எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 6 | இந்துமதி

 எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 6 | இந்துமதி

ளீரென்று மஜந்தா நிற சல்வார் கமீஸுடன் காரிலிருந்து இறங்கிய சித்ராவைத்தான் முதலில் பார்த்தான் மதுசூதனன். ‘யார் இந்தப் பெண்… இவ்வளவு அழகாக இருக்கிறாளே…’ என்று நினைத்துக் கொண்டான். கூடவே பின்னால் இறங்கிய ஷைலஜா கண்ணில் பட்டதும் தான் அவள் சித்ரா என்பது புரிந்தது. ஒரு வினாடி மனம் வாடிற்று. அதுவரை சித்ராகூட வரப்போவதைப் பற்றின பிரக்ஞையற்றிருந்தான், ‘ஷைலஜாவுடன் மகாபலிபுரம்’ என்பதைத் தவிர வேறு நினைவின்றி இருந்தால், அந்த நாள் முழுதும் ஷைலஜாவுடன் எப்படி இருக்க வேண்டும், அவளை எவ்வாறு சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் போயிற்றே தவிர சித்ரா என்பவள் உடன் வரப்போகிற எண்ணமே ஏற்படவில்லை.

இப்போது அவளைப் பார்த்த பின்புதான் ‘ஐயோ… இவளும் கூட வருகிறாளே… அதை மறந்து போனோமே….’ என்று தோன்றிற்று. சட்டென்று உள்ளுக்குள் பொங்கிய வேகம், சந்தோஷம் எல்லாம் வடிந்து போயிற்று. ஒருவித ஏமாற்றமும், சலிப்பும் தோன்றிற்று. ஆனாலும் அதை வெளிப்படுத்திக் கொள்வது நாகரீகமில்லை என்று நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் காரை விட்டுக் கீழே இறங்கினான்.

“சீ…. இந்த ஷைலு தனியாக வந்திருக்கக்கூடாது.?”

சிரிப்பை வரவழைத்துக் கொண்டே ஷைலஜாவைப் பார்த்து ‘ஹலோ’ சொன்னான்.

அவசரமாக அவனை நெருங்கிய ஷைலஜா, “ரொம்ப நேரமாகக் காத்துக்கிட்டிருக்கீங்களா…?” என்று வருத்தம் தொனிக்கக் கேட்டாள்.

‘உனக்கேன் இத்தனை பயம் ஷைலு…? நாம் இரண்டு பேர் மட்டும் தனியாகப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்…?’

மீண்டும் ஓர் புன்னகையை வரவழைத்துக் கொண்டு மென்மையான குரலில் பதிலளித்தான்.

“ம்ஹூம். அதிக நேரமில்லை. நாற்பத்தைந்து நிமிஷம் தான் காத்துக்கிட்டிருந்தேன்…”

“சாரி மது… நான் எட்டு மணிக்கெல்லாம் இவ வீட்டுக்கு வந்துட்டேன்…”

‘நீ ஏன் இவள் வீட்டிற்கெல்லாம் போய் கஷ்டப்படணும்…? ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானே உன் வீட்டிற்கு வந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வந்திருப்பேனே… மகாராணி மாதிரி அழைத்துக் கொண்டு போயிருப்பேனே.

“ஐயம் ஸாரி மிஸ்டர் மதுசூதனன், என் பெயர் சித்ரா. ஷைலஜாவோட பெஸ்ட் பிரெண்ட்…”

“தெரியும், ஷைலஜா சொல்லியிருக்கிறாள்.”

“அவளுடன் என்னைப் பார்த்துக்கூட இருப்பீங்க…”

மது சிரித்தான். தற்போது நிஜமாகவே சிரித்தான்.

சித்ரா கேட்டாள், “ஏன் சிரிக்கறீங்க…..?”

“இல்ல… ஷைலஜாவைத் தவிர என் பார்வைல வேற யார் பட்டிருக்காங்க…?”

அதைக்கேட்டு ஷைலஜாவின் முகம் பளீரிட்டது.ஆனால் சித்ராவின் முகம் சட்டென்று வாடி மறு வினாடி பளிச்சிட்டது.

