மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும். வழக்கமாக 2 நாட்கள் சதய விழா கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஒருநாள் விழாவாக நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவலால் ஒருநாள் விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1036-வது சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவில் முதல் நிகழ்ச்சியாக காலை 6:30 மணிக்கு பெரிய கோவிலில் டி.கே.எஸ். பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 7 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு புத்தாடைகளை கட்டளை தம்பிரான் சுவாமிகள் வழங்கினார்.

தமிழக அரசு நடத்திய விழாவில்

பின்னர் தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கோவிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் பாராயணத்தை பாடினர். முன்னதாக கோவில் வளாகத்தில் யானையில் வைத்து திருமுறை வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தமிழில் பாடிய பாராயணத்தை கேட்டு ரசித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதையடுத்து பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு கட்டளை தம்பிரான் சுவாமிகள் தலைமையில் சந்தனம், மஞ்சள், மூலிகைகள், வில்வஇலை, விபூதி, இளநீர், பசும்பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், அன்னம் உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பெருவுடையார் பெரியநாயகி திருமேனிகளுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் மனம் உருகி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று மாலை 6 மணிக்கு கலைமாமணி பண்ணிசை பேரறிஞர்கள் திருமுறைக் கலாநிதிகள் பழனி சண்முகசுந்தர தேசிகர், கரூர் குமார சாமிநாத தேசிகர் குழுவினர்களின் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

ராஜராஜ சோழனின் வீரமும் பட்டப் பெயர்களும்

சோழ சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது சோழர் குலத்தில் தோன்றிய அரசர்களின் ஆற்றலே. அத்தகைய ஆற்றல் மிகுந்த சோழ மன்னர்களுள் தலைசிறந்தவர் இராஜராஜன்.

இராஜராஜன் என்று வரலாற்றில் இடம்பெற்ற மாமன்னரின் இயற்பெயர் அருண்மொழிவர்மன். திருவலங்காடு செப்பு பட்டயத்தில் இந்தப் பெயர் குறிப் பிடப்பட்டுள்ளது. இவரது சிறப்பு பெயர்களையும்,அதற்கான விளக்கங்களையும் பார்க்கலாம்.

இராஜராஜன் என்ற பெயர் இவரது மூன்றாம் ஆண்டு கல்வெட்டிலே நமக்குக் கிடைக்கப்பெறுகிறது. அரசர்க்கு  எல்லாம்  அரசன்  என்பது  இதன்  பொருளாகும்.

இராஜராஜனின் மிகப்பெரிய போர் வெற்றியான  காந்தளூர் சாலை வெற்றிக்குப் பின்  இந்த விருது பெயர் கிடைத்தது. கேரள அரசனுக்கு எமன் போன்றவன் என்பது இந்தப் பெயரின் பொருள். தனது முதல் போரின் வெற்றியின் நினைவாக, தஞ்சை பெரிய கோவிலின் முதல்  கோபுரத்திற்கு கேரளாந்தகன் வாயில் என்று பெயர் சூட்டப்பட்டது. மேலை சாளுக்கிய மன்னன் சத்தியாசிரியனை போரில் வென்றதால், இராஜராஜனுக்கு இராஜாசிரியன் என்ற சிறப்புப் பெயர் உண்டு.இந்த இராஜாசிரியன் என்ற பெயரில் தஞ்சாவூர் அரண்மனையில் ஒரு பந்தல் இருந்ததாக தஞ்சாவூர் கோவில் கல்வெட்டு கூறுகிறது.

மக்கள் தலைவன் என்று பொருள் உள்ள ஜனநாதன் என்ற பெயரும் இராஜ ராஜனுக்கு உண்டு. இராஜராஜன் காலத்தில் ஈழநாடு கைப்பற்றப்பட்டு, ஈழநாட்டில் உள்ள பொலன்னருவா என்ற ஊர், ஜனநாதமங்கலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஈழத்தில் சோழர்களின் தலைநகரமாக மாற்றப்பட்டது.

எங்கும் தோல்வியே காணாத வெற்றிவீரன் என்ற கருத்தை அறிவுறுத்தும் வகையில் ஜெயங்கொண்ட சோழன் என்ற பெயர் அவருக்கு வழங்கப்பட்டது.

பாண்டியர்களை வீழ்த்தி பாண்டிய மண்டலத்தை வெற்றி கொண்டதால் பாண்டியர்களின் குலத்திற்கு இடியினைப் போன்றவன் என்ற பொருள் வரும் பாண்டியகுலாசனி என்ற பெயர் வழங்கப்படுகிறது. அன்று தஞ்சாவூர் அமைந் திருந்தது என்பதை தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டு எடுத்துரைக்கிறது.

பாண்டியர்களையும்,சேரர்களையும் இராஜராஜன் தோற்கடித்த செய்தி, தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளது. தமிழகத்து மூவேந்தர் முடி மூன்றையும் தானே சூட்டிக்கொண்டதால் மும்முடிச் சோழன் என அழைக்கப் பட்டார்.

போர்க்களத்தில் வீமனைப் போன்று வெல்வதற்குரிய ஆற்றலை பெற்று இருந்ததால் இரணமுக வீமன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார் ராஜராஜன்

பகைவர்களை வென்ற தோள்கள் உடையவன் என்ற பொருளில் சத்ருபுஜங்கன் என்ற பெயர் உண்டு.

எமனைப் போல வலிந்து கவருவதில் பேராற்றலும்,பெருஞ்சீற்றமும் உடையவன் என்ற பொருளில் சண்டபராக்கிரமன் என்ற சிறப்பு பெயர் உண்டு.

