வாகினி – 17| மோ. ரவிந்தர்

 வாகினி – 17| மோ. ரவிந்தர்

சென்னீர் குப்பத்தில் உள்ள ‘எஸ் எம் லாட்ஜ்’ சுமார் 8 மணி அளவில் தெருவில் மனிதர்கள் யாருமற்று பெரும் அமைதியுடன் காணப்பட்டது. ரிசப்ஷனில் இருந்த ஓர் ஊழியன் மட்டும் கையில் இருந்த கால்குலேட்டரில் அன்றைய வரவு செலவு கணக்குகளை நிதானமாகச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் தாண்டி, அப்படியே ஒவ்வொரு படிக்கட்டுகளாக நாம் கடந்து மேலே ஏறி வலது பக்கமாகத் திரும்பி முதல் தளத்தில் பதிமூன்றாவது அறையை நாம் கவனித்தோமானால், அந்த அறையின் கட்டில் மீது தனஞ்செழியன் அமர்ந்துகொண்டு மதுவை இருகைகளால் திறந்து கொண்டிருந்தார்.

அவருடைய டிரைவர் உதவியாளர் ‘நல்லதம்பி’ பிளாக் அண்ட் வொயிட் டிவி சேனலை கையினால் மாற்றிக்கொண்டே தனஞ்செழியனிடத்தில் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“என்னங்க அண்ணே! திடீர்னு ரூம் போட்டு சரக்கு எல்லாம் ஏற்பாடும் பண்ணி சிறப்பாகக் கவனிக்கிறீங்க. காரணமில்லாம இதையெல்லாம் செய்ய மாட்டீங்களே என்ன விஷயம்?” என்று தனஞ்செழியனைப் பார்த்துக் கேள்வி எழுப்பினான், நல்லதம்பி.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா சும்மாதான். வந்து இப்படி உட்காரு” என்று அழைத்தார், தனஞ்செழியன்.

இரவு நேரம் என்பதால், அவர்கள் திறந்து வைத்திருந்த ஜன்னலுக்கு வெளியிலிருந்து இதமான காற்று மெல்ல அறைக்குள் வந்து கொண்டிருந்தது. அதுவே, அவர்களுக்கு ஒரு விதமான ஆனந்தத்தை அள்ளி வீசியது. கையில் வேறு மது பாட்டிலும் இருக்கிறது இது போதாதா? இவர்களுடைய ஆனந்தத்திற்கு.

(‘மது அருந்துதல் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்’)

“அண்ணா! எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு. சஸ்பென்ஸ் எல்லாம் வைக்காதீங்க. சீக்கிரம் சொல்லுங்க, பட்சி ஏதாவது உங்க கையில சிக்கிடுச்சா என்ன?” என்று கேள்வி எழுப்பினான், நல்லதம்பி.

‘ஆமாம்’ என்பதைப் போல மெல்ல சிரித்துக்கொண்டே கையில் வைத்திருந்த மதுக் கோப்பையை டேபிள் மீது தண்ணீருடன் காத்திருந்த கண்ணாடி டம்ளரில் கலந்தார், தனஞ்செழியன்.

நல்லதம்பி, கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டு.

“சீக்கிரம் சொல்லுங்கண்ணா!, சஸ்பென்ஸ் தாங்க முடியல. யார் அந்தப் பட்சி?” என்று விடாப்பிடியாகக் கேள்வி மேல் கேள்வி எழுப்பினான், நல்லதம்பி.

“சொல்றேன், இத எடுத்து குடிடா” என்று மேஜை மீது இருந்த மதுவை நல்லதம்பி கையில் கொடுத்துவிட்டு, தானும் ஒரு கண்ணாடி டம்ளருடன் குடிக்கத் தயாரானார், தனஞ்செழியன்.

நல்ல தம்பியும், அந்தச் சஸ்பென்ஸ் என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள மதுவை எடுத்து ‘மடக்… மடக்’ என்று குடித்து விட்டு.

‘சொல்லுங்கண்ணா, என்பதைப்போலத் தனஞ்செழியனை போதையுடன் பார்க்கத் தொடங்கினான்.

