எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 10 | இந்துமதி

 எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 10 | இந்துமதி

“என்ன மது பார்க்கறீங்க..? நீங்க கூட வெறும் பியருக்கு அலற்றுகிற பிறவிதானா…?” சித்ரா கேட்டாள்.

“நோ… நோ… அப்படியில்லை…” என்று தயங்கினான் மது.

“பின்ன என்ன தயக்கம்..? நான் போய் கார்லேருந்து பியர் டின்களைக் கொண்டு வரட்டுமா…?”

மது மெதுவாகத் திரும்பி ஷைலஜாவைப் பார்த்தான். அவளது முகத்தில் தெரிந்த மிரட்சி அவனை உடனே பதில் சொல்ல விடவில்லை.

“என்ன அவளைப் பார்க்கறீங்க…? அவ அனுமதிச்சால்தான் சரி சொல்லுவீங்களா…?”

“இல்லை… அதுக்கில்லை…ஷைலஜாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. அவளை விட்டுவிட்டு நாம் மட்டும் சாப்பிடறது சரியில்லை. அதனால் யோசிக்கிறேன்.”

“என்னை விட்டுட்டு நீங்க மட்டும் சமுத்திரத்துல நீந்தப் போகலையா…? நான் தனியாகக் கரையில் நின்று உங்களை வேடிக்கை பார்க்கலையா… அந்த மாதிரி இப்பவும் வேடிக்கை பார்க்கிறேன், அவ்வளவுதானே..?”

ஷைலஜாவின் குரலில் வருத்தமும், வேதனையும் இழையோடின. அது தெரிந்தும் தெரியாத மாதிரி பேசினாள் சித்ரா.

“ஷைலுவே பச்சைக் கொடி காட்டியாச்சு… இன்னும்கூட என்ன தயக்கம் மது..?”

ஆனாலும் மது யோசித்தான். காலையில் மகாபலிபுரம் கிளம்பினதிலிருந்து ஷைலுவை வருத்தப்படுத்துகிற விஷயமாக நிறையச் செய்தயிற்று. பாவம் ஷைலு. இதற்கு மேலும் அவளை வருத்தப்படுத்தக் கூடாது. மேலும் சித்ராவின் உடம்பு இன்னமும் தோளைவிட்டு இறங்காமல் இருக்கிற பாவனையிலேயே மனம் லயித்துக் கிடக்கிறது. ஷைலஜாவிடம் சந்யாசிக் கதையை உதாரணம் சொல்லிவிட்டானே தவிர சீடனைப்போல் மனசுக்குள் இன்னமும் அவளைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறான். கள்ளத்தனமாக உணர்வுகள் அதை ரசித்துக் கொண்டுதான் இருக்கிறது. உள் மனது அதிலிருந்து விடுபட மறுக்கிறது. மேல் மனது உள் மனதைக் காட்டிக் கொடுக்காமல் போர்வை போர்த்து மறைத்திருக்கிறது, இந்த உள் மனது திருட்டுத் தனமாக எட்டி எட்டிப் பார்க்கிறது. இந்த நிலையில் ஏற்கெனவே குரங்காக அலைபாய்கிறபோது கொஞ்சம் சாராயத்தையும் ஊற்றிக் கொடுத்த மாதிரி ஆகிவிடப் போகிறதே என்ற பயந்தான். வெறும் பியர் தான் என்றாலும் வேண்டாமென மறுப்பதுதான் உசிதம் என்று தோன்ற, வேண்டாமென்று தலையாட்டினான்.

“இல்லை சித்ரா… வேண்டாம். பியர் குடிக்கிறதை இன்னொரு நாள் வச்சுக்கலாம்.”

“இன்னொரு நாள்ன்னால் எப்போ…?”

“இந்த மாதிரி மறுபடியும் வரமாட்டோமா என்ன..?”

“நாம் இரண்டு பேர் மட்டும் தனியாகவா?”

அந்தத் தைரியம், துணிச்சல் இரண்டிலும் அயர்ந்து போனான் மது.

‘என்ன கேட்கிறாள் இவள்….’

“என்ன அப்படிப் பார்க்கறீங்க… நான் எதையோ தப்பாகக் கேட்டுட்ட மாதிரியில்ல இருக்கு உங்க பார்வை!”

“பின்ன…நீ கேட்டது தப்பு இல்லாமல், ரொம்ப சரியா..?” குமுறி முகம் சிவக்கக் கோபத்தில் தடுமாறினாள் ஷைலஜா.