இசைக் கலையில் சிறந்தவன் என்ற பொருளில் இராசவித்தியாதரன் என்ற பட்டம் அவருக்கு உள்ளது. அரச மரபிற்கு மணிமுடி போன்றவன் என்று பொருள் படும் ஷத்திரிய சிகாமணி பட்டம் வழங்கப்பட்டது.

அரசர்களில் கதிரவனைப் போன்றவன் என்று பொருள் பட இராசமார்த்தாண்டன் பெயர் வழங்கப் பட்டது. பகைவர்களின் அரண்களை அழிப்பதில் வல்லவன் என்று பொருள் பட அரிதுர்க்கலங்கன் என்ற பெயர் வழங்கப்பட்டது.

வெற்றியையே ஆபரணமாக அணிந்த திருக்கோலத்தான் என்று பொருள் விளங்க மூர்த்த விக்கிரமாபரணன் பட்டம் வழங்கப்பட்டது. அவருடைய கல்வி நலன் கருதியும், கலையணர்வு கருதியும் வழங்கப்பட்ட பெயர் பண்டிதசோழன்.

அவன் நல்லவன், குறைகளற்றவன், சான்றோன் என்பதைக் குறிக்கும் பெயர் உத்தமச்சோழன். தன்னை நாடி வருபவர்களுக்கு அடைக்கலம் தந்து ஆதரிக்கும் பண்பாளன் என்பதை அபயகுல சேகரன் என்ற பட்டம் அறிவிக்கிறது. அரசர்களுள் முற்றும் அறிந்த மூதறிவாளன் என்று பொருள்பட இராஜ சர்வஞ்ஞன் பெயர் வழங்கப்பட்டது.

பெருமைக்குரிய, மிகப்பெரும் வேந்தனாகத் திகழ்ந்ததால், பெரிய பெருமாள் என்ற பெயர் அவருக்கு உண்டு. தஞ்சாவூர் கோவிலில் இராஜராஜருக்கு எடுக்கப்பட்ட சிலை பற்றி கூறும் கல்வெட்டில் இராஜராஜர், ‘பெரிய பெருமாள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஈழ நாட்டை வெற்றிகொண்டு, சிங்கள அரசர்க்கு எமன் போன்றவன் என்ற பொருளில் அவருக்கு வழங்கப்பட்ட பெயர் சிங்களாந்தகன்.

சோழர் குலம் சூரிய வழிவந்தது, அந்த அரச மரபின் மாணிக்கமாகவும், மணிமுடி யாகவும் இராஜராஜன் திகழ்ந்தார் என்பதனை இரவிகுல மாணிக்கம், இரவிவம்ச சிகாமணி  என்ற  சிறப்பு  பெயர்கள்  தெரிவிக்கின்றது.

சோழேந்திர சிம்மன், நிகரிலிசோழன் என்ற பெயர்கள் சோழர் குலத்தில் தோன்றிய இந்திரன் என்றும், ஒப்பாருமிக்காருமில்லாச் சோழப் பேரரசன் என்று கூறுகின்றன.

அழகிய சோழன், சோழகுல சுந்தரன் என்ற விருதுப் பெயர்கள் இராஜராஜரின் தோற்றப் பொழிவை சூட்டுவதாகும்.

இராஜ விநோதன், நித்த  விநோதன் ஆகிய பெயர்கள் இராஜராஜனுக்கு கலைகளில் இருந்த ஈடுபாட்டை உணர்த்துகின்றன.

இராஜராஜ சோழனின் கனிந்த சிவபக்தியை உணர்த்தும் பெயர் ‘சிவபாதசேகரன்’.

மேலே சொல்லப்பட்ட சிறப்பு பெயர்கள் எல்லாம் இராஜராஜரின் ஒவ்வொரு வகையான பெருமைகளைக் கூறுகின்றன. இது எல்லாம் புகழ்ச்சி  இல்லை, உண்மை  என்பதற்கு  அவர் காலத்து கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சாட்சி யாக இன்றும் உள்ளன.

ராஜராஜ சோழன் சமாதி

ராஜராஜ சோழனின் சமாதியின் பரிதாப நிலை

1036 ஆண்டுகளைக் கடந்து உலகிற்கே சவால்விட்டு கம்பீரமாக எழுந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜ சோழன். சிவபக்தரான ராஜராஜ சோழன், தஞ்சை பெரிய கோவில் நந்தி முதல் லிங்கம் கோபுரம் வரை அனைத்தையும் பார்த்துப் பார்த்துக் கட்டினான்.

ஆனால் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி பராமரிப்பின்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது. யார் யாருக்கோ மணிமண்டபம் கட்டும் தமிழக அரசு ராஜராஜ சோழனின் அடக்கம் செய்த இடத்தில் ஏன் மண்டபம் கட்டக்கூடாது?

கும்பகோணத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உடையாளூர். இங்குதான் மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி உள்ளது. ராஜராஜனின் சமாதி அமைந்துள்ள இடத்தில் சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. அதன் அருகில் 80 அடி தொலைவில் மேலும் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. கண்டவர்களுக்கெல்லாம் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தில், மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதியைப் பார்த்தால் நமக்கு ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது. உலகிலேயே சிறந்த தொழில்நுட்பத்தில் கோபுரம் கட்டிய ராஜராஜன் சமாதி குடிசை போன்று உள்ளது. அதுவும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. தமிழனுக்கு உலக அரங்கில் இன்று வரை வீர வரலாற்றைத் தந்து சென்ற மாமன்னனின் சமாதி நாதியற்று, கேட்பாரற்று கிடக்கிறது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...