“அப்கோர்ஸ்…” என்று சிரித்தாள் சித்ரா. “உங்களைப் பார்த்ததும் அவதான் என்னை நைஸா கழட்டி விட்டுடுவாளே…”

“ஏய்…. ஏண்டி பொய் சொல்ற…..? நீயா கழண்டுண்டு என் மேல தப்பு சொல்ற பார்த்தியா….?”

“ஷி ஈஸ் ரைட். காதலிக்கப் போறபோது உங்களை மாதிரி ஒரு அழகான பெண்ணைச் கூடக் கூட்டிட்டுப் போக முடியுமா…?” என்று மறுபடியும் சிரித்தபோது ஷைலஜாவிற்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது. ‘அழகா… இவளா… வெள்ளைத் தோல் என்றாலே நீங்கள்ளாம் மயங்கிடுவீங்களே….’

இந்த முறை சித்ராவின் கண்கள் விளக்கேற்றிக் கொண்டன. ‘மெல்ல ராஜாவை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாயிற்று …’ என்று நினைத்துக் கொண்டு ரகசியமாகஷைலஜாவைப் பார்த்தாள். அந்தக் கண்களின் பளபளப்பை ஷைலஜா புரிந்து கொண்டாள். ‘பார்த்தாயா… உன் ஆள் என் அழகைப் புகழுறாரு…’

இப்போது ஒரு அடி போதும். அப்புறம் வாமனாவதாரம் எடுத்துக் கொள்ளலாம் என்கிற முடிவில் சித்ரா பேச்சைத் திசை திருப்பினாள்.

“ஐயம் வெரி ஸாரி மிஸ்டர் மது. ஏற்கனவே ரொம்ப நேரமாயிடுத்து. பேசிண்டே நின்னுட்டிருந்தால் இன்னும் நேரமாயிடும்….”

“ஓ… கிளம்பலாமே….” என்ற மது, ஷைலஜாவைப் பார்த்தான்.

“போகலாமா ஷைலு…?”

“ம்…’ என்று முனகினாள் அவள்.

“இப்போ உங்க காரை என்ன பண்ணப் போறீங்க மது..?” வேண்டுமென்றே மிஸ்டரைத் தவிர்த்தாள் சித்ரா.

“சோழா ஓட்டலில் விட்டு விட்டுப் போகலாமா….?”

கால் வினாடி யோசித்த சித்ரா சட்டென்று ஒரு முடிவிற்கு வந்தவளாகச் சொன்னாள்.

“வேண்டாம், உங்களுக்கும் டிரைவிங் தெரியும். எனக்கும் தெரியும். அதனால் நாமே ஓட்டிண்டு போயிடலாம்.. உங்க வண்டியை டிரைவரை எடுத்துக் கொண்டுபோய் எங்க வீட்ல விடச் சொல்றேன்!”

“உங்க வீட்லயா…?” அரண்டு போனான் மது.

“ஆமாம். ஏன்…?”

“உங்க வீட்ல திட்ட மாட்டாங்களா…?”

“எதுக்குத் திட்டணும்…?”

“என் வண்டின்னு தெரிஞ்சால்…”

“தெரிஞ்சால் என்ன….?”

“ஒரு ஆம்பிளை வண்டி. அதுவும் என்னை மாதிரி இளைஞனின் வண்டி…”

“ஓ… கமான்…” என்று சிரித்தாள் சித்ரா. “எங்க வீட்டை ஷைலஜா வீடுன்னு நினைச்சீங்களா….? எங்க அம்மா அப்பாவைப் பற்றி என்ன நினைக்கறீங்க…? தே ஆர் நாட் கன்சர்வேடிவ் லைக் ஷைலஜாஸ் பேரண்ட்ஸ். ரொம்ப நாகரீகம் தெரிஞ்சவங்க. ரொம்ப மாடர்ன். எனக்கு நிறைய சுதந்திரமும் செல்லமும் கொடுத்திருப்பவங்க. வருஷத்துல மூணுதரம் அமெரிக்கா போறவர் எங்க அப்பா. ஆண் பெண்ணுன்ற வித்தியாசமெல்லாம் சினேகத்துக்குக் கிடையாதுன்னு தெரிஞ்சுண்டிருக்கி றவர். ஸோ, அந்தக் கவலையெல்லாம் பட வேண்டாம்…”

அவன் பெருமூச்சு விட்டான். ‘அந்த மாதிரி லைல ஜாவோட அம்மா அப்பாவும் இருந்திருந்தால்…?’

