வாகினி – 23| மோ. ரவிந்தர்

 வாகினி – 23| மோ. ரவிந்தர்

மகாலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் என்பதால் வீட்டிலிருந்த அனைவரும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டனர்.

வேலை அதிகமாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. காலையில் உதித்த சூரியன் தன் பணியை முடித்துக்கொண்டு அஸ்தமனமாகி கொண்டிருந்தான்.

ஊர்மக்கள், மற்றும் நெருங்கிய சொந்தக்காரர்களான கஸ்தூரி-சதாசிவம், மரகதம்- மூர்த்தி, கஸ்தூரியின் தாய் பார்வதம்மாள், கோதண்டன், மாப்பிள்ளை கபிலனின் உறவினர்களான மாமன் ஜீவானந்தம் அவருடைய மனைவி ரூபா, இன்னும் சில உறவினர்கள் எல்லோரும் மகாலட்சுமி வீட்டுக்குள் பெருமளவில் காணப்பட்டனர்.

தன் ஒரே செல்ல மகளான மகாலட்சுமி, அடுத்தக் கட்ட குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகி விட்டாள் என்ற ஆனந்தத்தில் இளங்கோவன் வீட்டுக்கு வரும் உறவினர்களைப் பெரும் மகிழ்ச்சியோடு அன்புடனும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.

எங்குப் பார்த்தாலும் மக்கள் வெல்லம். குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடுவது. மங்கையரின் கூந்தலில் சூடி இருந்த பூக்களின் வாசம் தென்றலை கைது செய்து கொண்டிருந்தது. வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் அலங்காரமாகக் காணப்பட்டது. வாசல் வெளியில் கட்டப்பட்டிருந்த கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியில் ‘மதுர மரிக்கொழுந்து… என் ராசாத்தி உன்னுடைய நேசம்…’ என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க. வாகினி, வனிதா சில சிறுமிகளும் சேர்ந்து அந்த இடத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அந்தத் தெருவே இந்த மாலை நேரத்தில் திருவிழாக் கோலம் போல் காட்சியளித்தது.

ஒருபுறம் ஆகம விதிகளின் படி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூத தன்மையை அறிந்து. வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி, யந்திர ஸ்தாபனம் செய்யும் தெய்வ சிலையைப் போல் மகாலட்சுமியை அவளுடைய தோழிகளான கீதாவும், ரேவதி இன்னும் சிலரும் அலங்கரித்துச் சபைக்கு அழைத்து வந்தனர்.

இந்தப் பெருந்திரளான மக்களுக்கு முன்பாக அமர்ந்திருப்பது கபிலனுக்குச் சற்றுச் சங்கோஜமாக இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் அச்சப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

என்னதான் மனதுக்குள் பெரும் பேரின்பம் பெருக்கெடுத்து ஓடினாலும் தன் தாயை இப்படி ஒரு வேதனைக்குள் தள்ளி விட்டோமே என்ற மனக்கவலை கவலையில் தான் இருந்தான். அவன் அமர்ந்திருந்த எதிர்திசையில் தாய் ரேவதி சில உறவினர்களோடு தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

ரேவதியின் அண்ணன் ஜீவானந்தம், அவருடைய மனைவி ரூபா இருவரும் ஐயர் பக்கத்தில் அமர்ந்து இதையே யோசித்துக் கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்திருந்த ஒரு பெரியவர். “ஐய்யரே…! நல்ல நேரம் முடிய போகிற மாதிரி இருக்கு இன்னும் என்னையா பண்ணிட்டு இருக்க. சீக்கிரம் அந்தப் சுபமுகூர்த்த பத்திரிக்கை எடுத்துப் படி” என்று குரல் கொடுத்தார்.

பெரியவர் குரல் கொடுக்க, கூடியிருந்த மக்கள் அனைவரும் நொடியில் ஐயரை சூழ்ந்து அமர்ந்தனர். ஐய்யர் கீழே இருந்த சுபமுகூர்த்த பத்திரிக்கையை எடுத்து சபையோர் முன்னிலையில் சத்தமாக வாசிக்கத் தொடங்கினார்.

