வாகினி – 18| மோ. ரவிந்தர்

 வாகினி – 18| மோ. ரவிந்தர்

காலை நேரம், சூரியன் வந்து சில மணித்துளிகள் தான் இருக்கும். ‘ரூபன்’ டீக்கடையில் கைதேர்ந்த ஒரு ஓவியன் வரைந்து வைத்த ஓவியம் போல் பாய்லரின் வழியாக ஆவி மெல்ல மெல்ல வெளியேறி அழகாய்க் காட்சியளித்தது.

சேட்டா சீனு, அந்தப் பாய்லரிலிருந்து டீயை பெரிய கப்பில் பிடித்து இடது கையில் வைத்திருந்த இன்னொரு கப்பில் சாய்த்து ஆத்தி கொண்டிருந்தார்.

“இந்தா சேட்டா, ஒரு கப் டீ கொடு” என்று ஒரு பத்து வயது சிறுவன். பாய்லருக்குப் பக்கத்தில் மூன்று ரூபாயும், கையில் வைத்திருந்த சொம்பை கீழே வைத்துவிட்டு. அங்கிருந்த கண்ணாடி ஜாடியிலிருந்து பட்டர் பிஸ்கெட் ஒன்றை அவசரமாகக் கையில் எடுத்தான்.

“என்ன ராஜி, படிப்பெல்லாம் எப்படிப் போகுது. பள்ளிக்கூடத்துக்கு இன்னும் கிளம்பலையா?” என்று கேட்டார் சீனு.

படிப்பு என்றதும் ராஜி விழிபிதுங்கி நின்றான்.

“அது எல்லாம் கையில பிடிக்க முடியாத அளவுக்கு வேகமா தான் போகுது. நீங்க டீ சீக்கிரம் கொடுங்க, பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகுது சேட்டா” என்று அவசரப்பட்டான்.

அந்த டீ கடையின் முன்வாசலில் போடப்பட்டிருந்த டேபிள் பெஞ்சை நாம் கவனித்தோமானால், ஒரு மனிதர் கையில் வைத்திருந்த டீயை ரசித்துப் பருகிக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் நம்முடைய காதல் நாயகன் கபிலனும் ஏதோ ஒரு தீவிர யோசனையுடன் பெஞ்சியில் அமர்ந்துகொண்டு மகாலட்சுமி வரவை எதிர்பார்த்து அவள் வீட்டையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த செல்லையா என்ற மனிதர். தன்னுடைய கள்ளப் பார்வையால் கபிலனை பெரும் கோபத்துடன் பார்த்து முணுமுணுத்துக்கொண்டே அந்த இடத்தைவிட்டு சென்று கொண்டிருந்தார்.

கபிலனும் அதைக் கவனித்தான். ஆனால், அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. தன்னுடைய கதாநாயகி மகாலட்சுமி எப்போது தண்ணீர் குடத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியில் வருவாள் என்ற மாயபிம்பம் பொருந்தும் காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதே சமயம், தெருவீதியில் ‘வாகினி’ சில பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள். சற்று நேரத்திற்குப் பிறகு மகா ஒரு செப்புக் குடத்துடன் வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.

அவ்வளவுதான், கபிலனுக்கு மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்து பேரானந்தத்தில் துள்ளி குதித்தான். அவசர அவசரமாகத் தனது சட்டைப் பட்டனை, தலையை எல்லாம் சரி செய்துகொண்டு அந்த டீக்கடை பெஞ்சில் இருந்து மெல்ல எழுந்தான்.

“ஏ… வாகினி. இன்னும் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பாமல் இங்க என்ன பண்ணிட்டு இருக்க.” என்று ஒரு ஆசிரியையாகவும், அக்காவாகவும் வாகினியை அதட்டினாள், மகாலட்சுமி.

மகாலட்சுமிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தாள் வாகினி.

அவள் விழிப்பதை கண்டு, “நான் கிணத்துக்குத் தண்ணி எடுக்கப் போறேன். நீயும் என் கூட வா. பிறகு ரெண்டு பேருமா சேர்ந்து பள்ளிக்கூடத்துக்குப் போகலாம்” என்று தன்னுடன் அழைத்துச் சென்றாள், மகாலட்சுமி.

மகாலட்சுமி தண்ணீர் எடுப்பதற்குச் செல்வது கண்ட அவளுடைய தோழிகளான ரேவதியும், கீதாவும் இருக்கின்ற வேலை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு மகாலட்சுமியுடன் தண்ணீர் எடுப்பதற்குக் கிளம்பிவிட்டனர்.

இது கபிலனுக்கு மிகப்பெரிய திண்டாட்டத்தையும் ஏமாற்றத்தையும் தந்தது.

“என்ன டீச்சரம்மா… பசங்களுக்குப் பாடம் எல்லாம் எப்படிப் போகுது?” என்று தோழி ரேவதி சிரித்துக்கொண்டே கேள்வி எழுப்பினாள்.

“என்னத்த சொல்ல!. வீட்ல எங்க அப்பா, அம்மா என்ன கட்டி வச்சி அடிக்கிறாங்க. நான் பசங்கள பள்ளிக்கூடத்துல கட்டி வச்சு அடிக்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம்!” என்று விளையாட்டாகக் கூறினாள், மகாலட்சுமி.