அதற்குள் டிரைவரை அருகில் கூப்பிட்டாள் சித்ரா. “இதப்பாரு பழனி, இவருடைய வண்டியை எடுத்துக்கிட்டுப் போய் வீட்ல விட்டுடு. நான் இவர் கூட நம்வண்டியில் மகாபலிபுரம் போயிருக்கிறதா அம்மாகிட்ட சொல்லு. ஷைலஜா வீட்லேருந்து போன் பண்ணிக் கேட்டாங்கன்னால் அவ என்கூட மகாபலிபுரம் போயிருக்கிறதா சொல்லச் சொல்லி வேலைக்காரங்க கிட்ட தெரிவிச்சுடு” என்றவள், பழனி சிவப்பு மாருதியை எடுத்துக்கொண்டு போகிறவரை காத்திருந்தாள். பின்னர் ஷைலஜாவின் பக்கம் திரும்பி கேட்டாள்.

“போகலாமாடீ..?”

அதுவரை அவர்கள் பேசியதில் தலையிடாமல் ஒருவித எரிச்சலுடன் காத்திருந்த ஷைலஜா சித்ராவை ஏறிட்டாள்.

“யார் முதல்ல காரை ஓட்டப் போறது…?”

“லேடீஸ் பர்ஸட். அதனால் நானே முதல்ல ஓட்டறேன். திரும்பி வர்றபோது நீங்க ஓட்டலாம். என்ன மது…?”

‘மதுவாம் மது… பெற்றுப் பேர் வச்சவ மாதிரி கூப்பிடறாளே…’

ஷைலஜாவின் அடிவயிற்றில் லேசாக எரிச்சல் கண்டது. சித்ரா மீண்டும் பேசினாள்.

“டிரைவர் மாதிரி நான் ஓட்டிட்டுப் போறேன். நீங்க ரெண்டு பேரும் பின்னால் ஹாய்யாக உட்கார்ந்துக்கிட்டு வாங்க. சின்னச் சின்னதா விஷமம் பண்ணுங்க, நான் ரிவர்ஸ வ்யூ மிர்ரரில் பார்க்க மாட்டேன்…”

‘எத்தனை ஸ்போர்ட்டிவ் ஆகப் பேசுகிறாள் இவள்…’ என்று நினைத்துக் கொண்ட மது சொன்னான்.

“நோ….. நோ…. அது மரியாதை இல்லை; ஷைலு நீ உன் பிரெண்ட் பக்கத்துல முன் ஸீட்டுல உட்கார்ந்துக்கோ. நான் பின் ஸீட்ல உட்கார்ந்துண்டு வரேன்…”

வண்டி போன லாகவத்திலும், அழகிலும் ஈர்க்கப்பட்ட மது, மீண்டும் சித்ராவிடம் பேச்சைத் தொடர்ந்தான்.

“எத்தனை நாளாக நீங்க வண்டி ஓட்டறீங்க…?”

“ஏன் கேட்கறீங்க…?”

“இல்ல… இத்தனை அழகா ஓட்டறீங்களேன்னு கேட்டேன்…”

“பிறந்த மறு நாள்லேர்ந்து ஓட்றா… போறுமா…?” -சட்டென்று சொன்னாள் ஷைலஜா. அதற்குமேல் தாங்க முடியாதவளாக முகம் சிவந்தாள்.

சடாரென்று அவளைத் திரும்பிப் பார்த்த சித்ராவின் முகத்திலும், புன்னகையிலும் ஒருவித வெற்றிப் பெருமிதம் இருந்தது. ஷைலஜாவின் எரிச்சலையும் கோபத்தையும் கேலியாக, விளையாட்டாக மாற்றப் பார்த்தாள்.