“இதுல என்ன தப்பு இருக்கு? நீ குடிக்கமாட்டேன்ற… உன்னை விட்டுட்டு நாங்க மட்டும் குடிச்சால் சரியாக இருக்காதுன்றது மதுவோட அபிப்பிராயம். இன்னொரு நாளைக்கு வச்சுக்கலாம்னால் அப்போதும் இதே நிலைமைதான். உன்னை விட முடியாது. அதனால் தான் கேட்டேன், நாம் தனியாக வரப் போறோமான்னு… இதுல தப்பு எங்கிருந்து வந்தது..?”

“ஓ.கே. இப்போ இதை விடுவோம். வேற ஏதாவது பேசலாம். நான் கெஸ்ட் ஹவுஸ் பையனைக் கூப்பிட்டு மூணு லிம்காவோ, தம்ஸ் அப்போ கொண்டு வரச் சொல்றேன். லெட் அஸ் ஷேர் இட்.”

“இல்லை. வேணாம். நீங்க ரெண்டு பேரும் தம்ஸ் அப் குடியுங்க, லெட் மி ஹேவ் மை ஹொய்னகன்.” என்று கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில்
போனாள் சித்ரா.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ஷைலஜா, தலையில் அடித்துக் கொண்டாள். அது பிடிக்காத மதுசூதனன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“என்ன ஷைலு…?”

“இதெல்லாம் ஒரு பெண் ஜென்மமா..?”

“நோ ஷைலஜா… இந்த மாதிரியெல்லாம் கமெண்ட் அடிக்கக்கூடாது. அது தப்பு. அதுவும் முதுகுக்குப் பின்னால் குற்றம் குறை சொல்றதை ஏற்றுக்கவே முடியாது. இதுல என்ன தப்பு சொல்லு. உனக்குப் பிடிச்சதை நீ செய்யற மாதிரி அவளுக்குப் பிடிச்சதை அவ செய்யறா… நம்மால் செய்ய முடியாததை, இயலாததை தப்புன்னு சொல்லிடறதா? குறை கண்டுபிடிச்சுடறதா…?”

“நான் அவளைச் சொன்னால் உங்களுக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது..?”

“அவ இல்லை. யாரை நீ இப்படிச் சொல்லியிருந்தாலும் நான் தப்புன்னுதான் சொல்லியிருப்பேன்.”

“பொய். நானும் காலையிலிருந்து பார்த்துக்கிட்டுத்தான் வரேன், அவ பக்கம் பரியறீங்க. அவளுக்காகப் பேசறீங்க. என்னைவிட அவ உங்களுக்கு உசத்தியாகத் தெரியறா…. அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கிட்டு இறக்க மனசு வராமல் தவிக்கறீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு…? என்னை விட அவளைப் பிடிச்சுப் போச்சா…? அவளைக் காதலிசிருக்கலாம்னு தோணறதா..?”

ஒரு வினாடி அயர்ந்து போனான் மது. அவளது பேச்சிலிருந்த நிஜம் நெஞ்சைத் தொட மெதுவாகத் தலை நிமிர்ந்து பார்த்து எதையோ சொல்ல வாயெடுத்தபோது, ஒரு பிளாஸ்டிக் பை நிறைய நாலைந்து ஹொய்னகன் பியர் டப்பாக்களுடன் உள்ளே துழைந்தாள் சித்ரா.

“ஹியர்…” என்று அந்தப் பையை டீபாய் மீது வைத்தாள்.

“உங்க தம்ஸ் அப் இன்னும் வரலையா..?” என்று கேட்டாள்.
“எனக்கும் ஒரு தம்ஸ் அப் ஆர்டர் பண்ணிடுங்க மது. பியர் சில்லுன்னு இல்லை. வந்த உடனே அதை பிரிஃஜ்ஜுல வச்சிருந்தால் இப்போ சாப்பிட சரியாக இருந்திருக்கும். அதைச் செய்யாததால் இப்போ சாப்பிட முடியாது. அதனால் நீங்க சொன்ன மாதிரி இன்னொரு நாள் வச்சுக்கலாம். இப்போ தம்ஸ் அப் குடிக்கலாம்…”

மூன்று குளிர்பானங்கள் வரவழைத்து மூன்று பேரும் குடித்து முடித்தார்கள். மணி பன்னிரெண்டுகூட ஆகாததால் சாப்பிடும் வரை என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். செஸ் விளையாடலாம் என்றால் இரண்டு பேர்தான் விளையாட முடியும். சீட்டு விளையாட நான்கு பேர் வேண்டும்.

“பேசாமல் ஓடிப் பிடிச்சு விளையாடலாம்” என்றாள் சித்ரா.

“குழந்தை மாதிரி தோளில் தூக்கி வச்சிண்டால் . குழந்தைத் தனமான ஐடியாஸ் தான் வரும்.”

