூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அன்றிரவு இருளர் குடியிருப்புக்குள் நுழைந்த காவலர்கள் சோதனை என்ற பெயரில் அங்குள்ள வீடுகளைச் சூறையாடினர்.

பின்னர் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை விசாரணைக்காக, ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் என இரு வாகனங்களில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் பெண்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டும் அங்குள்ள காட்டுக்குள் ஓட்டிச் சென்ற காவலர்கள், அங்கு 4 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் ஒருவர் மகப்பேற்றை நோக்கியிருந்தவர்; மற்றொருவர் 17 வயதுச் சிறுமி. அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி பல்வேறு சூழல்களில் மிரட்டி, இது குறித்துப் புகார் கொடுக்காமல் தடுக்க முயன்றனர். அதையும் மீறி அந்தப் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து இழுபறிக்குப் பிறகுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாததை நியாயப்படுத்த முடியாது. வழக்கு தாமதப்படுத்தப்படுவதற்கு காவல்துறைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக குற்ற வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீண்ட தாமதத்திற்குப் பிறகு, சில ஆண்டுகளுக்கு முன்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அக்குற்றப் பத்திரிகையில் உள்ள குறைகளைக் களைந்து அனுப்பும்படி காவல்துறையிடம் நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், காவல்துறை இன்று வரை திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அதன்பின் இந்த வழக்கு விழுப்புரம் வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படும். திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இப்போது தாக்கல் செய்யப்பட்டால்கூட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட ஓரிரு ஆண்டுகள் ஆகும்.

பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஏற்கெனவே 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கு நீதி கிடைக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்பதே நீதியை மறுக்கும் செயல்தான். ஆனால், அதற்கும்கூட வாய்ப்பளிக்காமல் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை யைக் காவல்துறை முடக்கி வைத்திருப்பது இந்த வழக்கின் விசாரணையைச் சீர்குலைக்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் தொடக்கத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும்கூட, பின்னர் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டனர். அவர்கள் இப்போதும் பணியில் உள்ளனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கைக் காவல்துறை தாமதப்படுத்துவதாகத் தெரிகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நீதி மறுக்கப்படுவது நியாயமல்ல.

திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் தற்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவுக்கு நன்றாகத் தெரியும். இந்தக் கொடிய நிகழ்வு நடந்தபோது வடக்கு மண்டலக் காவல்துறை தலைவராக இருந்தவர் அவர்தான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததும் அவர்தான். அதன் பிறகுதான் இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவ்வழக்கு குறித்த அனைத்து உண்மைகளையும் அறிந்த அவருக்கு, இந்த வழக்கை இயல்பான முடிவுக்குக் கொண்டுவரும் கடமை உள்ளது.

இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகையை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் இந்த வழக்கை விழுப்புரம் வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் டாக்டர் ராமதாஸ்.

மூலவன்

1 Comment

  • சில சமயங்களில்
    நீதி மன்றங்கள்
    அநீதியின் மன்றங்கள்.
    மிகவும் வேதனையாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...