கிளாஸ்கோ மாநாட்டில் பிரதமர் மோடியும் தமிழக மாணவி வினிஷாவும் சிறப்பான பேச்சு

தமிழக மாணவி வினிஷா

காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு 1995ல் பெர்லின் நகரில் நடைபெற்றது. அதிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரி மாநாடுகள் நடக்கின்றன. க்ளாஸ்கோ மாநாடு கடந்த ஆண்டே நடந்திருக்க வேண்டியது. கோவிட் – 19 பரவல் காரணமாக இந்த ஆண்டு நடக்கிறது.

ஐ.நா.வின் 26வது பருவ நிலை மாநாடான சி.ஓ.பி., 26, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்தது.. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

வரும் 2050ம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்தை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர். கார்பன் புகையை கட்டுப்படுத்தும் அதேநேரத்தில் காட்டு வளங்களை காப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு ஐநா., பருவநிலை மாற்ற கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. அதில் வரும் 2030ம் ஆண்டுக்குள் உலகம் முழுக்க உள்ள வனங்களைக் காக்கவும் மரங்கள் வெட்டுவதை தவிர்க்கவும் ஒப்பந்தம் இடப்பட்டது. ஆனால் வணிக நோக்கத்துக்காக பல நாடுகளில் மரங்கள் வெட்டப்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் வர்த்தக நோக்கத்துக்காக பல மரங்கள் வெட்டப்படுவதால் அந்நாட்டு அதிபர் போல்சனாரோ தீவிர விமர்சனத்திற்கு உள்ளானார்

இந்த ஆண்டு நடக்கும் மாநாட்டிற்கு வேறு ஒரு முக்கியத்துவமும் இருக்கிறது. அதாவது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீட்டு அறிக்கை வெளியிடுவார்கள். அதில், கார்பன் உமிழ்வு எப்படியிருக்கிறது, அதனைக் கட்டுப்படுத்துவதில் எந்த அளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறோம் என்பதல்லாம் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும். அந்த அறிக்கை இந்த ஆண்டு வெளியாகிறது. ஏற்கனவே இதுபோல ஐந்து அறிக்கைகள் வெளியாகியிருக்கும் நிலையில், ஆறாவது அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது.

இந்த முறை வெளியாகியுள்ள அறிக்கையில் முதல்முறையாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, காலநிலை மாற்றத்திற்கு மனித செயல்பாடுகளே முக்கியக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மறுதலிக்கமுடியாத அளவுக்கு அதனை நிரூபித்துவிட்டார்கள். Attribution Science பெரிய அளவில் வளர்ந்துவிட்டதால் இதனை செய்திருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான், க்ளாஸ்கோ மாநாட்டில் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறார்கள் என்பதை உலகமே உற்றுக் கவனிக்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகளை வைத்துத்தான் நாம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் போகிறோமா, இல்லையா, இலக்குகளை எட்டுவோமா என்பதெல்லாம் தெரியவரும்.

வரலாற்று ரீதியாக கார்பனை அதிகம் உமிழ்ந்தது மேற்குலக நாடுகள்தான். ஆகவே வரலாற்று ரீதியான பொறுப்புகளும் அவர்களுக்குத்தான் அதிகம்.

ஆனால், தற்போதைய சூழலில், கார்பனை உமிழ்வதில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. ஐரோப்பிய யூனியனை ஒரே அலகாகக் கொண்டால், இந்தியா நான்காவது இடத்தில் இருக்கும்.

ஆகவேதான், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொருவிதமாக நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, கார்பன் உமிழ்வைப் பொறுத்தவரை, அமெரிக்கா 2035லேயே Net Zero என்கிற நிகர பூஜ்ஜிய அளவை எட்ட வேண்டும். இந்தியா இதனை 2060ல் எட்டினால் போதும்.

கிளாஸ்கோ மாநாட்டில் அனல் பறந்தது பிரதமர் மோடியின் பேச்சு. “முதல் இலக்கு 2030… அடுத்த இலக்கு 2070…” என்றார்.

கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கு நமது வாழ்க்கை முறையும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை நாம் அமைத்துக் கொள்ள முன் வர வேண்டும் என்றார். மேலும், பருவநிலை மாற்றத்தின சவாலைச் சமாளிக்கப் பஞ்சாமிர்தம் என்ற ஐந்து முக்கிய உறுதிமொழிகளையும் அவர் வழங்கினார்.

“பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதில் பாரிஸ் மாநாட்டின் உறுதிமொழிகள் நிறைவேற்றும் ஒரே நாடு இந்தியா தான். இதுவரை காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடி நாம் அறிவித்துள்ள நிதி போதுமானதாக இல்லை. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க வளர்ந்த நாடுகள் 1 டிரில்லியன் டாலரை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அளிக்க வேண்டும். அதேபோல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் நாடுகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

உலக மக்கள்தொகையில் 17 சதவிகிதம் பேர் இந்தியாவில் தான் வசிக்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களில் 5 சதவீதம் மட்டுமே இந்தியாவில் இருந்து வெளியாகிறது. காலநிலை மாற்றத்திற்கு நமது வாழ்க்கை முறையும் முக்கிய காரணம் என்பதை உலகம் இப்போது ஒப்புக்கொள்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை, பாரிஸ் உச்சி மாநாடு வெறும் மாநாடு மட்டும் அல்ல. ஒரு உணர்வு, அர்ப்பணிப்பு. அங்கு இந்தியா உலக நாடுகளுக்கு வாக்குறுதிகளை அளிக்கவில்லை. மாறாக, 125 கோடி இந்தியர்கள் தங்களுக்கே வாக்குறுதிகளை அளித்தனர். 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வே கார்பன் வெளியேற்றத்தைப் பூஜ்ஜியம் ஆக்கும் இலக்கை கொண்டுள்ளது.. மேலும் எல்இடிகளைப் பயன்படுத்தி 40 பில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது மேலும், இந்தியா போன்ற வளரும் நாடு கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்தின் சவாலை சமாளிக்கப் பஞ்சாமிர்தம் என்ற ஐந்து முக்கிய உறுதிமொழிகளைப் பிரதமர் மோடி அளித்தார். 2070க்குள் இந்தியா நிகர கார்பன் உமிழ்வைப் பூஜ்ஜியம் ஆக்கும். 2030-ஆம் ஆண்டில் புதுப்பிக்க எரிசக்தித் திறனை 500 கிகாவாட்டாக அதிகரிக்க இந்தியா உயர்த்தும். 2030-க்குள் இந்தியா தனது பொருளாதாரத்தின் கார்பன் சார்பை 45 சதவீதமாகக் குறைக்கும் 2030-க்குள் இந்தியா தனது மின் தேவையில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது கார்பன் உமிழ்வில் ஒரு பில்லியன் டன் அளவைக் குறைக்கும்.

                இந்த மாநாட்டில், தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா உமாசங்கர் உரையாற்றினார். இவர், பிரிட்டன் இளவரசர் சார்லசின் மகன் இளவரசர் வில்லியம்ஸ் நடத்திய, ‘எர்த்ஷாட்’ எனும் சுற்றுச்சூழல் தொடர்பான புதிய கண்டுபிடிப்புக் கான போட்டியில் இறுதிச் சுற்று வரை தேர்வானவர். இவர், துணிகளுக்கு இஸ்திரி போடும் நடமாடும் வாகனத்தில், கரி துண்டுகளுக்குப் பதில், சூரிய சக்தி வாயிலாக இஸ்திரி போடும் முறையை உருவாக்கி, ‘எர்த்ஷாட்’ போட்டியில் இறுதிச் சுற்று வரை சென்றார்.

                ஐ.நா., பருவ நிலை மாநாட்டில் சிறுமி வினிஷா உமாசங்கர் பேசியதாவது: இங்கு கூடியிருக்கும் உலக தலைவர்கள் அனைவருக்கும் உரிய மரியாதையுடன் ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.நம் பொருளாதாரத்தை வாகன எரிபொருள், புகை மற்றும் சுற்றுச்சூழல் மாசினால் வளர்த்தெடுக்கக் கூடாது. இதை மாற்ற, ‘எர்த்ஷாட்’ வெற்றியாளர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்களிடம் ஏராளமான யோசனைகள் உள்ளன.

                எங்களுடைய புதிய கண்டுபிடிப்புகள், திட்டங்கள், தீர்வுகளை உங்களுடன் பகிர்ந்து, உடன் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்.பழைய விவாதங்களைப் பேசி பயனில்லை. எங்களுக்குப் புதிய எதிர்காலத்திற்கான திட்டங்கள் வேண்டும். எனவே, எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரம், பணம் மற்றும் முயற்சிகளை முதலீடு செய்யுங்கள்.பழைய சிந்தனைகள், பழக்க வழக்கங்களை விட்டொழித்து, புதிய சிந்தனையுடன் எங்களுடன் இணைந்து பணியாற்ற உங்களை அழைக்கிறோம். எங்களை நீங்கள் வழிநடத்த தவறினாலும், நாங்கள் முன்நின்று வழிநடத்துவோம். நீங்கள் தாமதப்படுத்தினாலும் நாங்கள் செயலில் இறங்குவோம். நீங்கள் கடந்த காலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாலும் புதிய எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். எங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் அதற்காகப் பின்னர் வருந்துவீர்கள்.

இதுநாள் வரை உலக தலைவர்கள் அளித்து வந்த வெற்று வாக்குறுதிகள் எங்கள் தலைமுறையை விரக்தி அடையச் செய்துள்ளன. நாங்கள் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறோம். எங்கள் கோபத்தில் நியாயம் உள்ளது. உங்கள் மீது கோபப்பட எனக்கு நேரம் இல்லை. நான் செயலில் இறங்க விரும்புகிறேன். நான் இந்திய சிறுமி மட்டுமல்ல, இந்த பூமியின் சிறுமி. அதில் பெருமை அடைகிறேன். அதோடு நான் ஒரு மாணவி, கண்டுபிடிப்பாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர். அனைத்துக்கும் மேல் நான் நேர்மறை சிந்தனை கொண்டவள்” என்று பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் விழிகள் விரியவைத்தன.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...