“நல்லதம்பி, ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம வீட்டாண்ட ஒருத்திய பார்த்தோமே. என்னன்னு தெரியலடா அவளைப் பார்த்ததிலிருந்தே எனக்கு அவ நெனப்பாவே இருக்கு. அந்தப் பட்சியை எப்படியாச்சும் என் வலையில் சிக்க வைக்கணும்?”

“யாருண்ணே அது!, அன்னைக்குக் காரை நிறுத்திட்டு நம்ம வீட்டு சாவியைக் கேட்டு வாங்கினோமே, அவங்களா?” என்றான், நல்லதம்பி.

“ஆமாண்டா, அவதான்!”

“அண்ணே! அது வேணான்னே, அவங்கள பார்த்தா ரொம்பப் பாவமா இருக்கு. ஏற்கனவே, குழந்தை குட்டின்னு, நல்லா வாழ்ந்துட்டு இருக்குன்னு தெரியுது” என்று ஒரு கோரிக்கையை முன் வைத்தான், நல்லதம்பி.

“அடப்போடா, நம்ம வாழ்க்கையில பாவபுண்ணியம் ஏது?. வேட்டையாட நினைச்சா வேட்டையாடணும். நானும் அவளை எத்தனையோ நாள் நம்ம வீட்டுல பார்த்து இருக்கேன். அப்போது எல்லாம் கூட அவளை நா சரியா கவனித்ததில்ல. நேத்திலிருந்து தான்டா என்னமோ அவள் நெனப்பாவே இருக்கு.” என்றான், தனஞ்செழியன்.

“அண்ணா, இதுவரைக்கும் வெளில தான் பட்சியைப் பதம் பார்த்துட்டு இருந்தீங்க, அது யாருக்கும் தெரியாது. இவங்க, உங்க வீட்டுக்குப் பக்கத்தில வேற இருக்காங்க. அண்ணிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்ச அப்புறம் நீங்க வேற மாதிரி ஆயிடுவீங்க, வேண்டாண்ணே” என்று போதையிலும் அறிவுரை கூறினான், நல்லதம்பி.

“விடுடா, அவ கிடக்கிறா. அவளுக்குத் தெரிஞ்சா இதையெல்லாம் நாம செய்யப் போறோம். அந்தப் பட்சி பார்த்ததிலிருந்து எனக்கு அவ நினைப்பாவே இருக்கு, நல்லதம்பி. என்ன அழகு! குழந்தை குட்டின்னு இருந்தாலும். இன்னும் அவ செமையா இருக்காடா!” என்று போதையில் உளறித் தள்ளினான், தனஞ்செழியன்.

“என்னண்ணா! நாம செய்யப் போறோன்னு. என்னையும் உங்க கூடக் கூட்டிட்டு போறீங்க? இது வேண்டானே” என்று பேர்திரச்சியுடன் கூறினான், நல்லதம்பி.

“டேய் மடையா, நீ இல்லாம நான் எந்த விஷயத்தைத் தனியா செஞ்சிருக்கேன். நீயும் என் கூட வர. சம்பவத்தை நாம ரெண்டு பேருமா சரியா செய்கிறோம், அவ்வளவுதான்.” என்று போதையுடன் கூறினான், தனஞ்செழியன்.

“கடைசியா என்னை எங்கதான் கொண்டுபோய் விடப் போறீங்களோ தெரியல. சரி… சரி… தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே…” என்று போதையில் உளறிக்கொண்டே அப்படியே கட்டில் மீது விழுந்தான் நல்லதம்பி.

தனஞ்செழியனின் கைகள் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்க. அவன் கண்கள் இரண்டும் உறக்கத்தைத் தேட, கையில் வைத்திருந்த மது பாட்டிலை கீழே தவறவிட்டு போதையுடன் கட்டில் மீது விழுந்தார்.

– தொடரும்…

< பதினாறாம் பகுதி

கமலகண்ணன்

4 Comments

  • தனஞ்செழியின் எண்ணம் பலிக்குமா? மிக அருமையான கதை நகர்வு.

  • Super nice keep it up. Super story.

  • (‘மது அருந்துதல் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்’)

  • Nice story

Leave a Reply

Your email address will not be published.