“சரி, நீ சொல்லு என்ன செய்யலாம்னு. பாட்டித்தனமான ஐடியாஸ் வருதா பார்ப்போம்.”

“ப்ளீஸ் ஸ்டாப் இட்” என்று சலித்துக் கொண்டான் மது. “ஒரு நாள் சந்தோஷமாக இருந்துட்டுப் போகலாம்னால் எப்போ பார்த்தாலும் ஏன் இப்படி சண்டை போட்டுக்கறீங்க…? நீங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸா, எனிமீஸான்னே தெரியலை…. இன்னும் கொஞ்ச நேரம் ஒண்ணா இருக்கப் போறோம். அதுக்குள்ள ஏன் கசந்துக்கணும்..?”

“ஸாரி மது…” என்று நிஜமாக வருத்தப்பட்டாள் சித்ரா. “ஏதோ விளையாட்டுக்குப் பேசறதாக நினைச்சுப் பேசிட்டேனே தவிர ஐ டிண்ட் மீன் எனிதிங். அது இவ்வளவு தூரம் உங்களை வருத்தப்படுத்தும்ன்னு நினைக்கலை. ஐயம் ஸாரி.”

இதிலும் மிகத் திறமையாக சித்ரா முந்திக் கொண்டு விட்டதை உணராத ஷைலஜா பேசாமல் இருந்தாள். இன்னதென்று சொல்லத் தெரியாமல் மனதை பாரமாக அழுத்திக் கொண்டிருப்பதை இறக்கி வைக்கத் தெரியாமல் தவித்தாள்.

‘எவ்வளவு பெருந்தன்மையாகப் பேசுகிறாள் இவள். மன்னிப்பு கேட்கிறாள். வருத்தப்படுகிறாள். ஆனால் ஷைலஜா வாயைக்கூடத் திறக்காமல் எவ்வளவு அழுத்தமாக இருக்கிறாள்’ என்று யோசித்த மது, சித்ராவை ஏறிட்டான்.

“எதுவும் விளையாட வேண்டாம். ஆளுக்கு ஒரு பாட்டு பாடலாம்.”

“தட் ஈஸ் எ வெரிகுட் ஐடியா, யார் முதல்ல ஆரம்பிக்கிறது…?”

“லேடீஸ் ஃபர்ஸ்ட். அதனால் உங்க ரெண்டு பேர்ல யாராவது ஆரம்பியுங்க…”

“ஷைலு.- நீ பாடேன்…”

“என்ன பாடறது..? எனக்கு இப்போ பாடற மூடே இல்லை..”

“என்னைப் பாடச் சொன்னால் என்னப் பாடத் தோன்றும்னு பாடு.”

“சினிமாப் பாட்டா..?”

“வேணாம்னால் உனக்குத் தெரிஞ்ச கர்நாடக சங்கீதமே பாடு…”

“ம்ஹூம். இவருக்குக் கர்நாடக சங்கீதம் பிடிக்காது.”

“அவருக்குப் பிடிக்கலேன்னால் என்ன ஷைலு. உனக்கு பிடிச்சுத்தானே நீ கத்துண்டிருக்க, பாடேன்.”

“எனக்கும் பிடிச்சிருக்குன்னு கத்துக்கலை. அம்மாவும், அப்பாவும் வற்புறுத்தி கத்துக்க வச்சாங்க. அதனால் கத்துக்கறேன்.”

“எதுவானாலும், கத்துக்கறே இல்லை…. கத்துக்கிறதே பாடறத்துக்குத் தானே…? பாடு.”

“சரி…” என்ற ஷைலஜா சோபாவை விட்டுக் கீழே இறங்கித் தரையில் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டாள். தொண்டையைச் சரிசெய்து கொண்டாள். பின்னர் தொடையில் தாளமிட்டவாறு “ராமதன்னு ப்ரோவரா…” பாட ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் பாட்டில் ஈடுபடாத மனது பின்னர் மெல்ல மெல்ல குழைந்து உருகத் தொடங்கிற்று. குரல் கரைந்தது. அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் பெருகிற்று. பாட்டு முடிந்த போது தன்னையும் மீறி குலுங்கிக்குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

“ஏய்.. வாட் ஈஸ் திஸ்..?”’ என்று எழுந்து அருகில் ஓடினான் மது. அவளது தோளில் கை வைத்து உலுக்கினான்.

“என்ன ஷைலு குழந்தை மாதிரி… ஏன் இப்படி அழற… ம்..?”

அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. உள் மனது வேதனைப்படத் துவங்கிற்று. “ஷைலு. ஐ லவ் யு” என்று கத்த வேண்டும் போலிருந்தது. அத்தனையும் பார்வையில் சேர்த்து அவளது முகத்தை நிமிர்த்தினான்.

“என்ன ஷைலு, எதுக்கு இப்போ அழுகை…?”

“ஒண்ணுமில்லை…” அவள் அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டபோது சித்ரா எழுந்து வந்தாள்.

“நீ என் கிட்டே வராதே… எனக்கு உன்னைப் பிடிக்கலை.” என்று அடம்பிடிக்கிற குழந்தை மாதிரி கத்தத் தோன்றியது ஷைலஜாவிற்கு. அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து முகத்தைத் தழைத்துக் கொண்டாள்.

“என்ன திடீர்னு எமோஷனலாயிட்ட ஷைலு….?”

“ஒண்ணுமில்லை. எனக்குப் பிடிக்கலை. இந்த ட்ரிப், மகாபலிபுரம், கெஸ்ட் ஹவுஸ் எதுவுமே பிடிக்கலை. நாம் போகலாம், திரும்பிப் போயிடலாம்.”

“ஓ.கே. வேணாமனால் போயிடலாம். அதுக்கு ஏன் இப்படி அழற…?”

“நான் அழுவேன். அது என் இஷ்டம். அதைப் பற்றிக் கேட்க நீ யார்..?”

“மது… கொஞ்சம் போய் கெஸ்ட் ஹவுஸ் பையனைக் கூப்பிட்டு சூடாக ஒரு கப் காபி கொண்டு வரச் சொல்லுங்க. அதைக் குடிச்சால் ஷீ வில் பி ஆல்ரைட்.”

மது பையனைத் தேடிக்கொண்டு போனதும், சித்ரா தீவிர முகபாவத்துடன் ஷைலஜாவை ஏறிட்டாள்.

“லுக் ஷைலு. பத்தயத்துல நீ தோற்றுப் போயிட்டதா ஒத்துக்க. நான் உன் மது பக்கம்கூட திரும்பலை. என்ன சொல்ற..?”

கண்களைத் துடைத்துக் கொண்டு சடாரென்று நிமிர்ந்த ஷைலஜா மெதுவான குரலில் கேட்டாள்.
“அப்படியானால் நீ பேசினது, செய்தது எல்லாம் பந்தயத்துக்காகத்தானா..?”

“நமக்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்தையே நீ மறந்துட்டியா..?”

“மறக்கலை.”

“பின்ன…. அதுக்காக நான் எந்த வழியையும் பிரயோகிப்பேன்னு சொல்லலையா..?”

“சொன்ன…”

“இப்போ ஏன் இப்படி அழற… தோற்றுப் போயிட்டதா ஒத்துக்கறியா..?”

“நோ, அது எப்படி முடியும்? மது உன்கிட்ட பேசறார், பழகறார். அலைல அடிச்சுக்கிட்டுப் போயிடப் போறியேன்னு தூக்கிக் கொண்டு வந்தாரே தவிர வேற என்ன செய்தார்..?”

“போடி பைத்தியம், வேற ஒண்ணும் செய்யலையில்ல. பின்ன எதுக்கு அழற..?”

“தெரியலை, அழுகை வாறது.”

“ஏன் வர்றதுன்னு உன்னை நீயே கேட்டுப் பாரு. எதுக்காக என் மேல கோபப்படற, ஏன் என்னைத் திடீர்னு வெறுக்க ஆரம்பிக்கறேன்னு யோசி.”

“சீ.. சீ… என்ன சொல்ற…? உன்னை எப்படி என்னால் வெறுக்க முடியும்..?”

“பொய் சொல்லாதே. நான் பியர் டின் கொண்டு வரப் போனபோது நீ என்னைத் திட்டலை..?”

“நீ கேட்டியா..?”

“ஆமாம்.”

“கோபத்துல எதுவோ சொன்னேன்.”

“ஏன் கோபம் வருது….?”

“அதான் தெரியலைன்னு சொன்னேனில்லை…”

“மது என் பக்கம் திரும்பிடப் போறாறேன்ற பயம். இப்பவே திரும்ப ஆரம்பிட்டாரோன்னு நீ சந்தேகப்படற…”

“இல்லை. நிச்சயமா இல்லை.”

“அந்த நம்பிக்கை இருக்கு இல்ல. அப்போ ஏன் அழுது அமர்க்களப்படுத்தற. நாம் ரெண்டு பேரும் மனசு ஒப்பித் தானே பந்தயம் வச்கண்டோம்.. ஒண்ணு நீ தோற்றுப் போயிட்டேன்னு சொல்லணும். இல்ல நான் சொல்லணும். அது வரை மோதித்தானே ஆகணும்..?”