மதுராந்தகம்- பொன்னுசாமி-வரலட்சுமி பேத்தியும். இளங்கோவன்-திலகவதி தம்பதியின் மூத்த புதல்வியும். ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திர பொருந்திய திருநிறைச் செல்வி மகா என்கின்ற மகாலட்சுமி கன்னிகைக்கும்.

அரக்கோணம், சுடலை- பேச்சியம்மாள் பேரனும். செல்லக்கண்ணு-ரேவதி தம்பதியின் மூத்த திருமகன். மிதுன ராசி மிருக சீரிஷம் 3ம் பாத உடைய திருநிறைச்செல்வன் கபிலன் என்ற திருமகனுக்குப் பெரியோர்களால் வரும்….26ம் தேதி ஆவணி மாதம் பிரமோதூத ஆண்டில் இருவீட்டார் முழுச் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது” என்று ஐய்யர் கோவிந்தனின் குரல் கூடியிருந்த மக்களின் காதுகளில் பெருமளவில் ஓங்கி ஒலித்து முடிந்தது.

கபிலனின் தாய்மாமன் ஜீவானந்தம் பழம், பூ, தேங்காய், பட்டுப் புடவை, மஞ்சள், வெற்றிலை பாக்கு நிறைந்த ஒப்புதல் தாம்பலத்தை எடுத்து. எதிரில் அமர்ந்திருந்த மகாலட்சுமியின் தந்தை இளங்கோவன் கையில் கொடுத்தார்.

இளங்கோவனும் தனது பக்கத்தில் தயாராக இருந்த மாப்பிள்ளைக்குச் செய்யவேண்டிய தாம்பாளத்தை எடுத்து ஜீவானந்தம் கையில் கொடுத்தார்.

சில உறவுக்காரர்கள் மகாலட்சுமியை அழைத்துச் சபைக்கு மரியாதை செலுத்த சொன்னார்கள். அவளும் சபை முன்னிலையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி சபைக்கு மரியாதை செலுத்தினாள்.

அதற்குள் மாப்பிள்ளை வீட்டு சொந்தக்காரரான ஒரு பெரியவர்…

“அப்புறம் பொண்ணுக்கு என்னென்ன சீர்வரிசை செய்யப் போறீங்க. சபைக்கு முன்னால் சொல்லிட்டா நல்லாயிருக்கும் பின்னாடி பெருசா வம்பு வழக்கு எதுவும் வராது பாருங்க” என்று கூறினார்.

பெரியவர் அப்படிக் கூறியதும் இளங்கோவன் சற்று தயங்கிக் கொண்டே தனது பதிலை மெதுவாக ஆரம்பித்தார்.

“மாப்பிள்ளைக்கு ஒரு சவரன் செயினும். பொண்ணுக்கு 7அல்லது 8 சவரனும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் கொடுக்கிறதா இருக்கங்கே” என்று தனது பேச்சை முடித்தார்.

சபையிலிருந்த கஸ்தூரியின் தாய் பரவதம்மாள். “ஒரு சவரன் 3000 லிருந்து 4000 ரூபாய் வரையில் வித்துட்டு இருக்க இந்தக் காலகட்டத்துல. இதுவே பெரிய விஷயம் தம்பி இதுக்கு மேல நீங்க என்னத்த செய்யப் போறீங்க” என்று தன் பேச்சை முன்வைத்தார்.

ரேவதி அம்மாவிற்குக் கோபம் பொங்கி வழிந்தது. ‘ஒழுங்கா கபிலன், தாமரையைக் கட்டியிருந்தா இதைப்பத்தி எல்லாம் யாரு பேசப் போற. எங்க அண்ணன் கிட்ட இல்லாத பணமா’ என்று அதை மனதுக்குள் மறைத்துக்கொண்டு.

