சர்ச்சையில் சிக்குமா ‘ஜெய் பீம்’?
‘ஜெய் பீம்’ படம் தீபாவளிக்கு முன்னதாக ஓ.டி.டி.யில் வந்து பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளுக்கும் ஆளாகியிருக்கிறது.
இந்தப் படம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது 1993 ஆண்டுக்கு முன்னர் நடத்திய இருளர் சமுதாயம் பாதிக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவரின் சில ஆலோசனை யின் பேரில் எடுக்கப்பட்ட உண்மைச் சம்பவக் கதை.
உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங் களில் குறிப்பிடப்படும் சில விஷயங்கள் அப்படியே உண்மை என மக்களால் நம்பும் சூழல் உள்ள நிலையில், ஜெய்பீம் படத்தில் வன்னியர்களின் அக்கினி கவசப் படம் உள்ள காலண்டர் ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லன் வீட்டில் காட்சிப்படுத்தி இருப்பது கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை திரைக்கதை என்ற பெயரில் தற்போது சூர்யா உட்பட சில நடிகர்கள் இயக்குநர்கள் வேண்டுமென்றே ஒற்றுமையாக இருக்கும் சமுதாயத்தில் பிளவை உண்டாக்க நினைப்பதாகவும் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
“படத்திற்கு விளம்பரம் கிடைக்கவேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக சாதி அடையாளம், மத அடையாளம், இந்தி பேசும் நபரை அடிப்பது போன்ற காட்சிகளை வைத்து எதிர்ப்பு மூலம் விளம்பரம் தேடும் யுக்தியை சூர்யா கையாண்டால் இனி எப்போதும் ஓடிடி தளத்தில் மட்டுமே திரைப் படத்தை வெளியிட முடியும் எனவும் தியேட்டர் பக்கம் திரைப்படம் வெளியாக விடமாட்டோம்” என வன்னியர் அமைப்பைச் சேர்ந்த சீர்காழி கோவிந்த மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக காட்சியில் இடம்பெற்ற அக்கினி கவசம் உட்பட மேலும் சில காட்சிகளை நீக்கவிட்டால் பின்விளைவைச் சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரிகைவிடுத்து வருகின்றனர். ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகள் நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில் படத்தின் தயாராப்பாளர் சூர்யா என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிஜத்தில் நடந்த கதையே படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த (நிஜ) காவல் அதிகாரி, வன்னியர் இனத்தவர் அல்ல. வேண்டுமென்றே அப்படி காண்பித்திருக்கிறார்கள் என குமுறுகிறார்கள்.
பொய்யராக வரும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தின் வீட்டின் பின்னணியில் வன்னிய கலசக் காட்சி பார்த்து வெறுப்படைந்த வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த நடிகர் சூர்யா ரசிகர் இளைஞர்கள் சிலர் நடிகர் சூர்யா ரசிகர்கள் மன்ற பேனரைத் தாங்களே கிழிக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.
நடிகர் சூர்யா-ஜோதிகா இணைந்து தயாரித்த ‘ஜெய் பீம்’ படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராகச் சிறப்பாக நடித்துள்ளார். பழங்குடியின இருளர் சமூகத்தை கண்முன் நிறுத்தியிருக்கிறார் முன்னாள் பத்திரிகையாளரான த.செ.ஞானவேல். இவர் பல ஆண்டுகள் இருளர் சமுதாயத்தைப் பற்றி ஆய்வு செய்து உழைத்து இயக்கிய படம் என்பது ஒரு பிளஸ். மக்களிடம் தன்மான உணர்வைத் தட்டியெழுப்பிய நீதிபதி சந்துருவின் தீர்ப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்பது இன்னொரு பிளஸ். தேர்ந்த நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இந்தப் படத்துக்கு சூர்யா அமைந்தது மூன்றாவது பிளஸ். வறட்டுக் கற்பனைக் கதைகளே பெரும்பாலும் திரைப்படங்களாக வரும் நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது இத்திரைப்படம்.
ஜெய்பீம் படத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஒன்றரை வருடங்களில் நீதி கிடைக்கிறது. நிஜத்தில் இந்த வழக்கு 13 வருடங்கள் நடந்திருக்கிறது என்கிற கருத்தும் உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர்தான் இந்த வழக்கின் இறுதிவரை இருந்து சம்பந்தவர்களுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பெற்றுத்தர காரணமானவர் அவர் பாத்திரம் குறைக்கப்பட்டிருக்கிறது என்கிற கருத்தும் உள்ளது.
இந்த படம் வெளியானவுடன் நடிகர் சூர்யா தன் சார்பாக இருளர் இன மக்கள் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கியது பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
கண்மணி குணசேகரன்
இப்படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் வட்டார வழக்கு பேச்சுக்கு உதவியவர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். பட டைட்டில் கார்டில் அவருக்கு நன்றியும் சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் அவரும் தனது ஆதங்கத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வாகவே எனக்கு விருப்பம்; சினிமாவின் மீது எனக்கு எப்போது ஈடுபாடு இருந்ததில்லை. இந்நிலையில், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் என் வீட்டுக்கு வந்தார். ‘இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு வட்டாரமொழியில் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆகவே பிரிதியில் மாற்றித் தாருங்கள்’ என்றார்.