“……………….”

“என்ன பேசாமல் இருக்கே….? தோற்றுப் போயிட்டேன்னு சொல்லிடு. பேசாமல் பந்தயத்தைக் கைவிட்டு இந்த மகாபலிபுரத்தை விட்டுக் கிளம்பிடலாம். அதுக்கப்புறம் நான் உன் மதுவைப் பார்க்கக்கூட மாட்டேன்.”

“நோ, நீதான் தோற்றுப் போனதா ஒத்துக்கோயேன்.”

“ஸாரிம்மா. இதுவரை தோல்வியே காணாதவம்மா நான்.”

“அப்போ நானும் ஒத்துக்கத் தயார் இல்லை.”

“சரி. அப்படின்னா கடைசி வரை பார்த்துடலாம்.”

“பார்க்கலாம்.”

“குட். இந்த மாதிரி அழறதையெல்லாம் நிறுத்திட்டு எழுந்திரு. பீ ஸ்போர்ட்டிவ் ஐஸே…. எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டு சமாளிக்கக் கத்துக்கணும். கோபம், அழுகை இதெல்லாம் யாருக்கு வரும் தெரியுமா? சுயபலம் இல்லாதவங்களுக்கு. தன்னம்பிக்கை இல்லாதவங்களுக்கு. தாழ்வு மனப்பான்மை உள்ளவங்கதான் தங்கள் பலவீனத்தை அழுகையா, கோபமா வெளிப்படுத்துவாங்க. நீ அப்படியா…?”

“இல்லை. எனக்கு பரிபூரண நம்பிக்கை இருக்கு. தைரியம் இருக்கு.”

“அப்படின்னா அழுகை, கோபம், வெறுப்பு எல்லாத்தையும் விட்டுட்டு சாதாரணமாக என்னை எதிர்த்துப் போராடு.”

அதன் பின் மது கொண்டு வந்த காபி குடித்து முகம் கழுவி பளிச்சென்று வெளியில் வந்தாள். மதுவைப் பார்த்துப் பளீரென்று சிரித்தாள்.

“ஐ’ம் ஆல்ரைட் நெள..”

அவன் அவள் முகத்தையே பார்த்தானே தவிர, ஒன்றும் சொல்லவில்லை. அதன் பின்னர் சாப்பிட்டு, கடற்கரை வரை ஒரு முறை போய் வந்து, காபி குடித்து கிளம்பிய போது மது கார் ஓட்டினான், ஷைலஜாவைப் பக்கத்தில் உட்காரச் சொன்ன சித்ரா பின் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டாள். சிறிது தூரம் போனதும் கேட்டாள்.

“ஷைலுவைத் தவிர வேற யாரும் பாடலையே மது. நான் இப்போது பாடட்டுமா….”

“ஓ. எஸ். வித் பிளெஷர்…”

“நிஜமாகவே பாடிடுவேன். அப்புறம் நீங்க பயத்துக்கக் கூடாது.”

வாய்விட்டுச் சிரித்தான் அவன்.

“இல்லை. தைரியமாகப் பாடலாம் சித்ரா, ஷைலஜாவின் பாட்டுக்கே பயப்படாதவன் நான். அதனால் நீங்க பாடலாம்.”

“என்னை ‘ங்க’ல்லாம் போட்டுக் கூப்பிட்டால் பாட மாட்டேன்.”

“சரி, பாடு.”

பாட ஆரம்பித்தாள் சித்ரா.

உன்னை நான் சந்தித்தேன் – நீ
ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் – என்
ஆலயத்தின் இறைவன்

சடாரென்று தன்னையும் மீறி காரை பிரேக் போட்டு நிறுத்தினான் மது. பாட்டை நிறுத்திவிட்டு சித்ரா கேட்டாள்.

“என்ன மது….?”

“ஒண்ணுமில்லை, நாய் ஒண்ணு குறுக்கே ஓடித்து. அவ்வளவு தான். நீ பாடு…”

மீண்டும் வண்டி ஓட, சித்ரா பாட துவங்க ‘எந்த நாயும் குறுக்கே ஓடலை’ என்ற உண்மை ஷைலஜா மனதில் உறைக்க, ஷைலஜா கண்களை மூடி கடவுளை மனதில் நிறுத்தினாள்.

‘எதற்கு இந்த வீண் பிடிவாதமும், வேண்டாத போட்டியும்… பேசாமல் விட்டுவிடலாமா?’

-தொடரும்…

ganesh

1 Comment

  • விறுவிறுப்பாக செல்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...