ரேவதி மட்டும் அல்லாமல் இன்னொரு தோழியான கீதாவும் இவளுடைய பேச்சைக் கேட்டு சிரித்தாள்.

மூவரும், கருவேலம் மரங்கள் அடர்ந்த நெடும் பாதை வழியாகக் கிணறு இருக்கும் பாதையை நோக்கி மெல்ல நடந்து கொண்டிருந்தனர்.

வாகினி, கையில் வைத்திருந்த ஒரு கல்லை தரையில் வீசிவிட்டு நொண்டி அடித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தாள். இவர்களுக்குப் பின்னால் சற்றுத் தொலைவிலிருந்து கபிலனும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.

“ரேவதி, வர… வர… நம்ம ஊர்ல இந்தக் காதல் கிளிகளோட தொல்லை தாங்க முடியலடி!”

“என்னடி சொல்ற?”

“ஆமாண்டி, இங்க மரத்துல இருக்குற கனியை எல்லாம் பறிச்சு தின்னுடுதுங்க. பாவம் இந்த மனுச பயலுங்களுக்கு ஒரு கனி கூடக் கிடைக்காமா ஏமாந்து போயிடுறாங்க” என்று ரேவதியிடம் கூறிவிட்டு. அப்படியே பின்னால் வந்துகொண்டிருந்த கபிலனை கண்ணால் பார்த்து சிரித்தாள், கீதா.

மகாலட்சுமி, கீதாவை தடாலெனத் திரும்பிப் பார்த்துவிட்டு.

“நம்ம ஊர்ல எங்கடி கிளிங்க இருக்கு?” என்று கேட்டுவிட்டு அவளுக்குப் பின்னால் பார்த்தாள். அப்போது, தான் அவளுக்குப் தெரிந்தது இவர்கள் எதற்காக விஷமமாகப் பேசுகிறார்கள் என்று.

கபிலன், தன்னைப் பின் தொடர்வது அவளுக்கு அப்போதுதான் புரிந்தது. தூரத்தில் தெரிந்தவனைத் தனது நெற்றிக் கண்ணாலே சுட்டெரிக்கும் விழிகளுடன் அவனைப் பார்த்து முறைத்தாள், மகாலட்சுமி.

கபிலனுக்கு இது நன்றாகவே புரிந்தது மகாவின் கோபப்பார்வை, ‘வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்போது எதற்காகப் பின்னால் வருகிறாய்’ என்று அவளுடைய பார்வை கேள்வி எழுப்பியது.

அவள், இங்கு வந்து என்னைத் திட்டுவதற்கு முன்பாக அவளிடம் நான் பேச ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தான். அந்த நேரத்தில், ஒரு புதருக்குள் இருந்து பாம்பு வெளியேறி அவசரமாக இன்னொரு புதருக்குள் போய் மறைந்தது.

அதைப் பார்த்தவுடன், சட்டென்று கபிலன் புத்திக்குள் ஒரு யுத்தி தோன்றியது. அவசர அவசரமாகக் கருவேல மரத்தில் இருந்து ஒரு முள் ஒடித்துப் பாம்பு கடித்தது போல் இடது காலில் சிறிதாகக் கீறிக்கொண்டு.

“ஐயோ… ஐயோ… பாம்பு கடிச்சிடுச்சு” என்று மயக்கம் அடைவதைப் போல் பெரும் கூப்பாடு போட்டுக் கத்தினான்.

மகாலட்சுமியும் அவர்களுடைய தோழிகளும் அலறியடித்துக் கொண்டு கபிலனை திரும்பி பார்த்தனர்.

கபிலன் தனது காலை பிடித்துக்கொண்டு மயக்கத்துடன் கீழே விழுவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தான்.

மகாலட்சுமி இடது கையில் வைத்திருந்த செப்புக் குடத்தைக் கீழே உதறித் தள்ளிவிட்டு, கபிலன் இருந்த இடத்திற்கு வேகமாக ஓடி வந்து அவனை மடிமீது தாங்கி பிடித்துக் கொண்டாள்.

அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டே

‘சாரி மகா, உன்கிட்ட திரும்பத் திரும்பப் பொய் சொல்லிட்டு இருக்கேன். அந்த விஷயத்தையும் உங்கிட்ட சொல்லியிருக்கக் கூடாது. சொல்லி உன் மனசை நோகடித்து இருக்கக் கூடாது. திரும்பத் திரும்ப உன்னைக் காயப்படுத்தியதற்கு என்ன மன்னிச்சிடு. இப்பவும் பொய் சொல்றேன் சாரி மகா’ என்று அவள் மடி மீது விழுந்தான்.

கபிலன் இருந்த இடத்திற்கு மகா வேகமாக ஓடுவதை கண்டு, வாகினியும் அவள் பின்னாலே ஓடினாள்.