“பரவாயில்லை, பொண்ணுக்கு அவங்க என்ன செய்ய ஆசைப்படுகிறார்களோ அதைச் செய்யட்டும், நாங்க என்ன அத எடுத்தா ஆளப்போறோம், அவ தான் ஆளப்போறாள்!” என்று மகாலட்சுமியை சுட்டிக்காட்டினார், ரேவதி.

அதேநேரம், ஜீவானந்தத்தின் மனைவி ரூபா “என் பொண்ணைக் கட்டி இருந்தால்? இவனுக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் பெருசா முறையாகவும் செய்திருப்போம். இது இப்படி வந்து நிக்குதே இத என்னத்த சொல்ல” என்று கபிலனைப் பார்த்து முணுமுணுத்தாள்.

இவர்களுடைய பேச்சை எல்லாம் கேட்கும் போது சதாசிவம், மூர்த்தி இருவருக்கும் ஒரு வித பயத்தை உண்டாக்கியது. சின்ன வாய்ப்பேச்சு எங்கே பெரிய வம்பில் வந்து நிற்கப் போகிறது என்ற ஒரு அச்சத்தில். “சரி… சரி… எல்லோரும் எழுந்து சீக்கிரம் பந்திக்கு வாங்க நேரம் போயிட்டே இருக்கு” என்று கூக்குரலிட்டனர்.

தேன்கூடு போல் இருந்த மக்களின் கூட்டம் மெதுவாகக் கலைந்து சாப்பாடு பந்திக்குள் நுழைந்தது.

சாம்பார், பொரியல், கூட்டு, அவியல், அப்பளம் பாயாசம், வாழைப்பழம், லட்டு மைசூர் பாக் என அறுசுவையுடன் உணவு பரிமாறப்பட்டது. இந்தப் பெரும் கூட்டத்தைப் பார்த்தால் சாப்பாடு பத்துமா…பத்தாதா… என்று அச்சம் திலகவதிக்குப் பெரிதாக ஏற்பட்டது.

“ஏம்மா… இப்படிப் பார்த்து நின்னுட்டு இருந்தா எப்படி? மத்தவங்களுக்கும் சாப்பாடு பரிமாறனும் இல்லையா? உள்ள போய் ஏதாவது பெரிய சில்வர் பாத்திரமா ஏதாவது இருந்தா எடுத்துட்டு வா” என்று திலகத்தைப் பார்த்து மூர்த்திக் குரல் எழுப்பினார்.

“இதோ வரேன் சித்தப்பா…” என்று கூறிக்கொண்டே சமையலறைக்குப் வேகமாகச் சென்று பெரிய பாத்திரம் ஏதாவது கண்ணில் தென்படுகிறதா என்று தேடிப் பார்த்தாள். எல்லாம் பெரிய பாத்திரங்களும் பந்தியிலும், பெரும் மக்களுக்காகச் சமையல் செய்த இடத்திலும் அழுக்காக இருந்தது.

“அக்கா…குழம்பு ஊத்துற மாதிரி பெரிய பக்கெட் ஏதாவது இருந்தா கொடுங்க” என்று கூறிக்கொண்டே அவசரத்துடன் சமையலறையில் நுழைந்தாள், கஸ்தூரி.

“கஸ்தூரி, அத நான் பார்த்துக்கிறேன். காயத்ரி இல்லனா, மீனா வீட்டுக்குப்போய். கொஞ்சம் சாப்பாடு போடுற மாதிரி அன்ன கூடை ஏதாவது இருந்தா சீக்கிரமா வாங்கிட்டு வாயேன்” என்றாள், திலகவதி.

“சரிக்கா, நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன். வெளியே குழம்புக்காக எல்லோரும் காத்துட்டு இருக்காங்க, அவங்களைப் போய் நீங்க கவனிங்க” என்று கூறிக்கொண்டே மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள், கஸ்தூரி.

தொடரும்…

< இருபத்தி இரண்டாம் பாகம் | இருபத்தி நான்காம் பாகம் >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...