எனக்கு பரிச்சயமில்லாத துறையாக என்னைத் தேடி வந்ததால் தயக்கத்தோடு சம்மதித்தேன். எனக்குக் காட்டப்பட்ட பிரதியில் படத்தின் பெயர் இருளர்களின் தம் வாழ்வியலோடு கூடிய “எலிவேட்டை” என்றே இருந்தது. உரையாடல்களும் சற்றேறக்குறைய இப்பகுதியின் மொழிநடை யாகவே இருந்ததில் சொற்ப இடங்களில்தான் மாற்றியமைக்குமாறு சொன்னேன்.
மேலும் ஒட்டுமொத்த திரைக்கதையிலும் ஒன்றிரண்டு பெயர்கள் தவிர வேறெதும் சிக்கலாகத் தெரியவில்லை. அந்தப் பெயர்களையும் சரி செய்து கொள்வதாகவும் சொன்னார். அந்த உரையாடல் தொடர்பான சிறு வேலைக் காக எனக்கு ஐம்பதாயிரம் பணம் கொடுத்தார்கள்.
பிறகொரு நாள் படம் திடுமென பெயர் மாற்றம் பெற்று “ஜெய்பீம்” என விளம்பரம் வந்தது. படத்தை பார்த்தவர்கள் எனது பெயர் நன்றி அறிவிப்பில் வந்தததை மகிழ்வோடு சொன்னார்கள். கூடவே வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியையும் வருத்தத்தோடு பதிவு செய்தார்கள். எனக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது என்பது மாதிரி தொடர்ந்து அழைப்புகள் விசாரிப்புகள்.
நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்வது இந்தப் படத்தில் வட்டார உரையாடல் தொடர்பாக மிகச் சொற்ப வேலையை மட்டுமே நான் செய்திருக்கிறேன். மேலும் என்னிடம் கொடுக்கப்பட்ட பிரதியில் வன்னியர் கலசம் போன்ற குறியீடுகளெல்லாம் அப்போது அதில் இல்லை. மீறி இருந்திருந்தால் நிகழ்விற்குச் சற்றும் பொருத்தப்பாடு இல்லாத அந்தப் பகுதியை நீக்கச் சொல்லியிருப்பேன். அல்லது நான் விலகியிருப்பேன்.
தற்கால அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு படத்தின் வியாபாரம், விறுவிறுப்பிற்காக எல்லோரையும் போல நிகழ்விற்குச் சற்றும் தொடர்பில்லாத வன்னியர் வெறுப்பு அரசியலை கையிலெடுத்திருக்கிறார் போலும்.
எல்லா சாதியிலும் மோடுமுட்டிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். வன்னியர் களிலும் அந்த ஆய்வாளர் போன்று இருக்கவும் கூடும். அதற்காக ஒரு சமூகத்தின் குறியீடான அக்கினிக் கலசத்தை பின்னணியில் காட்டி ஒட்டு மொத்த சமூகத்தையும் வன்முறை யாளராகக் கொலையாளியாகக் காட்ட முயல்வது மிக மோசமான மனநிலையே.
தூக்கிவிட்டு ஈரக்குலையில் குத்தியது போன்று எனக்கு நன்றியும் தெரிவித்துவிட்டு இன்னமும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்கிக் கிடந்து வன்முறையாளர்கள் என்கிற அவப்பெயரோடு கூடுதலாய் கொலையாளிகள் என எங்களைச் சித்திரிக்கிற தங்களின் (இயக்குநரின்) சராசரி செயலைத்தான் என்னால் அங்கீகரிக்க இயலவில்லை. எதிர்வரும் காலத்திலாவது சமாசம்பந்தமில்லாத வன்னியர் வெறுப்பரசியலை கையிலெடுக் காமல் படமெடுக்கவேண்டும்” என்றார். இந்நிலையில் கண்மணி குணசேகரன், இன்னொரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல், குறிப்பிட்ட காட்சியில் வரும் காலண்டரை, கிராபிக்ஸ் மூலம் பக்திப் பட காலண்டராக மாற்றிவிடுவதாகக் கூறினார். இதற்கு இரு நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்தார்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே ஒட்டர் சமூகத்துக்கு இழிவு செய்த ஜெய்பீம் படத்துக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்கிறார் உழைக்கும் மக்கள் விடுதலைக் கழக நிறுவனத் தலைவர் தேக்கமலை.
“ஜெய்பீம் படத்தில் ஒட்டர் சமூகத்தை இழிவுபடுத்திய காட்சிகளை நீக்காவிட்டால் டைரக்டர் ஞானவேல் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தை நடத்துவோம்’’ எனத் தெரிவித்துள்ளனர் உழைக்கும் மக்கள் விடுதலைக்கழகத்தினர்.
கரூரில் அதன் தலைவர் தேக்கமலை பேசும்போது, “ஒட்டர் சமூகம் உட்பட பல சமூகத்தினரை இழிபடுத்தி ஓரமாக நிற்கவைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சி ஒட்டர் சமூக மக்களை அதிர்ச்சியடையச் செய் துள்ளது. நாட்டின் கட்டுமான வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி வரும் ஒட்டர் சமூகத்தை இழிபடுத்தும் வகையில் உள்ள காட்சியைப் படத்திலிருந்து நீக்க வேண்டும். மேலும் அந்தக் காட்சியில் போலீசார் பொய் வழக்குப் போட, ஒட்டர் சமூகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வசனம் இடம் பெற்றுள்ளது. அதையும் நீக்க வேண்டும். இல்லையென்றால் சென்னையில் டைரக்டர் ஞானவேல் வசிக்கும் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். நீதிமன்றத்திலும் வழக்குத் தொடருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா தயாரிப்பாளரும் இயக்குநரும்? பொறுத்திருந்து பார்ப்போம்.