“எரும மாடு, கால்ல பாம்பு கடிச்சி இருக்கு இப்படிச் சிரிச்சிட்டு இருக்க, காலக் காட்டு” என்று கண்ணில் நீர் கசிய அவனுடைய இடது காலைப்பிடித்து. ஜடையில் வைத்திருந்த சேப்டி பின்னை எடுத்துக் காயப்பட்ட இடத்தில் மேலும் இரண்டு கீறிக் கீறி தனது உதடை வைத்து விஷத்தை உரிந்து எடுத்தாள், மகாலட்சுமி.

அவனுடைய காலில் இருந்து ரத்தம் மகாவின் உதட்டிற்கு மெல்ல இடம் மாறியது.

கபிலனுக்குக் காயம் பெரிதாக வலித்தாலும் கூட அவனால் சிரிப்பை தாங்க முடியவில்லை. காயம்பட்ட காலை இடது கையால் பிடித்துக் கொண்டு துடி துடித்துக் கொண்டிருந்தான்.

மகாவின் செயலைக் கண்டு வாகினி அவளைப் பார்த்து ஒரு கேள்வி எழுப்ப ஆரம்பித்தாள்.

“அக்கா, இந்த மாமாவுக்கு என்ன ஆனது எதற்காக இப்படி செஞ்சிட்டிருக்க?”

வாகினியின் கேள்விக்கு மகா பதில் சொல்லவில்லை. கபிலனை பார்த்து அவள் ‘மாமா’ என்றதும். மகாலட்சுமியின் மனதில் ஒரு பேரின்பம் பிறந்தது.

அதற்குள் இரண்டு தோழிகளும் பக்கத்திலிருந்த தும்பை இலைகளைத் தேடிப்பிடித்து எடுத்து வந்து மகா கையில் கொடுத்து விட்டு இருவரும் அவள் பக்கத்தில் நின்றனர்.

அவள், விஷயத்தை எல்லாம் உறிஞ்சி கீழே துப்பிவிட்டு, மூலிகை இலையைக் காயம்பட்ட இடத்தில் கசக்கி விட்டு. தன் முந்தானையைக் கிழித்துக் காயப்பட்ட இடத்தில் கட்டினாள்.

ஒரு சில வினாடிகள்தான் இருக்கும் இவை எல்லாம் அவசர அவசரமாக அந்த இடத்தில் அரங்கேறியது.

சில நிமிடத்திற்குப் பிறகு, கபிலன் மயக்கம் தெளிந்தவனைப் போல் மெல்ல எழுந்தான். எழுந்தவுடன் இந்த வார்த்தையை அவளிடத்தில் கூறினான்.

“சாரி மகா, உன்ன நான் ரொம்பக் கஷ்டப் படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடு. அம்மா, என்கிட்ட சொன்ன விஷயத்தை நான் உன்கிட்ட சொல்லி உன் மனசை நோகடித்து இருக்கக்கூடாது” என்றான்.

“அதெல்லாம் கிடக்கட்டும்டா. பூச்சி பொட்டு இருக்கிற இடத்தில இப்போ யாரு உன்ன தனியா வர சொன்னது. இப்ப பாத்தியா என்னென்னமோ ஆயிடுச்சு. நாளைக்குப் பள்ளிக்கூடத்தில் வந்து பார்க்க கூடாதா” என்று கண்ணைக் கசக்க ஆரம்பித்தாள், மகாலட்சுமி.

இவள், இப்படி அழுவதைக் கண்டு தோழிகள் இருவருக்கும் பயம் வேறு பெரிதாக உதயமானது. ‘ஊர் மக்கள் யாராவது இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டால். நம்ம ரெண்டு பேரோட கதி அதோகதிதான் வெளுத்து வாங்காம விடமாட்டாங்க’ என்று இருவருக்குள்ளும் ஒரு பயம் ஓடியது.

“அதெல்லாம் கிடக்கட்டும் நாளைக்கு ஸ்கூலுக்கு வா. இந்த இடத்தை விட்டுச் சீக்கிரம் கிளம்பு… கிளம்பு…” என்று மடிமீது இருந்தவனைத் துரத்தி அடித்தாள், மகாலட்சுமி.

மகாவின் தோளைப் பிடித்துக்கொண்டு கபிலன் மெல்ல மெல்ல எழுந்தான்.

இது காதல் பறவைகள் இருவருக்கும் பேரானந்தத்தைத் தந்தாலும், தோழிகள் இருவருக்கும் இந்தக் காதல் காட்சி மனதுக்குள் பெரும் பயத்தை உண்டாக்கி கொண்டிருந்தது.

– தொடரும்…

< பதினேழாம் பகுதி

கமலகண்ணன்

3 Comments

  • கபிலன் காதல் நாயகனாக ஜொலிக்கிறார்.மகா தன் காதல் அவஸ்த்தையால் அவதி படுகிறாள்.வாகினி மிக இயல்பு.பாம்பு கடித்ததாக நடிக்கும் கபிலனுக்கு தும்பைச் செடி மூலிகை கொடுத்தது அருமை…வாகினியின் வெற்றி பயணம் தொடரட்டும்.

  • விஷமில்லாத பாம்புகுள் இத்தனை வில்லங்கம் இருக்கிறது என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் தோழர்!!!😁😁😁

  • Nice story 😊😊😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...