“ஏய்… ஜோக் அடிக்கறியாடி….? கர்ணன் கவச குண்டலத்தோட பிறந்த மாதிரி நான் கார் ஸ்டியரிங்கோடப் பிறந்தேன்னு அவர் நினைச்சுக்கப் போறார்…”

‘அவராம்… அவர்… அறிமுகமாகி அரை மணி நேரமாகலை…. அதற்குள் எத்தனை உரிமை…’

ஷைலஜாவும் பதிலுக்குச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள். உள்ளுக்குள் வெறுப்பும், உதட்டில் சிரிப்புமாக இருப்பது கஷ்டமாகத்தான் இருந்தது. வராத கலை என்று தோன்றிற்று. ‘ஏய் சித்ரு… நீ எப்படிடீ நடிக்கற…?’ என்று கத்தத் தோன்றியது. ஆனாலும் கத்தாமல் இருந்தாள்.

“போறும்டி…. ஸ்டியரிங்கோடு பிறந்தேன்னு நீ சொன்னாலும் அவர் நம்பவா போறார்…?”

“என்ன மது… நான் சொன்னால் நம்ப மாட்டீங்களா…?” என்று கொஞ்சலாய் திரும்பி முகத்தைக் குழந்தை மாதிரி வைத்துக் கொண்டு சித்ரா கேட்டதும் நிஜமாகவே அவன் பதில் சொல்ல முடியாமல் தவித்துப் போனான்.

‘நம்ப மாட்டேன்’ என்று சொல்லி அவளைக் கஷ்டப்படுத்தவும் ‘நம்புவேன்’ என்று சொல்லி ஷைலஜாவைத் திருப்திப்படுத்தவும் முடியாமல் சங்கடப்பட்டான்.

அந்தக் கால் வினாடி அமைதியைத் தாங்கிக் கொள்ள முடியாதவளாகப் படீரென்று திரும்பிய ஷைலஜா அவனை முறைத்தாள்.

“என்ன… எந்தப் பக்கம் கோல் போடப் போறீங்க…?”

“முதல்ல ரோடைப் பார்த்து அவங்க காரை ஓட்டட்டும் ஷைலு… மகாபலிபுரம் போய் இந்த விளையாட்டையெல்லாம் வச்சுக்கலாம்.”

மெதுவாகப் பேச்சை அவன் திசை திருப்பியது ஷைலஜாவிற்குப் பிடிக்கவில்லை. தன் பக்கம் பேசாதது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்தப் போட்டியில் சித்ரா வெற்றி பெற்று விடுவாளோ என்கிற பயம் தோன்றியது. ‘என் வெற்றிக்கு நான் எனக்குத் தோன்றிய வழிகளையெல்லாம் பிரயோகிப்பேன். நீ தப்பாக எடுத்துக்கக் கூடாது’ என்றது நினைவிற்கு வந்தது.

பதிலுக்குத் தானும் ‘உன் வழிகளையெல்லாம் முறியடிக்க நானும் எனக்குத் தெரிந்த அத்தனையும் பிரயோகிப்பேன் நீயும் தப்பாக எடுத்துக்கக்கூடாது…’ என்று சொன்னதும் ஞாபகத்தில் வந்தது.

இப்போது முறியடிக்கும் தருணம் வந்து விட்டது. பிரயோகிக்கும் சமயம் வந்து விட்டது. போட்டி துவங்கி விட்டது, ‘சபாஷ் சரியான போட்டி…’ என்று பாராட்ட பி. எஸ். வீரப்பா இல்லை. வேறு யாராலும் பாராட்டவும் முடியாது. இந்த ஒப்பந்தம் வேறு யாருக்கும் தெரியவும் தெரியாது. இனி சித்ரா தடுக்கில் நுழைந்தாளானால் தான் கோலத்தில் நுழைய வேண்டும். நுழையக் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிட்டு இப்படி வருத்தமும், பொறாமையும் படுவதில் அர்த்தமில்லை. தானும் அழகாய், தைரியமாய் சமாளிக்க வேண்டும். எப்படியாவது வெற்றி பெற்று சித்ராவின் முகத்தில் கரி பூச வேண்டும்.

அதற்குப் பின்னர் எக்காரணம் கொண்டும் தோற்றுப் போகக்கூடாது என்கிற முடிவில் தன் நம்பிக்கை வரப் பெற்றவளாகத் தலை நிமிர்ந்தாள் ஷைலஜா.

-தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...